கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு, கன்னத்தில் குழியழகு, கார்கூந்தல் பெண்ணழகு என்று வகைப்படுத்தும் கவிஞர் வைரமுத்துவின் அழகழகான கவி வரிசைகள், ரசனைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆனால் அதன் தொடர்ச்சியாய் வரும் “மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு” என்னும் கவிதைவரி அழகை காட்சிப்படுத்துகின்றது. மழை பெய்வதற்கு முன்னால் மற்றும் மழை ஓய்ந்து முடிந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கவிஞனின் கவிதை மனம் ரசனையென்னும் மேகவெளியில் மெல்ல சிறகடித்துப் பறக்கின்றது. ஆங்காரமாய், ஓங்காரமாய் ஊழிப்பேயின் விசையோடு மழை சுழன்றடிக்கும் பொழுதுகளை காப்பியங்களும், கவிதைகளும் விவரித்திருக்கின்றன.
சூரிய வெப்பத்தினால் பூமியிலும் கடலிலும் உள்ள நீர் ஆவியாகி மேகங்களாகத் திரண்டு மழையாக பொழிகின்றது என்று எழுத ஆரம்பித்தால் இது பள்ளிக் குழந்தைகளுக்குக் கூடத் தெரியுமே என்று பதட்டப்பட வேண்டாம். ஆனால் சூரிய வெப்பம், கடல், ஆவி , மேகங்கள், மழைத்துளி ஆகியவை பற்றி இன்னும் கொஞ்சமே கொஞ்சம் விரிவாய் தெரிந்து கொண்டால் யாரும் கோபித்து கொள்ளப்போவதில்லை.
பூமியில் உள்ள தண்ணிரில் 97 சதவீதம் கடலாக உள்ளது. மீதியுள்ள 3 சதவீதம் பனியாக, பனிமலையாக, நிலத்தடி நீராக, ஏரிகளாக, குளங்களாக உள்ளது. அதைப்போல சூரியன் வெப்பத்தை நேரடியாக பூமிக்கு அனுப்பவதில்லை. அகச்சிவப்பு கதிர்கள் வழியாக வெப்பம் அனுப்பப்படுகின்றது. எந்தப் பொருளின் மீது பட்டாலும் அப்பொருளை சூடாக்கிவிடும் குணம் படைத்த அக்கதிர்கள் காற்றைச் சூடாக்கி அடர்த்தி குறைத்து மேலே அனுப்பிவிட்டு பின் பூமிக்கு வருவதால் பூமி சூடாகின்றது.
இந்த அகச்சிவப்பு கதிர் தண்ணீரை முட்டி ஆவியாக்கி, மேலே சென்று நீர்த்துளிகளாகி மேகமாகின்றது என கன்னங்கரேல் அல்லது கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும், மழையை உருவாக்கும் மேகத்திற்கு “கியூமுலோ நிம்பஜஸ்” என்று பெயர். இடி மின்னலை உருவாக்கும் மேகத்திற்கு “ஸ்ட்ரேட்டஸ்;” என்றும் “ஸிர்ரெஸ்” என்றும் பெயர். சுருக்கமாகச் சொன்னால் ஆவியாகி துளிகளாகி, மேகமாகி, துளிகள் அதிரித்து, கனத்துப் பெரிதாகி மழையாக விழத்துவங்குகின்றன.
காதலர்களும், புதுக்கவிதை எழுதுபவர்களும், சிறு குழந்தைகளும், சினிமா டைரக்டர்களும், மொட்டை மாடிக்குச் செல்லும் வாய்ப்புள்ள நகரத்துக்காரர்களும், ஊட்டி, கொடைக்கானல் இளம் தேனிலவு தம்பதிகளும் மிக விரும்பும் “தூறல்” உருவாகும்விதம் சற்று வித்தியாசமானது. வானவெளியில் வெப்பக்காற்றும் குளிர்காற்றும் எதிரெதிரே உரசிக்கொள்ளும் சந்திப்பின்போது குளிர்காற்று மண்டலத்தை வெப்பம் உறிஞ்சிக் கொள்கின்றது. இதன்மூலம் ஒருவகை வெப்பமுகப்பு உருவாகின்றது. மேற்கிலிருந்து கிழக்காக வெப்பக்காற்று வீசும் பொழுது சக்தியிழந்த குளிர்காற்று பூமியை நோக்கி வரும் பொழுது நேரே விழுவதற்குப் பதில் சற்று சாய்வான கோணத்தில் விழுகின்றது. இது போன்ற சாய்வான, லேசான மழைத்துளிகளின் பொழிவை ஜலதோஷம் பிடிக்கும் வரை நனைந்து கொண்டே சந்தோஷமாய் “தூறல்” என அழைக்கின்றோம்.
தமிழகத்தில் பெய்யும் மழையில் தென்மேற்கு பருவ மழையின் பங்கு 33 சதவீதமாகவும், வடகிழக்கு பருவ மழையின் பங்கு 49 சதவீதமாகவும் மீதமுள்ள 18 சதவீதம் கோடை மற்றும் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உண்டாகும் மழையாகும். தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மேற்கண்ட எந்தவகை மழையும் பெய்யாத பொழுது கடும் பஞ்சம் ஏற்படுகின்றது. அந்த காலகட்டங்களில்தான் ஊர்விட்டு ஊர் பஞ்சம் பெயர்தலும், பட்டினிச் சாவுகளும் மிகுந்து காணப்படுகின்றன. அக்காலக் கட்டங்களில் நம் தமிழகத்தில்,
என்று புலம்பிக் கொண்டு மழைக்கஞ்சி காய்ச்சுகின்றனர். அரிசி, சோளம், கம்பு ஆகிய தானியங்களை இடித்து மாவாக்கி உப்பில்லாமல் பொது இடத்தில் காய்ச்சிய மழைக்கஞ்சியை உண்டால் வருணதேவன் மனமிறங்கி மழை பொழிய ஏற்பாடு செய்வார் என நாட்டுப்புறங்களில் அழுத்தமான நம்பிக்கை நிலவுகின்றது.
இந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக அதிக வேகத்துடன் பெய்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளியுலக தொடர்பிழந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. “வைகை பெருக்கெடுத்ததால் வைகை நின்று போனது” (ஆறு/ரயில்) என்று நாளிதழ்கள் தலைப்பிடும் அவலநிலை, தென் மாவட்டங்கள் முற்றிலும் தலைநகர் சென்னையோடு அனைத்து தரைவழிப் போக்குவரத்து மார்க்கங்களிலும் துண்டிக்கப்பட்டது நீண்ட வருடங்களுக்குப்பின் இதுவே முதன்முறை. இதுபோன்ற வெள்ள அபாயங்கள் நமக்கு பலப்பல படிப்பினைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேரிடர் மேலாண்மை இயற்கை சீற்றங்களின் போது அரசு அதிகாரிகளும், மக்களும் செயல்படும் முறை, அது சம்பந்தமான பயிற்சிகள், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இனிமேல் வடிவமைப்புகளையும் உத்திகளையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம். பேரிடர் நேரங்களில் அல்லலுறும் மக்களுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூகமான, நல்லிணக்க உடனடி நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் மிகவும் அத்தியாவசியமானதும் அவசியமானதுமாகும்.
மனித சமுதாயம் தழைத்தோங்க இடைவிடாத, ஒழுங்கான தண்ணீர் சுழற்சி தேவைப்படுகின்றது. மனிதர்களின் கண்ணீர்த் துளிகள் காணாமல் போக வேண்டுமெனில் இந்த மண்ணுக்கு மழைத்துளிகள் கட்டாயம் தேவை. அளவுக்கு மீறி நஞ்சாய் அல்ல, அளவுடன் அமிர்தமாய் வேண்டும் மழைத்துளிகள்.