தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் ஆறு (6) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஆறாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஆறுக்குரிய கோள் வெள்ளி ஆகும். பூமிக்கும் புதனுக்கும் நடுவில் உள்ள இக்கோள் அளவிலும், அடர்த்தியிலும், சுற்றும் வேகத்திலும் இவ்விரண்டு கோள்களுக்கு இடைப்பட்டதாகும். எல்லாக் கோள்களும் ஓராண்டிற்குள் (இங்கு ஆண்டு என்பது ஒரு கோள் ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் கால அளவு) குறைந்தபட்சம் ஒருமுறையாவது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும்போது, வெள்ளி மட்டும் ஒருமுறை கூட தன்னைத் தானே சுற்றுவதில்லை. அதாவது இதன் அக இயக்கம் புற இயக்கத்தைக் காட்டிலும் வேகத்தில் குறைவானது. இதனால் இவர்கள் செயல் அளவில் வேகம் காட்டினாலும் மனதளவில் எப்போதும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பர்.
எண் ஆறுக்குரிய எழுத்துக்கள் வ், ம், ப், ஃப் என்பன. இவ்வெழுத்துக்களின் தோற்றத்திற்குக் காரணமான வினை "அமைதல்" ஆகும். இவ்வினையின் விரிவாக பொறுத்தல், இயல்பாயிருத்தல் முதலான வினைகளைச் சொல்லலாம். எனவே இவ்வெண்ணுக்கு உரியவர்களிடத்தில் அமைதி, பொறுமை, நடுவு நிலைமை ஆகிய பண்புகளைக் காணலாம். ஒருவர் செய்த தவறுகளைப் பொறுத்து மன்னிக்கும் தெய்வப் பண்பினால் இவர்கள் மக்கள் செல்வாக்கினைப் பெறுவர். எப்பக்கமும் சாயாமல் நடுநிலையாய் நின்று சரியான தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்களான இவர்களில் பலர் நீதிபதிகளாகவும், நடுவர்களாகவும் இருப்பர்.
பொறுமையின் சிகரமாகும் இவர்களது முகத்தில் ஒருவித அமைதி என்றென்றும் குடிகொண்டிருக்கும். ஒரு சிலர் மக்கள் செல்வாக்குடைய துறவிகளாகவும் இருப்பர். இவர்களது முகத்தில் உள்ள அமைதி இவர்களுக்குத் தனி அழகினைக் கொடுக்கும். எப்போதும் அமைதியை விரும்பும் இம்மக்கள் இயற்கையை மிகவும் விரும்பி இரசிப்பர். ஒருசிலர் கவிஞர்களாகவும் தத்துவ ஞானிகளாகவும் இருப்பர். எளிதில் காதல் வசப்படுவர். அமைதியில் தான் ஞானம் பிறக்கிறது. அதே அமைதியில் தான் காமமும் பிறக்கிறது. எனவே எண் ஆறு ஞானத்திற்கும் காமத்திற்கும் உரிய கோளாக அமைகிறது.
வெள்ளியின் நிலை கெட்டிருந்தால், இவ்வெண்ணுக்குரியவர்கள் அளவு கடந்த காமம் கொண்டவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பைத்தியக்காரர்களாகவும் இருப்பர். மக்கள் நடுவே மரியாதை இழந்து கேலிக் கூத்துக்கும் ஆளாவர். இளிச்சவாயன் என்ற இழிசொல்லும் வரும்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.