தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் நான்கு (4) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் நான்காக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் நான்குக்குரிய கோள் வியாழன் ஆகும். சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் மிகப் பெரியது இதுவே ஆகும். அதிக பரப்பளவு என்பது வி¡¢வாக்கமாக பரந்த மனப்பான்மையைக் குறிப்பதால், இக்கோளின் தாக்கம் பெற்றவர்களிடத்தே குறுகிய எண்ணத்தைக் காண முடியாது. குறுக்கு வழியிலன்றி எதையும் முறைப்படி செய்யவேண்டும் என்றே விழைவர். ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கும் இவர்கள், விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவே விரும்புவர்.
கோள்களிலேயே அதிவேகமாக தன்னைத் தானே சுற்றி வரும் கோள் வியாழன் ஆகும். இது வியாழனின் தாக்கம் பெற்றவர்களது ஆத்ம ஆற்றல் அதாவது உள்ளத்தின் ஆற்றல் மிகவும் அதிகம் என்பதைக் காட்டுகிறது. இவர்கள் தாமே விரும்பி சற்று கடினமாக உழைத்தால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை. இவர்களது மனம் எப்போதும் பரபரப்பாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும்.
எண் நான்கிற்குரிய எழுத்துக்கள் ள், ண், ட் ஆகியன. இவ்வெழுத்துக்களின் தோற்றத்திற்கு "தொங்குதல்" வினையே காரணமாகும். இவ்வினையின் விரிவாக, பணிதல், வளைதல், கட்டுப்படுதல், கட்டுப்படுத்தல், அடக்குதல் முதலான பல வினைகளைச் சொல்லலாம். எனவே தான் இவ்வெண்ணுக்குரியவர்கள் தாம் மட்டும் ஒழுக்கமாக நடந்து கொள்ளாமல் மற்றவர்களும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பர். அதாவது தமது உயர் அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு பணியாற்றும் இவர்கள் தமக்குக் கீழ் உள்ளோர் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று விரும்புவர். அதற்காக தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவர். இந்த பணிவும் அதிகாரமும் அரசு அலுவலகங்களின் அடிப்படை என்பதால் இவர்களில் பெரும்பாலோர் அரசு அதிகாரிகளாக இருப்பர்.
வியாழனின் நிலை கெட்டிருக்கும்போது இவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தவறான செயல்களுக்குத் துணைபோகி சிக்கலில் மாட்டிக் கொள்வர். பிறர் செய்த தவறுக்கு இவர் தண்டனை அனுபவிக்கவும் நேரிடும். பிறக்கும்போது வியாழனின் நிலை கெட்டிருந்தால், அவர்கள் அடிமைத் தொழிலாளிகளாகவோ, கூலிக்காரர்களாகவோ வேலை செய்ய நேரிடும்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.