இருபத்து நான்கு காரட்டால் ஆன பத்து கிராம் தங்கக் காசை அமுதசுரபி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசாக இந்நூலாசிரியர் பெ.கருணாகரன் அவர்கள் பெற்றிருக்கின்றார். மறுநாளே சரவணா ஜீவல்லரி திரு. செல்வரத்தினம் அவர்களிடம் அதை ரூ.4200/-க்குக் குடும்பச் செலவுகளுக்காக விற்றிருக்கின்றார். ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது ஒன்றும் அதிசயம் இல்லையே என்று ஒரு எண்ணம் படிப்பவர்களுக்கு வரலாம். இயக்குனர் இமயம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் ஓய்வு நேரங்களில் கண்ணாடி அலமாரிக்குள் இருக்கும் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் எல்லாவற்றையும் கீழே இறக்கித் தன் கையாலேயே அதைத் துடைத்து, அதை ஒரு முறை அழகு பார்த்து மீண்டும் அலமாரிக்குள் வைப்பாராம். உடனிருந்த எழுத்தாளர் திரு.பாலகுமரன் ஏன் இப்படி செய்கின்றீர்கள் எனக் கேட்ட போது அவர், “நான் இதைத் துடைக்கும் பொழுது யார் இதை வழங்கினார்கள், எதற்காக என்பது என் நினைவலைகளில் ஓடும், அவை எனக்கு ஒரு உந்துசக்தியாக வாழ விளங்கும்” என்று கூறியிருக்கின்றார். இந்த இரு நிகழ்வுகளையும் நாம் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒரு படைப்பாளியின் வறுமையும், இயலாமையும் நம் நெஞ்சைப் பிசையும். கவலைப்படாதீர்கள் கருணாகரன், நீங்கள் இழந்த ஒரு தங்ககாசுக்குப் பதில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் “காகிதப் படகில் சாகசப் பயணம்” நூலைப் படித்துவிட்டு தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
இந்த நூல் சில உண்மைகளைக் கறந்த பாலைப் போல, வெண்மையாகக் கலப்படமின்றி வெண்மையாகச் சொல்கின்றது. தன் வரலாறு, சுயசரிதை, வாழ்வனுபவங்கள், பயணக் கட்டுரைகள் எழுதுவது புனைவைவிடச் சவாலாக இருக்கும். சாதனையாளர்கள் என்று சொல்லப்படுவர்களைப் பற்றிய நூல்கள் வெளிவருவதற்கு முன்பு ஒரு திரைக்கதை உருவாக்கத்திற்கு நடைபெறும் வல்லுநர்கள் இணைந்த விவாதத்திற்கு இணையாக ஒரு பெரும் முயற்சி நடந்திருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தான் ஒரு சாதனையாளனா? தன்னைப் பற்றி எழுதலாமா? என்று தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாமல் தான்பட்ட வேதனைகளை, சோதனைகளை வருங்கால ஊடக இயல் இளைஞர்கள் பெற்றுவிடக்கூடாது என்று அடிமனதிலிருந்து ஆசைப்பட்டிருக்கின்றார். இருள் அடர்த்தியானது, ஆழமானது, கையில் விளக்கின்றி நடந்தால் வாழ்க்கை வீணாகிவிட வாய்ப்புகள் இருக்கின்றன. அச்சு ஊடகங்களை வெளிச்ச ஊடகங்களின் இலக்கணங்கள் இன்று பல்கலைக்கழகங்களின் பாடநூலாகப் பந்தி வைக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் ஊடுருவ விரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இச்சூழலில் பெ.கருணாகரனின் இந்நூல் பத்திரிக்கைத்துறையில் புதியவர்களுக்கான இலேசான வெளிச்சம் இல்லை, லேசர் வெளிச்சமாகும். சாதனையாளன் வெளிப்படுத்தும் அனுபவங்கள் சுயவெளிச்சமிட்டுக் கொள்பவை. சாதாரணமானவனின் வாழ்வனுபவங்கள் மற்றவர்களுக்கு வெளிச்சம் தருபவை. இந்த நூலாசிரியர் கூறிக்கொள்வது போல பட்டாம்பூச்சியின் சிறகடிப்பல்ல. திருமணச் சேலைக்கு நூல் தந்து மாய்ந்துபோகும் பட்டுப்பூச்சியின் சிறகடிப்பு.
உண்மையை எழுதும் போதெல்லாம் கொஞ்சமாகவாது புனைவு கலக்க வேண்டும் என்பார்கள். புனைவாக எழுதினாலும் உண்மையைப் போல தோற்றமளிக்க அரும்பாடுபடவேண்டும் என்பார்கள். சில உண்மைகளை அச்சு அசலாக எழுதியபொழுது “ஆஹா! அற்புதமான சிந்தனை!” என்று படித்த அனைவரும் கூறியிருக்கின்றார்கள். ஒருமுறை சொற்பொழிவாற்றும் பொழுது ஈரானிய திரைப்படத்தின் பெயரைச் சொல்லி அத்திரைக்கதையை அற்புதமாக விவரித்தார் ஒருவர். அதை உற்றுக்கேட்ட உள்ளூர்ச் சொற்பொழிவாளர் இன்னொரு முறை அதையே சொல்லும் பொழுது கண், காது, மூக்கு வைத்து வரலாற்று சம்பவத்தைப்போலவே விவரித்தார். அடுத்து வந்த சொற்பொழிவாளர் அந்த ஈரானியப் பெண்ணுக்காக நாம் அனைவரும் கண்ணீர் சிந்த வேண்டும் என்றார். ஆகவே உண்மையோ, புனைவோ படித்து முடித்தவுடன் அவை ஏற்படுத்தும் மன எழுச்சியும் மனச்சார்பும் விவரிக்கப்படும் மையக்கருத்தின் மீது ஈர்ப்பும் முக்கியமாகும். விகடனின் சேர்மன் அய்யா அவர்களைப் பற்றி பெ.கருணாகரன் அவர்கள் உணர்ந்த, அறிந்த, மற்றவர்களின் மூலம் தெரிந்த கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். சமீபத்தில் எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்ததை முன்னிட்டு எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் யாவும் ஆசிரியர் பெ.கருணாகரன் அவர்கள் சுருக்கமாகச் சொன்னதை விவரித்துச் சொல்வதாகவே அமைந்தது. புதிய விஷயங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. ஒரு சோறு பதமாகவும், இதமாகவும் இருப்பதால் ஒரு பானைச் சோற்றின் மீதும் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகின்றது.
தின இதழுக்குத் தகவல் முக்கியம், வார இதழுக்குச் சம்பவம் முக்கியம், ஒரு கணக்காளன் கணக்கு எழுதுகிற மாதிரி ஒரு செய்தியை உணர்ச்சி வயப்படாத வார்த்தைகளில் எழுத வேண்டும்; முடிவெடுத்தல் - அதில் உறுதியாக இருத்தல் இதுதான் ஒரு தொழிலதிபருக்கு அடையாளம்: ஆசிரியர் சுதாங்கன் கூற்று - இந்த உலகத்தில் நீ மட்டும்தான் நல்லவன், உன்னை எல்லோரும் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்காதே! சில நட்சத்திரங்களை புத்தக வானில் ஜொலிக்க விட்டிருக்கின்றார் பெ.கருணாகரன். பௌதீக வாழ்க்கையின் நாட்களை தள்ளிக்கொண்டு போனால் போதும் என்று வாழும் மனிதன் திரைப்பட நாயகர்களின் மீதும் அவர்களின் பின் வாழ்க்கையின் மீதும் அதீத ஆர்வம் கொள்கின்றான். புத்தகங்களை வாசிக்கவும், சேமிக்கவும், அவற்றை எண்ண அலைகளில் அசை போட்டுக் கொள்ளவும் தெரிந்தவன் இலக்கிய ஆளுமைகளின் மீதும் அவர்களின் பின்புலங்களின் மீதும் ஆர்வம் கொள்கின்றான். இப்புத்தகத்தின் மூலம் அச்சு ஊடகங்களை அடையாளம் காட்டி ஒரு ‘சுற்றுலா வழிகாட்டி’யைப் போல நமக்கு சொல்லி கொடுத்திருக்கின்றார் ஆசிரியர் பெ.கருணாகரன் அவர்கள். நாளிதழ், வார இதழ் பத்திரிக்கையாளர்கள், ஒரு சமூக விளைவை, மனோநிலை சுழற்சியை ஏற்படுத்த வல்லவர்கள். இந்த நூலாசிரியர் பெ.கருணாகரன் அவர்கள் அதற்கும் மேல் ஒருபடி ஏறி பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இவருடைய இந்த நூலை இதழியல் துறையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்...!