ஆர்னிகா நாசர்
மதுரையில் பிறந்த இவர், சமூகவியல் துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் இளம் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். மேலும், முதுகலை மேலாண்மை நிர்வாகம், நான்கு முதுகலை பட்டயப் படிப்புகளையும் படித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்விலும் (UGC NET) தேர்ச்சி பெற்றிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணிபுரிந்து, கடந்த 2018 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற இவர், தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூகச் சிறுகதைகள், ஐநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நீதிக்கதைகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானச் சிறுகதைகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் நையாண்டிச் சிறுகதைகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் என்று எழுதிக் குவித்திருக்கிறார். இவர் ஒரு பாவனை விஞ்ஞானச் சிறுகதை எழுத்தாளர் என்ற போதிலும், மதநல்லிணக்கமே இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி பெயர் வகிதா. இவரது எழுத்திற்குத் துணை நிற்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவருக்கு மகள் ஒருவரும், மகன் ஒருவரும் இருக்கின்றனர். இவரது மகள் ஜாஸ்மின், மருமகன் அலாவுதீன், பேத்தி ஜன்னத்துல் பிர்தௌஸ், பேரன் யாகூப் பத்ருதீன் ஆகியோர் பெங்களூருவில் வசிக்கின்றனர். மகன் டாக்டர் ஆ. நிலாமகன், மருமகள் டாக்டர் ர. பஹிமா ஆப்ரின், பேரன் முஹம்மது அர்ஹான் ஆகியோர் கோயம்புத்தூரில் வசிக்கின்றனர். இவரும் இவரது மனைவியும் மகன் குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் இருந்து வருகின்றனர்.
கதை - இஸ்லாமியக் கதைகள்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.