ஓர் ஊரில் பெருஞ் செல்வன் ஒருவன் இருந்தான். செல்வத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தான் அவன். அந்த ஊருக்கு வந்த பெரியவர் ஒருவர் “செல்வம் நிலையில்லாதது” அதற்காக ஆணவம் கொள்வது தவறு” என்று அவனுக்கு அறிவுரை சொன்னார்.
அதைக் கேட்ட அவன் செல்வத்தால் வாங்க முடியாத பொருள் ஏதேனும் உள்ளதா? என்பதை அறிய விரும்பினான் “செல்வத்தால் வாங்க முடியாத நான்கு பொருட்களைச் சொல்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று ஊர் முழுவதும் அறிவிப்புச் செய்தான்.
நாட்கள் பலவாகியும் யாரும் பதில் தர முன் வரவில்லை. ஒருநாள் இளைஞன் ஒருவன், செல்வந்தனைச் சந்தித்தான். “பணத்தால் வாங்க முடியாத பொருட்களை நான் சொல்கிறேன்” என்றான்.
“சரி சொல்” என்றான் செல்வந்தன்.
“பச்சைக் குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைப்பது, முதுமை அடைந்தவர்க்கு மீண்டும் இளமை தருவது, நல்ல மனிதனின் அன்பைப் பெறுவது, சொர்க்கத்தில் நுழைவது இந்த நான்கையும் செல்வத்தால் வாங்க முடியாது” என்று சொல்லி பரிசைப் பெற்றான் இளைஞன்.