மணி எட்டாகியிருந்தது. சுந்தரின் வீட்டு முன்பாக அந்த கார் நின்றது. கோமளத்தம்மாவும் ரம்யாவும் பதறியபடி வெளியே வந்தனர்.
“இதுதானே சுந்தர் வீடு.” காரில் வந்த பெரியவர்.
“ஆமா. சுந்தர் இல்லையே”. இருவரும் பயந்தபடி.
“பயப்படாதிங்க. ஒண்ணுமில்லே. நீங்க ரெண்டு பேரும் உடனே புறப்படுங்க.சுந்தருக்கு கால்லே லேசா அடி. ஆஸ்பத்திரிலே சேத்திருக் கோம்.” ஒன்றும் செய்வதறியாமல் காரில் ஏறினர். அடுத்த சில மணித் துளிகளில் ஆஸ்பத்திரி முன்பாக கார் நின்றது.இருவரும் பதறியபடி அவரை பின்பற்றிப் போனார்கள்.
சுந்தர் கை கால்களில் பெரிய கட்டு போட்டி ருந்தனர் கண்களை முடிய நிலையில்மயக்கமாய் படுத்திருந்தான் சுந்தர். கோமளத்தம்மா ஆஸ்பத்திரி என்று கூடபாராமல், “ என் மகனே சுந்தர் உனக்கென்னப்பா ஆச்சு” என்று அழுது கதறினாள்.
அதற்குள் நர்சுகள் இரண்டு பேர் வந்து “அம்மா நீங்க அழாதிங்க. பயப்படும்படியா ஏதுமில்லே எல்லாம் சாதாரண காயங்க தான். விபத்து நடந்ததாலே மயக்கமாயிருக்கான். அவ்வளவுதான். சீக்கிரம் முழிப்பாயிடும். பயப் படாம இருங்க.” என்று ஆறுதல் கூறினார்கள்.
அவனுக்குப் பக்கத்தில் கீர்த்தீயன் நெற்றிக்காயங்களோடு படுத்திருந்தார். விழா ஏற்பாடு செய்தவர் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
சுந்தருக்கு லேசாய் மயக்கம் தெளிந்திருந்தது. கண் விழித்துப் பார்த்தான். அவன் அம்மா அக்கா எல்லோருமிருந்தார்கள். மெல்ல தலையை அசைத்தான். பேச முயற்சித்தான். சிரமமாகத் தெரியவில்லை.
“அம்மா இப்ப மணிஎன்ன?” என்றான்.
“ஏம்பா மணிக்கு என்ன?”
“இல்லம்மா மணி என்னன்னு சொல்லு?”
“மணி பத்தாச்சுப்பா.” என்றதும்
“அம்மா யாராச்சும் ஒருத்தர கிருபா தியேட்டருக்கு அனுப்புங்கம்மா.”
“எதுக்கு?” - என்று கோமளத்தம்மா கேட்ட அதே நேரத்தில்,
“அவசியமில்லை சுந்தர்.”-என்று குமார் நொண்டியபடி முன்னே வந்து நின்றான்.
“என்ன சுந்தர்னா கூப்பிட்டே?”
“ஆமா சுந்தர்னு கூப்பிட்டேன்”
“என்னை உனக்கு முன்னேயே தெரியுமா?”
“உன்னைத் தெரியாட்டாலும் உங்கப்பாவ எனக்குத் தெரியும்.” என்று சொன்ன குமார் சுந்தரின் அம்மாவைப் பார்த்தான்.
“ஆமா சுந்தர். நீ இன்னிக்குக் காலையிலே சாப்பிட்டுப் போனதும் வாத்திய கோஷ்டியோடு இந்த பிள்ளையாண்டான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னை விசாரிச்சான். உங்கப்பா சொல்லியனுப்பிச்சதா சொன்னான். நான்தான் நீ லாட்ஜூக்கு போன விசயத்தை சொன்னேன்.”-என்று சொன்னதைக் கேட்ட சுந்தர்,
“அதுசரி நான் அடிபட்டதும், இந்த ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எப்படி தெரிஞ்சது?”
“ விபத்துநடந்த இடத்திலே நான் அங்கேதான் இருந்தேன். கூடவே ஆஸ்பத்திரிவந்து அட்மிட் பண்ணிட்டு உங்க வீட்டுக்குப் போய் தகவல் சொல்லி அவங்கள கூட்டிட்டு வந்ததும் நான்தான்” பேசிக்கொண்டிருந்த போதே போலிஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டெபிள்களோடு உள்ளே வந்தார்.
சுந்தர் அப்போதுதான் கால்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பகீரென்றது.பொட்டலத்தைக் காணவில்லை.
குமார் பேசத் தொடங்கினான், “ சார் ஊருக்கு வெளியே மார்க்கபந்து என்பவர் உடல் ஊனமுற்றவர் இல்லம்னு ஒண்ணு வச்சிருக்கிறார் ஆனா உண்மையிலே அது உடல் ஊனமுற்றவர் இல்லமாக இல்லாம கடத்தல் கூடாரமா பண்ணிட்டிருக்கார். இத நேரடியா போலிஸ்க்குத் தகவல் சொன்னா மிச்சமுள்ளவங்க உசாராவதோட கடத்தல் பொருளும் முழுசா கைக்கு கிடைக்காம போகலாம். அந்த வீட்லே சமையல் செய்யற சண்முகம் சுந்தரோட அப்பா. அவருடைய உதவியால்தான் இந்த தங்கக்கட்டியுள்ள பொட்லத்தை நீங்க நம்பரதுக்கொசரம் கொண்டாந்தேன். நாளைக்கு ஒரு கடத்தல் நடக்கயிருக்கு. நா அங்கே போய் சேர்ந்துடுவேன். கூடிய மட்டும் அவங்க புறப்படறத தாமதப் படுத்த முயற்சிக்கிறேன் அதுக்குள் நீங்கவந்திடலாம்.
*****
7 மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது குண்டு குப்பு விரக்தியோடு உள்ளே வந்து சுவற்றோரமாய் பைக்கை நிறுத்தினான்.
நல்லவேளை இன்னமும் பாஸ் வரவில்லை.
“என்ன சண்முகம் அந்தபயல காணலையே என்ன பண்றது.”
“அடே போப்பா நம்ம ரெண்டுபேரையும் ஏமாத்திட்டாம்பா. அவன் அங்கேயேதான் படுத்திட்டிருக்கான். நம்மள ஏமாத்தறதுக்கோசரம் அப்படி பண்ணிபோட்டு பக்கத்திலேயேதான் படுத்திட்டிருந்திருக்கான். நாமதான் கவனிக்கலே.” குப்பு உற்சாகமாய் உள்ளே ஓடிப்போய் பார்த்தான்.
சண்முகம் சொன்னது நிஜம்தான் குமார் அதேயிடத்தில்தான் கிடந்தான். கோபத்தில் குப்பு எல்லா பையன்களையும் ஒரு தட்டுதட்டி எழுப்பினான். சிறுவர்கள் அனைவரும் கிணற்றடிக்குச் சென்று தொட்டியிலிருந்த தண்ணிரை வாரிவாரி ஊற்றிக் கொண்டனர். அவர்கள் உள்ளே வருகையில் டிபன் தயாராயிருந்தது. எல்லோரும் தட்டை எடுத்து வந்து உட்கார்ந்தனர்.
சமையல்கார சண்முகம் எல்லோருக்கும் டிபனைப் போட்டார்.
“எல்லோரும் ஒழுங்கா சாப்பிடுங்கடா. மத்தியானம் சாப்பிட எந்நேரமாகுதோ?” கார் சத்தம் கேட்டது. பாஸ் வந்துவிட்டார்.
குப்புவும், சண்முகமும் உஷாரானார்கள். குண்டுகுப்பு ஷெட்டிலிருந்த வேனை கிளப்பி போர்டிகோவில் நிறுத்தினான். குமாருக்கு மனசெல்லாம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. வாத்தியங்களோடு சிறுவர்களையும் வேனில் ஏற்றினார்.
காரை ஸ்டார்ட் செய்து முன்னே கிளப்ப பின்னால் வேனும் புறப்படத் தயாரானது. சிர்ரென்று போலிஸ் ஜீப் வந்து நின்றது. அவ்வளவு தான் அடுத்த சில வினாடிகளில் பாஸ் என்கிற மார்க்கபந்துவும் வாத்தியங்களிலிருந்த தங்கக்கட்டிகளும் போலிஸ் ஜீப்பில் பயணம் செய்தன.
அந்த ஆண்டு வீர சாகச விருதிற்காக குமார் சிறுவனின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.