நிசப்தங்கள் நீங்குகின்றன!
இரவின் பயங்கர நிசப்தம்
தளர்கிறது
உயர்ந்த பனை மரங்களின்
ஓலைகள்
ஒன்றையொன்று உரசும் போதும்…
வளைந்த
ஒற்றையடிப் பாதைகளில்
ஓடித்திரிகின்ற நாய்கள்
ஒன்றையொன்று துரத்தும் போதும்
பக்கத்துக் காட்டில் சருகுகள்
சலசலத்து
காற்றில் பறக்கின்ற போதும்…
பக்கத்துக் குடில்களில் குழந்தைகள்
தேம்பி
அழுகின்ற போதும்…
பயங்கர நிசப்தம்
பயந்து பயந்து தளர்கின்றது
குருவிகளின் மூச்சில்
தூக்கம் கலைகின்ற பட்சிகள்
சிறகடிக்கின்ற போதும்
தூரத்து வாகனங்கள்
துரத்துகின்ற வெளிச்சத்தில்
உயிரினங்கள்
வெருண்டோடுகின்ற போதும்
இருளின் நிசப்தம்
நீங்குகின்றது!
- ஜுமானா ஜுனைட், இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.