பெண்ணைப் பெருமைப்படுத்துவோம்
பெண்!
ஆண்டவனின் பிரதிநிதியாய்
அவனியில் உலவும்
அன்பின் அகராதி!
ஆதிநாள் தொட்டு
அவலத்தீயில் வெந்தும்
அக்கினித் தெறிப்பாய்
ஆர்ப்பரித்து நிமிரும்
அமைதியின் விஸ்வரூபம்!
மண்ணில் ஜனனம்
மாட்சிமை கொள்ள
மாமடி திறக்கும்
தியாகப் பிரும்மம்!
பஞ்ச பூதங்களைப்
புள்ளிக்குள் அடைத்து
பலப்பரிட்சை காண இயலுமே?
எட்டுத் திக்கையும்
எள் முனை கொண்டு
எட்டித் தொடலாகுமோ?
நவக்கிரகங்களை நகக்கண்ணில்தான்
நசுக்கித் திணிக்கலாகுமோ?
பெண்மையின் பெருமையைப்
பேசித் தீர்க்க
ஒரு மொழி இங்கே போதுமோ?
நெருப்புக் கங்கும் நாணிக் குனியும்
கற்புத் தீயின் கனல் கண்டு!
நீரின் குளிர்மையும் நிமிர மறுக்கும்
நங்கையரவர் நல்லிரக்கம் கண்டு!
வாளின் கூர்மையும் வெட்கி மருகும்
வஞ்சியர்தம் நெஞ்சுரம் கண்டு!
மண்ணின் பொறுமையும் மறுகிக் குமுறும்
மாதரவர் உள மாண்பு கண்டு!
பெண்ணெ…! உனை
விதவையென்று சொன்னதற்காய்
மொழி வெட்கப்படட்டும்!
வேசியென்று சொன்னதற்காய்
சமூகம் வெட்கப்படட்டும்!
மலடியென்று சொன்னதற்காய்
ஆணினம் வெட்கப்படட்டும்!
கவலைப்படாதே!
தாயெனச் சொல்லி…
சகோதரியெனச் சொல்லி…
நாங்கள் பெருமைப் படுத்துவோம்!
பூவிதழுக்குள் புதைந்திருக்கும்
எரிமலை முகடுகளைச்
சந்தைப்படுத்தியது போதும்!
வெட்கச் சிரிப்பிற்குள்
வெடிக்கக் காத்திருக்கும்
வீரிய மின்னல்களை
மின்மினியாக்கியது போதும்!
ஆம்!
விண்ணும் மண்ணும்
பெண்ணின் மடியில்
அன்னையின் வடிவில்…
மனைவியின் வடிவில்…
சகோதரியின் வடிவில்...
- முகில் தினகரன், கோவை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.