கணக்கு
சற்று நேரமேனும்
உறங்க வேண்டும் போலிருந்தது
தெருவில் எச்சில் இலைக்கு
நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன
வீதியை கடப்பவரை எல்லாம்
பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது
ஒரு பைத்தியம்
சாலவத்தில் கற்களை
வீசிக் கொண்டிருந்தான்
ஒரு சிறுவன்
பூசனைகள் முடிந்து
பைக்கில் போய்க் கொண்டிருந்தார்
குருக்கள்
காமதகனம் செய்யப்பட்ட
மன்மதனுக்காக
ஊரே துக்கப்பட்டுக் கொண்டிருந்தது
காற்று இலைகளை
உதிர்த்து விட்டுச் சென்றதால்
மரம் மூளியாய் நின்றது
புதுப் பணக்காரனின்
இடம்பகத்தைப் பார்த்து
தெரு கொல்லென்று சிரித்தது
இவற்றிக்கிடையே
ஒருவனின் கணக்கை முடிக்க
சத்தமில்லாமல சாலையைக்
கடந்து கொண்டிருந்தது
அரவமொன்று.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.