சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவினில் கலந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கை வேந்தன் கஜபாகு முதன்முதலில் வடபிரதேசத்தின் முல்லைத்தீவில் பத்தினிக்குக் கோவில் எழுப்பியதாகவே இலங்கையில் பத்தினி வழிபாடு தொடர்பான அனைத்து ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. சிங்களத்திலெழுந்த பத்தினி இலக்கியங்கள் சிலவும் இதனைச் சான்றுபடுத்துவது தெரிகின்றது. கஜபாகு கண்ணகியின் காற்சிலம்புடன் நந்திக் கடற்கரையில் வந்து இறங்கியதும் அங்குதான் முதல் கோவிலை நிறுவினான் எனச் சொல்லப்படுவதால் அங்கு கடலோரத்தில் அமைந்திருந்த கண்ணகி ஆலயம் அழிந்துவிட்டதா அன்றேல் வேறு வழிபாட்டுத்தலமாக மாறிவிட்டதா என்பது கண்டறியப்பட வேண்டியதாகின்றது. எனினும் மிக நீண்ட காலம் தொடக்கம் நந்திக்கடற்கரை ஒரு இறங்கு துறையாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளமையால் அது வற்றாப்பளையாக இருக்கக்கூடுமெனும் ஐயம் மேலோங்கவே செய்கின்றது. வற்றாப்பளை கண்ணகியின் வரலாறு தொடர்பில் அப்பிரதேச மக்களின் நம்பிக்கை மிகவலுவானதாகும். வற்றாப்பளையின் பண்டைய பெயர் பத்தாம்பளை எனக்கூறப்படுகின்றது. மதுரையை எரித்தபின் கண்ணகி கோவில் கொண்ட பத்தாவது இடமாக இதனைக் குறிப்பிடுவாருமுளர்.
இங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணகிக்கு விருப்பமான இடையர் குலச் சிறார்கள் மத்தியில் அவள் வயோதிபப் பெண்ணாகக் காட்சிகொடுத்ததாக தொன்ம நம்பிக்கை உண்டு. இங்கு வழங்கும் வாய்மொழிக் கதையின்படி கண்ணகி வெயிலாக இருப்பதால் தனக்கு தங்குவதற்கு ஒரு சிறு குடில் அமைத்துத்தருமாறு கேட்க சிறுவர்கள் தடிகள் மற்றும் இலைதழைகளைக் கொண்டு ஒரு சிறுகுடில் அமைத்துக் கொடுக்க அதில் அவள் தங்கியதாகவும் மாலைபட்டதால் தனக்கு ஒரு விளக்கினைத் தருமாறு அவள் கேட்க விளக்கெரிக்க எண்ணெய் இல்லையென அவர்கள் சொன்னதாகவும் பின்னர் அவள் முன்னாலிருக்கின்ற கடலிலே நீரெடுத்து வருமாறு கூறி அதனைக்கொண்டு விளக்கினை எரித்ததாகவும் பின்னர் அச்சிறுவர்களைப் பார்த்து தனது தலையிலிருக்கும் பேனை எடுக்குமாறு கூற அவர்கள் பார்த்தபோது அவளது தலையெல்லாம் கண்கள் தென்பட்டதாகவும் அதனால் அச்சம் கொண்ட சிறுவர்கள் ஓடிச்சென்று அங்கு ஊரவர்களிடம் அது பற்றிக் கூறியதாகவும் ஊரார் வந்து பார்த்தபோது அப்பெண் மறைந்துவிட்டதாகவும் ஆனால் தண்ணீர் விளக்குமட்டும் எரிந்து கொண்டிருந்ததாகவும் அது கண்ணகி அம்மனே என அறிந்துகொண்ட ஊர் மக்கள் பின்னர் அவ்விடத்தில் அம்மனுக்கு கோவில்கட்டி வழிபாடியற்றி வருவதாகவும் இதனைக் காரணப்படுத்தியே கடல்நீர் கொண்டு விளக்கேற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது. வற்றாப்பளை கண்ணகி வரலாறு தொடர்பிலும் ஒரு முழுமையான தேடல் அவசியமாகின்றது. இதனிடையே யாழ்ப்பாணத்தில் அங்கணாமைக் கடவையில்தான் முதல் பத்தினி கோவில் எழுப்பப்பட்டதாகக் கருதுவாரும் உளர். 1912ல் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதிய ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘கண்ணகியின் தெய்வத்தன்மையை கேட்டுணர்ந்த கயபாகு அவளுக்கு அங்கு அரசரால் விழாவணி நடாத்தல்போல தானும் தனது நாட்டில் அவளுக்கு கோவிலமைத்து விழாவணி நடாத்தவெண்ணி தனது நகருக்கு மீண்டவுடன் கோவிலமைத்து பெருவிழாச் செய்தான். கிறிஸ்து வருடம் 115ல் தனது நாடெங்கும் அவளுக்கு கோவிலும் விழாவும் செய்யவேண்டுமென திருமுகம் விடுத்தான். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் விரோதய சிங்கையாரியனும் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு ஊர்கள்தோறும் கோயிலமைத்து விழாவெடுத்து வந்தான். வேலம்பரையிலுள்ள கண்ணகி கோயிலே அக்காலத்தில் முதலில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் கட்டப்பட்டவைகளே களையோடை, அங்கணாள்கடவு முதலிய இடங்களிலுள்ளன.’ எனக் குறிப்பிடுகின்றார். வேளம்பரை நவற்குழியிலுள்ளது.
யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதிய முதலியார் இராசநாயகம் இலங்கை வேந்தன் கயபாகு கண்ணகி விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவளின் கால் சிலம்பினையும் சிலைகளையும் எடுத்துக்கொண்டு நாடு திரும்பியபோது யாழ்ப்பாணம் மாதகல்லுக்கு அண்மையில் ஜம்புகோளத்தில் வந்திறங்கியதாகவும் அங்கு திருவடிநிலைக்கு அண்மையில் அங்கணாமைக்கடவு என்னுமிடத்தில் முதல் கோவிலை அமைத்தான் எனவும் குறிப்பிடுகின்றார். அங்கணாமைக்கடவு என்பது கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அண்மையில் இருந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இவை எவ்வாறு அமையினும் அவை அனைத்துமே தொடக்க காலத்தேயெழுந்த கோவில்கள் என்பதை நம்மால் மறுக்கமுடியாது.
கோப்பாய் பலாணையில் கோவில்கொண்ட கண்ணகியும் மிக்க பழமைவாய்ந்த வழிபாட்டுத் தெய்வமாகவே கருதப்படுகின்றாள். யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்தே கண்ணகித் தெய்வத்திற்கு கோவிலெழுப்பி வழிபட்டதாக அதன் வரலாறு கூறப்படுகின்றது. அதன் காலத்தொடர்புக்கு சான்றுபடுத்த அவ்வாலயத்தின் கூளா மரமும் அக்கோவிலின் மூல விக்கிரகமும் இணைக்கப் படுகின்றன. மரத்தின் காலத்தை 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்கதாகவும் கையில் சிலம்புடன் தென்படும் மூல விக்கிரகம் பண்டைய தென்னிந்திய கண்ணகி விக்கிரகங்களை ஒத்திருப்பதாகவும் இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்காலம் இலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தொடக்க காலத்தினைக் கொண்டதாகவே அமையும். இவ்வாலயப் பூசைகளில் பெண் பூசாரிகளின் பங்களிப்புமிருந்துள்ளமை தெரிகின்றது. சின்னாச்சி மற்றும் பொன்னாச்சி எனும் இரு பெண் பூசாரிகள் பற்றிய தகவல்கள் இதில் பெறப்படுகின்றன. 1964ல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேல்மட்டத்தினரால் இவ்வாலயத்தில் கிராமிய மரபுகளை மாற்றிக் கொடியேற்றத்துடனான சமஸ்கிருதமயமாக்கல் ஏற்படுத்தப்பட்டதையும் பெரும்பான்மை மக்களின் தொடர்முயற்சியால் மீண்டும் கண்ணகி முன்னைய வழிபாட்டுக்குள் வந்துள்ளமையும் வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது.
இதனிடையே வடபிரதேச கண்ணகி வழிபாடு தொடர்பில் வேறோரு வாய்மொழிக் கதை நிலவுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி கண்ணகி மதுரையை எரித்த பின்னர் இலங்கையில் சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் முதலில் காட்சி கொடுத்தாளாம். அவ்வாலயங்களே தற்போது ராஜேஸ்வரி அம்மன் கோவில்களாக மாற்றமுற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் அது பன்றித் தலைச்சியம்மனாக உருவெடுத்துள்ளது. அதன்பின்னர் கண்ணகி கிழக்கில் காட்சியளித்ததாகவும் மட்டக்களப்பில் ஏழு இடங்களில் கோவில் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்செழு கண்ணகி தொடர்பிலும் தொன்மைமிக்க வரலாறு அறியப்படுகின்றது. அவ்வாலய வழிபாட்டு முறைகளை மாற்றியமைப்பதற்காக ஆறுமுகநாவலர் காலம் முதல் மேல் மட்டத்தினரால் அண்மைக்காலம் வரை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட அனேக முயற்சிகளையும் முறியடித்துத் தன்னை நிலைநிறுத்திய வரலாறு அக்கோவிலுக்குள்ளமை தெரிகின்றது. 1970ல் இங்கிருந்த கண்ணகி விக்கிரகத்தை இரவோடிரவாக மறைத்துவிட்டு புவனேஸ்வரியம்மனை பிரதிஷ்டை செய்ததாகவும் இதற்கு முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய செல்வந்தரின் பிள்ளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிய அச்ச மேலீட்டால் மீண்டும் கண்ணகி பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து ஏனைய சில கோவில்களிலேற்படவிருந்த சமஸ்கிருதமயமாக்கல் நிறுத்தப்பட்டதாகவும் தனது கள ஆய்வுத் தகவல்களில் பேராசிரியர் சண்முகலிங்கம் தெரிவிக்கின்றார். இதில் பன்றித் தலைச்சியில் இடம்பெற்ற கண்ணகியின் அடையாள மாற்றத்தில் பரமேஸ்வரியம்மன் எனும் மாற்றமானது பின்னர் கண்ணகாபரமேஸ்வரியானதாக அறியமுடிகின்றது.
வட பிரதேசத்தின் அனேக கோவில்கள் சமஸ்கிருத மயமாக்கலில் கட்டுண்டபோதும் - பத்தினித் தெய்வமான கண்ணகியை நாவலர் போன்ற பெருமனிதர்கள் சமணச்சியென்றும் செட்டிச்சியென்றும் இழித்துரைத்ததை மீறியும் தங்கள் தனித்தன்மையை இழந்துபோகாத சில கோவில்கள் இன்றும் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தவே செய்கின்றன. அவற்றுள் தெல்லிப்பழை துவாலி கண்ணகி, வட்டுக்கோட்டை கண்ணகி, ஆனைக்கோட்டை வான் வடமேற்குக் கண்ணகி, நவாலி கலையோடைக் கண்ணகி, ஓமந்தை வண்ணான்குளம் கண்ணகி, ஊரேழு கண்ணகி, புலோலி மேற்கு கண்ணகி, புலோலி தெற்கு கண்ணகி, மிருசுவில் கோவிற்குளம் கண்ணகி, கொடிகாமம் பக்கட்டி கண்ணகி, புங்குடுதீவு கண்ணகி, மயிலிட்டி கண்ணகி, நாகர்கோவில் கண்ணகி, புத்தூர் கண்ணகி, மண்டைதீவுக் கண்ணகி, கைதடிக் கண்ணகி, பூநகரிக் கண்ணகி போன்ற ஆலயங்களை இன்று பெருமையோடு நம்மால் வரிசைப்படுத்த முடிகின்றது. புங்குடுதீவுக் கண்ணகி ராஜராஜேஸ்வரி எனும் பெயரினைப் பெற்றிருந்தாலும் சாதாரண மக்கள் புங்குடுதீவுக் கண்ணகியம்மன் என்றே தற்போதும் அழைக்கச் செய்கின்றனர். கிளிநொச்சியில் கண்ணகிக்கு எழுப்பப்பட்ட ஆலயம் சற்றுப் பின்னோக்கிய வரலாற்றுக் காலத்தைக் கொண்டதாக அமைகின்றது.
1889ல் ஆர்.டபிள்யு+.லீவர்ஸ் என்பவரால் எழுதப்பட்ட நூல் (Manual of the North Central Province - R.W.Levers - 1889) நமது கவனத்தை ஈர்ப்பதாகும். மேலும் 1911ல் இலங்கையின் மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைக்காக அதன் பொறுப்பாளராகச் செயல்பட்ட ஈ.பி. டென்கம் அவர்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் வழங்கிய தகவல்களும் நமது கவனத்தை ஈர்ப்பதாகும். அத்தோடு Myth and Hidden History of Madhu Church Mannar, Northern SriLanka எனும் அறிக்கையானது பின்வரும் முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதைக் காணலாம்.
At the Madhu site, there existed originally a Hindu Amman Kovil that was atleast 1850 years old, if not older. The nearby tank is still called Kovil Kulam (Temple Tank) after the Tamil name of the site.
The Buddhists co-worshipped at the same site (like in Kadirgamam) and called it a "Pattini Devale", where "Pattini" refers to Kannagi Amman and "Devale" means "Devalayam" (Kovil).
"It is essentially a forest pilgrimage...the earth of Madu is considered to posses special medical properties, hence the sanctity, resulting in the reputation that `Madhu Medicine' effects cures in cases of snake bite" (Denham : page 76f). That age-old belief has nothing to do with Roman Catholic Christianity.
Idolatry and Vandalism by Portuguese Catholics
Reverend James Cordiner has given the explanation why we do not see the old, original buildings like the old Hindu Amman Kovil at Madhu:
"It is well known that every trace of religious fabrics of the Ceylonese was obliterated with enthusiastic ardour by the idolators from Europe" [i.e. the Roman Catholic Portuguese]." (A Description of Ceylon Vol. I (p. 188))
Barely 130 years ago, Catholics gradally usurped this ancient Hindu temple (Amman Kovil) in the dense forests, desecrated the sacred icon ( Amman Silai) and built a Catholic church after destroying the temple.
1ம் கஜபாகு (114 - 136) இலங்கையில் பத்தினி வழிபாட்டினை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அவனது ஆட்சிக்காலத்தில் மடுவிலும் பத்தினிக்குக் கோவில் எழுப்பட்டமையும் அப்பிரதேச மக்களால் சிறப்பான வழிபாடு அங்கு இயற்றப்பட்டமையும் அதன்மூலம் அறியவருகின்றது. தற்போது மடுமாதா கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தினையொட்டியதாக அது அமைந்திருந்ததா அன்றேல் ஆங்கில ஆட்சியினரால் பத்தினி ஆலயம் அகற்றப்பட்டு கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்டதா என்பதை நம்மால் கண்டறியமுடியவில்லை. 1850 வரையான நீண்ட காலத்தே அங்கு பத்தினியம்மன் கோவிலும் அதன் அருகே கோவில் குளமும் இருந்ததாக லீவர்ஸ் (R.W.Levers) குறிப்பிடுவதையும் அந்நூலானது அக்காலத்தையொட்டிய காலத்தே எழுதப்பட்ட நூல் என்பதாலும் அவரும் ஒரு ஆங்கிலேயர் என்பதாலும் அதன் உண்மைத்தன்மை புலப்படவேசெய்யும். மேலும் மேல்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலிருந்த சில பத்தினித் தேவாலயங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில்- பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் கிறிஸ்தவர்களாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து புனித அன்னமாள் தேவாலயங்களாக மாற்றமுற்றதாக பல சிங்கள ஆய்வாளர்கள் குறிப்பிடுவதும் நம் கவனத்தை ஈர்ப்பதாகும். 1876ல்தான் மடுமாதா தேவாலயம் கட்டப்பட்டதென்பதை இதில் நாம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.