தீக்கொழுந்தில் பனித்துளிகள்!
(பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தைகள் பற்றி)
எங்கள் செல்வங்கள்
கல்வித்தாயால் கை விடப்பட்டவர்கள்!
காசுத்தேவை கழுத்தை நெறிக்க
குடும்பத் தலைவனின் கூனல் முதுகுக்கு
கோணல் முட்டாய் நிற்பவர்கள்!
கூழுக்குக் குறை வயிறு கொக்கரித்ததால்
யாழுக்குப் பிறக்க வேண்டிய இந்த யாப்புகள்
எரிமலைக்குள் ஏவல்புரிய விடப்பட்டு விட்டன!
வெடிக்கும் ஆபத்தை
விநாடிதோறும் எதிர்பார்த்திருக்கும்
விட்டில் பூச்சிகள்!
பீடிக்கப் போகும் பெருநோய்க்கு
இன்னாளில் அச்சாரம் போடும்
பிள்ளைப் பூச்சிகள்!
ஊரெல்லாம் கொளுத்தும்
உலர் பட்டாசுக்கு
நாளெல்லாம் கருகும்
நவுத்த பட்டாசுகள்!
தேரோட்ட வீதியில்
வாணவேடிக்கை விரிய
பேராட்டம் நடத்தும்
பொற்றாமரைக் குளங்கள்!
நெருப்புக்கு நிமிரும்
நெருஞ்சிப் பூக்கள்
நெஞ்சைப் பிளக்கும் இவர்தம்
நிலை... சோகங்கள்!
குறும்பு வயதினில்
கும்பி ரணம் எரிய
கூலி கண்டு சிரிக்கும்
குறைந்த வலை மத்தாப்புக்கள்!
கீறிவிட்ட புண்ணாய் எரியும்
கிழிந்த நகத்தைக் கொண்டு
தீக்கொழுந்தில் தீபமேற்றும்
பனித் துளிகள்!!
- முகில் தினகரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.