தமிழ்த் தொலைக்காட்சியும், தொடர்களும் பருந்துப் பார்வை
இரா.விஜயராணி
தொலைக்காட்சி கண்டுபிடிப்பு
இன்று உலகத்தின் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது தொலைக்காட்சிகளே. இன்றைய நாகரீக உலகில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏழை, பணக்காரன், குடிசை, மாடி என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி அனைத்து வீடுகளிலும் தனக்கான இடத்தை ஏற்படுத்திய பெருமை இந்தத் தொலைக்காட்சியையே சாரும்.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பல வடிவங்களில், வண்ணங்களிலும் இருக்கும் தொலைக்காட்சி முதன்முதலில் கருப்பு - வெள்ளையாகவே கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இந்தக் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி மிகப்பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது.
முதன்முதலில் கருப்பு - வெள்ளை தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஹோவன்னேஸ் அடமியான் (Hovannes Adamian) ஆவார். இவர் முதன் முதலில் கருப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். முதன்முதலில் இதனைப் பார்த்த சில மக்கள் இதில் எப்படி மனிதர்களைப் பிடித்து இப்படி அடைத்தனர் என்ற அதிர்ச்சியுடனே பார்த்தனர். பிறகுதான் இது ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்று தெரிய வந்தது.
கருப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஹோவன்னேஸ் பிறகு வண்ணத் தொலைக்காட்சியைக் கண்டுபித்தார். முதன்முதலில் கண்டுபிடித்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரிதாகவே இருந்தன. இவற்றில் சேனல்களை மாற்ற எண்ணினாலும் அல்லது சத்தத்தைக் கூட்டவோ குறைக்கவோ நினைத்தாலும் எழுந்து சென்றே மாற்றினர்.
அப்பொழுது ‘ரிமோட்’ என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் எழுந்து எழுந்து சென்று மாற்றுவது சிரமத்தை ஏற்படுத்தின. இதற்கு மாற்றுவழி ஒன்றினைத் தர எண்ணிய அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் அட்லேர் (Robert Adler) என்பவர் தொலைக்காட்சியை உட்கார்ந்த இடத்திலிருந்தே இயக்கும் ரிமோட்டைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தொலைக்காட்சி
இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு - வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் “கலாச்சாரக் காவலர்களும்” ஏன்...? ஒரு சில “அறிவு ஜீவிகளும்” கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும், அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 676615 தான். ஆனால், இந்தியாவில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த 25 ஆண்டுகளாகத்தான். இன்னும் சரியாகச் சொல்வதானால், கடந்த இருபது ஆண்டுகளில் அதிக வளர்ச்சியைக் காட்டியது இந்தியத் தொலைக்காட்சித்துறை.
இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் காரணமாக அமைந்தன.
1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக நிறுவப்பட்டன.
2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என்., ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்தியாவில் ஒளிபரப்பைத் துவங்கின.
இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.
1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் பரவலாவதற்குத் தடைகள் இருந்தன. அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட திட்டத்தை ஒட்டி அமைவதுதான்.
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது. 1990-களில் தொடங்கிய செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில தடையாக இருந்தன. எப்படி? செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும், செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக இணைப்புப் பெற்று (Up Link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
இந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை வாடைகையாகப் பெற்றும், விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
இதனால் மிகுந்த அந்நியச் செலவாணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் எப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் டிஷ் ஆன்டனாவில் பெறப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது பெற்றிருந்தது.
இத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன்மூலம், அவற்றிற்கான அந்நியச் செலவாணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் காலதாமதமும் ஏற்பட்டன.
பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 1988-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. புதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்களின் பங்கு 80 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தொலைக்காட்சி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் மையத்தளமாக சென்னைதான் விளங்கியது.
தமிழ்நாட்டில் அரசு தொலைக்காட்சி நாடகங்கள்
அரசு தொலைக்காட்சியில் கால் மணி, அரை மணி, முக்கால் மணி, ஒரு மணி, ஒன்றரை மணி என ஒளிபரப்புக் கால அளவை அமைத்துக் கொண்டு நாடகங்களை ஒளிபரப்பினார்கள். தொழிலாளர் நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி, கிராமத்து நிகழ்ச்சி முதலானவற்றில் இவை இடம் பெற்றன. சமூக நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என்று தூர்தர்ஷன் பலவகையாக ஒளிபரப்பு நிகழ்த்தியுள்ளது.
சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், இலட்சியக் கருத்துகள், ஒழுக்க நெறிகள் முதலான பல செய்திகளை உள்ளடக்கிய நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை முதலான கதைகளையும் அலையோசை, சித்திரப்பாவை முதலான புதினங்களையும் நாடகங்களாக்கி ஒளிபரப்பியிருக்கிறது.
முதல் நாடகம்
சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் ‘நேற்று இன்று நாளை’ என்பது இதன் ஆசிரியர் மௌலி. இதில் யு.ஏ.ஏ. நாடகக் குழுவைச் சேர்நத ஒய்.ஜி. பாரத்தசாரதி, ஒய்.ஜி. மகேந்திரன், ஏ.ஆர். சீனிவாசன் முதலானவர்கள் நடித்தனர். அது தற்கால, எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளைச் சித்திரித்தது. அது அரைமணி நேரம் ஒளிபரப்பானது.
வண்ண நாடகம்
சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் ‘திருமலை நாயக்கர்’ என்னும் வரலாற்று நாடகம். இதன் ஆசிரியர் ஆறு. அழகப்பன். ஹெரான் நாடகக் குழுவினர் இதில் நடித்தனர். இந்நாடகம் 1.30 மணி நேரம் ஒளிபரப்பானது. தேசிய அலைவரிசையிலும் இது ஒளிபரப்பப்பட்டது.
தனியார் தொலைக்காட்சி
1992 முதல் தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகள் தனது சேவைகளைத் தொடங்கின. திரைப்படக் காட்சிகள் அன்றி ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடத்த இயலாத இந்நிறுவனங்கள், பணம் சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் இயங்குவது மட்டுமன்றி, முடிந்தவரை தமிழ்க் கொலை செய்வதில் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு செயல்பட்டன.
தனியார் தொலைக்காட்சியின் வருகையின் காரணமாக சில தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் தோன்றலாயின. தனியார் தொலைக்காட்சியின் மூலம் விளம்பரதாரர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விளம்பரம் செய்து இதன்மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர்.
தனியார் தொலைக்காட்சிகள் மக்களின் முழுநேர பொழுதுபோக்காக மாறின. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை அடுத்து தொடர்களை ஒளிபரப்பினர். முதன்முதலாக கே.பாலசந்தர்தான் இந்த தொடர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஆரம்பித்த இந்த சிறுதொடர்களே இன்று மெகாத் தொடர் உருவாகும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.