இசைத்துளிகள் நம் காதுகளை எட்டும் வினாடிகளில் நமது மூளை தூங்குவதற்கு எத்தனிக்கின்றது, இதயமோ விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றது. இசை என்பது பதின்ம வயதினருக்கானது, திரைப்படத்துறை சார்ந்தது அல்லது திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் டிசம்பர் மாத கச்சேரிகள் சம்பந்தப்பட்டது என்று சந்தைக் கலாச்சாரத்தில் வாழப் பழகிக்கொண்ட நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மையில் இசை என்பது தமிழர் வாழ்வில் மொழியோடு சேர்ந்து பிறந்து இரண்டறக் கலந்து வளர்ந்து வந்த ஒரு வாழ்வியல் நடைமுறை ஆகும். உண்பதில், உடுப்பதில், வசிப்பதில், வாழ்க்கை முறையில் உலகின் பிற கலாச்சாரங்களுக்கு நாம் முன்னோடிகளாய் இருப்பது போலவே இசையை உருவாக்குவதிலும், அதை ரசிப்பதிலும், இசையை வாழ்வின் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதிலும் நாம் சிறந்து விளங்கியுள்ளோம்.
இந்திய திரைத்துறையைப் பொறுத்த அளவில் பாடல்கள் இடம் பெறாத படங்களை எவ்வளவு எதார்த்தமாகக் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் நம் ரசிகர்கள் நிராகரித்து விடுகின்றார்கள். இதற்குக் காரணம் எந்தக் கலை வடிவத்தையும் இசையோடு சேர்த்தால்தான் நம் இந்திய மனம் ஒத்துக்கொள்ளும், இதை ஒரு நீண்ட பண்பாட்டு தொடர் சங்கிலியின் ஒரு கண்ணியாகவே காண வேண்டும். பெண்ணின் கற்பு, மானம், நாணம், குறித்து நீண்ட வசனம் பேசிய படநாயகி அடுத்த காட்சியில் அரைகுறை ஆடையுடன் ஆபாச அசைவுடன் ஒரு கூட்டத்தோடு பாடி ஆடுவதை நாம் ரசித்துப் பார்க்கின்றோம். இந்த நகைமுரணை நாம் ஒரு நாளும் சிந்தித்துப் பார்த்ததில்லை, இதற்குக் காரணம் பாடலின் இசை தரும் மயக்கம் நம்மை அறியாமலேயே நமக்குள் வீழ்ந்துவிடுவதுதான்.
நம் சமூகத்தின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, திருமணம், விழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள், வெற்றி, தோல்வி, இறப்பு என ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, சமூகத்தோடு இணைத்துக்கொள்ள ஆதிமனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்ட இயற்கையான வழிமுறைதான் இசை என்னும் கலையாகும். பெரும்பாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை இசை நீட்டிக்க வைக்கின்றது. அதே வேளையில் சோகங்களை இசை பகிர்ந்து கொண்டு குறைத்து விடுகின்றது. உலகில் தோன்றிய பிற நாகரீகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தமிழ் இனம் மட்டுமே சார்ந்து வாழ்தல், கூட்டாகக் குழுவாக இணைந்து வாழ்தல் போன்ற கலாச்சாரக் கூறுகளை ஆரம்பம் முதல் இன்று வரை கொண்டுள்ளது. தனித்தனியே வாழும் மனிதர்களை கூட்டமாக்கவும், கூட்டமாக வாழும் மனிதர்களை தனித்தனியாக உணர வைக்கவும் மொழியாலும், இசையாலும் மட்டுமே இயலும் என்பதை நாம் உணர்ந்தே வந்துள்ளோம்.
கற்கள், பாறைகள், மரத்துண்டுகள், மணற்துகள்கள், விலங்கின் நரம்புகள், தோல்கள், எலும்புகள் போன்றவற்றை தனித்தனியாகவும், ஒன்றையொன்று சேர்த்தும், கலந்தும் ஒழுங்கற்ற வடிவில் ஓசைகளை இசையாக மாற்ற முயற்சி செய்துள்ளான் தமிழன். சிரிப்பின், அழுகையின், வியப்பின் மனித ஒலிகளைக் கூர்ந்து கவனித்துள்ளான். இடையில் தற்செயல் நிகழ்வாய் குரலின் ஒலியையும், இயற்கை வழங்கிய திடப்பொருள்களின் ஒலியையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்து இசையை வடிவமாக்கி, இலக்கணம் கண்டு, வளர்த்து விஞ்ஞானம் தந்த தொழில்நுட்பத்தோடு இயைந்து, வளர்த்து இந்த நொடியில் டிஜிட்டல் ஓங்காரத்துடன் காற்றில் கலந்து விரிய வைத்துள்ளான்.
இன்றைய மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு மாயங்கள் நிரம்பிய இன்னொரு திறந்த வெளிச்சிறையில் அகப்பட்டுக் கொள்கின்றான். அனுதினமும் வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டே வீட்டில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்கின்றான். பெரும்பாலானவர்களுக்கு முகமூடிகளே முகமாகிப் போகும் அவலங்கள் நிகழ்வதுண்டு. சுயவிருப்பங்களுக்கும் திணிக்கப்படும் விருப்பங்களுக்கும் இடையே நடைபெறும் தினப்போராட்டங்களில் சீக்கிரமே அலுத்துப்போகும் மனிதனுக்கு எங்கிருந்தோ எட்டிப்பார்க்கும் இசை மிகப்பெரிய ஆறுதலை அளிக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் பாடகனின் குரலும் வெவ்வேறு இசைக்கருவிகள் எழுப்பும் இசைவடிவங்களும் மனிதனின் உள் உடல் உறுப்புக்களாய் பரிணாமம் பெற்று புதுப்புது இரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயுள்ளது.
நாடாண்ட மன்னர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு அமைச்சர்களை அமர்த்தியிருந்தது போலவே கலையை வளர்ப்பதற்கு இசைக்கலைஞர்களையும், கவிஞர்களையும் தேர்ந்தெடுத்து அரசவையில் பராமரித்து வந்துள்ளனர். அரச நிர்வாகத்துக்கான விவாதங்களும் மனதை ஈர்க்கும் இசையும் மொழியை வளர்க்கும் இலக்கியமும் அரசவைகளில் இணையாகவே வளர்ந்து வந்துள்ளன. அதைப்போலத்தான் இறைவனை இசையின் மூலம் தொடவும் உணரவும் முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றான் பக்தன். சைவர்கள் திருவாசகம், திருமந்திரம் மூலமாகவும், வைணவர்கள் ஆண்டாள், திருப்பாவை பாசுரங்கள் மூலமாகவும், இவை பற்றியெல்லாம் கவலைப்படாத இல்லறத்துவாசிகள் அம்மன் பாடல்களையும் காலங்காலமாக இசைத்துக்கொண்டே வந்துள்ளனர். உழைப்பவர்களின் வியர்வைத்துளிகளை தெம்மாங்குப் பாடல்களே விசிறியாய் மாறி துடைத்து விட்டு வந்துள்ளன.
இந்தியப் பண்பாட்டில் இன்னும் இளைத்துப் போகாத கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இசையின் ரசனை காலங்காலமாய் கலந்தும் வளர்ந்தும் வந்துள்ளன. குடும்ப நிகழ்வுகளில், சடங்குகளில் பெண்கள் பாடல்களை பாடும் வழக்கம் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மணமகள் முதன்முதலாய் புகுந்த வீட்டிற்குள் நுழையும்வேளையில், வளைகாப்பு வைபவத்தின்பொழுது, முதல் குழந்தை பிறந்தப்பிறகு, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு நுழையும்பொழுது, குழந்தையை தொட்டிலில் இடும்பொழுது, இறந்தவரை நினைத்து அழும்போது என மனித வாழ்வின் முக்கிய திருப்பு முனைகளில் பாடல்கள் நம் பெண்களால் பாடப்பட்டு வந்தது. தன் சொந்த வாழ்வின் சோகங்களை, நிறைவேறாத ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளை, தாலாட்டுப் பாடல்களின் வடிவில் ஒப்பாரிப் பாடல்களின் வடிவில் பெண் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். ஒப்பாரிப் பாடல்களில், தாலாட்டுப் பாடல்களில், தெம்மாங்குப் பாடல்களில், நாடோடிப் பாடல்களில் வாழும் பகுதியின் வரலாற்று நிகழ்வுகள், வாழ்க்கைமுறைகள், கலாச்சாரம், பெண்களின் நிலை, பொருளாதாரச் சூழல் போன்றவை இயல்பான வடிவில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இசையை உருவாக்குபவரும் பாடல் புனைபவரும், பாடுபவரும் இதை ரசிப்பவரும் ஒரே மையப்புள்ளியில் ரசனையாய் இணையும் வித்தை வேறு கலைகளில் நடப்பதில்லை. இசை சில நேரங்களில் நம்மிடம் இருந்தே உருவாகி நம்மையே நமக்கு அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல் நம்மையே அதில் தொலைந்து போகவும் வைக்கின்றது. குத்துப்பாடல்கள், வெறும் சத்தப் பாடல்கள், சத்தற்ற பாடல்கள், கானாப்பாடல்கள், மேற்கத்திய, கா;நாடக, தமிழிசை இந்துஸ்தானி பாடல்கள் போன்றவற்றை துள்ளிசையாய் இருந்தாலும் மெல்லிசையாய் இருந்தாலும் நாம் கேட்டு, ரசித்துப் பழக வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வியையும், பாடல்களையும் இணைத்து கற்றுத் தர வேண்டும். இசைத்தலும், கேட்டலுமாய் வாழும் வாழ்க்கை முறையில்தான் மரணத்தை வெல்ல முடியும். மனிதனைக் காற்றின் வழியே பிரபஞ்சத்தோடு இணைக்க இசையால் மட்டுமே முடியும். திடப்பொருள்களும், திரவப்பொருள்களும் அழிய நேர்ந்தால் இறுதியில் ஒலியும், ஒளியுமே பிரபஞ்சத்தின் வடிவங்களாய்க் காட்சி அளிக்கும். ஆதலால் இசைப்போம்... ரசிப்போம்... உலகோடு இசையால் இணைவோம்...