வங்கம் தந்த தங்கங்களுள் பத்தரை மாற்றுத் தங்கமாக நமக்குக் கிட்டியவர் ஸ்ரீ அரவிந்தர். இங்கிலாந்தில் கல்வி கற்றுத் தன் தாயகம் திரும்பியவர். அவர் இங்கிலாந்தில் இருந்த போது, நம் பாரத நாடு அந்நியரின் பிடியில் சிக்கித் தவிப்பதை உணர்ந்து உள்ளம் வருந்தினார். அந்நிலை மாறுவதற்கு உழைக்க உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜிலுள்ள ‘இந்தியன் மஜ்லிஸ்’ என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘சுதந்திரம் பெறுவதற்கு மிதவாதம் உதவாது’ என்பது இந்த அமைப்பினரின் கருத்து. இதனை அரவிந்தரும் ஏற்றுக் கொண்டார். எப்படியாவது பாரதத்திற்கு விடுதலை வாங்கித் தருவது என உறுதி பூண்டார். அதற்காக, விடுதலை வேண்டி அமைக்கப்பட்ட பல அமைப்புகளில் சேர்ந்து உழைக்கலானார்.
இந்தச் சமயத்தில் பரோடாவின் சமஸ்தான மன்னர் தனது அலுவல் விஷயமாக லண்டன் வந்திருந்தார். அவரைத் தனது நண்பர் மூலம் சந்திக்கும் வாய்ப்பு அரவிந்தருக்குக் கிட்டியது. அரவிந்தரின் முகப்பொலிவு, அறிவுத் திறமை இதையெல்லாம் பார்த்த அரசர், தனது சமஸ்தானத்திற்கு வந்து, பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். அரவிந்தரும் அதற்கு இணங்கினார். இந்தியா புறப்பட்டுச் சென்றார். மன்னருக்கு உதவியாகப் பணியாற்றினார். பின் வருவாய்த்துறையிலும், முத்திரைத்தாள் துறையிலும் பணி புரிந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் பணியாற்றினார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பல வித அரசாங்க அலுவல்களைப் பார்த்த அரவிந்தர், பின்னர் பரோடா கல்லூரிக்கு ஆங்கிலப் பேராசிரியராக மாற்றப்பட்டார். மாணவர்களைத் திறம்பட வழி நடத்தினார்.
தனது நேரத்தைத் தியானத்திலும், எழுத்துப் பணியிலும், புதிய நூல்கள் படிப்பதிலும் செலவிட்டார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட பாலகங்காதிர திலகரின் எழுச்சி மிக்க உரைகளால் ஈர்க்கப்பட்ட அரவிந்தர் தீவிரமாக விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார். சிறைவாசம் அனுபவித்தார். சிறைவாசம் அரவிந்தருக்கு முதலில் அளவில்லாத துன்பத்தைத் தந்தது. ஆனால் நாளடைவில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும் அது தர ஆரம்பித்தது. நடக்கும் அனைத்தும் இறைவனின் சித்தம் என்பதையும், அவனாலே தான் அனைத்தும் நடத்தப்படுகிறது என்பதையும், எல்லாத் தீமையிலும் ஓர் நன்மை உண்டு என்பதையும் அலிப்பூர் சிறைவாசம் அரவிந்தருக்கு மிகத் தெளிவாக உணர்த்தியது.
சிறையில் பல துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியுடன் எதிர் கொண்டார். சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகிக் கொண்டார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் கீதை, வேதங்கள், உபநிஷத்துகள் எனப் பல நூல்களைப் படித்தார். யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவருக்கு நேரம் கிடைத்தது. யோக நிலை அவரை வசப்படுத்த அது அவர் வசம் வந்தது. ஒரு வகையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் தான் நன்கு அறிந்து கொள்ளவும் இறைவன் செய்த ஏற்பாடே இந்த சிறைவாசம் என்பதை அரவிந்தர் நன்கு உணர்ந்து கொண்டார்.
சிறையில் நாள் தோறும் அவருக்குப் பலவித ஆன்மிக அனுபவங்கள் ஏற்படலாயின. காணும் அனைத்தும் அந்தக் கண்ணனின் உருவே என்பதை அவர் உணர ஆரம்பித்தார். விவேகானந்தரின் ஆவி தன் அறைக்குள் வருவதையும், தனக்கு போதனை செய்ய விரும்புவதையும் அவர் உணர்ந்து கொண்டார். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். தமக்குள் சில குரல்கள் ஒலிப்பதையும், அவை தம்மை வழி நடத்துவதையும் உணர்ந்தார். இந்தியாவின் விடுதலை நிகழ்ந்தே தீரும் என்றும் அதற்கேற்ற வழிவகைகள் உருவாக்கப்பட்டு விட்டன என்றும் எனவே இனி நீ மனித குல விடுதலைக்குத் தான் நீ உழைக்க வேண்டும் என்றும் அந்தக் குரல் அறிவுறுத்தியதாக அவர் உணர்ந்தார்.
ஆங்கிலப் புலமை பெற்ற அவர் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளைக் கர்மயோகி எனும் பத்திரிகை வாயிலாகச் சுதந்திர உணர்வை, அது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கினார். அவரை ஷாம்கல் ஆலம் என்பவரின் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புப்படுத்தியதை அறிந்த அவர் தலைமறைவாகத் திரிந்து இறுதியில் புதுவை வந்தார். சிறையில் இருக்கும் போது அவருக்குள் ஒரு குரல் அவ்வப்போது அவரை வழிநடத்தி வந்தது. அதன்படியே அவரும் புதுவை வந்து சேர்ந்தார். வாழ்க்கை முழுதும் அவரை மாபெரும் சக்தியானது வழிநடத்தி வந்தது.
நாளடைவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டார். வேதநெறி தழைக்க வந்த அவதாரப் புருஷனாக அவர் போற்றப்படுகிறார். தேசியம், தெய்வீகம் என்ற இரண்டையுமே அவர் தன் இரு கண்களாகக் கருதி அவற்றை ஒன்றாகக் கலந்து மானுடத்தை உயர்த்திய பெருமகனாவார். பல வகை விசித்திர அனுபவங்களை அவர் அடைந்தார். பல தீர்க்கதரிசனக் காட்சிகளாக அவை இருந்தன.
‘’வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்தில் நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மாணவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தா வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே”
என்று கவியோகி சுத்தானந்தபாரதி அரவிந்தரைப் பாடல் மூலம் போற்றி மகிழ்கிறார்.
சாவித்திரி எனும் அதி அற்புத காவியத்தை யாத்தவர். மனித வாழ்வைத் தெய்வீக வாழ்வாக மாற்றுவதையே தம் வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டவர். நம் நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் பதினைந்து அன்னார் இவ்வுலகில் அவதரித்த திருநாள் எனும் போது அம்மகானின் அருமை உலகத்தார்க்குப் புலப்படுகிறது. அரவிந்தர் ஆசிரமம் தொடங்கப் பட்டு நல் முறையில் இயங்கி வந்தது.
அன்னாரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அன்னையின் கால்கள் புதுவையை நோக்கி இழுத்தது. அன்னையும் அரவிந்தரும் சந்தித்த அக்காட்சி காணக் கிடையா அற்புதக் காட்சி. அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக உருவெடுத்தார்.