கால இயந்திரம்

“கி.பி.2012 .05.01” –
நேரம் நான்கு மணி –
அழகான பொன்வெயில் நேரம் –
புறப்படுகிறாள் அவள்
கால இயந்திரத்தில் ஏறி…
“கி.பி.1512.05.01” காலையில்
வந்து சேர்கிறாள் திரும்பி…!!
வீடதன் பக்கம் செல்கிறாள்…
வீடெங்கே தேடுகிறாள்…
தாய்தந்தை எங்கேயெங்கே…
ஆளரவம் எதுவுமில்லை…
ஆலமரம் மட்டும்
சின்னதாய் சிரித்துக் கொண்டு…!
அயல் வீடுகளும் காணவில்லை…
பக்கத்து தெருவையும் காணவில்லை…
அவள் வளர்த்த கிளிகளையும்
காணவில்லை கூண்டுடனே…!
அவள் வீட்டு முற்றத்திலே
நாட்டி வைத்த ரோஜா எங்கே
ஆவலுடன் தேடுகிறாள் –
காணவில்லை…
தோற்றுப்போய்
ஆங்கிருந்த மரநிழலில்
ஒதுங்குகிறாள் கவலையுடன்…
வேடுவர் சத்தம் தூரத்திலே
வேறு பாஷை கேட்கிறதே…
விளிப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் –
வீடருகே ஒலித்தோடிய அதே ஆறு…!
ஆனால் வேடுவர் கூட்டம் மட்டும்
புதிதாய் ஆங்கு…!!
சற்று மனம் தெளிந்தவளாய்
சூழலை உற்று நோக்குகிறாள் –
ஆலமர அடித்தண்டில்
முன்பிருந்த அதே பொந்து…,
பக்கத்தில் புற்றொன்றும்
சிறிதாக தெரிகிறதே…,
“தன்வீட்டு முற்றத்திலே
அமைந்திருந்த பெரும்புற்று
ஆலமரம் அஃதுடனே இவ்வாறு தெரிகிறதோ…!?”
மனம் குளிர்கிறாள்…
களி கொள்கிறாள்…
பல்லாண்டுகள் காலத்தில் பின்னோக்கி
தான் வந்துள்ளதை உணர்கிறாள் –
காலப் பயணம் செய்த சந்தோஷத்தில்
விரைகிறாள்
கால இயந்திரத்தை நோக்கி –
மறுபடியும்
நிகழ்காலத்தை அடைவதற்காய்…!!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.