ஒட்டடைக்குச்சியுடன் பாத்ரூமுக்குள் நுழைந்த அந்தாள் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் வீசினான். சுந்தர் மனசு பூராவும் வெண்டிலேட்டர் மேலிருந்த பொட்டலத்திலேயே இருந்தது. எங்கே கீழே விழுந்து விடுமோ என்று மிகவும் பரிதவித்தான். அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
வெள்ளை நிற பேண்ட் சர்ட்டுடன் சிவப்புநிறக் கோடு போட்ட டை கட்டியவா உள்ளே நுழைந்து,“மன்னிக்கணும் சார்” என்றவர் பாத்ரூமில் நுழைந்து,“ஏய் மாரப்பா இந்த ரூமுக்கு ஒட்டடை அடிக்க வேண்டாம். அவர் போன பின்னாடி அடிச்சுக்கலாம்ன்னு காலையிலேயே சொன்னேன் காதில் ஏரலையா. போய்யா வெளியே.”
ஒட்டடைக்குச்சியுடன் நின்றவன் கண்கள் சிவக்க திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போனான்.
வெளியே வந்த வெள்ளை உடுப்புக்காரர், “தண்ணி போட்டிருக்காம் போலிருக்கு. எத்தனை சொன்னாலும் இந்த ஜென்மங்களுக்கு ஏறதில்லே சாரி சார்”.
“அதனாலே ஒண்ணுமில்லே எனக்கு தூசு பட்டா அலர்ஜி பிரித்திங் டிரபிள் வரும் அதா வேண்டான்னு காலையிலேயே சொன்னேன். நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க.. அவனுக்கு புரியல்லே. புரியற மாதிரி நீங்க சொல்லி யிருக்கணும்.” என்று சொன்னார் கீர்த்தீயன்.
சுந்தரின் வயிற்றில் பாலை வார்த்தார் போலிருந்தது.
ஊருக்கு வெளியே ஒரு பழங்கால கட்டிடம். ஒரு பெரிய அரண்மனை மாதிரி தோற்றமளித்தது. கொஞ்சம் பாழடைந்த மாதிரியும் தென்பட்டது. வெள்ளையடித்து பல வருடங்களாயிருந்தது போல காட்சியளித்தது. பக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அழகாயிருந்தது. வருஷம் முழுக்க லேசான மழை எப்போதும் பெய்து கொண்டேயிருக்கும். ஈரம் பட்டுப்பட்டு சுவரெல்லாம் லேசாய் பச்சை பசேலென்று பாசி படிந்திருந்தது. விட்டைச் சுற்றி அழகான பூஞ்செடிகள் ரம்யமாயிருந்தது. காரை பெயர்ந்த காம்பவுண்ட் .கேட்டருகே சிறியதாய் ஒரு பெயர்ப்பலகை உடல் ஊனமுற்றோர் இல்லம் என்று அழிந்து போன எழுத்துகளில் தெரிந்தது.
மாலை வெய்யில் லேசாய் மங்கிக் கொண்டிருந்தது. இருள் வேகமாய் சூழ்ந்து கொண்டிருந்தது. ஊருக்குள் நன்கொடை வசூலிக்கச் சென்ற உடல் ஊனமுற்ற வாத்தியக் கோஷ்டி அப்போதுதான் சோர்ந்து போய் திரும்பியிருந்தது. இவர்களை மேய்த்து வர உடன் சென்ற மாமிச மலை போன்ற மனிதன் ‘தஸ்புஸ்’ என்று ஹாலிலிருந்த ஷோபாவில் சாய்ந்தான்.
“டேய் பரட்டை அந்தப் பெரிய சொம்பு நிறைய ஐஸ் வாட்டர் கொண்டாடா”. என்று பங்களாவே அதிர்கிற மாதிரி கத்தினான். உடல் ஊனமுற்ற சிறுவர்கள் மாடியிலிருந்த ஒரு அறைக்கு போய் உட்கார்ந்தனர்.
பகல் முழுக்க பசியோடு நடந்த களைப்பில் அசந்து போய் காலை நீட்டி சிலர் படுக்க முயன்றனர் ஒல்லியாய் கழுகுப் பார்வையுடன் பார்த்தவன்,“டோய் பிசாத்துகளா வயித்துக்கு ஏதாச்சும் கொட்டிட்டு கெடத்துங்கடா. இந்நேரத்துக்கென்னடா படுக்கை பாஸ் வந்தா முதுகு பிஞ்சுடும் தெரியுமில்லே.” என்று மிரட்டினான்.
பரட்டை என்று அழைக்கப்பட்டவன் கிட்டத்தட்ட குடம் சைசிலிருந்த ஒரு பாத்திரம் நிறைய ஐஸ் வாட்டரை ஷோபாவிலிருந்தவனிடம், கொடுக்க, அதை ஒரே வாயில் தொப்பை நெஞ்செல்லாம் நனைய மூச்சு விடாமல் குடித்து விட்டு, ‘ஏவ்’ -என்று ஏப்பத்தை விட்டான்.
அதே வேளையில் - கார் ஒன்று பங்களாமுன் நின்றது. ஆறரை அடியுயரத்தில் ஆஜானுபாகுவாய் முருக்கிய மீசையோடு ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்கவர். இறங்கி பங்களாவிற்குள் நுழைந்து கொண்டே,“என்ன குப்பு ஏப்பமெல்லாம் பலமாயிருக்கு?.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க பாஸ்.”
“என்ன நம்ம ஐட்டங்கெல்லாம் என்ன செய்யுது”
“சாப்பாடாயிடுச்சாம்.”
“போட்டுட்டு டானிக்கே கொடுத்துட வேண்டியது தானே என்ன தயக்கம்”. “இதோ ஆச்சுங்க.” தொடர்ந்து சமையலறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. ஏதோ பேருக்கு சாப்பாடு என்ற ஒன்றை போட்டார்கள் வேறு வழியில்லாத அந்த அனாதைச் சிறுவர்கள் வாரிவாரிச் சாப்பிட்டார்கள். கடைசியில் உட்கார்ந்திருந்த குட்டையான சிறுவன் மட்டும்; சாப்பிடாமல் சாப்பிடுவதாக பாவனை பண்ணிக் கொண்டிருந்தான். சமையலாள் ஏமாந்த சமயம் பார்த்து சாப்பாட்டை இருளில் வீசி விட்டான் சாப்பிட்டு முடிந்ததும் எல்லாருக்கும் படுக்கை தயாராயிருந்தது.
மறுபடியும் சமையலாள் பால் நிறத்தில் ஒருதிரவத்தை வைத்துக்கொண்டு, “டேய் பசங்களா எல்லோரும் டானிக் மாத்திரைய வாயிலே போட்டுட்டு பால வாங்கிக்குடிங்கடா” என்றார்.
எல்லோரும் சொன்னபடியே மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பாலைக் குடித்த மறுவினாடி எல்லோரும் மயக்கத்தில் ஆழ்ந்தனர்.
“எல்லா ஐட்டங்களும் சாஞ்சாச்சா” என்றார் பாஸ்.
மொட்டை குப்பு “ஆச்சுங்க” என்றான்.
இந்தக் குரல் கேட்டதும் கடைசியில் படுத்திருந்த சிறுவன் மட்டும் தலைகாணியை குறுக்கே வைத்துப் போர்த்திவிட்டு மெல்ல ஊர்ந்து அவர்களுடைய நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினான்.