சடங்குகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
சடங்குகள் - பகுதி 2
விதானமாலை, மைந்தர் வினைப்படலம் தரும் செய்திகள்
பஞ்சாயுதம் - (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு)
பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையை சுத்த நீரினிலே முழுக்காட்டிச் சுபக்கோள் உதயமாகப் பஞ்சாயுத சூத்திரத்தை நாபி அளவாகத் தரித்துத் தெய்வம், அந்தணர் வாழ்த்து மந்திரத்தினாலே பூத பிசாசு வராதபடி காவல் செய்துக் காப்புத் தரித்துப் பின் (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு) இதனைக் கட்டும் சடங்கு செய்வர் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.114)
நாமகரணம் - பெயர் சூட்டுதல்
இது பிறந்த மகவுக்கு 10 அல்லது 12, 16 வது நாள்களில் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும். அட்சரங்களை முதலாகக் கொண்டு பெயரிடுவதாம். அல்லது பாட்டன் முதலானார் பெயரை இடுவதாம்.
பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12-ம் நாளும், ஷத்திரியருக்கு 16-ம் நாளும், வைசியருக்கு 21-ம் நாளும், சூத்திரருக்கு 31-ம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்த நாள் கழிந்தால் சுப தினங்களிலே ஸ்திரி ராசிகள் உதயமாக லக்கினம் 5-ம் இடம், 8-ம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்ய வேண்டும்.
பிள்ளை பிறந்த பத்தாம் நாள் முதல் பன்னிரண்டாம் நாள் ஆதல் கிருகசுத்தி செய்துச் சுபக்கோள் உதயமாக நாமகரணஞ் செய்தல் - அதாவது பெயர் சூட்டுதல். இந்நாள் கழிந்தால் மிருகசீரிடம், சோதி, அவிட்டம், அத்தம், மகம், திருவோணம், சதயம், அனுஷம், உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், உரோகிணி, மூலம், திருவாதிரை ஆகிய இந்த நாட்களிலே முன் சொன்ன படியே பஞ்சாங்க யோகம் நன்றாக திரராசி உதயமாக நாமகரணஞ்செய்வது. ஷத்திரயர் - 16 நாள். வைசியர் - 22 நாள். சூத்திரர் - 31 நாள் ஆகிய நாளில் பெயரிடுவது. இவ்விதம் செய்யும் இடத்து முன் சொன்ன நாளின் திர இலக்கினத்திலே 8 ஆம் இடமும், 5 ஆம் சுத்தமாக, சுபக்கோள் 7 ஆம் இடத்தாதல் நட்பாட்சி உச்சத்துச் சுபாங்கிசங்களிலேயாதல் நின்று திப்பப் பெயரிட்டால் நன்மை உண்டாகும். பகை நீசத்து நின்று திப்பப் பெயரிட்டால் தரித்திரமாதல், வியாதியாதல் உண்டாகும். பட்டப் பெயரிடுமிடத்தும் இந்நாளிலே இந்த யோகத்திலே கொள்வதும், நீசத்துக் கொள்ளாது ஒழிவதும் பெறப்படும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2 - 3, பக்கம்.115)
தொட்டிலேற்றல்
பிள்ளை பிறந்த 10 - ம் நாள், 12 - ம் நாள், 14-ம் நாள், 32-ம் நாளாதல் சுபக்கிரகம் உதயமாகப் பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகராசி நட்சத்திரங்களிலே பிள்ளையைத் தொட்டில் ஏற்ற வேண்டும்.
பிள்ளை பூமிகேதனனான 10, 12, 16, 32 ஆகிய இந்நாட்களிலே சுபக்கிரகம் உதயமாக ஊர்த்துவ முக இராசி நட்சத்திரங்களில் பஞ்சாங்கயோகம் நன்றாகப் பிள்ளையைத் தொட்டிலில் ஏற்றுவது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 4, பக்கம்.115)
பால் பருகுதல்
பிள்ளை பிறந்த முப்பத்தோராம் நாள் சந்திரனையும், பூமாதேவியையும் அருச்சனை - வழிபாடு செய்து சுபக்கோள் உதயமாகச் சங்கினில் பால் வார்த்துப் பருகச் செய்தல்.
மேலும் 31 ஆம் நாள் கழிந்தால் அத்தம், மகம், உரோகிணி, உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், திருவோணம், சித்திரை, சோதி, அசுவதி, மிருகசீரிடம், சதயம், அவிட்டம், இரேவதி, அனுஷம் ஆகிய இந்த நாட்களிலே ஞாயிறு, செவ்வாய், சனி ஒழிந்த வாரங்களில் நல்ல திதிகளிலேயே யோகினி எதிரில் நிற்காதிருக்க மீனம், விருச்சிகம் ஒழிந்த ராசிகளில் குழந்தைக்கு சங்கில் பால் வார்த்துப் பருகுதல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 5 - 6, பக்கம்.116)
கன்னவேதை - காது குத்துவது
பிள்ளை பிறந்த பன்னிரண்டாம் நாள் ஆதல், பதினாறாம் நாள் ஆதல, சாவணமாதவகையால் ஆறாம் மாதம், எட்டாம் மாதங்களிலே புநர்பூசம், பூசம், மிருகசீரிடம், சித்திரை, திருவாதிரை, திருவோணம், உத்திரத்திரயம், அத்தம், இரேவதி, அவிட்டம் ஆகிய இந்நாட்களில் சிங்கம், விரிச்சிகம், கும்பம் ஒழிந்த இராசிகளிலே பஞ்சாங்கயோகம் நன்றாகக் காது குத்துவது.
ஒரு வாரத்தில் பகலிலே இரண்டு நாளும், இரண்டு திதியும் வந்தால் அந்நாள் தவிரப்படும். அட்டமசுத்தி உண்டாக ஆபரணத்தாலே பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகமான இராசியும் நாளும் உத்தமமாகக் கொண்டு கன்ன வேதனம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 7 - 8, பக்கம்.116 - 117)
சூரியவலோகனம்
அதாவது மூன்றாம் மாதத்தில் குழந்தை சூரியனைத் தரிசிக்கச் செய்தல்.
சூரிய சந்திர கோதரிசனம்
பிள்ளை பிறந்த 3 - ம் மாசத்திலே அனுகூலமான சுபதினத்திலே பிள்ளைக்குச் சூரியனைக் காட்ட வேண்டும். பிள்ளை பிறந்த 4 - ம் மாதத்திலே அன்னப்பிராசனத்திற்கு நிச்சயித்திருக்கிற சுப முகூர்த்தத்திலே சுப்பிரமண்ய சுவாமியையும், சந்திரனையும் பூசித்துச் சந்திர தரிசனமும், கோதரிசனமும் பண்ணுவிக்கும் சடங்கு.
நிஷ்கரமணம்
நான்காம் மாதத்தில் குழந்தை சந்திரனைத் தரிசிக்கச் செய்தலும் சந்தியை மிதிப்பிக்கச் செய்தலுமாம்.
சந்திர கோதரிசனம்
பிள்ளை பிறந்த நான்காம் மாதத்திற்குப் பிறகு அன்னப்பிராசனத்திற்குச் சொன்ன திதி, வார, நாள், இராசிகளிலேயே முருகனையும், அந்தணரையும் வணங்கி சந்திரனுக்குப் பாலமுது செய்வித்துப் பிள்ளைக்குச் சந்திர தரிசனமும், நட்சத்திர தரிசனமும், கோதரிசனமும் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 9, பக்கம்.117)
சந்தி மிதித்தல்
பிறந்த ஆறாம் மாதத்திற் செய்யும் ஒரு சடங்கு.
அன்னப்பிராசனம் - அமுது ஊட்டுதல்
இது 6வது அல்லது 8வது மாதங்களில் குழந்தைக்கு அன்னம் ஊட்டுதலாம். பெண் குழந்தையாகில் ஒற்றைப்பட மாதத்தில் செய்வதாம்.
சாவணம் ஆகையால் 6, 8, 10, 12 ஆம் மாதங்களிலே அன்னப்பிராசனஞ் செய்யப்படும். குறிப்பிட்ட நாட்களாக 150, 210, 270, 330 ஆகிய இந்நாள் செல்லும் அவற்றில் சித்திரை, மிருகசீரிடம், சதயம், அவிட்டம், உரோகிணி, அத்தம், புநர்பூசம், பூசம், இரேவதி, சோதி, உத்திரத்திரயம், அனுஷம், அசுவதி, திருவோணம் ஆகிய இந்நாட்களிலே அன்னப்பிராசனம் செய்யப்படும்.
மீனம், விருச்சிகம், மேடம் இவை ஒழிந்த இராசிகளில் அபரபக்கச் சந்தரோதயமும், 9 ஆம் இடத்துப் புதனும், 7 ஆம் இடத்துச் சுக்கிரனும், 8 ஆம் இடத்துச் செவ்வாயும் ஒழிந்த முகூர்த்தத்திலே 10 ஆம் இடம் சுத்தமாக முன் சொன்னபடியே பஞ்சாங்கயோகம் நன்றாக இருக்கும் காலத்தில் அன்னப்பிராசனஞ் செய்தல். பகலுமாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 10 - 11, பக்கம்.117 - 118)
ஆண்டு நிறைவு
ஆதித்தியகதியாலே ஓராண்டு சென்ற சென்ம மாதஞ் சென்ம நட்சத்திரத்திலேயாதல் பஞ்சாங்க யோகம் நன்றாகப் பொருந்தின நாளிலேயாதல் சுத்த நீரினாலே பிள்ளையை முழுக்காட்டி அந்தணருக்கு உணவு கொடுத்து சுபக்கோள் உதயமாக ஆண்டு நிறைவினில் சிற்றாடை உடுத்திப் பொன்னரைஞாண் தரிக்கச்செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 12, பக்கம்.118)
சௌளம் அல்லது சூடாகரணம் - காது குத்துதல்
குழந்தைக்கு 1, 3, 5 - வது ஆண்டில் மயிர் களைவது. ஏழாவது ஆண்டு அல்லது 8 - வது ஆண்டில் காது குத்துதல்.
சௌளம் செய்யும் இடத்து 1, 3, 5 வயதாகிய நாலாங் கூற்றிலே சுக்கிரன், குரு அத்தமம் இன்றி நிற்க மேற் சொன்ன இலக்கினத்திற்கு 7 ஆம் இடத்துச் செவ்வாய், சனி, சுக்கிரன், சூரியன் இல்லாதொழிய அட்டம சுத்தி உண்டாகக் கொள்ளுவது.
(எ.கா) சுப லக்கினம் இருந்தால் பகலிலே 25 நாழிகையளவும், சௌள கன்மஞ் செய்யலாம். ஆகையால் வெள்ளி கதி ஒழிந்த இடத்து என்றார்.
புநர்பூசம், பூசம், அத்தம், திருவோணம், அவிட்டம், சித்திரை, இரேவதி, அசுவதி, மிருகசீரிடம் இவை உத்தமம். சதயம், ரோகிணி, உத்திரத்திரயம் இவை மத்திமம். உத்திராயன மாதங்களிலே பஞ்சாங்கயோகம் நன்றாகச் சௌள கன்மஞ் செய்வது. இரவில் செய்தல் கூடாது.
கன்னி, துலா, மிதுனம், கர்க்கடகம், மீனம், இடபம், மகரம் ஆகிய இவை நன்று. தனு, விருச்சிகம், சிங்கம், மேடம் ஆகிய இவற்றில் சுபக்கோள் நிற்கலாம். சுபக்கோள் உதயமாகினும் கும்பம் ஆகாது. அந்தணருக்கு ஞாயிறு வார உதயமும், ஷத்திரியருக்குச் செவ்வாய் வார உதயமும், வைசியருக்குஞ், சூத்திரருக்கும் சனி வார உதயமும் நன்று என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 13 - 15, பக்கம்.118 - 119)
தொடரும்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.