கனகா லாட்ஜின் 203ம் அறை முன்பாய் திகைத்துப் போன குமார் செய்வதறியாமல் நின்றான்.
பூட்டை ஒருமுறை ஆட்டிப் பார்த்தான். என்ன ஆச்சர்யம் பாட்லாக்கிலிருந்து ஏதோ ஒரு காகிதத் துண்டு கிழே விழுந்தது.
அவசரமாய் எடுத்துப் பிரித்துப் பார்த்தான் ஏதோ சினிமா விளம்பர நோட்டிஸ் ‘ச்சே’ என்று மனம் குமைந்தான் விசயமில்லாமல் இதைச் செருகுவானேன்.
மறுபடியும் அந்த காகிதத்தை பார்த்த போது இரண்டு இடங்களில் அடிக்கோடு இட்டிருந்ததைக் கண்டான். கண்கள் பிரகாசமாயின.
மறுபடியும் ஒருமுறை பார்த்தான். கிருபா தியேட்டர். 10.30 காட்சி இரண்டு வார்த்தைகளும் அடிக்கோடிடப்பட்டிருந்தன.
ஒட்டடைக் குச்சிக்காரனும் ஓட்டல் மேனேஜரும் ரூமை விட்டு வெளியேறினதும் சுந்நருக்கு மறுபடியும் போன உயிர் திரும்பியது.
சிறிது நேரத்தில் இரண்டு படத்தயாரிப்பாளர்கள் கீர்த்தீயனைப் பார்க்க உள்ளே வந்தனர்.
கீர்த்தீயனோடு அடுத்த படத்திற்காக கதை கேட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் இதுதான் சமயம் என்று சுந்தர் பாத்ரூமுக்குள் நுழைந்து மறுபடியும் பைப்பை கையில் பிடித்து எம்பி ஏறி வெண்டிலேட்டர் மேல் ஏறி பொட்டலத்தை எடுத்து பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
கீழே இறங்கி மறுபடியும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது கீர்த்தீயன் மீண்டும் எங்கோ புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.
சுந்தரைப் பார்த்ததும், “சுந்தர் இப்ப கொஞ்ச நேரத்திலே சாயந்திரம் விழா நடத்தறவரோட வீட்லே விருந்து சாப்பிடப் போகணும். நீயும் எங்கூடவா.” என்றார்.
சுந்தரால் மறுக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் சொன்னபடியே ஒரு கார் ஒன்று வந்து நின்றது.
கீர்த்தீயனோடு காலையில் வந்தவரே இப்போதும் வந்திருந்தார்.
கார் அவர்களை சுமந்தபடி நகரைவிட்டு வெகுதூரம் அப்பாலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது.
கிராமத்தின் நடு நாயகமாய் நின்ற அந்த பெரிய வீட்டின் முன்பாய் நின்றது.
ஒரு பெரியவரும் அவருடைய மனைவியும் வரவேற்றார்கள்.
விருந்து முடிந்து அவர்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மணி மூன்றானதும் மறுபடியும் காரில் ஏறி விழா நடக்கும் இடத்திற்கு வந்தது விழா நடந்து கொண்டிருந்தது.
சுந்தருக்கு எதிலுமே கவனம் செல்லவில்லை.
அந்தப் பொட்டலத்தில் ஏதோ கனமான பொருள் இருப்பதாய் மட்டும் உணரமுடிந்ததே ஒழிய என்ன எனப் பார்க்க முடியவில்லை.
தன்னிடம் தந்து சென்ற சிறுவன் யாரென்று தெரியவில்லை.
தன்னிடத்தில் அவன் ஏன் கொடுக்க வேண்டும். எதேச்சையாய் கொடுத்தானா அல்லது தெரிந்துதான் கொடுத்தானா? அவனை எப்படி சந்திப்பது?
எட்டுமணி என்று மட்டும் சொன்னான் ஒருவேளை சந்திக்கமுடியாமல் போனால்?-என்பன போன்ற கேள்விகள் சுந்தரின் மனதைத் துரத்தின.
எதுவும் புரியாமல் போனாலும் ஏதோ ஒரு நல்லதை நோக்கி செல்லும் பாதையிலேயே செல்கிறோம் என்பது மட்டும் தெளிவாகியிருந்தது.
விழா முடிந்த போது மணி ஆறே முக்காலாகியிருந்தது.
கீர்த்தீயன் ரொம்பவும் அவசரப்பட்டார். லாட்ஜூக்கு சென்றதும் ரூமை காலி செய்து கொண்டு எட்டு மணிக்குள் ரயில்நிலையம் சென்றுவிட வேண்டும் என்பதிலே குறியாயிருந்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க முடியவில்லை.
அப்போதுதான் அந்த விளம்பர நோட்டிஸ் கண்ணில்பட்டது.
உடனடியாக எடுத்து பாக்கெட்டிலிருந்த பேனாவால் இரண்டு வார்த்தைகளை அடிக்கோடிட்டு பத்திரப்படுத்திக் கொண்டான்.
கீர்த்தீயனின் சூட்கேஸ் மற்ற சாமான்களை எடுத்துக்கொண்டு ரூமைக் காலி செய்தனர்.
வெளியேவந்து படிக்கட்டுகளில் இறங்கி நாலைந்து படிகள் இறங்கிய பின்னர் எதையோ மறந்தவன் போல சுந்தர் மறுபடியும் படிகட்டுகளில் தாவி ஏறினான்.
பூட்டை ஆட்டிப்பார்ப்பவன் போல அடிக்கோடிட்டு பத்திரப்படுத்திய அந்த காகிதத்தை பூட்டின்பின்புறமாய் செருகி வைத்தான்.
கீர்த்தீயனை அனுப்பிவிட்டு எப்படியாவது தியேட்டரின் முன்பாக சந்திப்போம் என்று தீர்மானித்துக் கொண்டான்.
கார் ரயில் நிலையத்தை அடைய இன்னும் ஒரு ஐம்பதடிகளே மீதமிருந்தன.
வலதுபுறம் திரும்ப சிக்னல் காட்டியபடி திரும்ப தெற்கேயிருந்து படுவேகமாய் வந்த லாரி கார் மீது மோதி விபத்தை உண்டாக்கியது.
கார் அப்பளமாய் நொறுங்கியது.