சடங்குகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
சடங்குகள் - பகுதி 3
அட்சாரம்பம் - அட்சரம் - எழுத்து, கல்வி பயிற்றுவித்தல் ஆரம்பம்
அட்சாரம்பம் செய்யும் இடத்து உத்திராயணத்து மாசி மாதம் ஒழிய நான்கு வயது சென்று ஐந்து வயதிலே பூருவ பக்கத்துப் பகற்காலத்திலே பஞ்சாங்க சுத்தி உண்டாக திருவாதிரை, திருவோணம், இரேவதி, அனுஷம், புநர்பூசம், அத்தம், சித்திரை, சுவாதி, அசுவதி ஆகிய இந்நாட்களிலே திரராசி உதயமாக 7, 8 ஆகிய இவ்விடங்கள் சுத்தி பெற அட்ஷாரம்பம் செய்வது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 16, பக்கம்.119)
வித்தியாரம்பம்
வித்தியாரம்பத்துக்குத் திருவாதிரை, திருவோணம், அனுஷம், புநர்பூசம், அவிட்டம், அத்தம், சுவாதி, மிருகசீரிடம், அசுவதி, சித்திரை, சதயம் ஆகிய இவை உத்தமம். இரேவதி, ரோகிணி, உத்திரத்திரயம் ஆகிய இவை மத்திமம். திரராசி உதயமும் பக்கங்களில் திரயோதசி, சத்தமி ஆகிய இவை ஒழிந்த சுப திதிகளும் நன்றாம் என்றும், சிலர் 4 ஆம் இடம் சுத்தியாக வேண்டும் என்பர்.
குணாகுணப்படலத்துச் சொன்ன படியே பஞ்சாங்க யோக முகூர்த்த நோக்கு நன்றாகப் பார்த்துப் புதனுடைய வாரோதயாங்சம் பெற 4, 8 இவ்விடம் சுத்தியாரம்பம் செய்தல் உத்தமம். வியாழன், வெள்ளி வாரோதயங்சமும் நன்றாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 17 - 18, பக்கம்.119 - 120)
உபநயனம் - பூணூற் கலியாணம் - உபநயனச் சடங்கு
உபநயனம் செய்யும் இடத்து கற்பாதானம் முதலாக 7, 8, 9, 10 ஆகிய இவ்வயதில் சந்திர லக்கினத்துக்குஞ் சென்ம லக்கினத்துக்கும் குரு 7, 5, 2, 11, 10, 9 ஆகிய இவ்விடங்களில் உபநயனம் செய்தல்.
வியாழன் உதய லக்கினத்தும் ஆகாது என்ற இடங்களினும் நின்றால் ஆகாது. உபநயனம் செய்தால் வியாதியாதல், அவமிருத்து வாதல் உண்டாம். புத்திரனுக்கு ஒரு இலக்கினத்துக்குத் நல்லனாய் ஒரு இலக்கினத்துக்குத் தீயனாய் இருக்கில் குருவுக்கு விருப்பமாகப் பொன்னும், பீதாம்பரமும் தானம் செய்து உபநயனம் செய்தலாம் எக்காலத்தும் அந்தணர் பூசையும், நவக்கிரக சாந்தியும் செய்து கொள்ளப்படும்.
குரு முன் சொல்லிய உபய லக்கினத்திற்கும், 12, 6, 4, 8, 3 ஆகிய உகந்த இடங்களினும் சென்ம லக்கினத்துஞ், சந்திர லக்கினத்தும் நிற்க உபநயனம் செய்கையில் வியாதியாதல், மரணமாதல் உண்டாகும். இரண்டு இலக்கினத்துக்குஞ் சனி, செவ்வாய் 1, 12 ஆம் இடங்களில் நிற்கில் அங்கவீனம் உண்டாகும்.
நால் வருணத்தார்க்குரிய மாதங்கள்
ஷத்திரியருக்குப் பதினொராம் வயதில் வைகாசி, ஆனியிலும், வைசியருக்குப் பன்னிரண்டாம் வயதில் ஆடி, ஆவணியிலும், அந்தணருக்கு ஏழாம் வயதில் வசந்த ருதுவாகிய சித்திரை, வைகாசியிலும் உபநயனம் செய்யலாம்.
வியாழன் மீனந் தனு கர்க்கடகத்து நிற்கினும் நட்பு வீடுகளிலே நிற்கினும், உபய லக்கினத்திற்கு சாதகம் அல்லாத மாதத்தினுஞ் செய்யலாம். பகை நீசத்து நிற்கும் ஆண்டு தவிரப்படும். உபய லக்கினத்திற்கு சாதகமாய் இருக்கின்ற சத்துரு நீசங்களின் நின்ற காலமும் சாந்தி செய்து உபநயனம் செய்யலாம். அந்தணருக்கு வசந்த காலம் உத்தமம். மாசி, பங்குனி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள்.
உரிய நட்சத்திரங்கள்
சித்திரை, அத்தம், அனுஷம், சோதி, மிருகசீரிடம், அவிட்டம், உரோகிணி, புநர்பூசம், உத்திரத்திரயம் ஆகிய இவை உத்தமம். பூசம், திருவோணம், அசுவதி, சதயம் ஆகிய இவை மத்திமம். இந்நாட்களில் சுபாங்கிசங்களிலே உபநயனம் செய்யலாம்.
திதிகள் நிலை
பூருவ பக்கத்தும், அபர பக்கத்தும், துதியை, பஞ்சமி, சத்தமி, சட்டி, திருதியையாம். பூருவ பக்கத்துத் திரயோதசி தசமி, ஏகாதசி, அபர பக்கத்துப் பிரதமை ஆகிய இவை நன்று. அல்லாதவை ஆகாது.
இப்படலத்தில் சொன்னபடியே குணதோஷ நிருபித்துக் குணாதிகமான நாளில் இடபம், மிதுனம், மீனம், தனு, கர்க்கடகம், கன்னி ஆகிய இந்த ராசிகள் உதயமாக அட்டம சுத்தி உண்டாக வெள்ளி, புதன், வியாழன் ஆகிய இவர்களுடைய வார உதயங்களில் உபநயனம் செய்யலாம். சந்திர வார உதயம் விசேஷித்துத் தவிரப்படும்.
கிரகங்கள் நிலை
சந்திரன் உதயத்தும் 12, 6, 8 ஆகிய இவ்விடத்து நிற்கலாகாது. புதனும், வியாழனும் 6, 8 ஆகிய இவ்விடத்து நிற்கில் ஆகாது. சுக்கிரன் 6, 7, 8 இவ்விடத்து நிற்கில் ஆகாது. பாபக்கிரகங்கள் 3, 6, 11 ஆகிய இவ்விடங்களில் நிற்கில் உத்தமம். அல்லாத இடங்களில் நிற்கில் ஆகாது.
நட்சத்திரங்கள் நிலை
சந்திராட்டமும் வைநாசிகமும், சென்மத்திரயமும், வத நட்சத்திரமும், பிரத்திய நட்சத்திரமும், இருபத்தேழாம் நட்சத்திரமும், அந்தணர் முதலிய மூன்று வருணத்தார்க்கும், உபநயனத்திற்கும் ஆகாது. அல்லாத சம்பத்து நட்சத்திரமும், விபத்து நட்சத்திரமும், ஷேம நட்சத்திரமும், சாதக நட்சத்திரமும், மித்திர நட்சத்திரமும், விபத்து நட்சத்திரமும் உபநயனத்திற்கு மிகவும் நன்றாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 23 - 32 , பக்.121 - 124)
வேதாரம்பம் - காண்டோபக்கிரமணம் - வேதாத்தியயனம் ஆரம்பிக்கும் கிரியை
அத்தம், சித்திரை, சோதி, அசுவதி, புநர்பூசம், பூசம், சதயம், அவிட்டம், திருவோணம், திருவாதிரை, அனுடம், உரோகிணி, உத்திரத்திரயம், இரேவதி ஆகிய இந்த நாட்களில் பூருவ பக்கத்திலே அட்டமி, இருத்தை, உவவும் ஒழிந்த திதிகளிலே சரராசி, உபய ராசி உதயமாக வேதாரம்பம் செய்யலாம். இவ்விடத்துச் சொல்லிச் சொல்லாதன வித்தியாரம்பத்துக்குச் சொன்ன படியே கொள்ள வேண்டும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பா.33, ப.124)
உபாகன்மம்
ஆதித்தியன் கர்க்கடகம், சிங்கம், கன்னி ஆகிய இவற்றிலே நிற்கச் சாந்திர மாதங்களிற் பூரணையில் தத்தம் சூத்திரங்களில் சொன்ன நாளிலே சுபக்கிரக உதய நோக்கு உண்டாக உபாகன்மம் செய்வது. நடக்கும் என்றதனால் சுக்கிரன் அத்தமயமின்றி இருக்கில் உபாகன்மத்துச் சிங்கமாதம் உத்தமம். யாதாயினும் ஒரு வித்தையை முடிக்கும் இடத்து அபாரணத்திற் சந்திர வார உதயத்திலே முடிப்பது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை,பாடல் 34, ப.124)
சமாவர்த்தனம் - பிரமசாரி விரதத்தை முடித்தல்
வேதமுறையே நான்கு விரதங்களையும் அவரவர் சூத்திரஞ் சொன்னபடியே உத்திராயணத்திலே விவாகத்திற்கு - திருமணம் முன்னே சௌளத்திற்குச் சொன்ன நாளிலே முகூர்த்தத்தினும் முடிப்பது. பின்பு சமாவர்த்தனம் செய்யும் இடத்து உரோகிணி, திருவோணம், உத்திரத்திரயம், அனுஷம், புநர்பூசம், அத்தம், இரேவதி, மிருகசீரிடம் ஆகிய இந்த நாட்களிலே அட்டம சுத்தியாகப் பகற்காலத்திலே ஆகாச நின்மலமாய் இருக்கச் செய்வது.
இதைச் செய்யும் இடத்து பஞ்சாங்க யோகம் நன்றாகக் குணாதிகமான சுப முகூர்த்தத்திலே மூன்று வருணத்தார்க்கும் சமாவர்த்தனம் கிரியை முடிப்பது. ஒழிந்தோர்க்குப் புண்ணிய தீர்த்தங்களின் மூழ்கி இரண்டு நவவஸ்திரம் உடுத்துப் பத்திர காளி பூசை செய்து மீளுவதென்று பல சாத்திரங்களினும் சொல்லப்பட்டது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பா.35 - 36, ப.125)
கிருகப்பிரவேசம் - புதிய இல்லம் குடி புகுதல்
புநர்பூசம், பூசம், உத்திரத்திரயம், இரேவதி, அசுவதி, அத்தம், திருவோணம், மிருகசீரிடம், அனுடம், உரோகிணி, சோதி, மகம், அவிட்டம் ஆகிய இந்நாட்களில் இருத்தை, சஷ்டி, அட்டமி ஒழிந்த பக்கத்திலே பஞ்சாங்க யோகம் நன்றாக இருக்கக் குடி புகுதலாம்.
குடி புகும் இடத்து விரிச்சிகம் ஒழிந்த திர ராசியும் உபய ராசியுமாம். அல்லாத இராசி இட பாகங்களும் சுபுக்கோள் நிற்கின்ற விரிச்சிகமுமாம். 8, 12 ஆகிய இவ்விடம் சுத்தியாகக் குடி புகுதலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 10 -11, ப.150)
நவபூஷணம் - ஒன்பது இரத்தினங்கள் - ஆண்கள், பெண்கள் அணிதல்
இரேவதி, மிருகசீரிடம், அசுவதி, அத்தம், சித்திரை, அனுடம், புநர்பூசம், பூசம், உரோகிணி ஆகிய இந்நாட்களிலே தனு, மிதுனம், மீனம், இடபம், கன்னி ஆகிய இந்த ராசிகள் உதயமாகப் பிரதமை, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி, பூரணையிலேயும் வாரத்து ஆண்கள் ஆபரணம் அணியலாம். திருமணத்திற்குச் சொன்ன நாளினும், முகூர்த்த நாளினும் பெண்கள் ஆபரணம் அணியலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பா.13, ப.150)
நவவஸ்திரம் பூண - ஒன்பது ஆடைகள் - ஆண்கள், பெண்கள் அணிதல்
உத்திரத்திரயம், இரேவதி, புநர்பூசம், பூசம், அசுவதி, உரோகிணி, அத்தம், சித்திரை, சோதி, விசாகம், அனுடம் ஆகிய இந்நாட்களிலே மேடம், சிங்கம், தனு, மீனம் ஆகிய இவை ஒழிந்த ராசிகளிலே சனி, செவ்வாய், இருத்தை ஒழிந்த பக்கங்களிலே 6 ஆம் இடஞ் சுத்தியாகப் புதுப்புடவை அணிதல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 14, ப.151)
புதுவஸ்திரமுடுத்தல் - புதிய ஆடை அணிதல்
திங்கள், புதன், வியாழன், வௌளி வாரங்களும், அசுவினி, ரோகிணி, புநர்பூசம், பூசம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரங்களும், சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவாசியை ஒழிந்த திதிகளும், விருடபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசிகளும் ஆறாமிடஞ் சுத்தமாகக் கோடி வஸ்திரம் உடுக்க உத்தமம்.
தொடரும்
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|