தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் எட்டு (8) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் எட்டாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் எட்டுக்குரிய கோள் சனி ஆகும். கோள்களில் மிகவும் தாமதமாக சூரியனைச் சுற்றி வரும் கோள் சனி ஆகும். புதன் கோளுக்குரியவர்கள் சுறுசுறுப்பாக இயங்கும்போது சனி கோளுக்குரியவர்கள் மிக மெதுவாகத் தான் வேலை செய்வார்கள். இவர்களிடத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சுறுசுறுப்பை எதிர்பார்க்கக் கூடாது. அத்துடன் கோள்களிலேயே அடர்த்தி குறைந்த கோளும் இதுவே ஆகும். இது இவர்களிடத்தில் பொருள் வளம் குறைவாகவே இருக்கும் என்பதையும் மனதில் ஒளிவுமறைவு அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர்.
வாழ்வில் எவருக்கும் இதுவரை விளங்காத, கண்ணுக்குத் தெரியாத மறைபொருள் ஒன்று இருக்கிறது. உயிரோடிருக்கும்வரை அதை உணரவும் முடியாது. இறந்தபின்னர் அதைப் பற்றிச் சொல்லவும் முடியாது. அது கடவுள் அல்ல. ஏனென்றால் கடவுளை உயிரோடிக்கும் பொழுது உணர முடிகின்றது. உணர இயலாத அப்பொருள் தான் விதி அல்லது மரணம். விதியை ஒருவகையில் அறிவின் மயக்கம் என்றும் கூறலாம். ஏனென்றால், அறிவு மயங்கும்போது தான் விதி வேலை செய்வதை நாம் வாழ்வில் கண்டிருக்கிறோம். எனவே மயக்கத்தின் கோளான சனியே விதி அல்லது மரணத்திற்கும் காரணம் என்றும் கூறலாம். இதன் விரிவாக்கமாக, கருமை, இருள் போன்றவற்றிற்கும் சனியே காரணம் என்றாகிறது.
எண் எட்டுக்குரிய எழுத்துக்கள் ழ், த், ந் ஆகியன. இவ்வெழுத்துக்களின் தோற்றத்திற்கு "மூடுதல்" வினையே காரணம் என்று முன்னர் கண்டோம். இவ்வினையின் விரிவாக, மறைத்தல், பாதுகாத்தல், மயக்குதல், முடிதல், நிறைதல் முதலான பல வினைகளைச் சொல்லலாம். பொதுவாக இந்த எண்ணுக்குரியவர்கள் தந்திர அறிவு கொண்டவர்கள். கண்கட்டி வித்தை, மோடிவித்தை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பர். மனோவசியத்தில் கைதேர்ந்தவர்கள். தங்களது பொருளை பாதுகாத்து வைத்துக் கொள்வதில் கில்லாடிகள். ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகவும் சட்ட (விதிமுறைகள்) வல்லுநர்களாகவும் இருப்பர். தந்திரமாக சிந்தித்து குற்றத்தைப் பற்றிய குறிப்புக்களை எடுத்துவைத்து வாதிடுதல் இவர்களுக்கு அருமையாக வரும். ஒருசிலர் பெரும்புள்ளிகளுக்கு மெய்க்காவலர்களாகவும் இருப்பர்.
கணக்கீடுகளின் அடிப்படையில் புதுப்புது குறியீடுகளை உருவாக்குதல், விளங்காத குறியீடுகளின் பொருளை அறிதல், பழங்காலமாக விளங்காத புதிர்களை விடுவித்தல், அகழ்வாராய்ச்சி செய்து உண்மைகளைக் கண்டறிதல், மறைபொருள் அறிதல் ஆகியவை சிலரது தொழிலாக இருக்கும்.
சனியின் நிலை கெட்டிருந்தால் ஏமாற்றுதல், திருடுதல், கொலை புரிதல் முதலான பாவச் செயல்களைச் செய்வர். பிறரைக் கெடுப்பதற்காக பில்லி சூன்யம் போன்ற ஆவி வழிபாட்டுச் செயல்களும் புரிவர். சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி தீயவர்களுக்குத் துணை போகவும் செய்வர்.
பிறப்பிற்குப் பின் வாழ்வில் வளங்களே முதலிலும் வேகமாகவும் வரும். இறப்பு வாழ்வின் இறுதியில் தான் வரும். எனவே தான் வளத்தைக் குறிக்கும் புதன் கோள் வேகமாகவும், இறப்பைக் குறிக்கும் சனி கோள் தாமதமாகவும் சுற்றி வருகின்றது.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.