தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் ஏழு (7) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஏழாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஏழுக்குரிய கோள் சூரியன் ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே சூரியனே மிகவும் பெரியதாகும். பெரிய கோளான வியாழனை விட ஏறத்தாழ பத்து மடங்கு பெரியதாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் எல்லாம் சூரியனையே மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இது சூரியனின் தலைமைப் பண்பைக் காட்டுகின்றது.
ஒளியும் வெப்பமும் தந்து உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கும் சூரியனின் தாக்கம் பெற்றவர்கள், சூரியனைப் போலவே மக்களுக்கு நன்மை செய்யும் தன்மையினராய் இருப்பர். மிகவும் பரந்த மனப்பான்மையும் உதவி செய்யும் பண்பும் கொண்ட இவர்கள், தவறு செய்தவர்களைக் கண்டால், சூரியனைப் போலவே சினம் கொள்வர். தவறுகளைக் கண்டால் பொறுக்க மாட்டார்கள்; கண்டிப்பாக தண்டிப்பார்கள். மன்னிக்கும் பண்பினை இவர்களிடத்தில் காண்பது மிகவும் அரிது. இதுதான் இவர்களது ஒரே எதிர்மறை பண்பாகும்.
எண் ஏழுக்குரிய எழுத்துக்கள் ய், ஞ், ச், எ, ஏ, ஒ, ஓ, ஸ், ஜ், ஷ் ஆகியன. இவற்றில் முதல் மூன்றும் "எழுதல்" வினையின் அடிப்படையில் பிறக்கின்றன. இவ்வினையின் விரிவாக உயர்தல், பரவுதல், பரப்புதல், விரிதல் முதலான வினைகளைச் சொல்லலாம். பூமியில் சூரியனின் ஒளி பரவியிருப்பதைப் போல இவர்களது புகழும் பரவியிருக்கும். இவர்கள் பணத்தை விட புகழுக்கே அதிக முன்னுரிமை தருவர். புகழ் தரும் செயல்களையே விரும்பிச் செய்வர். புகழ் பெற்றவர்களுடன் விரும்பி நட்புறவு கொள்வர். தாமே விரும்பிச் சென்று உதவி செய்தல், நன்மை செய்ய ஊக்குவித்தல், தவறு செய்தவர்களைத் தண்டித்தல் ஆகிய பண்புகளால் இவர்களில் பலர் மக்கள் தலைவர்களாக அரசியலில் இருப்பர்.
எ, ஏ, ஓ என்ற எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆதலால் சூரியனின் தாக்கத்தைப் பெற்றவர்கள் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்பர். ஏன் எதற்கு என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு நன்றாகத் தெரிந்துகொண்ட பின்னரே செயலில் இறங்குவர். அத்துடன், ஆளுமை பண்பு மிக்கவர்கள் ஆதலால் இவர்களை அவ்வளவு எளிதாக ஏவி வேலை வாங்கிவிட முடியாது.
சூரியனின் நிலை கெட்டிருந்தால் இவர்களுக்கு என்னாகும் என்று பார்க்கலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு புகழ் குறையும். பகைமை பெருகும். பதவி பறிபோகலாம். அதிக கேள்விகள் கேட்பதால் மற்றவர்களின் எரிச்சலுக்கு ஆளாக நேரிடும்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.