வண்ணம நடனங்கள்
முனைவர் தாக்ஷாயினி பிரபாகர்

இலங்கை வாழ் சிங்கள மக்களது சாஸ்திரிய நடனமான கண்டிய நடனத்தில் வண்ணம நடன வகை மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. இந்நடனப் பிரிவானது தனி நடனங்கள் ஒன்றிணைந்த ஒரு கூட்டு வடிவமாகும். இதில் வரும் ஒவ்வொரு தனி நடனமும் ஒரு ஆதிக்கம்மிக்க கருத்தினை வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம்.
இந்நடனங்களின் ஒன்றிணைப்பில் கண்டி இராச்சியத்தினதும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தினதும் கலைசார் மூலவளங்களையும் அவற்றோடு பிணைப்புற்ற ரசனை மிக்க கலையம்சங்களையும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகின்றது. அத்துடன் கண்டி மன்னர்களின் ஆட்சிக் காலத்திற்கே உரித்தான இயற்கை தழுவிய கலையம்சங்கள், வரலாறு, புனைகதைகள், புராணங்கள், சமய நெறிகள், நாட்டார் கலைகள் என்பன இந்நடனங்களை இசைக் காவியப் படைப்பாக்கும் உந்து சக்திகளாக அமைந்தன.
வண்ணம எனும் சிங்களப் பதமானது தமிழ் மொழியின் வண்ணம் எனும் பதத்திலிருந்து வந்ததென்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதேயென சோம விஜயசேகர என்ற நடனக் கலைஞர் தனது ‘கிகிரி-3’ எனும் நூலில் இதற்குச் சான்றளிக்கின்றார். ‘வர்ணம்’ என்பது பரத நாட்டியத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய உருப்படியாகும். கர்னாடக இசை மரபிலும் தனித்துவம் பெறும் வர்ணம் தொடக்கத்தில் பாடப்படும் உருப்படியாக அமைகின்றது.
இலங்கையில் மிக நீண்டகாலமாக தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒருங்கே வாழ்ந்ததன் காரணமாக, சிங்கள மக்களின் முதன்மையும் முக்கியத்துவமும் பெற்ற பாரம்பரிய கலாசார ஆடற்கலையான கண்டிய நடனத்துள் இந்து மதத்தினதும் தமிழரதும் பாரம்பரிய கலாசார விழுமியங்களின் தாக்கம் இயல்பாகவே ஊடுருவிக் கொண்டது. குறிப்பாகக் கண்டிய நடனத்தின் பிற்சேர்க்கையாக விளங்கும் வண்ணம இதனைப் பெருமளவு உள்வாங்கிக் கொண்டது. வழிபாட்டு அம்சங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒருவரோடொருவர் பிணைப்புற்றே வாழ்ந்தனர். பெரும்பாலான பௌத்தர்கள் இந்துக் கோவில்களில் வழிபாடியற்றுதலும், பௌத்த கோவில்களில் இந்துத் தெய்வங்களை வைத்துப் பூசிப்பதும் நீண்டகால நடைமுறையாகவே இருந்து வந்தது. இத்தன்மையானது இரு இனங்களிடையேயும் கலாசாரப் பரிவர்த்தனை, இணக்கப்பாடு, புரிந்துணர்வு என்பவற்றை கட்டிக்காக்க உதவியது.
கி.பி 15ஆம் நூற்றண்டில் கண்டியை ஆட்சிசெய்த ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் ஆட்சிக்காலத்தே அவனது அரசவையில் அங்கம் வகித்த விஹாரவாசி ஹிட்சு, றம்மொழிக அதிகாரம் என்பவராலும் கேரளாவிலிருந்து வருவிக்கப்பட்ட நடன மகளிராலும் இவ்வண்ணம நடனங்கள் உருவாக்கப்பட்டதாக அதன் வரலாறு கூறுகின்றது.
கண்டிய நடனம் பொதுப்படையில் தாள லயக் கட்டுக்கோப்புடன் பின்னப்பட்ட ஒரு நிருத்த வடிவமாகும். எனினும் அதன் பிற்சேர்க்ககையான வண்ணம பாடல் அம்சத்தினைப் பின்னணியாகக் கொண்டு உருவான தன்மையில் அபிநயம் மற்றும் பாவ ரசத்திற்கு இடமளிக்கின்ற ஒரு நிருத்திய உருப்படியாக வெளிப்படுகின்றது.
கண்டிய நடனத்தில் இடம்பெறும் பதினெட்டு வகையான வண்ணம நிகழ்வுகளும் தனித்தனிச் சிறப்பினைக் கொண்டவை. வெவ்வேறு கருத்தினை வெளிப்படுத்துபவை. இவற்றை உருவாக்கியோர் கண்டிப் பிரதேசச் சூழலிலிருந்தே தமக்கான ஊக்குவிப்பினையும் ஆதரவினையும் பெற்றுள்ளனர். இவற்றிலே பரந்த பண்பாட்டு அம்சங்களுடனான பல்வேறுபட்ட விடயங்கள் இசையிலும் நடனத்திலும் கலைநேர்த்தி ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவே சித்தரிக்கப்படுகின்றன.
வண்ணம நடன வகைகள்
வண்ணம நடனங்கள் ஸ்ரீ வீர பரக்கிரம என அழைக்கப்பட்ட நரேந்திர சிங்க (1707 - 1737) எனும் கண்டி மன்னனால் மிகுந்த உத்வேகத்துடன் வளர்க்கப்பட்டதாக வரலாறு குறிப்பிடும். இவனது பட்டத்து அரசி தென்னிந்திய நாயக்கர் வழியைச் சேர்ந்தவர். அனேக சிங்கள மன்னர்களின் திருமணத்தொடர்பு தென்னிந்தியா சார்ந்ததாகவே அமைந்ததாகும். இதன் காரணமாகவே தென்னிந்திய அரசவை நாட்டிய மரபைச் சார்ந்ததாக வண்ணம நாட்டியமும் நரேந்திர சிங்கவின் அரண்மனை நாட்டியமாக உருவாக்கம் பெற்றது. கண்டி மல்வத்து விஹாரையைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவரே இந்நடனங்களின் ஆக்கத்திற்கு உதவிபுரிந்தார். அத்தோடு கணித அலங்கார எனும் இசை ஆசானே இதற்கான இசையை (கவி) எழுதினார். இதில் முக்கியப்படுத்தப்படவேண்டிய அம்சம் யாதெனில் இவற்றின் இசை வடிவங்கள் தென்னிந்திய மரபு சார்ந்த தன்மையைக் கொண்டதாக அமையினும் ஆடல் வடிவங்கள் முழுக்க முழுக்க கண்டிய நடனப் பாரம்பரியத்தைச் சார்ந்த கொஹோம்ப கங்காரிய நடன அமைப்பைச் சார்ந்திருப்பதே.

வண்ணம நடனங்கள் பதினெட்டு வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டே கண்டிய நடனத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட நடன வகையும் அதன் அடிப்படைத் தன்மையில் ஒரு குறிப்பிட்ட கதையினை கருப்பொருளாக கொண்டுள்ளன. அவற்றில் சில கட்டுக் கதைகளாகவும், வரலாறுகளாகவும், வேறு சில இந்துமதக் கருத்துக்களையும், சமய நெறிமுறைகளையும் மையப்படுத்துபவையாகவும், இன்னும் சில மிருகங்கள், பறவைகள், ஊர்வன என்பவற்றுடன் தொடர்புபட்டவையாகவும் உள்ளன. கண்டிய நடனத்தில் லாவண்யம் மிக்க நிருத்திய உருப்படிகளை வண்ணம நடனங்கள் வெளிப்படுத்துவதனால் ஒரு வகையில் இந்நடனமானது கண்டிய நடனத்தை மேலும் மெருகூட்ட வாய்ப்பளித்திருப்பதாகவே நம்மால் கருதவேண்டியுள்ளது. பதினெட்டு வண்ணம நடனங்களாவன,
1. கஜக வண்ணம
2. நையடி வண்ணம
3. கிரள வண்ணம
4. உடற வண்ணம
5. சிங்கராஜ வண்ணம
6. ஹனுமா வண்ணம
7. கண வண்ணம
8. சௌளா வண்ணம
9. மயூர வண்ணம
10. வைரோடி வண்ணம
11. உறங்க வண்ணம
12. துறக வண்ணம
13. சுரபதி வண்ணம
14. முசலடி வண்ணம
15. காஹக்க வண்ணம
16. ஈரோடி வண்ணம
17. ஊகுசா வண்ணம
18.அஸதிஸ வண்ணம
ஆகும். எனினும் இதில் பெயர் குறிப்பிடப்படாத வெவ்வேறு கலைஞர்களால் எழுதப்பட்டதாக சமனலஜா (பட்டாம் பூச்சி) வண்ணம, ஹன்ஸா (அன்னம்) வண்ணம, பந்துல (போர்வீரன்) வண்ணம போன்ற 60க்கும் மேற்பட்ட வண்ணங்கள் முன்னர் நடைமுறையிலிருந்ததாக ஆய்வுகள் வெளிப்படுத்தினாலும், தற்போது மேல்சொன்ன 18 வண்ணம மட்டுமே ஆடப்பட்டுவருகின்றன.
கஜக வண்ணம
வண்ணம சேர்க்கையில் முதலில் இடம் பெறுவது கஜக வண்ணமாகும். ஒரு யானையின் செயல்பாடுகளை வெளிக்கொணரும் தன்மை இதில் முழுமையாகச் சித்தரிக்கப்படுகின்றது. இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் யானையானது இதன் பின்னணியில் பிரதிபலிக்கின்றது. அது செந்தாமரைத் தொட்டியில் குளித்து விளையாடுவதும் அதனது கம்பீரமான தோற்றம், அசைவுகள், திருப்பங்கள் ஆகியனவும் இயல்பாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நடனமானது பார்ப்போரை பரவசப்படுத்திக் குதூகலத்தில் ஆழ்த்தும் தன்மைமிக்கது.
நையடி வண்ணம
நையடி வண்ணம புரிதத்த ஜாதகக் கதையினை அடிப்படையாகக் கொண்டது. நாக உலகில் நாகராஜனாகப் அவதரித்த போதிசத்துவரின் கதை இதன் பின்னணியில் வெளிவருகின்றது. இவர் நாக சமூகத்தில் அரசிளங் குமாரனாகப் பிறந்து தனது பதவியைத் துறந்த பின்னர் பாம்புருக் கொண்டு ஜமுனாநதி தீரத்தில் ஒரு எறும்புப் புற்றின் மீதமர்ந்து விரதமிருந்தபோது ஒரு பாம்பாட்டி அதனைப் பிடித்துக் கொண்டு போய் குழலிசைக்கு ஏற்றவாறு அதனை ஆடப்பழக்கி அரண்மனை மற்றும் ஊரவர் மத்தியில் பணம் சம்பாதிக்கின்றான். இதன் நிலைப்பாடுகளே இங்கு நடனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இங்கு பாம்பின் நடன நிலைகள் சித்தரிக்கப்படுவதேயன்றி பாம்பாட்டியின் நடனநிலைகள் இடம்பெறுவதில்லை. பாம்புப் புற்றிலிருந்து வெளிப்படும் நாகமானது தனது தலையினை வெவ்வேறு திசைகளில் திருப்பியும் நெளிந்தும் வளைந்தும் சுருண்டும், உருண்டு புரண்டு ஆடுதல் மிகவும் கச்சிதமாக இவ்வண்ணமயில் நாட்டியக் கலைஞரால் சித்தரிக்கப்படுவது பார்ப்போரை மெய்மறக்கச் செய்யும்.
கிரள வண்ணம
கழுத்திலே வளையமாக கறுப்புச் சிவப்பு நிறம்கொண்ட கிரளா எனும் பறவையானது சத்தமிட்டவாறு மரத்துக்கு மரம் தாவி இரைதேடும் சம்பவத்தை சித்தரிக்கும் நிலையே இதில் வெளிப்பாடாகும். இப்பறவை வினோதமான முறையில் தனது முட்டைகளை அடைகாத்து குஞ்சுகள் பொரிப்பதாக இதில் கூறப்படுகின்றது. இதன் தொடராக இடம்பெறும் நடன நிகழ்வானது பந்துளா எனும் வீரனின் வீரதீரச் செயல்களை எடுத்தியம்புகின்றது. மார்புக் கவசம், ஈட்டி, வாள், தடி என்பவற்றோடு போராடுகின்ற போராட்டக் கலையின் சித்தரிப்பே பிற்பட்ட இவ்வாடலின் வெளிப்பாடக அமைகின்றது.
உடற வண்ணம
உடற வண்ணம அரச குலத்தின் பெருமையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. அரசர்கள் 64 வகையான அணிகலன்களை அணிந்து யானையின் மீதமர்ந்து பவனி வருவதை இது விபரிக்கின்றது. மன்னரின் உலா வருகையின் போது இசைக்கருவிகள் முழங்க மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிப்பது இதில் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்படுகின்றது. இதில் குறிப்பிடப்படும் மன்னன் சிங்கள வம்சாவழியில் வந்த கண்டியின் கடைசி மன்னனான வீர பராக்கிரம நரேந்திர சிங்க அரசனை குறிப்பிடுவதாக அமையலாமென நம்பப்படுகின்றது.
சிங்கராஜ வண்ணம
சிங்கராஜ வண்ணம ஒரு யுக்திக் கதையை பிரதிபலிப்பதன் ஊடாக உலகியல் தத்துவமொன்றைப் போதிக்கின்றது. முயலும் சிங்கமும் கதையையொத்ததாக இங்கு ஆமையும் சிங்கமும் கதை அமைகின்றது. ஆமையானது சிங்கத்தை ஏமாற்றி அழைத்துக்கொண்டு போய் ஒரு ஆழமான கிணற்றைக் காட்டி அதிலே தெரியும் சிங்கத்தின் நிழலுருவத்தை எதிரிச் சிங்கமாக நம்பச் செய்வதும் பின்னர் அதனைக் கொல்லவேண்டி சிங்கம் கிணற்றுள் குதித்து மாழுதலையும் இந்நடனம் சித்தரிக்கின்றது.
ஹனுமா வண்ணம
ஹனுமா வண்ணம ஒரு குரங்கின் செயல்பாடுகளை விபரிப்பதாக அமையும். இதனையொத்த கிராமிய ஆடல்கலையொன்று அனுமான் ஆட்டம் என்ற பெயரில் தென் கேரளத்திலும், இலங்கையில் யாழ்ப்பணத்திலும் நிகழ்த்தப்பட்டமை ஆய்வுகளில் வெளிவருகின்றது. இந்து மக்களிடையே அனுமான் வழிபாடு ஒரு நீண்டகால வழிபாடாகத் திகழ்வது அறியப்பட்டதே. இவ்வழிபாடானது அச்சத்தை நீக்கி மனோதிடத்தையும் வெற்றியையும் அளிக்கவல்லது என்பது பலரது நம்பிக்கையாகும். ஹனுமா வண்ணமவில் குரங்கின் செயல்பாடுகள் அனைத்தும் மிக ஆழமாகவும் யதார்த்தமாகவும் நடனக் கலைஞரால் சித்தரிக்க முடிகின்றது. இங்கு இந்துமத சொற்பிரயோகமும் முக்கியத்துவம் பெறுவதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
கண வண்ணம
கண வண்ணம கணேச வண்ணம எனவும் குறிப்பிடப்படுகின்றது. பௌத்த மக்கள் கணதெய்யோ எனப் போற்றி வழிபடும் ஒரு முக்கிய இந்துத் தெய்வம் கணபதி. அவரது திருவருளைப் பெறவேண்டி ஆடும் நடனமாக இவ்வண்ணம அமைகின்றது. அரைவாசித் தந்தம் தெரியத்தக்க வண்ணம் தாமரையிலை போன்ற செவியும் யானைத் தலையும்கூடிய அழகிய தோற்றம் கொண்டவராக இங்கு நடனக் கலைஞர் காட்சியளிப்பார். மேலும் அவரது கண்களில் மை தீட்டப்பட்டு நெற்றியில் மரகதமணி பதிக்கப்பட்டிருக்கும். அவர் மெல்லமெல்ல அசைந்தாடுவது இதன் வெளிப்பாடாகும். தொடக்க காலத்தே முதலில் கணவண்ணமே ஆடப்பட்டதாகவும் கணேசரை வணங்கிய பின்னரே ஏனைய நிகழ்வுகள் அமைந்ததெனவும் கள ஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
சௌலா வண்ணம
சௌலா வண்ணம ‘குக்குட வண்ணம’ என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. குக்குட என்பது சேவலைக் குறிப்பதாகும். சிங்கள மக்களால் ‘கதிரகம தெய்யோ’ எனஅழைக்கப்படும் முருகனின் சூரசம்ஹார நிகழ்வை மையப்படுத்தியதாக இது அமைகின்றது. கந்தப்புராணத்தில் வரும் கதையம்சமான அசுரருக்கும் தேவருக்கும் நடந்த யுத்தத்தின்போது முருகப்பெருமான் வாளுடனும் வேலுடனும் தோன்றி அசுரனை வதம் செய்தலை இந்நடனம் வெளிப்படுத்தும். இதில் அசுரனை இரண்டாகப் பிழப்பதுவும். அவனது உடலிலிருந்து சேவல் தோன்றுவதும் பின்னர் சக்கர தெய்வம் பற்றிய புகழ்மாலை தொடருவதும் இடம்பெறும். மயில் பற்றிய வெளிப்பாடு இதில் தென்படாது. இதில் சக்கர, பிரமா, விஸ்வகர்மா, ஈஸ்வர் ஆகிய கடவுளர் தோன்றி சங்கு, குழல் என்பனவற்றை ஊதுவதுடன் வீணையும் வாசிப்பர். இதில் இடம்பெறும் நடன அசைவானது மெதுவான தோற்றப்பாட்டைக் கொண்டதாக அமையும்.
மயுர வண்ணம
இவ்வண்ணமானது கதிர்காமக் கந்தனின் வாகனமான மயிலைச் சிறப்பித்து ஆடுவதாகும். ‘மயூர’ என்னும் வடமொழிப் பதமானது மயிலைக் குறிப்பதாகும். பரதநாட்டியம் மற்றும் கதகளியில் மயிலை விளக்கும் முத்திரை மயூர எனப் பெயர்பெறும்.
வைரோடி வண்ணம
வைரோடி வண்ணமவானது ஈஸ்வரனின் அரண்மனைச் சிறப்பை வர;ணனைகளோடு வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக அமையும். இதில் தொடர்ந்து இடம்பெறும் நடனமானது சக்கர தெய்வத்தின் புகழை பிரமன், விஸ்வ கர்மா, ஈஸ்வர் ஆகியோர் குழல் வாத்தியங்களுடன் வெளிப்படுத்துவதாக அமையும்.
உறங்க வண்ணம
உறங்க வண்ணம ‘நாக வண்ணம’ என்ற பெயராலும் அழைக்கப்படும்; நாகப் பாம்பினது ஒரு நாள் வாழ்க்கை இதில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்படுகின்றது. பிரகாசம் மிக்க புள்ளிகளை உடலில் கொண்ட நாகமானது பேரிரைச்சலுடன் புற்றிலிருந்து வெளிப்பட்டு பல வடிவங்களில் படமெடுத்து ஆடுவதும் , தவளை மற்றும் விரியன் பாம்புகளை உண்பதுவும் அரச சபை உட்பட சகல இடங்களுக்கும் ஊர்ந்து ஊர்ந்து செல்வதுவும் நடனக் கலைஞரது லாவண்யம் மிக்க ஆட்டத்தில் மனதை கொள்ளை கொள்ளுவதாக அமையும்.
துறக வண்ணம
இவ்வண்ணம இளவரசர் சித்தார்த்தரின் ‘கண்தக’ என்னும் குதிரையினது துணிகரச் செயல்கள் பற்றி விபரிக்கும். கன்ன என்பவன் வழிகாட்ட சித்தார்த்தர் குதிரையிலேறுவார். அனோமா நதிவரை மூவரும் மகிழ்ச்சியோடு செல்வர். கன்ன குதிரையின் வாலைப்பிடித்துக்கொள்ள இளவரசரை முதுகிலே தாங்கிய குதிரை ஆற்றுக்கு மேலால் பாயும். குதிரையின் துணிகரச்செயலை சித்தாரர்தர் புகழுவார். இச்சம்பவங்கள் அனைத்தையும் துறகவண்ணம நன்றாக வெளிப்படுத்தும்.
சுரபதி வண்ணம
ஈஸ்வரர் உமையைக் கண்டதும் ஆடிய நடனமே சுரபதி வண்ணம ஆகும். இதனை ஈஸ்வர வண்ணம எனவும் குறிப்பிடுவர். இந்துமத தாக்கமே இவ்வண்ணமவில் முக்கிய நிலைகளைக் கெண்டதாகும். நெற்றிக்கண் தெய்வமென வர்ணிக்கப்படும் சிவனை ஈஸ்வரன் என்றும் அவரது பாரியாரை உமையென்றும் இதில்வரும் பாடல்கள் குறிப்பிடும். உமையைக் காணாது மனம்வருந்திய ஈஸ்வரர; மாறுவேடம் பூண்டு தேடிச்சென்று அவரைக் கண்டபோது உவகை மேலீட்டால்; ஆடுவது இதில் சிறப்பாகச் சித்தரிக்கப்படும். உயிர்த் துடிப்புமிக்க தாண்டவ வடிவிலான கம்பீரமிக்க ஆட்டத்தை இதில் நடனக்கலைஞர் வெளிப்படுத்துவார்.
முசலடி வண்ணம
முசலடி வண்ணம ஒரு முயலின் செயல்பாடுகளைச் சித்தரிக்கின்றது. முசலடி வண்ணமயின் ஆட்ட முறைகளுக்கு இது முற்றிலும் மாறுபட்டது. முயலின் அசைவுகளை இங்கு நடனக் கலைஞர் தத்துரூபமாகச் சித்தரிப்பார். முயல் துள்ளுவது, குதிப்பது, அச்சத்தினால் பதுங்குவது, மறைந்து கொள்வது பின்னர் அது நிலா ஒளியில் ஓய்வெடுப்பது போன்ற அம்சங்கள் இதில் சிறப்பாக வெளிப்படுத்தப்படும்.
காஹக்க வண்ணம
காஹக்க வண்ணம சங்கின் நீண்ட ஒலியை வெளிப்படுத்துவதனை முறையாகச் சித்தரிக்கும். இதில் சங்கின் சிறப்பியல்புகள் அழகாகச் சித்தரிக்கப்படும்.
ஈரோடி வண்ணம
ஈரோடி வண்ணம ஒரு போர்வீரனது வீரதீரச் செயல்களைப் பின்னணியாகக் கொண்ட நடன அமைப்பாகும். விற்போரில் பயன்படுத்தப்படும் அம்பின் சிறப்பும் போர்க்களச் சூழலும் அங்கு தென்படும் யானைப்படை, குதிரைப்படை போன்றவற்றின் வர்ணனைகளும் இதில் வெளிப்படும்.
ஊகுசா வண்ணம
இது கருட வண்ணம என்ற பெயராலும் அழைக்கப்படும். ஒரே தன்மைகொண்ட இரு கழுகுகள் காற்றின் வேகமான அசைவினுக்கு ஈடுகொடுத்து எளிதாக மேல்நோக்கிப் பறப்பதுவும் பின்னர் இரண்டும் ஓரம்பினைப்போல திடீரென கீழ்நோக்கி வேகமாக வந்து மீன்களைக் கவ்விக்கொண்டு செல்வதும் இதில் வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கப்படும்.
அஸதிஸ வண்ணம
நிகழ்வில் இறுதியாக இடம்பெறும் வண்ணம அஸதிஸ வண்ணம ஆகும். கௌதம புத்தரைப் போற்றிப் புகழும் இந்நடனம் அஸத்ருச வண்ணம எனவும் அழைக்கப்படும். வாழ்வில் இன்பம் தரத்தக்க நிகரற்ற பரம்பொருளாக புத்தபிரான் இங்கு வர்ணிக்கப்படுவார். இந்நடனம் ஒரு அஞ்சலி நிகழ்வாகவே அமையும். ஏனைய தெய்வங்களின் அனுமதியோடு ஆனந்த மயமான இந்நடனத்தினை தான் ஆடுவதாக நடனக் கலைஞர் இதன் போது எடுத்தியம்புவார்.
முடிவுரை
இங்கு சொல்லப்பட்ட 18 வகையான வண்ணம நடனங்கள் தொடர்பிலான வெளிப்பாடுகள் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டமையும் தன்மையில் பல்வேறு தகவல்களையும் நமக்குத் தருகின்றன. இதன்மூலம் மிக முக்கியமாக வளமிக்க கண்டிப் பிரதேசத்தில் அம்மக்களது கலையம்சம் பொருந்திய அக்கால வாழ்வியலை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. அத்தோடு கூடவே கண்டிப் பிரதேசமானது இந்து மதத்தின் பிணைப்பினையும், தமிழ்மொழியின் இணைப்பினையும் எவ்வாறு தன்னுள் உள்வாங்கியிருக்கின்றது என்பதனையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
சான்றாவணங்கள்
1. Ragavan.M.D, Sinhala Natum - Colombo
2. Wickramasingha Martin, Sinhala Liturature, Colombo
3. Sarathchandra E.R, The Folk Drama of Ceylon, Colombo - 1969
4. Makuloluwa, W.B, Dances of Sri Lanka,1976 - Dept. of Cultural Affairs
5. Almut Jayaweera - Vannama:A Clasical Dance Form and its Musical Structure
6. Coomaraswamy Rathika. The Art of Chithrasena. Tamil Week News 2006
7. Gunawardena, H.W, SriLanka Nattum Sampradhaya 1982
8. Nihal Kumara, Sinhala Nattum, Colombo -2005
9. Seneviratna , Anuradha, Traditional Dance of Sri Lanka, Ministry of Cultural Affairs - 1984
10. லீலாம்பிகை செல்வராஜா, நடன சாரம் - யுனி ஆர்ட்ஸ் 2001
11. சிவசாமி. வி,பேராசிரியர், இலங்கையின் சாஸ்திரிய நடனங்கள் , ஏழாலை 2011
12. சிவசாமி. வி.பேராசிரியர், தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள்.1998
13. இரகுராமன். சே முனைவர், இலட்சுமி ராமசாமி - நடனக் கலைச்சொல் களஞ்சியம்.
14. முனைவர் தாக்ஷாயினி பிரபாகர், பரத நாட்டியமும் கண்டிய நடனமும் - முனைவர் பட்ட ஆய்வு- 2015
15. தகவல்கள்: விஸ்வகலாகீர்த்தி லயனல் சிறிசேன -மூத்த வெஸ்நடனக் கலைஞர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.