அறிவு தரும் ஆனந்தம்
உலகே உலகே காது கொடு
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு
மனமே மனமே பாடுபடு – படிப்பால்
வாழ்வை வென்று எடு
படிக்கப் படிக்க வளர்ந்துவிடு
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு
படிப்பு கொடுக்கும் தைரியத்தில்
பட்டம் சுமந்துக் காட்டிவிடு
படிப்பால் நாளை உலகத்தின்
பசுமைப் போற்ற முயற்சி யெடு
சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்
வீடு போனால் போனதுதான்
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே
மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே
பாடம் சுமக்கும் மாணவரே
காலம் சுமக்க வாழ்பவரே
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்
எம் தேசம் சுமந்து நடப்பவரே
உறங்கா கடலின் அலைபோலே
உழைத்து உயரும் மழலைகளே
விரிந்த வானக் குடைபோலே
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே
மாறும் மாறும் உலகமெலாம்
மாற்றிப் போடப் படித்திடுவோம்
மாறுதல் காணும் ஒருதினத்தில்
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!
- வித்யாசாகர்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.