பாம்பாட்டிகளும், சாமியர்களும், தொற்று நோய் யானைகளும் நிறைந்திருக்கும் நாடு இந்தியா என்று ஒரு காலத்தில் மேற்கத்தியர்களால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஐந்து நட்சத்திர விடுதி வசதிகளோடும், உலகின் உச்சபட்ச மருத்துவ வசதிகளோடும், மருத்துவமனைகள் இப்பொழுது கட்டப்பட்டு வருகின்றன. இங்கே தங்கி மருத்துவ அறுவை சிகிச்சை செய்து குணமான பின் ஒரு வாரத்திற்கு மத்திய அரசு வழங்சி சிறப்பு சலுகை கட்டணத்தின் கீழ் தேசம் முழுக்க சுற்றி வரலாம். நோயாளிகளைக் கவனிக்க உடன் வரும் உறவினர்களுக்கும் இதே போன்ற சலுகைகளும், வசதிகளும் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இச்சேவைகளுக்கான கட்டமைப்பை உயர்த்த மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இவ்வசதிகள் இந்திய குடிமக்களின் பயன்பாட்டுக்கு அல்ல. இது வெளிநாட்டு மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். காரணம் என்னவென்று கேட்டு முடிப்பதற்குள் அந்நியச் செலவாணி ஈட்டல் என்ற பதில் வரும். அது சரி. "ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குடிசைகளும நட்சத்திர விடுதிகளும் சம அளவில் பெருகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருக்குமா?" என்பதும் "சமச்சீரற்ற கல்வி முறைகள் போல சமச் சீரற்ற மருத்துவ வசதிகளும் பெருகி வழிவது ஒரு தேசத்தின் குடிமக்களுக்கிடையே உளவியல் ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தி விடாதா?" என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள்.
கடந்த நிதியாண்டில் ஒட்டு மொத்த தனியார் மருத்துவமனைகளின் லாபம் 62,000 கோடி ரூபாய் என்ற தகவல் வெளி வந்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இந்த லாப விகிதம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆகையால் அடுத்த ஆண்டு வாக்கில் போர்டில் ஹைல்த்கேர் 1970 கோடி ரூபாய்க்கும் அப்போல்லோ 800 கோடி ரூபாய்க்கும் மருத்துவமனைகளில் முதலீடு செய் உத்தேசித்துள்ளது. இங்கு மிக முற்றிலும் மாறுபட்ட, இதுவரை கேள்விப்பட்டிராத , அதிநவீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து முக திருத்தம் ( Cosmetic ) இதய நோய் அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய இந்தியாவிற்கு வந்துள்ளனர். மருத்துவ காப்பீடு பெற முடியாதவர்கள், நீண்ட காத்திருத்தல்களுக்கான நோய் எதிர்ப்பு திறன் இல்லாதவர்கள் குறைந்த செலவுடன் உடனடி மருத்துவத்தை விரும்புபவர்கள் மற்றும் இவற்றோடு வெளிநாட்டு சுற்றுலாவை திட்டமிடுபவர்கள் ஆகியோர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சுற்றுலா மருத்துவ துறையில் நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஒரு வருடத்திய மருந்துப் பொருட்களின் விற்பனை சுமார் இருபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. நமது நாட்டு ஏழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எழுபது சதவீதம் பேர் வருடத்திற்கு சுமார் ஐந்நூறு ரூபாய்க்கும் கீழ்தான் மருந்துப் பொருட்களுக்காக செலவிடுகின்றார்கள். மீதியுள்ளவை நடுத்தர, உயர் நடுத்தர பணக்கார குடும்பங்களால் வாங்கப்படுகின்றன. நம் நாட்டில் மருத்துவ சேவை துறை சமச்சீரற்ற முறையில் இயங்குகின்றது என்பதை மேற்கூறிய புள்ளி விவரம் மூலம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இச்சூழலில் நமது அரசு மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய மருத்துவமனைகளை கட்ட தனியாரை ஊக்குவிக்கின்றது. இதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை ஆராய்வது நம் கடமையாகும். தேவைக்கதிகமான, நுணுக்கமான மருத்துவ பழக்கங்களை ( Treatment Habits ) இந்தியர்களுக்கு புகுத்துதல், சாதாரண தட்ப வெப்ப மாறுதல்கள் மற்றும் உணவு பழக்க மாறுதல்களாக ஏற்படும் எளிய தற்காலிக நோய்களை கூட பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்படுத்துதல் போன்றவை நம் இந்தியர்களுக்கு தேவையில்லாததும், பெரும் செலவை உண்டாக்கக் கூடியதுமாகும். பன்னாட்டு மருத்துவமனைகளின் பெருக்கம் இவை போன்ற உளவியல் பதட்டங்களை நடுத்தர வர்க்கத்தினரிடையே உருவாக்கி விடுமோ? என்ற அச்சம் உருவாகியுள்ளது.
நமது நாட்டின் அறுபது சதவீதம் பேருக்கு சாதாரண அடிப்படையான மருத்துவ வசதிகள் கூட உடனடியாக பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகின்றது. தமிழ்நாடு, கேரளா போன்ற ஓரளவு முன்னேறிய மாநிலங்களைத் தவிர மீதியுள்ள பகுதிகளில் பெண் குழந்தை இறப்பு, மகப்பேற்றின் பொழுது தாய் இறந்து விடுதல் ஆகியனவற்றை எவ்வளவு போராடியும் முப்பது சதவீதத்தில் இருந்து இன்னும் குறைக்க முடியவில்லை. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவற்றின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதியவர்களுக்கு நோய் அறியும் திறன், சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளோம். தரம் குறைந்த, போலியான மருந்துகள் கட்டுப்பாடுகள் இன்றி சுலபமாக சந்தையில் கிடைக்கின்றன. மெத்தப் படித்தவர்களே உண்மையான மருந்துகளுக்கும் போலிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள். மருத்துவ ஆய்வகங்கள், பரிசோதனைக் கருவிகள், அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிறைந்த பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில்தான் இயங்கிக் கொண்டுள்ளன.
நிறுவன மயமாக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்தும் பெரும்பாலும் மருத்துவக் காப்பீட்டு நோயாளிகளை நம்பியே நடத்தப்படுகின்றது. நம் நாட்டில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் பேர்தான் மருத்துவ காப்பீடு வசதியை பெற முடிந்திருக்கின்றது. சாதாரண பருவ கால நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்கு கூட காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு பணம் செலுத்துகின்றன. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் மருத்துவமனைகள் காப்பீட்டு நோயாளிகளின் உடம்பை ஏ.டி.எம். இயந்திரங்களைப் போல பார்க்க ஆரம்பித்து விட்டன. ஒரு குறிப்பிட்ட நோய் அறிகுறிகளுடன் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகள் ஏற்றத் தாழ்வுடன், வெளிப்படையாக, கூச்சமின்றி மருத்துவ வசதி பெறுகின்றனர். மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும், பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களும் நோய் குறித்த போலியான , மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன .
மருத்துவத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு, நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவமனைகள் அதிகரிப்பு, தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகரிப்பு ஆகியவற்றில் திறமையான மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியமர்த்தப் படுவதால் அரசு மருத்துவமனைகளை வெறுக்கும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது. சமச்சீரற்ற மருத்துவ வசதிகள் பொது மக்களிடையே இனம் புரியாத ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் உருவாக்கும். தங்களுக்கு இதுவரை கிடைத்து வந்த மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும்.
சமச்சீரற்ற மருத்துவ முறைகளைக் களைந்து உணவு, உடை, இருப்பிடம் போல மருத்துவ வசதியையும் அடிப்படை உரிமையாக நமது தேசத்தின் குடிமகன் பெற்றாக வேண்டும். நோயின் அறிகுறிகள், நோய் தடுப்பு முறைகள், மருந்துப் பொருட்களின் சேர்மானங்கள், அறுவை சிகிச்சை அவற்றுக்கான கட்டணம், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலை ஆகியவை பற்றி நம் தேசத்தின் குடிமக்கள் விழிப்புணர்வு பெற, நேரடியாக நுகரும் உரிமை பெற வழி வகை காண வேண்டும். இவை குறித்து கண்காணிக்க பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு நிகராக உயர்த்துதல், தாலுகா அளவில் அறுவை சிகிச்சை வசதிகளுடன் ( இதயம், சிறுநீரகம், புற்றுநோய் வரை ) மருத்துவமனைகளை உருவாக்குதல், முழு நேர பட்டதாரி மருத்துவர்களுடன் ஊராட்சி அளவில் சிறு மருத்துவமனைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் சூழல் உள்ளது. பெரும் மருத்துவமனைகள் குறிப்பிட்ட அளவிற்கு இலவச அறுவை சிகிச்சைகளை ஏழைகளுக்கு வழங்குவதை கட்டாயமாக்குதல், அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சலுகை கட்டணத்தில் குறைத்தல் மற்றும் கட்டாயமாக்குதல் ஆகியவற்றில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்துதல் வேண்டும். பொருளாதார தாராளமயமாக்குதல் மற்றும் உலகமயமாக்கலின் நெருக்கடியில் மாட்டிக் கொண்ட நம் தேசம் விளைவுகளைப் பற்றி கவலை ஏதுமின்றி மருத்துவ சோசலிஸத்தையாவது உடனடியாக அமுல் படுத்திட வேண்டும்.
மருந்தும், மனமும் சேர்ந்தால்தான் நோய் தீரும் என்று எல்லா மருத்துவ முறைகளும் (நம் பாரம்பர்ய மருத்துவம் உள்பட) நம்புகின்றன. நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க மனிதர்களின் மனம் ஒப்பீடு செய்துதான் எதையும் ஒத்துக் கொள்ளும். உணவு விடுதிகளைப் போல, கல்விச் சாலைகளைப் போல மருத்துவமனைகளும் சமச்சீரற்று, ஏற்றத்தாழ்வுடன் உருவாக ஆரம்பித்தால் நோய் குணமடையும் திறன் குறைய ஆரம்பிக்கும். ஆகையால் அரசு கவனமாகவும், உடனடியாகவும் மருத்துவ துறைகளில் அக்கறை செலுத்திட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மீது நம்பிக்கை குறைத்திட அரசே காரணமாய் இருந்து விடக் கூடாது.