கிழக்கு மாநிலம் அதன் நீண்ட கால வரலாற்றில் தாய்த்தெய்வ வழிபாட்டினை முக்கியப்படுத்தியே வந்துள்ளது. கண்ணகி, மாரி, காளி போன்ற தெய்வங்கள் இம்மக்களைப் பொறுத்தவரை பெரும் தெய்வங்களாகவே கொள்ளப்படுகின்றன. வருடந்தோறும் வைகாசித் திங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகித் தெய்வத்திற்கு ஒருசேர எடுக்கும் விழா (சடங்கு) கிழக்கிலங்கைத் தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு தேசிய விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அத்தோடு இம்மாநிலத்தையும் இதனை அண்டியும் வாழுகின்ற வேடுவகுல மக்களிடையேயும் பத்தினித் தெய்வ வழிபாடு என்ற பெயரில் கண்ணகிக்கு விழாவெடுக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கிழக்கிலங்கையில் வழக்கிலுள்ள - தமிழிலெழுந்த கண்ணகி இலக்கியங்களான வழக்குரை காதை, ஊர் சுற்றுக் காவியம், பொற்புறா வந்த காவியம், கண்ணகியம்மன் குளுர்த்திப் பாடல்கள், கண்ணகியம்மன் பிரார்த்தனை, கண்ணகியம்மன் அகவல், உடுகுச் சிந்து, தனித்தனிக் கோவில்களுக்கான கண்ணகியம்மன் காவியங்கள், கண்ணகியம்மன் தோத்திரம், மழைக் காவியம், கொம்புமுறிப் பாடல்கள், கண்ணகி வசந்தன் பாடல்கள் மற்றும் கண்ணகியம்மன் பத்ததிகளான கூனற் பத்ததி, குளக்கட்டுப் பத்ததி, கொம்புப் பத்ததி, கன்னிமார் பத்ததி, சிங்களப்பத்ததி, வேடப்பத்ததி போன்றவையும் இங்கு கண்ணகித் தெய்வத்தின் வரவு மற்றும் அவளுக்கான வழிபாட்டு முறைகளை வெளிப்படுத்துவதாக அமையும்.
வடமாகாணத்தின் பழமையும் புகழும் மிக்க வற்றாப்பளை கண்ணகியம்மன் கோவிலில் பாடப்படும் காவியம்,
அருள்மேவு சிவசமய நாதரும் வாழி!
அன்புசெறி மட்டக் களப்புநகர் வாழி!
தருமேவு கயபாகு ராசனும் வாழி!
எனக் வாழ்த்தும் தன்மைகொண்டு மட்டக்களப்பை தலைநகராகக் கொண்டியங்கிய கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் சிறப்பினையும் அதனைக் கொண்டுவந்த கயபாகு மன்னனின் பெருமையினையும் அறியமுடியும். சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டி விழாவெடுத்ததை இளங்கோ அடிகளும் குறிப்பிடுவார். கஜபாகு முதன்முதலில் முல்லைத்தீவில் பத்தினிக்கு கோவில் அமைத்தான் எனவும் பின்னர் வற்றாப்பழையிலும் தொடர்ந்தாற்போல் கண்டி மற்றும் நவகமுவ போன்ற பல இடங்களிலும் பத்தினிக்கு கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும் சிங்களத்திலெழுந்த பத்தினி இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
இதில் கண்டிப் பிரதேசத்தில் தொடங்கிய கண்ணகி வழிபாடே இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் அறிமுகமாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அத்தோடு தொடர்ந்தாற்போல் சேரநாட்டிலிருந்துவந்து கிழக்கிலங்கையை முற்றுமுழுதாக இன்றுவரை ஆட்கொண்டிருக்கும் தாய்வழி முதிசம் எனும் மருமக்கள் தாய நடைமுறைகளும் போடி முறைமைகளும் கேரளத்தின் மத்திய காலமான கி.பி 8ம் நூற்றாண்டைத் தொடர்ந்ததாகவே அமையும் என்பதால் அன்று சேரநாட்டின் முக்கிய வழிபாடாகக் கருதப்பட்ட கண்ணகி வழிபாடும் இக்காலத்தேயே கிழக்கிலங்கைத் தமிழரின் மிக முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக மாறியிருக்கவேண்டும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகவுமுள்ளது.
கிழக்கிலங்கையின் தென்புறக் கிராமமான அக்கரைப்பற்று - பட்டிநகர் கண்ணகியம்மன் ஆலயமே முதன்முதலில் கிழக்கில் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோவிலாகக் கருதப்படுகின்றது. இவ்வாலயம் தொடக்ககாலத்தே பத்தினியம்மன் ஆலயம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதுடன் சிங்கள பத்ததி முறையில் வழிபாடியற்றப்பட்டமையால் கண்டியின் பத்தினியம்மன் வழிபாட்டின் தொடக்க காலத்தை இவ்வாலய வரலாறு கொண்டிருக்கலாம் எனக்கருதவும் முடிகின்றது. இது குறித்த மேலதிகத் தகவல்களைப்பெற நாடுகாடுப் பற்று பரவணிக் கல்வெட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகின்றது. நாடு காடுப் பற்று என்பது கதிர்காமம் தொடக்கம் வெல்லாவெளி வரையான நிலப்பரப்பைக் குறிப்பதாகும். ராஜபக்ஜ முதலியை முக்கியப்படுத்தும் இக்கல்வெட்டின் காலம் கண்டி மன்னன் கீர்த்திதசிறி ராஜசிங்கனின் (1747 -1782) ஆட்சிக் காலமாகும். கண்டி மன்னனால் இப்பகுதிக்கு முதலியாக நியமிக்கப்பட்ட ராஜபக்ஜயை முன்னிறுத்தியதாக இக்கல்வெட்டு அமையினும் இதில் சொல்லப்படும் பட்டிமேடு மற்றும் காரைதீவு கண்ணகி தொடர்பிலான தகவல்கள் சில முக்கியத்துவம் பெற்றவையாகும். அக்காலகட்டத்தே பட்டிமேடு கண்ணகியாலயம் சிங்களப் பூசகரையும் சிங்கள பத்ததி முறையினையும் கொண்டிருந்தமையும் கோவில் பூசகர் வசம் இவ்வாலயத்திற்குரிய கட்டாடியாவெளி காணி இருந்தமையும் ராஜபக்ஜமுதலி இதனை கோவில் பரிபாலனத்திற்குட்படுத்தியமையும் பின்னர் சில பிரச்சனைகளின் நிமித்தம் அவன் அக்காணியை காரைதீவு கண்ணகி ஆலயத்திற்கு கைமாற்றியதையும் இக்கல்வெட்டு தகவல்படுத்துகின்றது. கீர்த்திசிறி ராஜசிங்கனின் ஆட்சிக்காலம் வரை சிங்கள பத்ததிமுறை நிலவிய இவ்வாலயத்தில் பூசகர் முறையிலேற்பட்ட மாற்றமே பின்னர் தமிழ்ப் பத்ததி முறையினுக்கு வித்திட்டிருக்கின்றது.
பட்டிநகர் கண்ணகி அம்மனின் ஆலயத்தினுடைய நிருவாகச் செயல்பாட்டில் சேரத்துக் குடியான மளவர் குடியினரின் முன்னீடானது வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக அமைகின்றது. மழவர் சேரத்தின் பாரம்பரியமிக்க குடியினராவர். பொற்புறா வந்த காவியத்தில், மழவர் குடி மங்கலப் போடி சிறப்பிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் இன்னுமொரு முக்கிய அம்சம் யாதெனில் பட்டிநகர் கண்ணகியம்மன் காவியத்தில்,
செம்பவள மாதேயுனக் கோலம் ஓலம்!
திருஒற்றி யாளேயுனக் கோலம் ஓலம் !
எனத் தமிழகத்தின் சென்னையை அடுத்த திருஒற்றியூர் கண்ணகி (வட்டபுரியம்மன்) மட்டுமே குறிப்பிடப்படுவதால் அதன் அக்காலத் தொடர்பும் இவ்வாலயத்திற்கு இருந்திருக்க முடியும்.
பாணமை பத்தினியம்மன் ஆலயமும் தமிழ் சிங்கள மக்களது நீண்டகால வழிபாட்டிலிருந்த ஆலயமென்பதுவும் சிங்கள பத்ததி முறையிலமைந்த பூசை முறைகளை அவ்வாலயம் கொண்டிருந்ததென்பதுவும் வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. இன்றும்கூட அங்கு இருசாராரும் ஒன்றுபட்டு செயல்படும் தன்மையும் அவர்களிடையே பண்டுதொட்டு நிலவிவருகின்ற உறவுமுறையும் மனம்கொள்ளத்தக்கதாகும். இதன் வரலாற்றுப் போக்கில் ஒரு நீண்ட காலத்தே சிங்கள மக்கள் கண்ணகி தொடர்பிலான அங்கெலிய மற்றும் போறகெலிய போன்ற விளையாட்டுக்களையும் தமிழ் மக்கள் கொம்புமுறி போன்ற விளையாட்டுக்களையும் கொண்டிருந்தார்கள் என்பதை முக்கிய தகவல்களாக நம்மால் பெறமுடிகின்றது.
தம்பிலுவில் கண்ணகி வழிபாடும் நீண்டகால வரலாற்றுக்குரியதாகவே அறியப்படுகின்றது. பொற்புறா வந்த காவியத்தினை சான்றுபடுத்தி இதன் வரலாற்றுக் காலத்தை கி.பி 2ம் நூற்றாண்டின் இறுதியாக அல்லது 3ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கருதுவாரும் உளர். எனினும் ஆய்வுகளின் அடிப்படையில் இதன் தொடக்க காலம் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாதுள்ளதெனினும் மட்டக்களப்புப் பிரதேசத்தே கண்ணகி வழிபாட்டின் தோற்றுவாய் இதற்கும் பொருந்தவே செய்யும். பண்டைய காலம் முதல்கொண்டு கதிர்காம உற்சவகால யாத்திரையோடு தொடர்புபட்டதாக விளங்கும் இவ்வாலயத்திலும் சேரத்து மழவரசன் குடியினரின் முன்னீடு முக்கியத்துவம் பெறுவதைக்காணலாம்.
காரைதீவு கண்ணகி வழிபாடு தொடர்பில் பெறப்படும் தகவல்கள் அதன் நீண்டகால வரலாற்றை வெளிப்படுத்துவதாகவே அமையும். ஆலய விக்கிரகமானது வாய்மொழித் தகவல்களின் அடிப்படையில் கஜபாகுவின் காலத்துக்குரியதெனக் கூறுவதை உறுதி செய்யமுடியாதெனினும் கண்டியாட்சிக் காலம் முதல்கொண்டு இதன் பெருமை பேசப்படுவதை அறியலாம். இவ்வம்மன் ராஜராஜேஸ்வரியாகவும் அடையாளப்படுத்தப்படுவது சமஸ்கிருதமயமாக்கலை இவ்வாலயம் ஏற்றுக்கொண்ட தன்மையின் வெளிப்பாடாக அமையும். எனினும் வருடாந்த உற்சவமானது கப்புகன்மாரால் நடாத்தப்படுவது இதன் பாரம்பரியத்தை உறுதிப்படுத்தவே செய்யும்.
இதனிடையே மட்டக்களப்பு கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்தே வந்ததாகக் கருதுவாரும் உளர். முன்னர் குறிப்பிட்டவாறு சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கண்ணகிக்கு கோவில்கள் எழுப்பப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பில் கண்ணகி காட்சிகொடுத்த ஏழு இடங்களில் கோவில்கள் அமைத்ததாக வாய்மொழிக் கதையொன்றினை ஆதாரப்படுத்திக் கூறுவர். இதன்போது கண்ணகியின் சிலையொன்று கரையொதுங்கிய பேழையொன்றினுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டு ஆரையம்பதியில் கோவிலமைத்ததாகவும் சொல்லப்படுகின்றது.
ஒத்துக்குடா கந்தப்பர் காலத்தோடு தொடர்புபட்ட ஒரு முக்கிய கண்ணகி ஆலயமாக செட்டிபாளையம் கண்ணகி ஆலயத்தைக் கருதமுடியும். இதில் ஒரு சிறப்பம்சம் யாதெனில் ஏனைய ஆலயங்கள் ஊர்க்கோவில்களாக அமைய இதன் வழிபாடு மற்றும் நிருவாகக் கட்டமைப்பு ஒரு சிறிய பிரதேசம் சார்ந்தமைவதே. களுதாவளை தொடக்கம் குருக்கள்மடம் வரையான இதன் உரிமைத்தன்மை கந்தப்பர் மகளின் - கலிங்க குலப் பிணைப்பின் வாரிசுத் தன்மையை மையப்படுத்தியதாகவும் அமையலாம். ஒத்துக்குடா கந்தப்பர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பெறப்படும் தகவல்கள் வெடியரசனின் சந்ததியோடு தொடர்புபட்ட ஒரு சமூகத் தலைவராகவே அவரை அறிமுகப்படுத்துகின்றது.
கன்னன்குடா மற்றும் வந்தாறுமூலை கண்ணகி தொடர்பிலும் பல்வேறுபட்ட தொன்ம நம்பிக்கைகள் வெளிவருவதைப் பார்க்கலாம். கன்னன்குடா கண்ணகிமேல் பலர் பாடல்கள் புனைந்துள்ளனர். கருணைமிக்க தெய்வமான கண்ணகி எந்தத் தீய நடவடிக்கைகளையும் பொறுக்கமாட்டாள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. ஆலயத்தில் கொள்ளையிடவந்த கள்வர்களைப் பிடிக்க இவ்வம்மன் செயல்பட்ட விதம் குறித்து இம்மக்கள் வியந்து கூறுவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நள்ளிரவு நேரத்தில் இவ்வாலயத்திலும் அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்திலும் இருவர் கொள்ளையிட்ட சமயம் அருகிலிருந்த ஆலய பக்தர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்று அவரை அழைத்து தகவல் கொடுத்ததோடு ஒருவன் பிடிபட தப்பியோடிய மறு கொள்ளையனை பக்கத்திலிருந்த குறிஞ்சாமுனைச் சந்தியில் வைத்து பார்வையிழக்கச்செய்த சம்பவமும் இவ்வம்மனின் அருளாட்சியை வெளிப்படுத்துவதாக அமையும்.
வந்தாறுமூலையில் நேரடியாகவே கண்ணகித் தெய்வம் காட்சி கொடுத்ததாக அதன் வரலாறு கூறப்படுகின்றது. ஊரின் இடப் பெயரும் (கண்ணகி வந்து ஆறிய இடம்) அதனை மையப்படுத்தி அமைவதாகவே சொல்லப்படுகின்றது. மேலும் கிழக்கிலங்கையின் வடபால் திருகோணமலையை அண்மித்த பழந்தமிழ்க் கிராமமான நிலாவெளியில் அமைந்துள்ள பத்தினியம்மன் ஆலயமும் சேனையூர் - சம்புக்களி பத்தினியம்மன் ஆலயமும் கந்தளாய் குளக்கட்டு பத்தினி வழிபாடும் உவர்மலை பத்தினி வழிபாடும் நீண்டகால வரலாற்றினைக் கொண்டதாக கருதப்படுவதால் அவை குறித்த மேலதிக ஆய்வுகள் நன்மை பயக்கும் எனலாம்.
சம்புக்களி பத்தினி தொடர்பில் வாய்மொழி வரலாறாக பெறப்படும் தகவலில் கண்ணகி மதுரையை எரித்த பின்னர் இங்குள்ள மூதாதையர் ஒருவரின் கனவிலே தோன்றி சம்புக்குளத்தின் மேற்குப் பகுதியில் வேப்பமர நிழலில் தனக்கு வழிபாடியற்றுமாறும் தான் வருடம்தோறும் வைகாசிப் பூரணையின் பின்னர் வரும் திங்கள் காட்சி கொடுப்பேனெனவும் கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து பத்தினிக்கு வழிபாடியற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. இதில் முக்கியப்படுத்தப்பட வேண்டியதுயாதெனில் இப்பிரதேசத்து மக்களது வயல் வாழ்க்கையுடன் பத்தினியம்மன் பிணைந்திருப்பதே. இங்குள்ள வயல் நிலங்களை சார்ந்திருக்கும் குளக்கட்டுக்களில் குளக்கட்டுப் பத்தினிக்கு பச்சைப் படையல் வைத்து வழிபாடியற்றுதல் ஒரு சிறப்பம்சமெனலாம். கந்தளாய் குளக்கட்டுப் பத்தினி வழிபாடும் இதனடிப்படையிலேயே குளக்கோட்டன் மன்னனால் தோற்றுவிக்கப்பட்டதென்பது தொன்ம நம்பிக்கையாகும்.
மட்டக்களப்புப் பிரதேசம் என வரலாறு குறிப்பிடும் இன்றைய மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் எங்குமில்லாதவாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்ணகி ஆலயங்களை நம்மால் அவதானிக்கமுடியும். இவற்றின் காலக் கணிப்புகள் கி.பி 2ம் நூற்றாண்டு முதல்கொண்டு அண்மைக் காலம்வரை உள்ளடக்கப்படுகின்றன. பண்டைய ஆலயங்கள் தொடர்பில் கூறப்படும் வரலாற்றுக் காலத்தைச் சரியாக உறுதிப்படுத்தும் தன்மை மிகவும் கடினமானதாவே அமையும். இவற்றின் வாய்மொழி வரலாற்றினை உறுதிப்படுத்த சரியான பக்கச் சான்றுகளைப் பெறுவதில் ஆய்வாளர்கள் தடுமாறவே செய்வர். முழுமையான முடிவினை எட்டும்வரை அவற்றினைப் பண்டைய கண்ணகி ஆலயங்களாக நிலைநிறுத்தலே பொருத்தமானதாக அமையும்.
இதனடிப்படையில் இப்பிரதேசத்தின் கண்ணகி ஆலயங்களை பண்டைய ஆலயங்கள், இடைப்பட்ட ஆலயங்கள், பிற்பட்ட ஆலயங்கள் என வரிசைப்படுத்தி ஒரு வரலாற்றுத் தேடலினை மேற்கொள்ள முடியும். இதன் அண்ணளவான காலக் கணிப்பாக கி.பி 8ம் நூற்றாண்டு வரையான சமஸ்கிருதமயமாக்கலுக்கு முற்பட்ட ஆலயங்கள், சமஸ்கிருத மயமாக்கல் தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்கக் காலம் வரையான (கி.பி 9 - 17 வரை) ஆலயங்கள் அதற்குப் பிற்பட்ட ஆலயங்கள் என வகுத்துக்கொள்ளலாம். எனினும் கிழக்குப் பிரதேசம் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கலை ஏற்றுக் கொள்ளாத பிரதேசம் என்பதால் தற்போதைய நமது ஆய்வுகளில் நடுநிலையான தேடல் என்பது பல்வேறு அணுகுமுறைகளினூடானதாகவே அமையவேண்டியதாகின்றது. எனினும் இதன் வரையறை முழுமையானது என்பதனை நிச்சயப்படுத்துவது சாத்தியமற்றதாகவே அமையும்.
பொதுவாகப் பண்டைய ஆலயங்களாகப் பட்டிமேடு கண்ணகி ஆலயம், தம்பிலுவில் கண்ணகி ஆலயம், பாணமை பத்தினி ஆலயம், காரைதீவு கண்ணகி ஆலயம் என்பவற்றைக் கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தே எழுந்த ஆலயங்களாக வீரமுனை கண்ணகி ஆலயம், சம்மாந்துறை கண்ணகி ஆலயம், கல்முனை (கரவாகு கண்ணகி ஆலயம்), துறைநீலாவணை கண்ணகி ஆலயம், கோட்டைக் கல்லாறு கண்ணகி ஆலயம், களுவாஞ்சிக்குடி கண்ணகி ஆலயம், எருவில் கண்ணகி ஆலயம், மகிழூர் கண்ணகி ஆலயம், செட்டிபாளையம் கண்ணகி ஆலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி ஆலயம், மண்முனை கண்ணகி ஆலயம், ஆரையம்பதி கண்ணகி ஆலயம், முதலைக்குடா கண்ணகி ஆலயம், மகிழடித்தீவு கண்ணகி ஆலயம், கொக்கட்டிச்சோலை கண்ணகி ஆலயம், கன்னன்குடா கண்ணகி ஆலயம், ஈச்சந்தீவு கண்ணகி ஆலயம், புதூர் கண்ணகி ஆலயம், தாண்டவன்வெளி கண்ணகி ஆலயம், வந்தாறுமூலை கண்ணகி ஆலயம், நிந்தவூர் கண்ணகி ஆலயம், சந்திவெளி கண்ணகி ஆலயம் போன்றவற்றைக் கொள்ளமுடியும். இவற்றோடு தொடர்புபட்டும் வேறாகவும் பின்னரெழுந்த ஆலயங்களாக கோவில்போரதீவு, சிற்றாண்டி, முறக்கட்டான்சேனை, சத்தருக்கொண்டான், கிரான்குளம், குருக்கள்மடம், குறிஞ்சமுனை, கொக்கட்டிச்சோலை, அமிர்தகழி, வழைச்சேனை என அனேக கோவில்கள் இடம்பெறவே செய்கின்றன. கோராவெளி, மண்டூர், களுதாவளை, கொத்துக்குளம் போன்ற கிராமங்களிலும் கண்ணகி வழிபாடு வேரூன்றியிருந்த தன்மையும் ஆய்வுகளில் வெளிப்படவேசெய்கின்றன.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கண்ணகியின் காற்சிலம்பினைக் காரணமாககொண்டு எழுந்த நிலையில் மட்டக்களப்பில் படிக்கப்படும் வழக்குரை காவியம் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்ட அவளது வழக்குரையினைக் காரணப்படுத்தியதாக அமையும். இது வரம்பெறுகாதை முதல்கொண்டு குளிர்ச்சிக் காதை ஈறாகப் பதினொரு காதைகளை உள்ளடக்கியதாகும். இதன் கதைப்போக்கில் இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகளாக பருவ வயதினை எட்டிய கண்ணகிக்கு கோவலன் மணமகனாகக் குறிக்கப்பட்டதும் அவளுக்கு வேண்டிய விலையுயர்ந்த நகைகளெல்லாம் செய்யப்பட்டபின் காற்சிலம்புக்கான மதிப்புயர்ந்த உள்ளிடு மணியான நாகமணி சோழநாட்டின் தென்பாலுள்ள வெடியரசனின் ஆளுகையிலிருந்த தீவில் (ஈழம்) பெறக்கூடியதென்பதால் ஈழத்திலிருந்து வருவிக்கப்பட்ட மரங்களால் கட்டப்பட்ட கப்பல்களில் மீகாமன் தலைமையில் வீரர்களை கண்ணகியின் தந்தையான மாநாகன் அனுப்பியதாகவும் நாகமணி தரமறுத்த வெடியரசனுடன் போர்செய்து மீகாமன் அவனைச் சிறைப்பிடித்ததாகவும் இதனைக் கேள்வியுற்ற அவனின் தம்பி விளங்கு தேவன் உடனே விரைந்துசென்று மீகாமனையும் ஏனையோரையும் தோற்கடித்து தனது அண்ணனை மீட்டதாகவும் அதன்பின் மீகாமன் இரந்துவேண்டியதற்கிணங்க நாகமணி வழங்கப்பட்டதாகவும் சில தகவல்கள் உள்ளடக்கப்பட்டமை கண்ணகி கதை ஈழத்தில் இறுக்கமாக வேரூன்றியதன் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பாகக் கொள்ளப்படத்தக்கதே.
வழக்குரை காவியமானது கண்ணகியைக் குழந்தைப் பருவம்முதலே தெய்வீக நிலைக்குள் இட்டுச் செல்வதால் கிழக்கிலங்கைத் தமிழரது குலதெய்வமாகவே அவள் ஆரம்பம் முதலே நிலை நிறுத்தப்படுகின்றாள். இவை அனைத்தையும் ஒப்புநோக்கும்போது இத் தன்மையானது கிழக்கிலங்கை தவிர்ந்த ஈழத்தின் எந்தப் பிரதேசத்திலுமோ அன்றேல் முத்தமிழ் நாடுகளிலோ இல்லாத தாய்த் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சம் என்றே குறிப்பிடவேணடும்.
1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. பதிற்றுப் பத்து
4. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - துரை ராஜராம் நர்மதா வெளியீடு சென்னை-2006
5. யாழ்ப்பாணச் சரித்திரம் -ஆ,முத்துத்தம்பிப்பிள்ளை (1933)
6. தாய்த்தெய்வ வழிபாடு -பி.எல்.சாமி, சென்னை 1980
7. Temples and Legends of Kerala – K.R.Vythiyanathan
8. Some Aspects of Kerala and Tamil Culture –Ragava Iyankar
9. Evolution of Kerala History and Culture – Prof. T.K. Gengatharan
10. Rajavaliya –trn.B,Gunasegara
11. Bronzes from Ceylon – 1914 - Ananda Kumarasamy
12. The Cult of Goddess Pattiny- Gananath Obeyasekera ,Chicago University Press -1984
13. A New Face of Durga – N.Shanmugalingan, Kalinga Publishers, Delhi -2002
14. History of Kerala – K.M.Panikkar
15. மட்டக்களப்புத் தமிழகம் - வி.சி.கந்தையா
16. மலையாள நாடும் மட்டக்களப்பும் - வெல்லவூர்க் கோபால் - 2007
17. மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் -வெல்லவூர்க் கோபால் - 3ம் பதிப்பு 2011
18. கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள் - வெல்லவூர்க் கோபால்- 2011
19. பல்துறை ஆய்வுகள் - ம.சற்குணம்
20. அபிதான சிந்தாமணி (தமிழிலக்கியக் களஞ்சியம்)- ஆ.சிங்காரவேலு முதலி
21. கோவலன் சரித்திரம் - பி.நசிம்தீன், சென்னை 1992
22. நாட்டாரியல் ஆய்வு - பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடு,திருகோணமலை-2001
23. பத்தினிகெல்ல - சிஙகள இலக்கியம்
24. செட்டிநாட்டார் வரலாறு - எஸ். புகழேந்தி (2ம் பதிப்பு 1999)
25. கண்ணகி வழக்குரை காதை - பதிப்பாசிரியர் வி.சி.கந்தையா
26. கண்ணகியம்மன் பத்ததியும் பாடல்களும் - தொகுப்பு கண.ஆறுமுகம்
27. ஆதித் திராவிடரும் அழிந்துபோன சங்கங்களும் -துரை ஜெயநாதன்
1. http://bharani.dli.ernet.in/pmadurai/mp141.html
2. http://www.karmakerala.com/temples/t bagawathi_Temple
3. http://www.mahadevatemple.com/Abt_Lg...athikaram.html
4. http://tamil.sakthifoundation.org/kannagi-12.htm
5. http://www.youtube.com/watch?v=-T3Lv_V08vY
6. http://www.moothan.com/home/temples/karnakiyamman
7. The Kannaki worship in the present day Kerala, Karnataka,TamilNadu,andSriLanka Author-virarajendra