ஆன் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் (206 கி.பி-கி.மு 23) மந்திரி கூ காங் அளவற்ற அதிகாரங்களை பெற்றிருந்தான். நீண்ட காலம் அரசவை அவனுடைய கட்டுப்பாட்டிலிருந்தது. அதிகாரத் திமிரும் ஊதாரித்தனமும் கொண்ட அவன் மற்ற மந்திரிகளையும் அரசவை அலுவலர்களையும் மிரட்டி வந்தான். அதனால் அவனை அனைவரும் வெறுத்தனர். இருந்தாலும் அவனை எதிர்த்துப் பேச ஒருவருக்கும் தையரியமில்லை.
மந்திரி கூ காங்கின் நடவடிக்கையினால் அரசவைக்கும் அவனுக்குமே ஏற்படக்கூடிய ஆபத்தை அறிந்த புலவர் சூ பூ, மந்திரி கூ காங்கின் அதிகாரத்தை குறைக்கசொல்லியும், சுய அழிவிலிருந்து மந்திரியை காப்பற்றசொல்லியும் மன்னருக்கு பல கடுதாசிகளை எழுதிவந்தார். ஆனால் மன்னர் புலவரின் அறிவுரையை அலட்சியப்படுத்தி வந்தார்.
மந்திரி இறந்த பிறகு சுயநலங்கொண்ட அவனுடைய வழித்தோன்றல்கள் மன்னரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். இருந்தாலும் அவர்களின் சதிதிட்டம் பழிக்கவில்லை. இச்சதிதிட்டத்தில் ஈடுபட்டவர்கள் அணைவரும் மன்னரின் ஆணையின்படிக் கொல்லப்பட்டனர். அவர்களின் சதிதிட்டத்தை கண்டறிந்து அம்பலப்படுத்தியவர்களுக்கு மன்னர் வெகுமதிகள் வழங்கினார்.
அதன்பிறகு மன்னருக்கு ஒரு கடுதாசி வந்தது. அந்தக் கடுதாசி ஒரு கதையுடன் இவ்வாறு தொடங்குகிறது:
“முன்னொரு நாள் ஒருவன் தன் நண்பனைப் பார்க்க அவன் வீட்டிற்குச் சென்றான். நண்பன் வீட்டுச் சமையலறையின் அடுப்பு ஓரத்தில் விறகுகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. உடனடியாக அவ்விறகுகளை அப்புறப்படுத்துமாறு நண்பனை அறிவுறுத்தினான். அப்புறப்படுத்தத் தவறினால் வீட்டிற்கே ஆபத்து என்று எச்சரித்தான். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு குவித்து வைக்கப்பட்டிருந்த விறகில் தீப்பற்றிக் கொண்டது. அக்கம்பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் தீயை அணைத்து விட்டான். வீட்டிற்குப் பெரிய சேதம் எதுவுமில்லை. நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு, தீயை அணைக்க உதவியவர்கள் அனைவருக்கும் மதுவுடன் கூடிய விருந்து ஏற்பாடு செய்தான். தீயை அணைக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு மரியாதை நிமித்தமாக முன் வரிசையிலும் அவரவர்கள் செய்த பங்களிப்பிற்கேற்ப பின் வரிசைகளிலும் அமர வைத்து உபசரித்தான்.
“குவித்து வைக்கப்பட்டிருந்த விறகை அப்புறப்படுத்தச் சொல்லிய நண்பனின் அறிவுரையைக் கேட்டிருந்தால், தீயும் ஏற்பட்டிருக்காது எங்களுக்கு விருந்து வைக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது என்று வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவன் கூறினான். மேலும் உன் வீட்டைத் தீயிலிருந்து பாதுகாக்க உதவிய எங்களுக்கு விருந்தளிப்பது சரிதான். ஆனால் அறிவுரை கூறிய நண்பனை மறப்பது சரிதானா?” என்று கேட்டான்.
“அவன் தவறை உணர்ந்து அவனுடைய நண்பனுக்கும் விருந்து ஏற்பாடு செய்தான்”.;
கூ காங் குடும்பத்தால் ஏற்பட்ட விபரீதத்திற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அக்கடிதம் இவ்வாறு மேலும் தொடர்கிறது. “புலவர் சூ பூ முன்னெச்சரிக்கையை வலியுறுத்தித் தங்களுக்கு பல கடிதங்களை எழுதி வந்தார். அது குறித்து நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டிற்கும் சரி, கூ காங்கின் குடும்பத்திற்கும் சரி இத்தகைய இழப்பு வந்திருக்காது. இப்போது எல்லாமே நடந்து முடிந்து விட்டது. வெகுமதி பெற்றவர்களின் பட்டியலில் புலவர் சூ பூ இடம் பெறவில்லை. இதனைத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்று இருகரம் கூப்பி மகாராசா அவர்களை வேண்டிக் கொள்கிறேன்”.
மன்னர் இவ்வறிவுரையை ஏற்று புலவர் சூ பூவிற்க்கு பத்து கஜம் பட்டுத் துணியை வெகுமதியாக அளித்தார். பிறகு அவரை அரசவைப் புலவராகவும் நியமித்துக் கொண்டார்