ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
முனைவர் தி. கல்பனாதேவி
4. நவக்கிரகங்களின் காரகத்துவங்கள்

சூரியன் முதலான ஒன்பது கோள்களுக்கும் காரகத்துவங்கள் உள்ளன. இது பற்றி சோதிட நுால்கள் பல தெரிவிக்கின்றன. இருப்பினும் சில அடிப்படையான இன்றியாமையாதனவற்றை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவற்றின் செயல்பாடுகள், பலன்கள் பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும்.
பொதுவாக கோள்கள் மிகுதியான பலன்களை இடத்திற்கு ஏற்பத் தருவார்கள். இருப்பினும் அவர்களுக்கென்று சில பதவிகள் உள்ளன. பிதா சூரியன், மாதா சந்திரன், இரவில் சனி, சுக்கிரன் என்பர். எனவே இவர்களை பின் வருமாறு நினைவில் கொள்ள வேண்டும்.
கோள்களின் காரகத்துவங்கள் கொண்டும், அவர்கள் இருக்கும் இடம் கொண்டும் அவற்றினை வைத்துப் பலன்களை நாம் துல்லியமாக அறியலாம்.
சூரியன்
அக்கினி, அதிர்ஷ்டம், அரசர், ஆத்மம், இடையர், ராஜசேவை, உத்தியோகம், காரம், கோதுமை, கிழக்கு, சக்தி, சாய்கால், சிந்தை, சிரசு, சிரோரோகம், சிவப்பு நிறம், சுகம், சுரம், செம்பு, தகப்பன், திருடர், துஷ்டர், தைரியம், கண்கள், பாதரசம், பாம்பு, பிரபாவம், மரங்கள், மருந்து, மலை நாட்டார், வனாந்திரம், விதை, விஷம், வீரியம், வைத்தியர், ஸத்வகுணம், க்ஷத்திரியக்குலம்.
சந்திரன்
அறியும் சக்தி, அழகான யுவதி, ஆகாரம், இரத்தினங்கள், இராஜ சன்மானம், இனிப்பு ரஸம், உப்பு, கணபதி, கொம்புள்ள மிருகம், அரிசி, சிந்தை, சேனாதிபதி, சிலேஷ்ம ரோகம், செல்வம், ஜலம், ஜலஜந்து, தாய், நெல், பழம், புத்தி தெளிவு, புஷ்பம், பிராமணர், மனதின் குணம், முத்து, மூலிகை, வட மேற்கு, வஸ்திரம், வெண்ணிறம், வெண்மையான குதிரை, வைசிய குலம், ஸத்வ குணம்.
அங்காரகன்
அக்கினி, அக்கினி பயம், அகால மரணம், அரசர்கள், இடையர்கள், கசப்பு, காட்டில் வசிப்பவர்கள், குணாதிசயங்கள், குழந்தைகள், கொல்பவர், சத்ரு, சகோதிரம், சாராயம், சிவப்பு, சுரங்கம், சேவகன், சேனாதிபத்தியம், சேனாதிபதிகள், சோர பயம், தகப்பன் வழி பந்துக்கள், தமோகுணம், திருடர், துஷ்டர், தெற்கு, தைரியம், பவளம், பிரதான பயணம், பூமி, பொன், போர், வீரர், யானை, இரசாயன விஞ்ஞானி, விதவை சம்போகம், விரோதி, விவசாயி, வீரியம், வெல்லம், வேலையாட்கள், க்ஷத்திரியக்குணம்.
புதன்
அண்டவாதரோகம், இலக்கணப்புலவர், எண்ணெய், கணித வித்வான், கர்மம், கழைக்கூத்தர், காவலாளிகள், நுால் படைப்பாளி, குடியர், கைத்தொழிலாளி, கோவேறு கழுதை, கோள் சொல்பவர், சித்திரம் எழுதுபவர், சிற்பம், சிற்பி, சினேகிதர்கள், ஞானம், துாதன், நெய், பகுத்தறிவு, பச்சை நிறம், பந்துக்கள், பல தரங்களுடையது. பாடகர், பித்தளை, புத்திர ஹானி, புலவர், மந்திரவாதி, தாய் மாமன், மாயா வித்தைக்காரன், ரோகம், வடக்கு, வர்ண வேலைக்காரர், வாக்கு, வாசனை திரவியம், வாத நோய், விகடன், வித்தை, வியாபாரம், விஷ்ணு, வைத்தியர்.
குரு
அரசன், அறிவு, அஷ்டமா சித்திகள், இரக்கம், இராஜ சன்மானம், இராஜசின்னம், இராஜ்ய மூல ஜீவனம், இலக்கண வித்வான், உபதேசம், உப்பு, குடை, குதிரை, (சரீர புஷ்டி) தேகபலம், சாமரம், ச்ருதி, சுத்தம், ஞானம், ஞானாநுஷ்டானம், தருமம். தனவான், தானம், இனிப்பு, தீர்க்காலோசனை, பிராமண குலம், புத்திரர்கள், புரோகிதர், பொன், பொன் நிறம், மஞ்சள் நிறம், மந்திரி, மெழுகு, யானை, யோகாப்யாசம், வக்கீல், வட கிழக்கு, வித்தை, வித்வான், விவாகம், வெள்ளி, வேதாந்திகள், ஸ்மிருதி, ஸத்வகுணம்.
சுக்கிரன்
அழகிய பெண்கள் ஸம்போகம், அழகு, ஆபரணம். ஆலயம், கப்பல், வியாபாரம், கருமையும், வெண்மையும் கலந்த நிறம், காமம், காம வஸ்துக்கள், கீர்த்தி, குதிரை, குயவர், சந்தன மரம், தனவான், தென் கிழக்கு, தேர், நந்தவனம், நவரத்தினம், பட்டு, படுக்கை, பிராமண குலம், புளிப்பு, புஷ்பம், மணமகன், மந்திரி, மனைவி, மாவுத்தன், முத்து, யானை, இளைஞன், யுவதி, ரஜோகுணம், இரத்தின வியாபாரம், வஸ்திராபரணம், வாகனம், வாசனைத்திரவியம், வித்தை, வெள்ளிச்சுரங்கம், ஸம்பத்து, ஸீகம்.
சனி
அடிமைத்தனம், அவயவக்குறைவு, அனாசாரம், ஆயுள், இராஜ தண்டனை, இரும்பு, ஈனப்பெண் போகம், எருமை விருத்தி, எருமை, ஏழை, ஒட்டகம், கடன், கழுதை, கறுப்பு, நிறம், கிழவர், கிருஷி, குலத்தாழ்வு, சித்தப்பிரமம், சிறைவாசம், செம்படவர், துவர்ப்பு, துஷ்டர், நிர்யாண காரணம், பறவைகளை வேட்டை யாடுபவர், பித்த வியாதி, புலால் புசித்தல், மலடர், மலையில் வசிப்போர், மேக நோய், மேற்கு, வாணியர், விதவை, விபத்து, ஜீவனம், ஸம்பத்து.
இராகு
அங்கஹீனர், இளைப்பாறுதல், எள், கப்பல் முழுகுதல், கறுப்பு நிறம், குகைகள், குத்து வெட்டுக்காயம், குல விரோதத்தொழில், குன்ம வியாதி, குஸ்திச்சண்டை, சிறைத்தண்டனை, தடாகம், திருடர், தென் மேற்கு, துஷ்டர், தோட்டம், நரி தின்பவர், நாய், நீர்க்கண்ட நோய், பிற தேசவாசம், பித்த வாத ரோகம், பிதாமகன், மலைவாசிகள், மூர்ச்சை வாயு, ரோகஸ்திரி சம்போகம், விகடகவி, விஷ பயம்.
கேது
அக்கினி பயம், இராஜ தண்டனை, இழிகுலத்தொழில், கீர்த்தி, குஷ்ட ரோகம், சிவப்பு நிறம், சித்தப்பிரமம், சிறைவாசம், ஏழ்மை, தனவான், தாயின் தகப்பன், பரதேச ஜீவனம், பரதாரபிரியர், புலால் புசித்தல். மோக்ஷம், இரணகாயம், வட மேற்கு, விஷபாண்டு, வெகுதானம்.
பொதுவாக பலன்கள் தருகின்ற போது அவரவர் சாதகத்தில் நின்ற இடம், பார்த்த இடம், ஆட்சி, உச்சம், பகை, சேர்க்கை முதலான பலவற்றையும் நினைவினில் கொண்டு திசாபுத்தி, கோட்சாரம் பலனிற்கு ஏற்பவே அவரவர்க்கு பலன்கள் வழங்குவார்.
திரேகாணம் - திரிகோணம்
ஷட்வர்க்கத்தில் இது மூன்றாவது. இதன் சரியான பெயர் திரிகோணமாகும். ஒவ்வொரு இராசியிலும் 30 பாகைகள் உள்ளன. இதை மூன்றாகப் பிரிக்க ஒவ்வொரு திரேகாணத்திற்கும்10 பாகைகள் வரும். முதல் 10 பாகைகள் முதல் திரேகாணம். 10 - 20 வரை 2 ஆவது திரேகாணம். 20 - 30 வரை 3 ஆவது திரேகாணம். மேட ராசியை 3 ஆகப் பிரித்தால் 0 -10 பாகை முதல் மேடத்திரேகாணம், இதன் 5 ஆவது சிம்மம் 2 ஆவது திரேகாணம், இதன் 9 ஆவது தனுசு 3 ஆவது திரேகாணம் ஆகும்.
* மேடம், ரிடபம், மிதுனம், கடகம் - முதல் திரிகோணம்.
* சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் - 2 ஆவது திரிகோணம்.
* தனுசு, மகரம், கும்பம், மீனம் - 3 ஆவது திரிகோணம்.
எல்லா இராசிகளின் முதல் திரேகாணம் அதாவது 10 பாகை அதே ராசியாகும். 2 ஆவது திரேகாணம் அதன் 5 ஆவது இராசியும் 3 ஆவது திரேகாணம் அந்த ராசியின் 9 ஆவது ராசியாகும்.
இத்திரேகாணங்களினால் உடலின் உறுப்புகளையும், அவை பற்றிய விவரங்களையும் நாம் அறியலாம். திரிகோணம் - திரி என்றால் மூன்று, கோணம் - பாகை. 1, 5, 9 அதாவது இலக்கினம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் ஆகிய இம்மூன்றும் மூலத்திரிகோணமாகும். இந்த மூன்று இடங்களில் உள்ள கோள்களுக்கு வலிமை அதிகமாகும்.
மூன்று திரேகாணங்களினால் ஒருவரைப் பற்றி நாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.
திரேகாண வீடுகளின் வழி கோள்கள் அமைப்பின்படி சுபராக இருந்தால் மச்சங்களும், பாவர்கள் ரிடபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர இராசியானாலும், அவை ஆட்சியாகவோ அல்லது நவாம்சத்தில் தனது இராசியிலோ இருந்தால் தழும்பு மற்றும் மச்சங்கள் காணப்படும். சர ராசியில் அல்லது சர நவாம்சத்தில் இருந்தால் அந்த கிரகங்களுடைய தசாபுத்திகளில் தழும்பு மச்சம் ஏற்படும்.
கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்
வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகின்றது. இதனை மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு இராசிகட்கும் முப்பது பாகைகள் வீதம் பிரிக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு இராசியும் இரண்டே கால் நட்சத்திரமும், ஒன்பது பாதங்களும் ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும், 108 பாதங்களும் பன்னிரண்டு இராசிகளும் ஆக பெற்று விளங்குகின்றது.
கோட்சாரம் - கோள் + சாரம்:
விண்ணில் கோள்கள் செல்லும் ஒழுங்கு முறை பயணமே கோட்சாரம் எனப்படும். இவ்விதம் நவகோள்களும் விண்ணில் எப்பொழுதும் சஞ்சாரம் செய்கின்றன. இதனையே கோட்சாரம் என்கிறோம். இவ்விதம் சஞ்சாரம் செய்யும் போது அவரவரின் பிறந்த சாதகத்தில் நின்ற அன்றைய கோட்சார கிரக நிலையின் படியும், தற்கால கோட்சார கிரக நிலையின் படியும் கோள்கள் சுப, அசுப பலன்களைத் தருகின்றனர்.
கோள்களின் ஒழுங்கு முறைப்பயணம். அவை விண்ணில் முறையாய் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றினால் பலன்கள் ஏற்படுகின்றன. அவை ஒவ்வொரு நட்சத்திரக் காலிலும் ஆக பன்னிரு இராசிகளிலும் ஒரு முறையான பயணத்தை வைத்துள்ளனர்.
நட்சத்திரங்களின் அதிபதி:
இருபத்தியேழு நட்சத்திரங்கள் - சாரம் (கோள்கள்)
1. அசுவிணி, மகம், மூலம் - கேது
2. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்
4. உரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்
5. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - அங்காரகன்
6. திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு
7. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு
8. பூசம், அனுடம், உத்திரட்டாதி - சனி
9. ஆயில்யம், கேட்டை, இரேவதி - புதன்
கோட்சார சுப அசுப பலன் தரும் இடங்கள்:
சுப கோள்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர்களுடன் கூடிய புதன் ஆகிய இவர்கள் சுப பலன்களை சுப இடங்களில் தருவர். அசுப கோள்களான சனி, செவ்வாய், இராகு, கேது, சூரியன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலனைத் தருவர். மற்ற இடங்களில் தீமையான பலன்களைத் தருவர். 3, 6, 10, 11 இவ்விடங்களில் வளர்பிறைச் சந்திரன் சுபர்களுடன் கூடிய புதன் தீமையான பலனைத் தருவர். 6, 8, 12 ஆம் இடங்களில் சுபர்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர். மற்ற இடங்களில் சுபர்கள் அவரவர் சாதகத்திற்கு ஏற்ப, பாவகங்களுக்கு ஏற்ப சுப அசுப பலனைத் தருவர். சுப கோள்கள் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அந்தந்த பாவகங்கட்கு ஏற்ப சுப பலனைத் தருவார்கள். பாவ கோள்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர்.
பழங்காலத்தில் கோட்சாரம் பலன் பற்றி பல நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றினுள் சில மாறுபாடுகள் ஆனது காணப் பெறுகின்றது. இவை பற்றிக் காண்போம்.
நவாம்சம்
ஷட்வர்க்கத்தில் 4 ஆம் இடத்தில் இருப்பது நவாம்சமாகும். ஒரு இராசியை ஒன்பது பிரிவுகளாகப் பிரிப்பதே நவாம்சமாகும். இதனை வைத்து ஒரு கோள் தான் எந்த நட்சத்திரத்தில் எந்தக்காலில் உள்ளது என்பதனை நாம் எளிதில் அறியலாம். இதனால் பலன்களைக் கணிக்க இயலும். இந்த காலின் நட்சத்திரத்தின் வழியே அந்தக்கோள் அந்த சாதகருக்குப் பலன் தரும் என்று நாம் அறியலாம். இரண்டே கால் நட்சத்திரம் முறையாய் அமைவதால் பன்னிரு இராசிகட்கும் 108 பாதங்கள் என அவை அமையும்.
ஒரு குழந்தை பிறந்த அன்று உள்ள கிரக அமைப்பின் படி சோதிடக் கட்டங்களில் அவை அமைகின்றன. அன்றைய சூரிய உதயம் வைத்து குழந்தை பிறந்த நேரம் வரை உள்ள இடைவெளி நேரம் கணித்து பின் சோதிடம் முறையாய் கணிக்கப் பெற்று இலக்னம், இராசி தீர்மானித்து அனைத்து கிரகங்களும் தீர்மானிக்கப் பெறுகின்றன. அவ்விதம் கணிக்கும் போது அந்த கோட்சாரத்தில் சாதகத்தில் உள்ள கோள்கள் தான் நிற்கும் நட்சத்திரங்கள், பாதங்கள் எவை என்பதை அறியலாம்.
பலன்கள் தருவதற்கு அவை நிற்கும் நட்சத்திரக்கால்களின் வழியே அவை நற்பலன், தீய பலன் ஆகிய இரண்டையும் தருகின்றன.
12 இராசிகளில் நட்சத்திரங்கள் உள்ள நிலை:
ஒவ்வொரு இராசி வீடும் இரண்டே கால் நட்சத்திரம் என ஒவ்வொரு இராசி வீடும் 9 பாதம் எனக் கொண்டு 12 ம் 27 நட்சத்திரங்களைக் கொண்டு 108 பாதங்கள் ஆக உரிய விம்சோத்தரி முறையின் படி விளங்குகின்றது.
1. மேடம் - அசுவினி 1 - 4 பாதங்கள், பரணி - 1 - 4 பாதங்கள், கார்த்திகை - 1 பாதம்.
2. ரிடபம் - கார்த்திகை - 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1 - 4 பாதங்கள், மிருகசீருடம் - 1, 2 பாதங்கள்.
3. மிதுனம் - மிருக சீருடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை - 1 - 4 பாதங்கள், புனர் பூசம் 1, 2, 3 பாதங்கள்.
4. கடகம் - புனர் பூசம் 4 பாதம், பூசம் 1 - 4 பாதங்கள், ஆயில்யம்1 - 4 பாதங்கள்.
5. சிம்மம் - மகம் 1 - 4 பாதங்கள், பூரம் 1 - 4 பாதங்கள், உத்ரம் 1 பாதம்.
6. கன்னி - உத்ர, 2 - 4 பாதங்கள், அஸ்வினி 1 - 4 பாதங்கள், சித்திரை 1, 2 பாதங்கள்.
7. துலாம் - சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1 - 4 பாதங்கள், விசாகம் 1, 2, 3 பாதங்கள்.
8. விருச்சிகம் - விசாகம் 4, அனுசம் 1 - 4 பாதங்கள், கேட்டை 1 - 4 பாதங்கள்.
9. தனுசு - மூலம் 1 - 4 பாதங்கள், பூராடம் 1 - 4 பாதங்கள், உத்ராடம் 1 பாதம்.
10. மகரம் - உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1 - 4 பாதங்கள், அவிட்டம் 1, 2 பாதங்கள்.
11. கும்பம் - அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1 - 4 பாதங்கள், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்.
12. மீனம் - பூரட்டாதி 4 , உத்திரட்டாதி 1 - 4 பாதங்கள், ரேவதி 1 - 4 பாதங்கள்.
இவை நவாம்சத்தில் கால புருடனின் முதல் உறுப்பு இராசியான மேடத்தில் இருந்து இதுவும் ஆரம்பமாகும். அவ்விதம் ஆரம்பிக்கும் போது மேடம் முதலாக அசுவினி ஒன்று பாதம் முதல் பாதத்தை வைத்து எண்ணிக் கணக்கிட்டு 12 இராசிகட்கும் வர வேண்டும். அப்படி வந்தால் உதாரணம் ஆக மேடம் அசு 1, ரிடபம் அசு 2, மிதுனம் அசு 3, கடகம் அசு 4, சிம்மம் பர 1, கன்னி பர 2, துலாம் பர 3, விருச் பர 4, தனு கார் 1, மக கார் 2, கும் கார் 3, மீனம் கார் 4. இப்படியே வரிசையாய்ச் செல்ல மேடம் முதல் கடகத்தில் குரு, சந், கேது ஆகிய நட்சத்திரப் பாதங்களும், சிம்மம் முதல் விருச்சிகத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி, ஆகிய நட்சத்திரப் பாதங்களும், தனுசு முதல் மீனத்தில் சூரியன், ராகு, புதன் ஆகிய நட்சத்திரப் பாதங்களும் அடங்கும். இவ்விதம் நவாம்சம் அறியலாம்.
இதன் படியே அவரவர் சாதகத்தில் உள்ள கிரகங்களின் பாதம் எங்குள்ளன என்பதை அறிந்து அதன் பயனை நாம் தெரிந்து கொள்ளலாம். இது அந்தக் கோள் எந்த வழி பயணம் மேற் கொண்டுள்ளது நமக்கு தரும் பலன்கள் யாது என்பதனை அறிய உதவுகின்றது.
(கற்பித்தல் தொடரும்...)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|