காதல் விண்ணப்பம்!
ஒரு குழந்தைக்கு
பெயர் தேர்வைப்போல
சுகமானது
உன் கடிதத்திற்கான
என் வார்த்தைத் தேடல்!
கண்ணாடி பொய் சொல்லுமா?
உன்னை சந்திக்கப்போகும்
வேளையில் மட்டும்
என்னை அழகாய்க் காட்டுவதாய்
சந்தேகம் எனக்கு!
பள்ளிக் குழந்தையின்
ஞாயிற்றுக்கிழமை மாலை சோகம்
எனக்கு வெள்ளிக்கிழமை
மாலையே வந்துவிடுகிறது!
பாடவேளையில்
உன் பாவணைகளின்
குறிப்பெடுத்தல் மட்டுமே
பழகிவிட்டது எனக்கு!
வகுப்பறையில்
நொடிப்பொழுதாவது
கரும்பலகையை கடந்து செல்;
கணப் பொழுதாவது
கரும்பலகையைக் கவனிக்கட்டும்
என் கண்கள்!
கல்லூரிக் கவிதைப் போட்டியில்
காதல் கவிதைக்கு அனுமதியில்லையால்
தகுதியிழக்கிறேன் நான்!
இதுவரை நான் சொல்ல வந்தது…
நீ மரம் நடுகிறாய்!
நான் கடிதங்கள், கவிதைகளுக்காய்
காடழிக்கிறேன்!
காதல் செய்-
உயிர்(கள்) காப்பாற்றப்படட்டும்!
- சபரிநாதன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.