தெய்வக் குற்றங்கள்

தேர்தல் அறிவிப்பு தேவலோகத்தில்!
முதன்மைக் கடவுள் பதவிக்கான
முக்கியத் தேர்தல் அறிவிப்பு!
முட்டி மோதி வேட்புமனுவை
முன்னதாய்த் தாக்கிய மூத்த கடவுள்கள்
குற்றப் பின்னணியில் குப்புற விழுந்தது
திருவண்ணாமலைப் பள்ளியில்
பிட் அடித்த கதையாய்
நாறி நாற்றம் கண்டது…
ஈரேழு பதினாலு லோகத்திலும்!
ஆதிசிவன் வேட்புமனு ஆதியிலேயே அகன்றது
இரண்டு மனைவிக்காரருக்கு இல்லையாம் தகுதி!
பாவம் பாலமுருகன்
அப்பாவின் காரணமே அவனுக்கும்!
விக்னேசுவரன் மனுவும் விரயமாகிப் போனது
சதுர்த்தி ஊர்வல சாவுக்கு
ஆனை முகத்தானே ஆதாரக் குற்றவாளியாம்!
கிருஷ்ணனின் மனுவோ கிடப்பில் போனது
கோபியருடனான கோகுல சேட்டைகள்
ஈவ் டீசிங் முத்திரை பெற்றதால்!
திருப்பதியானின் வேட்புமனு திரும்பிப் போனது
குபேரனுடனான கொடுக்கல் வாங்கல்
வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால்!
அடுத்து வந்த அய்யப்பன் மனு அதிரடியாய்ப் போனது
புலிப்பால் கொணர்ந்த புண்ணியத்திற்கு
புலி ஆதரவுப் பட்டமாம்!
காசுக்கு விலை போகும் காரணத்தால்
கலைமகள் மனு காணாது போக!
இருப்பவனிடம் கருப்புப் பணமாகி
இல்லாதவனுக்குச் செல்லாக்காசானதால்
லட்சுமியின் மனு லட்சியமே செய்யப் படவில்லை!
ஒட்டு மொத்தமாய் எல்லா மனுக்களும்
உதிர்ந்து விட்ட கேவலத்தில்
இந்திரன் கூட்டிய அவசரக் கூட்டத்தில்
தந்திரமாய் வந்திறங்கியது
குறறப்பின்னணிக் கடவுள்களும் போட்டியிடலாம்
என்கிற அடாவடிச் சட்டத்திருத்தம்!
- முகில் தினகரன், கோவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.