சடங்குமுறைகள் - இலங்கையின் புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
பற்றிய ஒரு சமயம் சார் சமூகவியல் நோக்கு
செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா
தற்காலிக உதவி விரிவுரையாளர்,
சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்),
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
கட்டுரையின் தொடர்ச்சி - பகுதி 3
2.2 மந்திரவித்தாண்மை (மந்திர நடைமுறைகள்)
அம்மன் ஆலயங்களில் பூசை, சடங்கு வழிபாட்டின் மந்திர வித்தாண்மை நிறைந்துள்ளன. வெற்றிலை, பாக்கு, பழம், விபூதி, சந்தனம் வைப்பது தொடக்கம் தெய்வத்திற்குப் பூசையை ஒப்புக் கொடுத்தல் வரையும் நடைபெறும் ஒவ்வோர் நிகழ்வும் மந்திரப் பிரயோகம் உடையதாகவே உள்ளன. எப்பொருளையும் தெய்வத்திற்காக எடுக்கும் போதல்லாம் அங்கு மந்திரப் பிரயோகமே சொல்லப்படும்.
தொன்மைக்காலம் தொடக்கம் இன்று வரை சமயத்தின் தோற்றம் மந்திரத்தால் உருவாகியது. பிரேசரின் கருத்துப்படி மந்திரம் என்பது உண்மையில் தொன்மை மக்களின் தொழில்நுட்பம் பற்றாக்குறையைப் போக்கத் தோன்றிய ஒரு கற்பனைத் தொழில்நுட்பமாகும் என்று கூறுகிறார். மந்திரம் இல்லாமல் பூசை இல்லை என்பதற்கிணங்க புன்னைச்சோலை காளிஅம்மாள் கோயிலில் மந்திரம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இவ்வாலயக் கதவு திறத்தலிலிருந்து அம்மன் எடுத்து வருதல், மடை வைத்தல், கும்பம் வைத்தல் போன்றவற்றிற்கும் தேவாதிகளை உருவேற்றவும் முகக்களையில் எழுந்தருளப் பண்ணவும் மந்திரங்களை உச்சாடனம் செய்கின்றனர். அது தவிர, கன்னிக்கால் வெட்டும் போதும், வெட்டவிருக்கும் கன்னிக்காலுக்கு நூல் கட்டும் போதும் பூசகர் மந்திரம் உச்சரித்தே அந்தச் சடங்கை மேற்கொள்கின்றனர். கும்பங்களை வைத்து அம்பாளை மந்திரத்தாலே எழுந்தருளப் பண்ணுகின்றனர். விநாயகப்பானை வைத்தல் போன்ற சடங்குகளின் போதும் உச்சரிக்கின்றனர். எனவே, அனைத்துச் சடங்கிலும் மந்திரம் என்பது முக்கியமானதாக இவ்வாலயத்தில் காணப்படுகின்றது.
சடங்கின் போது தெய்வம் ஆடுதல் முக்கிய அம்சமாகக் காணப்படும். தெய்வம் ஆடுபவரை பூமரம் எனவும் பூசகரை ஆசான் எனவும் அழைக்கப்படுபவர். பூசையின் நிறைவு குறைவு பற்றி ஆலயத் தர்மகர்த்தாவுக்கு அல்லது பூசகருக்கு தெய்வமாடி தெரிவிப்பார். இவ்வாறு கூறுவதை வாக்குச் சொல்லுதல் என்பர். கட்டுச் சொல்லும் போது நோய், துன்பம் முதலியவற்றின் தாக்கத்தையும், எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறலையும் கட்டுரைப்பர். சடங்கு வழிபாட்டில் காணப்படும் இவ்வம்சம் முக்கிய சிறப்பம்சமாகும். தேவாதிகள் உருவேறியாடி வாக்குச் சொல்லுதல் பற்றிகலாநிதி மௌனகுரு அவர்கள் குறிப்பிடும் போது, தேவாதிகளது மனதினை ஒருநிலைப்படுத்தும் போது, அவரது அடி மனதில் இருப்பவைகளே வெளிவருகின்றன என்கிறார். புன்னைச்சோலை மக்களின் கருத்துப்படி மந்திரத்தின் சக்தியாலே தேவாதிகள் ஆடுகின்றனர். கட்டப்பட்ட தெய்வங்களை அவிழ்க்கவும் மந்திரங்கள் சொல்லப்படுகின்றது. தெய்வம் ஆடுபவர்களைஆடாமல் உணர்விழக்கச் செய்து தத்தம் மந்திர வித்தாண்மையைக் காட்டும் நிகழ்வுகளும் இடம்பெறும். இவ்வாறு உணர்விழக்கச் செய்வதை ‘படுகளம் போடுதல்’ என வழங்குவர். இவ்வாறு உணர்விழக்கச் செய்தவர்களை மீண்டும் ஆடச் செய்வதற்கு பூசகரது மந்திரவித்தாண்மை வெளிக்காட்டும். மீண்டும் ஆடச் செய்தலை ‘படுகளம் எழுப்புதல்’ என்பர். இங்ஙனமே அம்மனின் பொங்கற்பானையில் பால் பொங்காது கட்டுவதும், அது பொங்குமாறு அக்கட்டினை மந்திரசக்தியால் அழித்துப் பொங்கச் செய்வதும் மந்திரவித்தாண்மையைக் காட்டும் செயல்களாகும். எனினும், ஆலயத்தினுள் மந்திர வித்தாண்மைப் பலப்பரீட்சை தகாத செயல் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
ஆதிக்காலத்தில் வைத்திய சாலைகள் மிகக் குறைவாக இருந்தமையும், மக்கள் மூட நம்பிக்கையில் திழைத்தவர்களாக இருந்தமையும் இவ்வாலயத்தை வைத்துக் குறிப்பிடலாம். புன்னைச்சோலை காளி கோயிலில் சூனியம் செய்தமை தேவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கழிப்புச் சடங்கும் இடம் பெறுகின்றது. அங்கு சில வீடுகளில் குறி பார்த்தல், செய்வினை செய்தல், செய்வினை எடுத்தல், கழித்தல், வசியம் என்பனவும் மந்திரவாதிகளைக் கொண்டு நடைபெறுவதனை அறிய முடிகின்றது.
புன்னைச்சோலை கிராமத்தவர்கள் அதிக மந்திர சக்தி வாய்ந்தவர்கள் எனவும், அது நன்மையானதாகவும் தீமையானதாகவும் உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். இவை தவிர, இவ்வாலயத்தில் நடைபெறும் நேர்த்திக்கடன் நிகழ்வுகளும் சடங்குகளாகவேக் கருதப்படுகின்றன. ஏனெனில், நேர்த்திக் கடன்களை அடியார்கள் நிறைவேற்றும் வேளையில் பூசகரின் துணையும் தேவைப்படுகின்றது. அந்த வகையில் நூல் போடுதல், குறிபார்த்தல், கட்டுச் சொல்லுதல், தண்ணீர் ஓதுதல் போன்றன மக்களின் நம்பிக்கையினடிப்படையிலான சடங்குகளாகும். இவை தவிர, மடிப்பிச்சை எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், குத்தலும் காவடி எடுத்தலும், அங்கப்பிரதட்சணம், தேங்காய் உடைத்தல், அடையாளம் கொடுத்தல், பிள்ளை விற்றல் (ஏலத்தில் கூறி பின் தாமே காணிக்கையாக எடுத்தல்) என பல நேர்த்திகள் இவ்வாலயத்தில் நிகழ்கின்றன. எனவே, இவ்வாலயத்தில் சடங்குகள் நிகழ்த்தப்படுவதற்கான நோக்கம் வெம்மை தணிந்து வறுமை ஒழிய வேண்டும் என்பதாகும். அது மட்டுமின்றி, அம்மை நோய் போன்ற கோடைக்கால நோய்கள் மக்களை வருத்தக்கூடாது என்பதற்காகவும், மக்களது குறைகள் நீங்கி அனைவரும் மகிழ்வாக வாழவேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது. மேற்கூறியவற்றிலிருந்து மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையில் சடங்குகள் வகிக்கின்ற முக்கியத்துவத்தினையும் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் சடங்குகளைப் பிரிக்க முடியாத அளவிற்கு, அவை இரண்டறக் கலந்து நிற்கும் போக்கையும் விளங்கிக் கொள்ளலாம்.
3. சமய ஸ்தலத்திற்கும் சமூகத்திற்குமான இடைவினை
புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலயமானது சமூகத்துடனும், சமூகம் ஆலயத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகக் காணப்படுகின்றது. சமய ஸ்தலத்திற்கும், சமூகத்திற்கும் இடையிலான இடைவினைக்கு முக்கியமான விடயமாக நம்பிக்கை காணப்படுகின்றது. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மீது மிகுந்த பக்தியுடையவர்களாகவே மக்கள் காணப்படுகின்றனர். “வேண்டும் வரங்களை வாரி வழங்கும் உண்மையான தெய்வமே அங்கு வீற்றிருக்கின்றது”என்பது சமூகத்தினுடைய கருத்தாகும். ஆண்டு உற்சவத்திற்காக, “ஆலயக் கதவு திறத்தல்”என்றாலே புன்னைச்சோலை கிராமத்தவர்களது உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குவதைக் காணலாம். இது சமய ஸ்தலத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான இடைவினையைக் காட்டுகின்றது.
ஆலயக் கதவு திறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அண்டை அயலார் ஒன்று கூடி ஆலய வீதிகளையும் ஆலயத்தையும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பிற்காக வேறு இடங்களுக்குச் சென்றவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் சடங்கைக் கண்டுகழிக்க வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆலய உற்சவம் நடந்து கொண்டிருக்கும் போதே, வீடுகளில் திருமணங்கள், பூப்பு நீராட்டுச் சடங்குகள், மஞ்சள் இடித்தல், மா இடித்தல், மாமிசம் சமைத்தல் என்பன சமூகக் கட்டுப்பாடாகக் காணப்படுகின்றது. திருமணமாகி மூன்று மாதங்கள், பூப்படைந்து மூன்று மாதம் செல்லாமல் ஆலயத்திற்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால், ஏதாவது கெடுதல் ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை அனைத்து மக்களும் கொள்கைகளாகக் கடைப்பிடிக்கின்ற தன்மை ஆலயத்தின் மீது சமூகம் கொண்டுள்ள இடைவினையைக் காட்டுகின்றது.
மேலும், ஆலயத்தில் இடம் பெறும் தீமிதிப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் களமிறங்குவதும் நம்பிக்கையினடிப்படையலான செயலாகும். அக்கினியில் இறங்குவது பூவின் மேல் காலை வைப்பது போன்று இருக்கும். தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றதற்காகவும், தற்போது ஊற்பட்டுள்ள துயரங்களுக்காகவும் தீ மிதிப்பர். இதே போன்றுதான் பூப்போடுதலும் நம்பிக்கையினடிப்படையிலான நேர்த்தியாக அமைந்திருக்கும். கற்பூர விளக்கெடுத்தல், அடையாளம் கொடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், மடிப்பிச்சை எடுத்துச் செல்லுதல் அனைத்தும் மக்கள் புன்னைச்சோலை காளியம்மாள் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடாகும்.
குழந்தைப்பேறு கிடைத்தல் பற்றியும் மக்கள் மத்தியில் சில நம்பிக்கைகள் காணப்படுகின்றன. புன்னைச்சோலை பத்திரகாளிம்மன் ஆலத்தில் பிரத்தியங்கிரி காளி என்றும் ஒரு தெய்வம் வழிபடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இத்தெய்வத்தின் அருளால் குழந்தைப்பேறு கிடைப்பதாகப் பக்தர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நம்பிக்கை சமூகம் இத்தலத்தின் மீது இடைவினைக்குக் காரமாகின்றது. குழந்தைப்பேறுக்காக அடையாளங்களும் செய்து கொடுக்கப்படுகின்றது. அது மட்டுமின்றி, மக்கள் தமது குறைகளுக்காகப் பல நேர்த்திக் கடன்களை சூலத்தில் காணிக்கையாக வைக்கின்றனர். இவ்வாறான பல நடைமுறைகள் காணப்படுகின்றன.
இவ்வாலயத்தின் பொதுக்கூட்டம் நிகழ்ந்தால் புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் வருகை தருவதும் தமது கருத்துகளைப் பரிந்துரைப்பதும் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவதும், சடங்குகளின் போது தம்மை அர்ப்பணிப்பதும், சமூகம் ஆலயத்தின் மீது கொண்டுள்ள தொடர்பைக் காட்டுகின்றது. மேலும், இவ்வாலயத்தில் காவியம் பாடப்படுகின்றது. இப்பிரசேதத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவியம் தெரியாமல் யாரும் இல்லை. நால்வகை அறப்பொருள்களை வெளிப்படுத்தும் தன்மை காவியத்துக்கு உண்டு. இவ்வாறு காவியத்தை அனைவரும் பாட இவ்வாலயம் துணைபுரிகின்றது.
அது போலவே மந்திர சக்தியும் இப்பிரதேச மக்களிடையேக் காணப்படுகின்றது. ஆலயச் சடங்கு முதல் சூனியம் எடுத்தல், குறிபார்த்தல் போன்ற பல வகைகளில் மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு இப்பிரதேசத்தில் சிலருக்குள்ள தெய்வீக சக்தி ஆலயத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர்பைக் காட்டுகின்றது.
அது மட்டுமின்றி, இவ்வாலயத்தின் சடங்கு முறைகளில் சமூகத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதாவது, இவ்வாலயம் தனிப்பட்ட ஒரு குலத்துக்குரியதாகக் காணப்படுகின்றது. இருந்த போதிலும், நிர்வாகத்தில் ஏனையவர்கள் போக முடியாவிட்டாலும், சடங்குகளில் அனைவரும் அங்கம் வகிக்க முடியும். ஆறுநாள் சடங்குகளையும் மக்கள் குழுவாக இணைந்து நடாத்துகின்றனர். இதில் வேறு ஊர், சாதி என்ற ஏற்றத்தாழ்வின்றி கூட்டாக இணைந்து நடாத்துகின்ற நிலையும், அன்னதான விருந்தோம்பலும், சமூகம் ஆலயத்தின் மீது கொண்ட பற்றைக் காட்டுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள், ஆலயத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான இடைவினையைக் காட்டுகின்றது.
அத்துடன் இவ்வாலயத்தில் இடம் பெறும் விசேட தினங்கள், திருவிழா, நித்திய பூஜைகள் அனைத்தும் இவ்வூர் மக்களையும், அயல் கிராமத்து மக்களையும் ஆலயத்துடன் தொடர்பைப் பேணும் வகையில் இடம் பெறுகின்றன. குறிப்பாக, நெல்லுக்குற்றுதல் சடங்கின் போது, அதிகளவான பெண்கள் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாலயத்தில் நேர்த்திக்கடன்கள் (காவடி எடுத்தல்,கற்பூர விளக்கு எடுத்தல், தீ மிதிப்பு) மேற்கொள்வதும் ஆலயத்துடன் மக்கள் கொண்ட நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாலய நிர்வாகத்தினரும், பூசகர்களும் எதுவித வருமானத்தையும் எதிர்பாராமல் பணிபுரிவது ஆலயத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர்பைக் காட்டுகின்றது. ஆலய நிர்வாகக் கணக்கிலிருந்து அவர்கள் வருவாயை எதிர்பார்ப்பதில்லை. தட்சணை பணமே பூசகருக்குக் கிடைக்கப்படுகின்றது. இம்மனநிலை அவர்கள் அம்பாள் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, புன்னைச்சோலை பத்திரகாளியமன் ஆலயமும், சமூகத்தின் மீது பல பங்களிப்பைச் செய்கின்றது. இவ்வாலயம் பல நேர்த்திகளை நிறைவேற்றுவதால் சமூகம் முற்று முழுதாக நம்பிக்கை வைத்துள்ளது. அதே போன்று, கல்விக்காகவும் பல பங்களிப்பை மேற்கொள்கின்றது. இவ்வாலயத்தின் பெயரால் பாலர் பாடசாலை, அறநெறிக்கல்வி, இலவச பகுதி நேர வகுப்புக்கள் என்பனவும் மாணவர்கள் நலனுக்காக நடாத்தப்படுகின்றது. அது மட்டுமின்றி வாசகசாலையும் ஆலயத்தின் பெயரால் கலாசார மண்டபத்தினுள் இயங்குகின்றது.
இவ்வாறு மாணவர்களின் கல்விக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல வகைககளில் இவ்வாலயம் இயகுகின்றது மட்டுமின்றி, மாணவர்களையும் சமூகத்தில் யாராவது உயர்ந்த நிலைக்கு வந்தால் அவர்களைக் கௌரவிக்கும் முறையும் இவ்வாலய நிர்வாகத்தில் காணப்படுகின்றது. உதாரணமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் மாணவர்களுக்குப் பரிசில் பொருட்களையும் வழங்கிக் கௌரவிக்கின்றது.
அதுமட்டுமின்றி, இப்பிரதேசத்தில் யாராவது மரணித்தால் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகை பணத்தையும் இவ்வாலய நிர்வாகத்தினர் வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி, ஆலய உற்சவக் காலங்களில் அன்னதானங்களையும் அன்னதான சபை வழங்குகுகின்றன. அனர்த்தங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் ஆலயம் வழங்குகின்றது.
மேலும் இவ்வூரில் புதுமனை புகு விழாவின் போது மக்கள் பெரும்பாலும் இவ்வாலயத்திலேயேத் தமது சுவாமி படங்களை பூசையில் வைத்து எடுத்துச் செல்வர். அதே போன்று, திருமண வைபவங்கள் இவ்வாலயத்தில் இதுவரை நடாத்தப்படாவிட்டாலும் அதற்குரிய திருமண மண்டபத்தில் விருந்தோம்பலை வழங்குகின்றனர். அதாவது, ஆலயத்தில் தாலி கட்டாவிட்டாலும், விருந்தோம்பலாவது ஆலயத்தின் பெயரில் கொடுக்கவேண்டும் என்று ஆலய கலாசார மண்டபத்தில் மாமிச, மரக்கறி உணவுகளை வழங்குகின்றனர். இவ்வருடமே இவ்வாலய வரலாற்றில், முதல்முதலாகத் திருமணம் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது ஆலயத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகின்றது.
எனவே, ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, ஆலயத்தில் இடம் பெறும் விசேட பூசைகள், தினப்பூசைகள் அடங்கலாக சகல விடயங்களிலும் சமூகம் தொடர்புபட்டுள்ளதோடு அவற்றை மரபு வழியான சம்பிரதாயமாக சமூகம் கடைப்பிடிப்பதையும் காணலாம். மேலும், சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் நற்பண்புள்ளவனாகவும், அன்பு, கருணை, விட்டுக்கொடுப்பு, பொழுதுபோக்கு, ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழக் கற்றுக் கொடுக்கின்ற தலமாக இவ்வாலயம் காணப்படுவதை ஆலயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, இவ் ஆலயமானது சமூகத்துடனும், சமூகம் ஆலயத்துடனும் பின்னிப் பிணைந்து இடைவினை கொள்வதை மேற்கூறிய விடயங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
முடிவுரை
இவ்வாய்வுக் கட்டுரையானது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்தை மையமாகக் கொண்டு அவ்வாலயத்தில் இடம் பெறும் சடங்கு முறைகளையும், அச்சடங்கு முறைகளுக்கூடாகச் சமயத்திற்கும், சமூகத்திற்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றியும் எடுத்தியம்புகின்றன. இதன் மூலம் சமயம் சார் சமூகவியலின் பார்வையில் சமயச் சடங்குகள் எவ்வாறு மனிதனையும், அவனது திறனையும் மேம்படுத்துகின்றன எனவும், சமயம் சார் சடங்குகள் மனிதனையும், இயற்கையையும் எவ்வாறு பேணுகின்றது எனவும், சமயம் சார் சடங்குகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் இடையில் எவ்வகையான பிணைப்புக் கொண்டதாக அமைந்துள்ளது எனவும் விளக்குகின்றது.
உசாத்துணைகள்
1. சுகந்தி. சு, “மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும்”, இலண்டன் தமிழ் இந்து மன்றம், பக் 62-74. (2006)
2. தங்கேஸ்வரி. க,“கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள்”, மணிமேகலை பிரசுரம்,சென்னை, பக் 75-80. (2008)
3. கந்தையா. வீ. சீ,“மட்டக்களப்பு சைவக் கோயில்கள்”, இந்து கலாசார திணைக்களம், இலங்கை, பக் 144 -148. (1983)
4. நடராசா. ஊ, “மட்டக்களப்பு மான்மியம்”, மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப் பேரவை, பக் 64-72. (2000)
5. http://maddunews.com “புன்னைச்சோலை ஆலய தீ மிதிப்பு”, 01/02/2019, 05.30 p.m.
நேர்காணல்
1. அ. மனோகரன், வயது - 60, பிரதம பூசகர், புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், நேர்காணல் மேற்கொண்ட திகதி, 01/02/2019, 05.30 p.m.
2. சி. ஞானப்பு, வயது - 69, தலைவர், புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், நேர்காணல் மேற்கொண்ட திகதி, 01/02/2019, 05.30 p.m.
3. அ. விநாகயமூர்த்தி, வயது - 58 , கல்குடா கல்வி வலயத்தில் சைவநெறி பாடத்துக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், நேர்காணல் மேற்கொண்ட திகதி - 10/02/2018, நேரம் 04.30 p.m.
(நிறைவுற்றது)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.