வெள்ளை உருவம்
ஒரு கொடிய இரவின்
விழுதுகள் முதிர்ந்த
மரத்தின் அடியில்
வெள்ளை நிற ஆடை
உடுத்திய பெண்ணொருத்தி
எதையோ என்னிடம்
தந்து கொண்டு இருக்கையில்
திடீரென விழித்துக்கொள்ளும்
கொடிய கனவின் இரவில்
யாருமல்ல வீட்டின் முற்றத்தில்
உறங்கிய எனக்கு அருப்பட்டுப்போகிற
அதற்கு பிறகான இரவு உறக்கம்...
அடுத்த நாள் வேளைக்கு செல்லும்
அவசரகதியின் சிந்தனைகளில்
எப்படியாவது உறக்கம் பெற
திரும்பத் திரும்ப விழி மூடி அந்த
வெள்ளை உருவம் கண் முன்னே
சிரித்துக் கொண்டே இருக்க
தோற்றுப் போகிறேன் உறக்கத்திற்காக
வெள்ளை உருவம் கொன்றுவிட
படித்து இருந்தும் மூடனாய்
கடவுள் படம் அருகில் உள்ள
தட்டில் இருக்கும் திருநீறு நெற்றி
ஏறி மீண்டும் அயர்கிறேன்
காலையில் பால்காரன்
மணி ஒலிக்கும் சத்தத்துடன்
விழி நீங்கி...
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.