மனித உரிமைகளைப் பற்றிய அறிவும் ஆய்வும் இன்றையக் காலத்தின் கட்டாயமாகும். ஒரு மனிதன் தன்னுடைய உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக்கூடியவனாக மாறுகிறான். “மனித உரிமை (Human Rights) என்பது தன்னுடைய திறமையை வளர்க்கவும், வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடையவும், இயற்கையின் வளம் மற்றும் செல்வங்களை நாட்டின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான முறையில் அனுபவிக்கவும், கண்ணியமாக, அமைதியாக வாழவும் மனிதன் தன்னகத்தே பெற்ற தனித்தன்மையாகும்”
மனித பரிணாமத்தின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவனுடைய உரிமைகள் மறுக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற நாடு பிடிக்கும் மற்றும் பொருளாதாரப் போட்டிகளால், உலக நாடுகள் இரு பெரும் போர்களைச் சந்தித்தன. இவ்வுலகப் போர்களினால் உலக நாடுகளின் அமைதி சீர்குலைந்தது. பல நாடுகளின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டன. மனித உரிமைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு மீறப்பட்டு பல இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதன் விளைவாக 1945 ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உலக நாடுகளின் பொதுச் சபை அல்லது ஐக்கிய நாடுகளின் சபை (United Nations) அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இங்கிலாந்தின் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யாவின் அன்றைய அதிபர் ஸ்டாலின் ஆகிய பெரும் தலைவர்களின் முயற்சியால் நிறுவப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் இருந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ளது.
இன்றைய காலக்கட்டங்களில் மனித உரிமை மீறல்கள் பல்வேறு உருவங்களிலும் வடிவங்களிலும், செயல்களிலும் காணப்படுகின்றன. அவை:
* தீவிரவாதச் செயல்களால் ஏற்படக்கூடிய கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், விமானக் கடத்தல், வெடிகுண்டு வைத்தல் மற்றும் இதனால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருள் சேதம்
* அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சுரண்டல், இலஞ்சம். இதனால் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டில் பின்னடைவு.
* காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறல்கள், அராஜகம், கற்பழிப்பு, சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்துதல்.
* சாதி, மதம், இனம், மொழி , நிற வேறுபாடுகளால் ஏற்படும் வன்முறைகள், படுகொலைகள்.
* கருக்கலைப்பு, சிசுக்கொலை, பெண்கல்வி மறுத்தல், சிறுவர் சிறுமியரை வேலைக்கு அமர்த்துதல், விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், பிச்சை எடுக்க வைத்தல்.
* மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகளின் சிறுநீரகத்தைத் திருடுதல், தவறுதலான அறுவைச் சிகிச்சைகள், தவறுதலான மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல்.
* கல்வி நிலையங்களில் பகடி வதை, கேலி செய்தல், சார்புத் தன்மை, பாராபட்சம்.
* பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துதல், அவர்களின் புராதன அறிவான இசை, மருத்துவம், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவைகளைத் திருடி தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுதல்.
* சட்டம் என்ற பெயரில் தூக்குதண்டனை வழங்கி மனித உயிர்களைப் பறித்தல்
என்பது போன்ற மனித உரிமை மீறல்கள் பெரும்பாலான நாடுகளில் நாள்தோறும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. இத்தகைய மனித உரிமை மீறல் செயல்கள் தனிமனித வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வளர்ச்சியினையும் பாதிக்கின்றன.
ஆகவே, மனிதச் சமூகத்தை இத்தகைய தீயச் செயல்களில் இருந்து காப்பாற்றுவதற்காக 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள், உலக நாடுகளின் மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) ஐக்கிய நாடுகளின் சபையால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றது. அதன் காரணமாக, ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்தச் சட்டத் திட்டங்களை மதிக்கவும் செயல்படுத்தவும் கடமைப்பட்டவைகளாக உள்ளன. ஆகையால் 1993 ஆம் ஆண்டு இந்தியாவில் மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission) இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அகில உலக மனித உரிமை பிரகடன உடன்படிக்கையில்,
1. குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்
2. பொருளாதார, சமூக, பண்பாட்டு, உரிமைகள்
ஆகிய இரு பிரிவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தனிமனித மற்றும் குழுக்களின் அடிப்படை உரிமைகளைக் கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.
I. தனிமனிதனுக்கு உரிய உரிமைகள் (Individual Rights)
அ) குடிமை உரிமைகள் (Civil Rights)
உயிர்வாழ்வதற்கான உரிமை, சட்டத்தின்முன் சமமாக நடத்தும் உரிமை, தேசிய இனத்திற்கான உரிமை, நீதி மன்றத்தை அணுகுவதற்கான உரிமை, குற்றமற்றவர் என நிரூபிக்க உரிமை, இலவச சட்ட உதவிக்கான உரிமை, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடத்தவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை, மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருக்க உரிமை, கௌரவமும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை மற்றும் பல.
ஆ) அரசியல் உரிமைகள் (Political Rights)
கருத்துகளை வெளியிட உரிமை, கூட்டம் கூடுவதற்கான உரிமை, சங்கத்தில் சேர்வதற்கான உரிமை, வாக்களிப்பதற்கான உரிமை, அரசியலில் பங்கேற்புக்கான உரிமை, பொதுப் பணிகளில் சம வாய்ப்பு பெற உரிமை மற்றும் பல.
இ) பொருளாதார, சமூக (ம) பண்பாட்டு உரிமைகள் (Economical,Social and Cultural Rights)
வேலைக்கான உரிமை, வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, சொத்து வைத்திருப்பதற்கான உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை, குடும்பம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை, சமூக மருத்துவ உதவிப் பெறுவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றங்களின்பலன்களை அனுபவிக்க உரிமை, சுகாதாரப் பாதுகாப்பு உரிமை மற்றும் பல.
II. குழுக்களின் உரிமைகள் (Workers Rights)
ஆண்,பெண் இருபாலருக்கும் சமமான ஊதியத்திற்கான உரிமை, தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை, போராட்ட உரிமை, சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை, நியாயமான ஊதியத்திற்கான உரிமை, வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை), பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னறிவிப்பு பெறும் உரிமை, பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் பணியாற்றுவதற்கான உரிமை மற்றும் பல.
III. பழங்குடி மக்களின் உரிமைகள் (Indigenous people’s Rights)
வாழ்வுரிமை, தேசிய மற்றும் பண்பாட்டு அடையாளத்திற்கான உரிமை, வசிப்பிட உரிமை, பொருளாதார மற்றும் நாகரீக முன்னேற்றம் அடைவதற்கான உரிமை, இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான உரிமை, கலை, பண்பாடு, மருத்துவம், இசை போன்ற புராதன அறிவுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை, அவர்களின் தாய்மொழியைப் பயன்படுத்த உரிமை, கல்வி உரிமை மற்றும் பல.
உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் அவற்றில் வெற்றியும் கண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாளை மனித உரிமைகள் நாளாகவும், உலக நாடுகள் முன்னெடுக்கின்றன. மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கல்வி நிலையங்கள், தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் ஆகியன முக்கியப் பங்காற்றி வருகின்றன. மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்! மனித வளத்தைக் காப்போம்!