அடுத்தடுத்து
சொல்ல வந்த விஷயத்துக்கு
வார்த்தைகள் பிடிபடவில்லை
பனிக்குடம் உடைந்து
வெளி பார்க்கும் சிசு
என்ன நினைக்கும்
என்பதில் என் கவனம்
நிலைத்தது
சாலையோரமாய்
இருக்கும் பனைமரங்களில்
மொட்டைப் பனைமரமே
பிறர் கவனத்தை
ஈர்க்கும்
கால் சட்டை போட்டுத் திரிந்த
குமாரன் இவன்
கல்லூரிப் படிப்பு முடித்து
பேண்ட், சர்ட்டில் வந்த போது
பிரமாதமாய் இருந்தான்
யுவதிகளின் வேண்டுதல்களைச்
சுமந்து நதியில் செல்லும்
அகல் விளக்கு,
என்ன நினைத்து ஏற்றியிருப்பார்கள்?
என்ற கேள்விக்குறியோடு
நீரில் பயணிக்கும்
விளம்பரத்தை பார்த்தவுடன்
வாங்கிவிடத் தோன்றும் அவனுக்கு
திரையில் தோன்றி அப்பொருளை
சிபாரிசு செய்யும் அவனுக்கும்
அப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்
என்று ஆராயத் தோனாதா
பிம்பங்களின் மேல்
எல்லோருக்கும்
ஒரு வித கிறக்கமும் மயக்கமும் தான்
ஜீவித்திருக்கும் வரை...
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.