ஒவ்வொரு தனி மனிதனும் பிறந்து, வாழ்ந்து மறைவதற்குள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றான். எதிர்காலத்தில் தன் குடும்பத்தினருக்கு வீடு, வாசல், நில புலன்கள், தொழில் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்னும் உந்துதல் தவிர்க்க முடியாத கட்டாயமாக மாறி அதுவே சாதனை என்று தன் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றான். நம் தேசத்தின் மீது அளப்பறிய காதலும், இறையாண்மை மீது அக்கறையும் கொண்ட மிகச்சிலர்தான் தன்னை உயர்த்திக் கொள்வதை விட தன் தேசத்தை உயர்த்துவதே வாழ்நாள் கடமை என்று தீர்க்கதரிசனமாக சிந்திக்கின்றார்கள். இவர்கள்தான் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் காப்பாற்றப் படுகின்றார்கள். மதம், மொழி, இனம், பழக்க வழக்கம் என வெவ்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து கிடந்த நமது தேசத்தை சரியாகக் கணிக்க முடிந்த காரணத்தால்தான் ஆங்கிலேயர்கள் நம்மைக் கொண்டே நம்மை பிரித்து நம்மை ஆளத் தொடங்கினார்கள்.
இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் நாடு தழுவிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஆங்கிலேயர்களை எதிர்த்து சில குறுநில மன்னர்கள் கிளர்ச்சியை உருவாக்கினர். அவர்களில் ஒருவர்தான் கேரளாவின் மலபார் பகுதியை மையமாகக் கொண்டு கிளம்பிய கேரளவர்மா என்று அழைக்கப்படும் பழசிராஜா அவர்கள். நமது நாட்டை ஹைதர் அலி ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது மலபார் பகுதியின் தலைச்சேரி என்னும் ஊரை தலைநகராகக் கொண்ட நாயர் சமூகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்தான் பழசிராஜா கேரளவர்மர. தங்களுக்குள் சிறு சிறு சண்டையிட்டுக் கொண்டும் யார் பெரியவர் என்னும் ஈகோ யுத்தத்துக்குள்ளும் மூழ்கிக் கிடந்த வசதி மிக்க நாயர் குடும்பத்தினர் மெல்ல மெல்ல ஹைதர் அலியின் வரிக் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் கோட்டயம் பகுதிக்குக் குடியேறினர். அச்சூழலில் மலபார் பகுதியில் மக்களை காக்கும் அரணாக பழசிராஜா கேரளவர்மா விளங்கினார்.
தன் வசதி மிக்க சூழலையும், தன் உடல் நலத்தையும் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு சிலர்தான் இந்த தேசத்தைக் காக்கும் அறப்போரில் முன் நிற்கின்றார்கள். இவர்களின் செயல்பாடுகளை, சாதனைகளை ஆவணப்படுத்த நாம் தவறி விடுகின்றோம். கேரளவர்மாவைப் பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்கள் கேரளாவிலேயே இல்லை என்பதுதான் மிக சோகமான விஷயமாகும். நாட்டுப்புற பாடல்கள், தெரு நாடகங்கள், வாய்வழிச் செய்திகள் ஆகியவற்றை கொண்டு கேரளவர்மாவின் சந்ததியினர் ஆவணங்களை உருவாக்கி கொண்டுள்ளனர். கேரள வர்மாவின் உருவ அமைப்பு கூட "ஜானத்தான் டங்கன்" என்னும் ஆங்கிலேயரின் டைரிக்குறிப்பில் தான் காணக் கிடைக்கின்றது. "தன் மக்களால் கடவுளுக்கிணையாக மதிக்கப்பட்ட கேரளவர்மாவை சமாதான உடன்படிக்கைக்காக நான் சந்தித்த பொழுது நிரந்தரமாக முகத்தில் வீற்றிருக்கும் புன்சிரிப்பும், சிறிய உடம்பும், ஒளி பொருந்திய கண்களும், நீண்ட தலைமுடியும், உயர்த்திக் கட்டிய கொண்டையும், தாடியும் என்று கம்பீரமாக காட்சியளித்தார்" என்று எழுதியுள்ளார்.
மலபார் பகுதியில் திப்புசுல்தானுக்கும், கேரள வர்மாவுக்கும் நிலவிய பனிப்போரை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பிரிட்டிஷார் மிகவும் தந்திரமாக ஒரு பிரதிநிதியை அப்பகுதிக்கு அனுப்பினர். திப்பு சுல்தானை எதிர்ப்பதற்கு ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்த கேரள வர்மா இறுதியில் அவர்களுடனேயே மோத ஆரம்பிக்கின்றார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் மன்னர்கள், திப்புசுல்தான், ஹைதர் அலி, ஆங்கிலேயர்கள் என தொடர்ச்சியாக மாறி மாறி போரிட்ட கேரள வர்மா மலபார் பகுதியில் இருந்து இறுதியாக ஆங்கிலேயர்களால் விரட்டியடிக்கப்பட்டார். அவர் கடைசியாக நிர்வாகம் செய்த கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் மீது சாலையையும் அமைத்து அடையாளங்களை அப்புறப்படுத்தினர். சாலையை ஒட்டி உள்ள சிறுகுளம் மட்டுமே வரலாற்றைச் சுமந்து கொண்டு நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
மலபாரிலிருந்து கோட்டயத்திற்கு விரட்டப்பட்ட கேரளவர்மா ஆங்கிலேயர்களுடன் போரிட்ட முறையும் நிகழ்வுகளும் ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலுக்கு நிகரானவையாகும். 1793-ல் வயநாட்டின் மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு கோட்டயம் பகுதிக்கு வந்து பிரிட்டிஷாரோடு மோதி தாக்குதல் நடத்த ஆரம்பித்தார் வர்மா. கொரில்லா போர்முறையைக் கையாண்ட முதல் தேசபக்தர் கேரளவர்மா ஆவார். அவரின் போர் தந்திரங்களையும், யுக்திகளையும் கண்டு மிரண்டு போன ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களையும், காயங்களையும், உயிரிழப்புகளையும் கணக்கில் கொண்டு காலனெல் ஆர்தர் வெல்லஸ்லி என்பவரைக் கோட்டயம் பகுதிக்கு வரவழைத்தனர்.
உலகில் இதுவரை வெளியான திரைப்படக் கதைகளை ஆய்வு செய்தால் அவற்றை ஒரு குறிப்பிட்ட ஐந்து பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்று கூறப்படுவதைப் போல உலகெங்கும் உலவிய, நடைமுறைப் படுத்தப்பட்ட கிளர்ச்சிக்காரர்களின் யுக்திகள் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியமில்லை. மைசூர் மலைப்பகுதிகள், மலைவாசியினர், அரசாங்கம், சந்தனமர வீரப்பன், உளவாளி , கடைசியில் வீரப்பனின் மரணம் என்று நாம் சமீபத்தில் பரபரப்பாக எதிர் கொண்ட நிகழ்வுகளில் பெரும்பாலானவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதே பகுதிகளில் பிரிட்டிஷாரை எதிர்த்துக் கேரள வர்மாவால் அரங்கேற்றப்பட்டன என்று கேள்விப்படும்போது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "மரபியல் தகவல் பரிமாற்றம்" என்னும் உயிரியல் கண்டுபிடிப்பு உண்மையாகின்றது.
மலையகப் பகுதியில் இருந்து கேரளவர்மாவின் தொடர் தாக்குதல்களை சமாளிக்க முடியாத பிரிட்டிஷார் "பழைய விட்டில் சண்டு" என்னும் உளவாளியைக் காட்டுக்குள் அனுப்பி கேரள வர்மாவுடன் நெருங்கி பழக விடுகின்றனர். அந்த உளவாளியின் மூலமாக மைசூர் மலைப்பகுதியில் அவர் ஒளிந்திருந்த பகுதியைக் கண்டு பிடித்து சப்-கலெக்டர் "தாமஸ் ஹார்வி பபேர்" தலைமையில் முற்றுகையிடுகின்றனர். 1805-ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று மாவிலத்தோடு ஆற்றங்கரையில் அதிகாலையில் அமைதியாக தன் அம்மாவின் நினைவு நாளுக்கான சடங்குகளை கண்மூடி அமர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்த கேரளவர்மாவையும் அவரின் படையினரையும் சுற்றி வளைத்து சுட்டுத் தள்ளுகின்றனர் பிரிட்டிஷார். தன் அம்மாவையும் தங்களது குல தெய்வமாகிய ஸ்ரீபொற்கழியையும் நம் தேசத்தையும் பிரார்த்தித்துக் கொண்டே உயிர் விடுகின்றார் மலபாரின் மன்னன் பழசிராஜா கேரள வர்மா.
குறு நில மன்னனாக இருந்து வசதியை அனுபவித்துக் கொண்டு சாக விரும்பாமல் பிரிட்டாஷாரை எதிர்த்துக் கானகங்களில் ஒளிந்து கஷ்டப்பட்டு இந்த தேசத்திற்காக உயர்விட்ட பழசிராஜா கேரள வர்மாவை நினைக்கும் போது
என்னும் புதுக்கவிதை வரிகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.