கடைசியாய் படுத்திருந்த சிறுவன் ஒரு தலகாணியை குறுக்காக வைத்துப் போர்வையை போர்த்திவிட்டு இருட்டில் மெல்ல ஊர்ந்து வந்து கீழே என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.
“என்ன குப்பு சரக்கெல்லாம் சரியாயிருக்குமா?”
“எந்த மிஸ்டேக்குமில்லே. சரியா இருக்குங்க.”
“எதுக்கும் எடுத்துட்டு வா ஒருவாட்டி செக் பண்ணிடலாம்.” நான்கு டிரம்ஸ்களையும் ஒரு புல்லாங்குழல் ஒரு டிரம்பட்டையும் பவ்யமாய் கொண்டு வந்து வைத்தார்கள். அடியாட்கள் டிரம்ஸ் நட்டுகளை திருகி பிரித்தார்கள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட சதுர காகிதம் சுற்றிய கேக் போன்ற பொருள் இருந்தது. மேலே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு ‘திக்,திக்’ என்று நெஞ்சு துடித்தது.
பாஸ் பொட்டலங்களில் ஒன்றைப் பிரித்தார். சாக்லெட் சைஸில் மஞ்சள் நிற தங்கக்கட்டிகள் ஜிலுஜிலு என ஜொலித்தன.
“ம் சரியாத்தான் இருக்கும் போலிருக்கு நம்ம மூணு பேரைத் தவிர விஷயம் யாருக்கும் தெரியாது. நாளைக்குக் காலையிலே வேன் வரும். வழக்கப்படி ஐட்டங்களை ஏத்தி கேரளா பார்டர் தாண்டி நம்ம கெஸ்ட்ஹவஸிலே இறக்கிடுங்க. மிச்சத்தை ராஜப்பன் பாத்துப்பான். காரியம் முடியற வரைக்கும் ரொம்ப எச்சரிக்கையாயிருக்கணும் தூங்கிறாதிங்க. ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தார் பாஸ்.
வெய்யில் உடலை சுடுகிற அளவிற்கு நன்றாக தூங்கியிருந்தனர் குண்டு குப்பு தன் முட்டைக் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த போது மணி எட்டாகியிருந்தது. மோசம் போய்விட்டோம் என்று பரபரப்புடன் செயல்பட்டான். பின்கட்டுக்குப் போன போது டிபன் தயாராகி ஆறிக் கொண்டிருந்தது. சமையல்காரர் சண்முகம் கொல்லைப் புறத்திலிருந்த கிணற்றில் தண்ணீரை வாளியில் இரைத்து மடேர் மடேரென்று ஊற்றிக் கொண்டிருந்தான்.
“என்ன சம்முகம் எல்லாம் ரெடியா? இந்த பிசாசுகளோட பகல் முழுக்க அலைஞசதுலே அசதியாயிருந்தது. நல்லாத் தூங்கிட்டேன்” என்றபடி பக்கத்து வேப்பமரத்தில் ஒரு குச்சியை முறித்து பல்லை விளக்க ஆரம்பித்தான். ஈரத்தலையை துண்டால் துவட்டிக் கொண்டு மாடிக்குப் போனவன் பதறியடித்துக் கொண்டு கொல்லைக்கு ஓடி வந்தான்.
“சம்முகம் சம்முகம் மோசம் போயிட்டோம்”
“ என்னப்பா சொல்றே.”
“அந்த கடைசிலே படுத்திட்டுருப்பானே பொடியன்..”
“குமார் பயலா காணோமா எங்கயாவது ஒண்ணுக்கான போயிருப்பாம்பா.”
“அவங்கூட பெரிய பேஜருப்பா நேத்து கூட திடீர்னு காணாமப் போயிட்டான் தேடிப்புடிச்சேன் பாருப்பா” காய்ந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு “எங்கே நான் ஒரு வாட்டி பாத்திட்டு வர்றேன்” என்று மாடிப்படிகளில் தாவி ஏறினார்.
முகத்தில் ஒரு பீதி தோன்ற, “அட நெசமாவே காணம்பா. எல்லா இடத்திலேயும் பாரு.” இருவரும் மாறிமாறிப் பங்களா முழுக்கத் தேடினார்கள். “ம்...ஊஹூம்...காணவேயில்லை. இருவரும் கையைப் பிசைந்தபடி நின்றனர். செய்வதறியாது திகைத்தனர்.
“என்னப்பா இது பாஸ்க்கு என்ன பதில் சொல்றது. நீ குளிக்கறதுக்கு முன்னாடியிருந்தானா?”
“படுத்துட்டிருந்த மாதிரிதான் இருந்தது. எல்லாப் பயல்களும் ராத்திரி கொடுத்த தூக்க மாத்திரைனாலே தலையொரு பக்கம் காலொரு பக்கமா தூங்கறானுக இவம் மட்டும் நேரா போத்திட்டிருக்கானேன்னு சந்தேகப்பட்டு விலக்கிப் பார்த்தேன். வெறும் தலகாணிய வச்சுட்டு பையக் கம்பி நீட்டிட்டான் போலிருக்கு.”
“இப்படிச் சொன்னா எப்படி ஒம்பது மணிக்கு வேன் வந்துருமே. இரு நா பைக் கெடுத்துட்டு போய் ஒரு நடை பாத்துட்டு வந்துர்றேன் பாஸ் கேட்டா விவரத்தை சொல்லு.” -என்று குப்பு சொல்லியபடி உடுப்புகளை மாற்றிக் கொண்டு திண்ணையில் சுவரோரமாய் சாத்தி வைத்திருந்த பைக்கை உசுப்பி கிளப்பினான்.
*****
குமார் என்ற ஊனமுற்ற சின்னஞ்சிறிய பையன் படு விவரமானவன்.. அவனுக்கும் பதினொரு வயதுதான் ஆகிறது. நல்ல சிவந்த நிறத்தை உடையவன். கொஞ்சம் குட்டையானவன் ஒரு கையும் காலும் கொஞ்சம் சூப்பை. அவ்வளவே எதையும் ஆராய்வதில் படுசுட்டி. ஊடல் ஊனமுற்றவர்களை ஆதரிக்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு பத்து பன்னிரண்டு சிறுவர்களை வைத்துக் கொண்டு மிகப் பெரிய கடத்தல் வேலையில் ஈடுபட்டு வந்தான். இதையறிந்த குமார் தேசத் துரோகச் செயலுக்குத் தண்டனை வாங்கித் தரத் தயாரானான்.
தனக்குத் தேவையான பணத்தை அன்றாட வசூலில் கொஞ்சம் திருட்டுத்தனமாய் சேகரித்துக் கொண்டான். இன்னும் சில முஸ்திப்புகளை செய்து கொண்டான். முந்தைய தினம் இரவு பாஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியதும் குமார் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை குண்டு குப்புவுக்கு கொடுக்க இருந்த பாலில் யாருக்கும் தெரியாமல் போடடுவிட்டு பின்பக்க வழியாக மெல்லக் கிளம்பி மெயின் ரோட்டை அடைந்து ஒரு ஆட்டோவில் ஏறி நேராய் கனகா லாட்ஜூக்குள் போன போது மணி சரியாய் எட்டடித்தது. விடுவிடுவென மாடிப்படிகளில் ஏறி 203 ம் நம்பர் அறையை அடைந்த போது ரூமுக்கு வெளியே பெரிய பூட்டென்று தொங்கியது. குமாருக்கு ஏமாற்ற மாயிருந்நது. அந்தப் பக்கமாய்ப் போன ரூம் பையனிடம் விசாரித்த போது எழுத்தாளர் எட்டரைக்கு மணி ரயிலுக்குப் போவதால் ஏழு மணிக்கே ரூமைக் காலி செய்து விட்டார்கள் என்று சொன்னான். காரியம் எல்லாமே கெட்டுப் போனதால் திகைத்துப் போய் செய்வதறியாமல் நின்றான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.