காலம் ஒரு கணந்தான்...!
பிழை எது சரி எது
பாரிதில்
அளவுகோள் ஏது..?
வெகுஜனம் சொல்வது
“சரி”யென நினைப்பது
தவறு…!
தனியொரு மனம்
மெய்சொல்ல நினைப்பது
தவறா,
தவறென பதில் கிடைத்ததும்
அது தவிப்பது
சரியா...?
இந்த உலகத்தில்
“நிஜமெ”ன்று ஒரு தனி ரகம்
நிலையாய் இருக்கின்றதா…
சூழ்நிலைகள் மாற
“சரி”யென்பது பின்பு பிழையாய்
ஆவதில்லையா...?
கோடிகோடி
சான்றுகள் கொண்டு
ஒரு “தவறை”
நிஜமெனக் காட்டுவதுண்டு…,
எமைத்தேடி வரும்
“தவணை” வந்தால்
எவர்தான் ஜெயிப்பர்
விதியினை வென்று...?
பொய்கள் சிலநேரம்
எம் கண்ணை மறைத்தாலும்,
உரிய நேரம் நெருங்கும் போது
விழியின் பார்வை
மாயத் திரைகள் தாண்டி
நிஜத்தைக் காணுமே...!
ஆனால் அப்போது
எது நாம் செய்தாலும்
மண்ணில் வாழ்வு முடிந்து போய்
கண்கள் எம் வினையைக் காணுமே…!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.