தொல்காப்பியம் எண்கள் புணரும் நிலையை மூன்று நிலைகளில் நோக்கியுள்ளது.
1. மிக்க எண்ணுடன் குறைந்த எண் புணர்தல்
2. குறைந்த எண்ணுடன் மிக்க எண் புணர்தல்
3. சமஅளவிலான எண்கள் புணர்தல் (தம்முன் தாம் புணர்தல்)
இவற்றுள் மிக்க எண்ணுடன் குறைந்த எண்கள் புணர்வதையும் அந்நிலையில் அப்புணர்ச்சியானது உம்மைத்தொகையாக அவ்விரு எண்களின் மதிப்பு கூடுதல் முறையில் அமைவதும் அறியப்படுகிறது. குறைந்த எண்ணுடன் மிக்க எண் புணருமிடத்து அது பண்புத் தொகையாகவும் அந்த எண்ணின் மதிப்பு பெருக்கல் மதிப்பாக அமைவதும் அறியப்படுகிறது.
ஒரே எண்கள் தம்முன் தாம் புணர்வதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.
தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம்
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்
அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய
புணரியல் நிலையிடை உணரத் தோன்றா”
(தொல்.எழுத்.482: 8-11)
என்று சுட்டுகிறது. இதனை விளக்கும் இளம், “ஓரொன்று என இது, தம்முற்றாம் வந்த எண். இது நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அன்மையிற் புணர்க்கப்படாதாயிற்று. இது தானே ஓரொன்றாகக் கொடு என்புழிப் புணர்க்கப்படும்” என்றுரைக்கிறார் நச்சர், “இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன்றென்பதும் அது. அதுதானே ஓரொன்றோரொன்றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும்” என்றுரைக்கிறார். இவற்றால் ஓரொன்றாகக் கொடு எனும் சான்றின் வழி ஓரொன்று என்பது ஒன்று + ஒன்று என நிலைமொழியாகவும் வருமொழியாகவும் அமைந்த சொல்லாகப் பிரிந்து நின்று ஓரொன்று எனப் புணர்ந்தவை அல்ல என்பதும் இவை ஒருசொல் நீர்மைத்தாய் ஓரொன்று என நின்கிறது என்பதும் விளங்கும். எனினும் ஓரொன்று என்பதனுள் ஒன்று என்னும் எண்ணுப்பெயர் தம்முன்தாம் வந்தனவாக அமைந்த போதும் அச்சொல் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் அமைந்து புணர்ந்த புணர்ச்சியல்ல என்பதைச் சுட்டுகின்றனர் உரையாசிரியர். இவ்வாறே பத்து எனும் எண்ணுப்பெயர் தம்முன் தாம் வந்து ஒருசொல் நீர்மைத்தாய் நிற்பதையே நச்சர், “பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து
புணர்க்கப்படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க“ என்றுரைக்கிறார்.
மேற்சுட்டிய சான்றுகளின் அடிப்படையில் எண்ணுப்பெயர்கள் தம்முன்தாம் வந்த போதும் அவை நிலைமொழி வருமொழி எனப் பிரிந்து நில்லாது ஒருசொல் நீர்மைத்தாக நிற்கும் என்பதை அறிகிறோம்.
இவ்வாறு ஒரு சொல் நீர்மைத்தாக அமைவதற்கான காரணம் இவ்விரு சொற்களிலும் நிலை மொழியின் திரிபு வரையறையின்றி அமைவதால் அதனை புணர்மொழியாகக் கொள்ள இயலாது என்பதை ச.பாலசுந்தரம் விளக்குகிறார். இதனை, “ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நன்னான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒன்னொன்பது, பப்பத்து என அளவைப்பொருட்டாய் வழக்கின்கண் தம்முன் தாம்வரும் எண்ணுப்பெயர்களின் நிலைமொழி வரையறையின்றித் திரிந்து நிற்றலின் அவையும் பிரித்துப் புணர்க்கப்படா என்றார்” எனும் உரைப்பகுதியால் அறியலாம்.
தம்முன் தாம் வந்து புணர்க்கப்படும் எண்ணுப்பெயர்களின் மதிப்பு என்ன என்பது வினாவாக எழுகின்றது. ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தம்முன் தாம் வருவதை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டினர். இவை அளவைப்பொருட்டாய் வழக்கின்கண் தம்முன் தாம் வருவன என்பதை ச.பாலசுந்தரம் குறிப்பிடுகிறார். இதனால், இந்த எண்களின் அளவை மதிப்பு என்பது வழக்கில் உள்ளது என்பது விளங்குகிறது.
ஒவ்வொன்று என்றவழி ஒன்றும் ஒன்றும் என்று உம்மையாக அமைவதில்லை. அவ்வாறு அமைந்தால் அதன் மதிப்பு வேறுபட்டுவிடும். இவ்விரண்டு என்பதும் அவ்வாறே உம்மைத் தொகையாக அமைவதில்லை. முன்மூன்று என்றவழி உம்மைத்தொகையாக அமைவதில்லை என்பதுடன் அவை பண்புத்தொகையாகவும் அமைவதில்லை.
இந்நிலையில் இந்த எண்ணுப் பெயர்களின் மதிப்பு, அதன் மதிப்பிலிருந்து மாறுபடாத ஒன்றாகவே அமைகின்றன என்பதும், பத்து என்பதும் பப்பத்து என்பதும் அளவில் மாறுபடுவதில்லை என்பதும் அளவை முறையில் பத்துப் பத்தாக அளவிடுதல் என்ற முறையில் இந்த எண்ணுப்பெயர்கள் இவ்வாறு சுட்டப்படுகின்றன என்பதும். இந்த எண் மதிப்பில் இரண்டு எண்களின் எண் மதிப்பு அடங்கவில்லை என்பதும் ஒரே எண் அடுக்கிய போதும் அவை ஒரு சொல் நீர்மைத்தாகவும் அந்த எண்ணிற்கான மதிப்பளவாகவே நிற்பதும் நன்கு விளங்குகிறது.
தம்முன் தாம் நிற்கும் எண்கள் உறழச்சிப்பொருளாக அமைவதை ச.பாலசுந்தரம் குறிக்கிறார். “ஓரொன்று ஈரிரண்டு, மும்மூன்று, நானான்கு, ஐயைந்து, எனவரின் புணர்க்கப்படும். இவை உறழ்ச்சிப்பொருள்பற்றி நிற்கும்” (ப.318) என்றுரைக்கிறார். இவற்றால் ஒன்று x ஒன்று, இரண்டு x இரண்டு, மூன்று x மூன்று, நான்கு x நான்கு, ஐந்து x ஐந்து என நின்று இவற்றின் மதிப்பு பெருக்கல் முறையில் அமைகின்ற பொழுது, அச்சொற்கள் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் புணர்க்கப்படும் என்பதும் அந்நிலையில் அச்சொற்களின் மதிப்பு பெருக்கல் மதிப்பாக உறழ்ச்சிப் பொருளில் அமையும் என்பதையும் அறியமுடிகிறது.
இரண்டு எண்கள் இணைந்த எண்ணுப்பெயர்களும் அதன் மதிப்பும் மிக நுட்பமாக ஆளப்பட்டுள்ளன. மிகுந்த எண்ணுடன் அதன் மதிப்பில் குறைந்த எண் தொடர்ந்த மதிப்புக் கூட்டலாக அமைகிறது. இந்நிலையில் அதன் எண்ணுப்பெயர் உம்மைத் தொகையாக அமைகிறது. குறைந்த மதிப்புடைய எண்ணுடன் மிகுந்த மதிப்புடைய எண் தொடர்கின்ற பொழுது அதன் மதிப்பு பெருக்கல் மதிப்பாக அமைகிறது. இந்நிலையில் அதன் எண்ணுப் பெயர் பண்புத்தொகையாக அமைகிறது. சம அளவிலான எண்கள் தொடர்ந்து அமைவதைத் தொல்காப்பியம் தம்முன் தாம் வருதல் என்றுரைக்கிறது. இந்நிலையில் அதன் மதிப்பு மேற்சுட்டிய இரண்டில் இருந்தும் மாறுபட்டு அமைகின்றன. அவ்விரு சொற்களின் சேர்க்கையும் நிலைமொழி வருமொழி எனக் கொள்வதற்கு இயலாதன என்பதையும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தம்முன் தாம் வரும் எண்கள் பெருக்கல் முறையில் அமைவதும் உண்டு என்பதை ச.பாலசுந்தரம்
விளக்குகிறார்.