செல்லச்சுகம்?
பழுப்பேறிப் போன
பள்ளிக்காலப் புகைப்படம்!
பட்டனில்லாச் சட்டையுடன் நான்!
கெட்டித்துப் போன
கெண்டைக்கால் தழும்பு!
சைக்கிள் பழகிய
சாகசச் சின்னமாய்!
எப்போதாவது, எங்காவது
ஒலிக்கும்
அக்காலத் திரைப் பாடல்கள்!
எம்ஜிஆரும் சரோஜாதேவியுமாய்!
அவ்வப்போது
ஆங்காங்கே எதிர்ப்படும்
கபடி கபடி நண்பர்கள்!
நரைத்த தலையும்... களைத்த முகமுமாய்!
ஞாபக விரல்கள்
இதயச் சுவற்றை
நகத்தால் கீறும் நிலையில்
ஏகமாய்ச் சோகம் வடிந்தாலும்
சொறிவதிலுள்ள செல்லச்சுகமாய்
உன் நினைவு!!
- முகில் தினகரன், கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.