1792 இல் அமெரிக்காவில் மேரி உல்ஸ்டன்க்ராப்ட் பெண்களின் உரிமைகளை நிறுவுதல்‘என்ற நூலை எழுதி வெளியிட்ட காலத்தைப் பெண்ணியத் தொடக்கக்காலம் என்று நாம் கூறுவதாக இருப்பின் இன்றைக்கு நீண்ட 225 ஆண்டுகள் கடந்தும் பெண்ணியம் தொடக்கக் காலத்தில் முன் வைத்த அதே கோரிக்கைகளையும் தேவைகளையும் முன் வைத்து நகர்கிறது என்பது ஒரு கோட்பாட்டின் வளர்ச்சி என்று கூற முடியாது.
பெண்ணியம் எங்கு தொடங்குகியதோ அங்கேயே அதே நிலை முடிந்து வளர்ச்சியற்றது. ஆனால், உயிரோடு இருக்கிறது என்பதுதான் உண்மை. இவ்வாறு கூறியதால் பெண்ணியம் எதையும் சாதிக்கவில்லை என்ற பொருள் அல்ல. இன்னும் சஞ்சரிக்க வேண்டிய பாதைகள் நிறையவே இருக்கின்றன என்பதே இதன் பொருள். ஆண்மை,பெண்மை ன்பவை உயிரியல் ரீதியானவை அல்ல. அது சமூக ரீதியில் கட்டமைக்கப்படுபவை என்னும் சீமோன் தெபூவாவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாகினும் இந்தக் கட்டமைப்பை, அதாவது, சமூக ரீதியான ’பெண்’ கட்டமைப்பை முற்றிலும் அகற்றி, பெண்ணிற்கான சுயமான கட்டமைப்பை உருவாக்கப் பெண்ணியம் இன்னும் போராடவேண்டியுள்ளது’
அடையாளம் என்று இயல்பிலேயே எதுவுமில்லை அது கட்டமைக்கப்படுவதே’ என்ற அமைப்பியலின் கண்டுபிடிப்பு அனைத்திற்கும் பொருந்துவதாகவே அமைகிறது. இதன் அடிப்படையில் பெண் எவ்வாறு உடல், உளரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளாள் என்பதைக் கண்டறிந்து அந்த ஒரே வகை மாதிரிகளை (Steriotypes) உடைத்து, பெண்ணிற்கான சுய கட்டமைப்பை உருவாக்கப் பெண்ணியம் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. இந்தப் புரிதல் தமிழில் பெண்ணிய ஆய்வாளர்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. பெண்ணுக்கு எதிராகச் செய்யப்படும் கொடுமைகள், பிரச்சனைகள், சிக்கல்கள், புறக்கணிப்பு, போன்றவற்றைத் தொகுத்துக் கொடுப்பதுதான் பெண்ணிய ஆய்வு என்று புரிந்து கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலேயே பல ஆய்வுகளும் செய்யப்படுகின்றன.
பெரிய அணைக்கட்டில் விரிசல் வழியாக வெளியே ஒழுகும் நீரை வெளியில் இருந்து அடைக்க முனைவதை ஒத்த ஒரு முயற்சியாகும் இது. உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
பெண் உளஅடிப்படையில் அச்சம், மடம், நாணம் என்ற அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளாள். அதாவது, அவள் இயல்பிலேயே அச்சம் உடையவளாக எதையும் பயப்படுபவளாக, இருக்க வேண்டும். நாணம் அவளது அணிகலன், நாணமற்ற பெண்ணைச் சமூகம் பெண்ணாகக் கருதுவது இல்லை. இவற்றில் மிக முக்கியமான அடுத்த குணம் என்பது ‘மடம்’ அதாவது அறிவார்த்த அடிப்படையில் அவள் முட்டாளாக, தெரியாதவளாக, பிறர் சொல்லித் தெரிந்து கொள்பவளாக, சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாதவளாக முடிவெடுக்க இயலாதவளாக நெடுனோக்கு அற்றவளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளாள்.
இந்த மூன்று பெருங்சுவர்களை, தடைகளை இன்றும், படித்து வேலைக்குப் போகும் சிந்தனை செய்யும் பெண்களால் கூடக் கடக்க முடிவதில்லை அல்லது போராட வேண்டியுள்ளது என்பதுவே யதார்த்தம். 20 ஆம் நூற்றாண்டின் கல்வி வளர்ச்சியின் காரணமாகப் பல பெண்கள் கல்வி கற்று சிந்தனையாளர்களாகப் பெரும் பதவி வகிப்பவர்களாக வளர்ந்த போது சமூக அறிவு மையத்தில் பெண்ணின் இருப்பு ஆங்காங்கே தென்படத் தொடங்கியது.
பொதுக்கல்வி மட்டங்களிலும் உயர்கல்வித் துறைகளிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக ஆனது. ‘மனப்பாடக்கேசுகள்’ என்று தொடக்கத்தில் கேலி செய்து பெண்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று பொது வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் முன்னிலையில் இருக்கும் நிலையைக் கண்டு சற்று அதிர்ந்துள்ளனர்.
பெண்ணை அடக்கி ஆளப் பயன்படுத்தப்பட்ட‘ மடம்’ என்ற ஆயுதம் இன்று பழுதுபட்ட நிலையில் இனி அறிவின்மையைக் கூறிப் பெண்ணை ஆளமுடியாது என்பதையும் அவளோடு போட்டியிட்டுக் கல்வி வட்டத்தில் அல்லது வேலைவாய்ப்புகளில் வெற்றி பெற்றுதனது. ஆளுமையை எல்லா ஆண்களும் நிலைநாட்டுவது கடினம் என்பதையும் உணர்ந்த ஆண் ஆதிக்க சமூகம் மற்ற இரண்டு ஆயுதங்களான அச்சம், நாணம் இவற்றை மிக வக்கிரமாகப் பயன்படுத்தி வருகிறது.
பெண்ணை அறிவால் வெல்ல முடியாது அவளை உடல் பலத்தால் வென்று அடக்குதல் அதாவது உடல் அடிப்படையில் ஆணுக்கு வலிமையும் பெண்ணுக்கு மென்மையும் பண்டு காலந்தொட்டே கட்டமைக்கப்பட்டுள்ளதால் இந்த மென்மையைத் தாக்கி அச்சமூட்டிப் பெண்ணை இரண்டாம் நிலையிலேயே தக்க வைத்தல் என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் ஆணாதிக்கக் கருத்தியல். இதன் வெளிப்பாடாக நாம் பல உதாரணங்களைக் கூறலாம்.
ஊடகங்களில், குறிப்பாகத் திரைப்படங்களில் நன்றாகப் படித்துக் கல்லூரியில் பணிபுரியும் கதாநாயகி டிகிரி கூட தேர்வு பெறாத கதாநாயகன், ஆனால் அவன் உடல் ரீதியில் வலுவானவன் எதிரிகளிடமிருந்து கதாநாயகியைக் காப்பாற்றுபவன். ஈந்த உடல்வலு என்ற ஒரே அறிவார்த்தத்தைப் பின்னுக்குத் தள்ளி அவளை மணக்கச் செய்கிறது. (பாஸ் என்கிற பாஸ்கரன்) குண்டாத்தலைவன், படிப்பறிவற்ற கதாநாயகன் படித்த, பண்புள்ள கதாநாயகி, உடல் வலிமையைக் கண்டு காமுற்று மணத்தல் (ஆறு). இப்படிப்பட்ட பல திரைப்படங்கள் இன்று புற்றீசலாக வந்து பெண்களின் மனதை மூளைச்சலவை செய்கின்றன. குண்டாத் தலைவனை மணம் புரிவதோடு படம் முடிகிறது. இவர்களின் குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க யாரும் முன்வருவதில்லை. எனவே இது ஒரு வகையான ஆணாதிக்கக் கட்டமைப்பு, அதாவது, பெண்ணின் அறிவார்த்த நிலையை ஆணின் உடல் வலிமையால் வெல்லமுடியும் என்ற கட்டமைப்பு.
இதே போல பல வடிவங்களில் இக்கட்டமைப்பு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இன்று பெருகி வரும் வன்புணர்வுகள் இதற்கு ஒரு உதாரணம். வன்புணர்ச்சிக்கு உட்படுத்தபட்ட பெண்களில் அதிகப்படியானவர்களும் அறிவார்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும். என்னதான் அறிவார்ந்தவளாக இருப்பினும் அவள் உடல் அளவில் பலவீனமானவள். அவள் பிச்சைக்காரனான ஒரு ஆணைக் கூட அஞ்சி நடக்க வேண்டியவள் என்பது இவ்வன்புணர்ச்சிகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்ணினத்திற்குத் தரும் பாடம். பெண்களின் உள்ளக்கட்டமைப்பு அச்சம், மடம், நாணம் என்றிருப்பின் உடல் கட்டமைப்பு யதார்த்தத்திற்குப் புறம்பானதாகவே உள்ளது.
கனத்த முலைகள் சிறுத்த இடை, பெருத்த பிட்டம், தடித்த தொடை, மெலிந்த தோள்கள் மென்மையான வாகு என்பதே அழகான பெண்ணின் அங்க அடையாளங்கள் இதற்கான உதாரணங்களைப் பழங்கால இலக்கிய வருணனைகளிலும் சிற்ப ஓவியங்களிலும் காணலாம். இந்த உடல் கட்டமைப்பு இன்றைய ஊடகங்கள் வரைதொடர்கிறது என்பதைக் கவனித்தால் புரிந்து கொள்ள இயலும்.
பெண்ணைக் கேசாதிபாத, பாதாதி கேசவருணனைகள் செய்து இஞ்சு இஞ்சாக நுகரும் மரபை நாம் பழங்காலந்தொட்டே காணலாம். பெண்ணின் பாதங்களுக்கு ஓடிக் களைத்த நாயின் நாக்கை உவமை கூறி மகிழ்ந்த தந்தைவழிச் சமூகம் ஆணின் தோளுக்கும் வலுவான கைகளை மட்டும் வருணனை செய்ததன் பின்னணியைச் சிந்திக்க வேண்டும்.
நுகர்பொருளான பெண் உடலைச் சுமந்து திரிவதற்கு மட்டுமே அவளுக்கு உரிமை உள்ளது. அந்த உடல் அவளுக்குச் சொந்தமானதல்ல. எதிர்காலத்தில் அவளை மணக்கும் ஆடவனுக்குச் சொந்தமானது. அந்த ஆடவனுக்காக அவள் தனது விலைமதிப்பற்ற நுகர்பொருளான உடலைத் தூய்மையாக, புனிதமாகப் பாதுகக்க வேண்டும். அதில் தவறினால் அவள் சமூக மதிப்பீடுகளில் இருந்து நீக்கப்படுவாள். பொதுமகளிர் என்று முத்திரை குத்தப்பட்டு ஆண்களின் காம இச்சை போக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவாள். எனவே ‘உடல் புனிதம்’ என்பது பெண் உடலுக்கு வகுக்கப்பட்ட முக்கியமான கட்டமைப்பாகிறது.
தந்தை வழிச் சமூகத்தின் இந்தப் பெண் உடல் கட்டமைப்பை உணர்ந்து கொண்ட பெண்ணிய எழுத்தாளர்கள், முதலில் பெண் உடல் புனிதத்தை உடைத்து, பெண் உடல் பெண்ணிற்குச் சொந்தமானது, அதை அனுபவிக்கும் உரிமை பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது என்று நிறுவினர். அதன் அடிப்படையிலேயே பெண்ணின் உடல்மொழிக் கவிதைகள் ஏராளம் வெளிவந்தன. அக்கவிதைகளில் வரும் யோனி, முலை, தீட்டு போன்ற பாலியச் சொற்களை மட்டும் தொகுத்து பெண்ணியக் கவிதை அல்ல பாலியல் கவிதை என்று ஆதிக்க ஆண் எழுத்தாளர்கள் எள்ளி நகையாடி வருகின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பெண் மீதான அவள் உடல் மீதான அவர்களின் அதிகாரம் நழுவிப் போனதன் ஆதங்கமே இது.
அச்சம், மடம், நாணம், உடல் புனிதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெண் அனைத்து இடங்களிலும் ஒடுக்கப்படுகிறாள். இக்கட்டமைப்பால்தான் பெண் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. இச்சார்புத் தன்மை அவளை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடுகிறது. பெண்ணியத்திற்கு ஆதரவாகசிதிக்கும் அனைவரும் இந்த மூலகாரணத்தைப் புரிந்து கொண்டு இதிலிருந்து எவ்வாறு வெளிவரலாம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். அனைத்துப் பெண்ணியச் சிக்கல்களுக்கும் பெண்ணிற்கு எதிரான கொடுமைகளுக்கும் இக்கட்டமைப்புதான் காரணம் என்பதை உணர வேண்டும்.
பெண்ணிய ஆய்வுகளும் சிந்னைகளும் இப்பெண் கட்டமைப்பை உடைக்க வழிவகை செய்வதாக அமைய வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே பெண் விடுதலை, சமத்துவம் என்ற கனவுகள் நனவாகும்.
1. Mary Wollstone Craft - Windication of right of women
2. Simone de Beauvoir - The Second Sex
3. தொல்காப்பியர்- தொல்காப்பியம்
(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)