பாதையோரப் பத்தினிகள்
பாதையோரப் பத்தினிகளை
பாவமென்றால் பரிகசிப்பேன்!
போதை தரும் பொதிகையென்றால்
பொங்கிப் பாய்வேன்!!
அவள்
வேதனை பூத்து வெடித்து வரும்
வாலிபச் செடிகளின் வசந்த ஊற்று!
சோதனை கண்டு சோகம் பூண்ட
சோம்பேறிகளின் சொர்க்க மதில்!!
அவள்
தோல்வித் துவளலில் தோள் குறுக்கும்
தொலைந்தவர்களின் தொடு வானம்!
இல்லாளிழந்த இம்சைக்காரர்களின்
இரவு நேரத்து இலந்தை மரம்!
அவள்
ஏமாற்றம் எரித்ததில் எச்சில்பட்ட
ஆண் கோழிகளின் அந்தப்புர ஊஞ்சல்!
பூமிப்பந்தின் புறமுதுகில்
புனிதர்களைத் தேடும் புதிர்த்தராசு!
பாதையோரப் பத்தினிகளை
பாவமென்றால் பரிகசிப்பேன்!
போதை தரும் பொதிகையென்றால்
பொங்கிப் பாய்வேன்!!
- முகில் தினகரன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.