தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் ஐந்து (5) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
5, 14, 23, 32 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஐந்தாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஐந்துக்குரிய கோள் ராகு ஆகும். இது ஒரு நிழல் கோள் ஆகும். பாம்பின் தலை கொண்ட ஒரு மனிதனாக இது கருதப்படுகிறது. ஒன்பது கோள்களில் எண் ஐந்தாகிய ராகுவே வரிசையின் நடுவில் அமைந்துள்ளது. இது ராகுவின் நடுநிலைப் பண்பைக் காட்டுகிறது. இவ்வெண்ணின் தாக்கம் பெற்றவர்கள் ஒரு சமுதாயத்திலோ நிறுவனத்திலோ வீட்டிலோ நடுநிலை கொண்டவர்களாகவே இருப்பர். எந்த ஒரு நிறுவனமானாலும் அது தொடர்ந்து இயங்குவதற்கு நடுநிலைமை அதாவது சமநிலை தேவை. சமநிலை பிறழ்ந்தால் இயக்கம் பாதிக்கப்படும். அதைப்போலவே இம்மக்கள் விரும்பினால் ஒரு சமநிலையை உடைக்கமுடியும். புதிய கருத்துக்கள் மற்றும் புதிய செயல்களின் மூலம் இவர்கள் ஒரு சமுதாயம் அல்லது நிறுவனத்தின் சமநிலையை உடைத்து புரட்சிக்கு அடிகோலுவர்.
உடல் உறுப்புக்களில் ராகு வயிற்றை ஆள்கிறது. வயிறு கெட்டால் உடலில் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுவதை நாம் நன்கு அறிவோம். பசிக்கும்போது துன்புறும் நாம் புசிக்கும்போது இன்புறுகிறோம். இவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறித் தரவல்ல கோள் ராகு ஆகும். இந்த எண்ணுக்குரியவர்களின் வாழ்க்கை நிலையும் அவ்வாறே ஆகும். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்படுவர். எதிர்பாராமல் நடக்கும் இன்பதுன்பங்களால் இவர்கள் நிலைகுலைந்தாலும் மீண்டும் எழுந்து விடுவர்.
இக்கோளின் தாக்கம் பெற்றவர்களில் ஒரு சாரர் கூத்து, திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் பணியாற்றுவதைக் காணலாம். மகிழ்ச்சி, துயரம் முதலான முரணான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டும் இத்துறைகளில் இவர்கள் தலைசிறந்து விளங்குவர்.
எண் ஐந்துக்குரிய எழுத்துக்கள் 'ஐ' என்னும் உயிரெழுத்து ஆகும்.
ராகுவின் நிலை கெட்டிருந்தால் வாழ்க்கை நீண்ட போராட்டமாகத் தோன்றும். ஒவ்வொரு செயலும் நீண்ட முயற்சிக்குப் பின்னரே முடியும். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். நண்பர்களாக இருந்தவர்களே திடீரென்று எதிரிகளாக மாறுவர். நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல இவர்களது வாழ்க்கை விதியினால் செலுத்தப்படும்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.