“The Core of Science is not a mathematical Model; It is intellectual honesty ”
- Sam Harris ( “THE END OF FAITH” Editor )
மனித குலம் தோன்றியது முதல் இப்பொழுது வரை உலகளாவிய மக்களிடையே வாழ்வியல் ஆட்சி முறை, வணிகம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் மதமும் மத நம்பிக்கைகளுமே மேலாண்மை செய்து வந்தன. தன்னுடைய மூதாதையர்களால் திணிக்கப்பட்ட நம்பிக்கைகளில் சந்தேகம் கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தவர்களே அரிய விஞ்ஞான உண்மைகளை கண்டுபிடிக்க முடிந்திருக்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டில் அறிவியல் தனிக் கலாச்சாரமாக உருவெடுக்க காரணம் சென்ற நூற்றாண்டில் மிக மூர்க்கமாக, எதிர்பாராத திசை வழிகளில் பாய்ச்சல் காட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளேயாகும்.
உழைப்பையும், நேரங்களையும் மிச்சப்படுத்தி சொகுசு வாழ்க்கைக்கு அறிமுகப் படுத்திய அறிவியலை மனித சமூகம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றது. ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகளான மரபணு மற்றும் உயிரி தொழில் நுட்பம், உயிர்-வேதியியல் ஆயுதங்கள், வான்வெளி-விண்வெளி பயணங்கள் ஆகியவற்றின் வெற்றிக்குப் பின் ஒட்டு மொத்த மனித சமூகம் அறிவியல் என்னும் கலையை கண்டு உள்ளுக்குள் நடுநடுங்கிப் போய் இருக்கின்றது. காலங்காலமாய் தவிர்க்க இயலாத மதவழி நம்பிக்கைகளுடன் அதிர வைக்கும் அறிவியல் ஆய்வு முடிவுகளையும் எதிர் கொண்டு வருங்கால சமூகம் எப்படி எதிர்வினை ஆற்ற இருக்கின்றது என்பதை பற்றி உளவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .
நாம் விரும்பாமலே, நாம் அனுமதிக்காமலே ஒருவகை குழப்பமான அறிவியல் கலாச்சாரம் நம்மை சூழ்ந்து கொண்டு வருகின்றது. அனைவருக்குமான வாழ்வாதாரங்கள், சுகாதாரம் ஆகியவை இன்னும் பாதி பேருக்கு மேல் சென்றடையாத சூழல். அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் சார்ந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு அகண்ட நம் பாரதத்தின் நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த மக்கள் தொகை காரணமாக மிகவும் குறைவாகவே உள்ளது. மிக நீண்ட தொன்மையும், எழுத்தறிவும், மெய்ஞான அறிவும் கொண்ட நம் தேசம் அறிவியல் துறையில் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டு வரலாறு கூட இல்லாத நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு தேசத்தில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகளும், முதலீடுகளும், கண்டுபிடிப்புகளுமே அந்த தேசத்தை உலக அரங்கில் முன்னிறுத்தும் என்பது தெரிய ஆரம்பித்துள்ளது.
இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆயுர்வேத மருத்துவமும் அதையொட்டிய “சுஸ்ருதா” அறுவை சிகிச்சையும், வானவியலில் நம் முன்னோர்களின் சில உத்தேசமான அனுமானங்களும், வாசைன திரவியங்களும், சிற்பக்கலைகளும், பாய்மரக்கப்பல் தொழிற்நுட்பமும் நாம் உலகிற்கு வழங்கிய கொடைகளாகும். சென்ற நூற்றாண்டில் காட்டு வெள்ளமாய் பெருக்கெடுத்த உலக அளவிலான அறிவியல் ஆய்வுகளில் சிறு வாய்க்கால்களைப் போல கணிதம் - ஸ்ரீனிவாச ராமானுஜன், தாவர நோயியல் பிரிவு - M.S.சுவாமிநாதன் மற்றும் M.S.பிர்பால் சாஹ்னி, இயற்பியல் - சி. வி. இராமன் ஆகியோரைத் தவிர நம் தேசத்தின் பங்களிப்பு ஏதுமில்லை.
ஒரு தேசத்தின் கண்டுபிடிப்புகள், செயல் முறைகள் அவற்றின் உபகரணங்கள் ஆகியவை புழக்கத்தில் வரும் பொழுது அந்நாட்டின் மொழி, கலாச்சாரம் சார்ந்த பெயர்கள்தான் வைக்கப்படும். ஒரு கருவியின் செயல்பாடு அல்லது மருந்துகள் அந்நாட்டின் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை சார்ந்தே அமைவதால் அதன் உபயோகிப்பாளர்களும் அதே வழியில் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் திசையினை மாற்றியமைத்த விமானம் - ரைட் சகோதரர்கள், டையோடு வால்வு - ஜான் பிளெமிங், ஜீன் - யோகான்சன், பென்சிலின் - அலெக்ஸhண்டர் பிளெம்மிங், முதல் செயற்கைகோள் (ஸ்புட்னிக் ) – சோவியத்யூனியன், ஜெனட்டிக்கோட் - நீரென்பெர்க், சந்திரனில் காலிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், குளோனிங் - டாலி செம்மறி ஆடு என்று தொடரும் சாதனைகளில் ஆசிய நாடுகளின் மிக முக்கியமான பெரிய நாடான இந்தியாவின் பங்கு ஏதுமில்லை .
வாழ்ந்து கெட்ட வீட்டுக்காரன் போல பழம் பெருமையையும், பாரம்பர்யத்தையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மட்டுமே உருவான அமெரிக்கா போன்ற நாடுகள் முந்தி சென்று விட்டன. உலகின் மிகப்பெரும் மதங்களான இந்து, இஸ்லாம், கிருஷ்துவ, சமணம் மற்றும் சீக்கிய மதங்கள் தோன்றிய ஆசிய பகுதிகளில் விஞ்ஞான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும், ஆய்வுகளுக்கான முனைப்புகளும் மிகவும் குறைவாக இருப்பது ஆச்சர்யமே. இருபதாம் நூற்றாண்டில் உருவான உலகின் மிக முக்கிய மூன்று அறிவியல் தத்துவங்களான ஐன்ஸ்டினின் சார்பியல் கொள்கை (Theory of Relativity) கோள்களின் இயக்கம் தொடர்பான கெப்ளரின் விதிகள் ( Kepler’s Law ) டார்வினின் பரிணாமக் கொள்கை ( Evolution Theory ) ஆகிய எதுவும் ஆசியப் பகுதிகளில் தோன்றவில்லை.
நமது இந்தியாவைப் பொறுத்த அளவில் அறிவியல் சார்ந்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு (Research & Development) எந்தவிதமான தன் முனைப்புடன் கூடிய ஆதாரமோ, நிதி ஒதுக்கீடோ இல்லை. இந்திய அறிவியல் கூட்டமைப்பின் 94-வது மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த போது தலைமை தாங்கிய பிரதமர் மன்மோகன்சிங் வரும் நிதியாண்டிலிருந்து அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் ஒரு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பட்ஜெட் அறிவிப்பை பார்க்கும்போது அது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ஒதுக்கப் பட்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாகும். அதுவும் கூட ஏனோதானோவென்று இரண்டு வேளாண்மை பல்கலை கழகங்களுக்கு கொஞ்சமும் தட்ப வெப்ப புவி மாறுதல்களுக்காக கொஞ்சமும் ஒதுக்கீடு செய்து அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளை இடது கையால் புறந்தள்ளி விட்டார் நமது நிதியமைச்சர் .
அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்ட வல்லரசு நாடுகளை நாம் ஒப்பிடா விட்டாலும் பக்கத்து ஆசியநாடான சீனா தன் உள்நாட்டு உற்பத்தி (GDP) யில்; ஐந்து சதவீதத்திற்கு மேல் ஒதுக்கீடு செய்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2001-ல் நானோ உற்பத்திப் பொருள்களுக்கான ஆய்வுக்கு ஏற்கனவே வழங்கி வந்த ஒதுக்கீட்டினை சமீப வருடங்களில் நிதி அமைச்சகம் வழங்க மறுத்தது குறித்து அறிவியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .
இந்தியா போன்ற மிகப்பெரிய தேசத்தில் அறிவியல் ஆய்வு விழிப்புணர்வு பள்ளிகளில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். அரசே அறிவியல் கண்டுபிடிப்புகளையும், விழிப்புணர்வுகளையும் வளர்த்து ஒரு இயக்கமாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அகில இந்திய அறிவியல் அகாடமி ( நியுடெல்லி ) இந்திய அறிவியல் அகடாமி ( பெங்களூர் ) உடன் இணைந்து ஆறாவது நிதிக் குழுவுக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது . அதில் தொழில் நிறுவனங்கள் - கல்வி நிறுவனங்கள் இணைந்து புதுப்புது ஆய்வில் ஈடுபட நிதி ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளுக்கிடையே இணைய தொடர்பு, அறிவியல் ஆய்வில் ஆர்வங்கொண்ட இளநிலை, முதுநிலை மாணவர்கள், பேராசிரியர்களுக்கான கோடை காலசிறப்பு வகுப்புகள், முனைவர் (Doctrol), மேல் முனைவர் (Post Doctrol) பட்டங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை இதில் அடங்கும். அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்கும் முறை, ஆய்வு உபகரணங்களுக்கான முதலீடு ஆகியவை பள்ளிகள் முதல் பல்கலைகழங்கள் வரை தகுதி வாய்ந்த நிபுணர்களால் மறு ஆய்வும் மறு சீரமைப்பும் செய்யப்பட வேண்டும்.
பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பொறியாளர்களை உற்பத்தி செய்து அனுப்புவதே பெரும் சாதனை என்று பறை சாற்றிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியாகும். பொறியியல், பங்குவிற்பனை மற்றும் மேலாண்மை படிப்புகளில் உள்ள வருட வருமானம் உச்சத்தில் உள்ளதால் நம் பெற்றோர்களும் மாணவர்களும் அவ்வகை படிப்புகளை நாடுவது இயல்பேயாகும். ஆகையால் அறிவியல் ஆய்வு, முனைவர், மேல் முனைவர் பட்டங்களில் காணக்கிடைக்கும் அறிவுசார் சவால்களை முன்னிறுத்தி இப்படிப்புகளுக்கான அரசாங்க உதவித் தொகைகளை இரட்டிப்பாக்குவது அரசாங்கத்தின் மிக முக்கியக் கடமையாகும். கொள்கை மற்றும் திட்ட வரைவாளர்கள் தவறான முடிவுகளை அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் புகுத்தினால் அடிமைகளின் சந்தை போல கடுமையாக உழைக்கின்ற படித்தவர்களின் சந்தையாக எதிர்காலங்களில் நம் தேசம் மாறிவிடும் அபாயம் உள்ளது.
ஆக்கல், அழித்தல், மீண்டும் நிர்மானித்தல் ஆகிய செயல்களை அறிவு சார் சமூகமும் அச்சமூகத்தின் அரசியல் ஆளுமையுமே செய்து காண்பிக்க முடியும் என்பது நிதர்சனமாகி விட்டது. இச்சூழலில் பாடப் புத்தகத்திலிருந்து கரும்பலகை வழியாக நோட்டு புத்தகங்களுக்கு பிரதியெடுக்கும் உத்தியை அறிவியல் கல்விக்கும் சற்றும் கூச்சமேயில்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உயிர்காக்கும் மருந்துகள், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், மரபணு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்தியா ஆய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய தருணம் இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் சொத்துரிமை ( Intellectual Properties ) யே ஒரு நாட்டின் உண்மையான கருவூலம் மற்றும் வலிமை என்பதை உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களாகிய டாக்டர் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் அறிவார்கள். தேசிய திட்டக்குழுவும் நிதி அமைச்சகமும் சற்று முயன்றால் சுற்றுச்சூழல் மற்றும் பெருத்த நிதி ஆகிய தடைகளையும் தாண்டி நம் தேசம் அறிவியல் ஆய்வுத் துறையில் நிமிர்ந்து நிற்க வாய்ப்புள்ளது. நம் இளைஞர்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள் சாதிக்க ; வழிகாட்டவும், வரவேற்கவும், வாழ்த்தவும்தான் அமைப்புகள் இல்லை.