இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தமிழர் அனைவரும் இசைத்த ‘பறை’ - பகுதி 1

முனைவர் சு. மாதவன்


0.1அறிமுகம்

இந்தத் தலைப்பை மிகச் சரியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், “உலக மானுடம் இசைத்த பறை” என்று சிந்திக்க வேண்டும். இது மானுட சமூக இயங்கியல் தரும் நோக்கு நிலையாகும். மானுட சமூகம் காட்டுமிராண்டி நிலையிலிருந்து வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம், தொழில்நுட்பச் சமூகம் என்ற முப்பெரும் பரிணாம - பரிமாண நிலைகளை எட்டி வளர்ந்து வந்துள்ளது. காலந்தோறும் இயற்கை கற்றுத்தந்த - உலக இயற்கையும் மானுட இயற்கையும் ஒத்திசைவோடு கற்றுத் தந்த - செல்நெறிகளுக்கிடையே ஊடாடி, உயிரோடி நிற்கிறது மானுட வாழ்வு. இவற்றிலிருந்து மானுடன் அகநிலையில் கற்றுக் கொண்டது ஏராளம்; புறநிலையில் படைத்துக் கொண்டதும் ஏராளம். இத்தகைய அகநிலை உணர்வும், புறநிலைத் தேவையும் இயைய உருவானவையே மானுடப் படைப்பாக்கங்கள். இப் படைப்பாக்கங்களில் நுகர்வும் பகிர்வும் மகிழ்வும் உறைந்து நிறைந்து ததும்புகின்றன. இவ்வாறு, மானுட வரலாறு படைத்தளித்த மகத்தான உணர்நிலைப் படைப்பாக்கங்களே கலைகள். அவற்றுள், உணவும் உணர்வும் பெற்றெடுத்த பயனுறு நயன்மிகு கவின்கலைக் கருவி “பறை”.

வேட்டைச் சமூகத்தில் உருவாகி, வேளாண் சமூகத்தில் உருமாறி, தொழில்நுட்பச் சமூகத்தில் கருமாறி நிற்கிறது பறை; இந்தப் ‘பறை’ உலகெங்கும் தோன்றி, வளர்ந்து, மிளிர்ந்து, தளர்ந்து, அழிந்து நிற்கிறது - உழைப்பாளியைப் போலவே. மாற்றம் என்பது மானுடச் சமூக இயங்கியலின் இயல்பு என்றவாறு மானுடச் சமூக வளர்ச்சிக்கான வேட்டைச் சமூகத்தின் உணவுத் தேடலில் எல்லா மனிதரோடும் இருந்த ‘பறை’ இன்று ‘பறையன்’ என்ற வீழ்ததப்பட்டவரிடமிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பொது வெளியைத் தன் அதிர்வலைகளால் நிறைக்கும் பயில்கலைக் கருவியாக மாறியுள்ளது. இந்நிலையில், பறையின் பன்முகப் பரிமாணங்களை மானுட ஒர்மைச் சிந்தனை நோக்குநிலையில் ஆராய முனைகிறது இக் கட்டுரை.



1.0 மானுட வரலாற்றில் ‘பறையின்’ தோற்றம்

வேட்டைச் சமூக வாழ்நிலையின் இயல்போக்கு பறையின் தோற்றத்திற்கான அடிப்படையை நல்கியுள்ளது என்பதை, (பறை - பக். 14-15)

என்ற விவரிப்பு உறுதிசெய்கிறது. இக் கருத்தை முனைவர் மு.வளர்மதி ஒரே வாக்கியத்தில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்:

“பறையின் தோற்றம் மனிதனுக்கு இயற்கை
வழங்கிய கொடை”
(வளர்மதி., மு. 2009:16)

இக் கட்டுரையாளர் இதுகுறித்து நீண்டகாலமாகச் சிந்தித்து வந்த கருதுகோள்களின் அடிப்படையிலான பறையின் புழங்குதளங்கள் வருமாறு:

1. வேட்டைச் சமூகத்தில் தனியொரு மனிதனாக உணவு தேடச் சென்று தேவையான அளவு கிடைக்காத நிலையில், ஒரு குழுவாகச் செல்வதற்கு முயன்றபோது குழுவினர் விரட்டிய வேட்டைப்பொருள் அடர்ந்து செறிந்த சிட்டைக்குள் (சிறுகாடு அல்லது புதர்) ஒளிந்து தப்பியக்க முயன்றிருக்கும். திக்குத் திசைகளுக்குப் பெயர்வைக்கப்படாத - மொழி தோன்றாத காலத்தில் சங்கேத ஓசை எழுப்பிக் குறியீட்டுத் திசை உணர்த்தவும் வேட்டைப் பொருளை மிரட்சி கொள்ளச் செய்யவும், மனிதன் உருவாக்கிக் கொண்ட முதற் தோற்கருவி ‘பறை’ யாய் இருந்திருக்கலாம்; குழலும் கூட.

2. வேட்டைச் சமூகம் இனக்குழுச் சமூகமாய் வளர்நிலையிலிருந்த காலத்திலும், வேளாண் சமூகமாய் துளிர்நிலையிலிருந்த காலத்திலும் ஒரு குழுவினரை ஓரிடத்தில் கூட்டித் திரட்டவும் ஆநிரை கவர அயற்புலம் சென்று திரும்புவதற்கான உணர்ச்சியை ஊட்டவும் ‘பறை’ பயன்பட்டிருக்கலாம்; குழலும் கூட.

3. வேட்டைக்கும் ஆநிரை கவர வெட்சிப் போருக்குச் சென்ற காலத்தில் களத்தொழிந்த போர் வீரர்களை அவரிசைத்த பறையையே அவருக்கிசைத்து ஆங்காங்கே புதைத்த காலத்திலும் ‘பறை’ இசைக்கபட்டிருக்கலாம்; குழலும் கூட.

4. எல்லா மானுட இனக்குழுக்களுமே தன் உணவுத் தேவைக்கும் உணர்வுத் தேவைக்கும் அவ்வக்களங்களில் இசைத்த பறையின் நீட்சியாய் ஆர்ப்பரித்துக் களிக்கவும் போர் நடத்தி வெல்லவும் புதைக்குழிக்கு அனுப்பவும் ‘பறை’ இசைத்திருக்கலாம்; குழலும் கூட.

5. வாழ்வியல் தேவைக்கும், இன்பியல் கொண்டாட்டத்துக்கும், இறுதியல் இசைவுக்கும், எல்லா மானுட இனக்குழுக்களுமே அவரவர் தம் குடியிருப்புத் தளங்களிலும் “பறை” இசைத்திருக்கலாம்; குழலும் கூட.

மேலும் மேலும் இதுபோன்ற பழங்குதளங்கள் மேலாய்வுகளாலும் மீளாய்வுகளாலும் கண்டறியப்படலாம்.

1.1 பறை - கலைச்சொல் உருவாக்கப் பின்புலங்கள்

தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலைத் தகவமைப்பன முதற்பொருள்களும் கருப்பொருள்களும் ஆகும். முதற்பொருள்களான நிலமும் பொழுதும் வாழ்வியல் தொழிற்படுவதற்கு இன்றியமையாக களங்களாகத் திகழ்வன. நிலமும் பொழுதும் இன்றேல் கருப்பொருள்கள் உருவாக மாட்டா. இத்தகைய கருப்பொருள்கள்;

1. உயிருள்ளன

2. உயிரற்றன

3. உருவாக்கப்படுவன

என்ற முப்பரிமாண இயல்புகளைப் பெற்றுள்ளன.

இவற்றுள், உருவாக்கப்படுவனவற்றுள் கலைசார் கருவிகளாக விளங்குபவை பறையும் யாழும். இவை இரண்டும் ஐந்து திணைகளிலும் இடம் பெற்றிருப்பதற்கான சமூகப் பின்னணி ஆழமாக ஆராயப்பட வேண்டியது.

முல்லை - ஏறுகோட்பறை

குறிஞ்சி - தொண்டகப் பறையும் வெறியாட்டுப் பறையும்

பாலை - ஆறலைப் பறையும் சூறைகொண்ட பறையும்

மருதம் - நெல்லரிப் பறை

நெய்தல் - நாவாய்ப் பறை (தொல்.பொருள். இளம்.2005: 17-18)

‘பறை’ என்பது இன்று இசைக்கருவியாக வழங்கப்படுகிறது. அதாவது பறையர்கள் என்ற கலைஞர்களுக்குரியதாகப் பறை அறியப்படுகிறது. ஆனால் பல்வேறு தொழில்களுக்கும் பயன்படு கருவியாகப் பறை இருந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன:

1. வேட்டைப் பறை (குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை)

2. வேளாண் பறை (மருதம், குறிஞ்சி, முல்லை)

3. புறப் பறை

4. அகப் பறை

5. கலைப் பறை

6. ஒலிகளின் பொதுப்பெயர் - ‘பறை’



1.1.1 வேட்டைப் பறை

மனித குலத்தின் உயிர்வாழ் தேவையான உணவு தேடுதலே ஆகும். காய்கனிகளைச் சேகரித்து உண்டு வாழ்ந்த மனித சமூகம், காய்கனி பற்றாக்குறை நேரவே உணவுக்கான மாற்றுவழித் தேடலில் கண்டறிந்ததே விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பது. உண்ட இறைச்சி போக எஞ்சியதால் தூக்கி எறியப்பட்ட தோல், மரக்கிளைகளில் நீண்ட நாள் காய்ந்ததன் பின் அதில் படும் விசையான காற்று, மரக்கிளைக் குச்சிகள், இலைகள் ஆகியவற்றால் ஏற்படும் உரசல்களால் அதுவரை கேட்டறியாத இனிய ஒலிகள் உண்டாயின. இதிலிருந்து மனிதனின் படைப்பாக்கச் சிந்தனையும் இணையப் படைக்கப்பட்ட ஆக்கமே ‘பறை’. இந்த இசைக்கருவி முதலில் ஒலியுணர் இரசனைக்காகவே உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இரசனையால் கண்டறியப்பட்ட பறையைத் தற்செயலாகத் தனியொருவனோ இருவரோ குழுவோ அடித்த போது, குறிஞ்சி, முல்லை நிலக் காடுகளில் அருகில் மரச்செறிவில் பதுங்கியிருந்த விலங்குகள் வெருண்டு ஒடியிருக்கக் கூடும். இதைக் கண்ட மனிதன் இந்தப் பறையை அடித்துக் கொண்டே வேட்டைக்குப் போனால் விலங்கு ஏதேனும் ஒரு திசைக்கு வெளியே வந்து மிரண்டு ஓட முயலும். இத்தகைய நேரத்தில் இருவரோ, சிலரோ, பலரோ சூழ்ந்துகொண்டு பிடித்தால் விலங்கு அகப்படும் என்ற நோக்கில் பயன்படுத்தப்பட்டதே வேட்டைப் பறை. இந்தச் சூழலில் ‘பறை’ பயன்படுவதற்கு முன்பு இந்த இடத்தில் கையொலி, சீழ்க்கை ஒலி எனப்படும் சங்கதே ஒலிகள் பயன்பட்டிருக்கும் என்று கருதலாம்.

சங்க இலக்கியச் சமூகம் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகத்துக்கு நகர்ந்து கொண்டிருந்த சமூகம் என்பதால், இந்தச் சமூகத்தின் இலக்கியங்களில் இவற்றின் பதிவுகள் இயல்பாகவே பதிவாகும். இந்த நோக்குநிலையில், சங்க இலக்கியங்களை அணுகுகிற போது பறை குறித்த பதிவுகளில்; மேலே கண்ட வேட்டைச் சமூகக் கூறுகள் தென்படுகின்றன.

வெண்கடம்ப மரத்தால் பறை செய்யப்பட்டுள்ளது. அப்பறை ஆண் யானையின் காலடிப் பாதத்தைப் போல் வட்டவடிமாக உள்ளது:

“... ... ... ... ... மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்”
(அகநா. 211: 2-3)

யானையின் காலடிப் பாதத்தை யானைவேட்டையின் போது கண்டறிந்திருக்கின்றனர். அதன் பாதம் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட பறையின் வட்டவடிவம் போல் இருந்துள்ளதை ஒப்புநோக்கியுள்ளனர். இதன்வழி, பறையின் வட்டவடித்தின் உள்பகுதி சிவந்தவெண் பகுதியாகவும், அதன் வட்ட எல்லைப் பகுதிகள் கடம்ப மரத்தால் பிணைக்கப்பட்டிருந்தால் கருமைப் பகுதியாகவும் தோன்றின என்றவாறு பறையின் வடிவமைப்பும் யானையின் உள்பாத வடிவமைப்பும் ஒப்புநோக்கப்பட்டுள்ளமை அறியலாகிறது. ‘பறை’ எனும் திணை வாழ்வியலுக்குரிய கருப்பொருளை ‘கடம்ப மரம்’ எனும் கருப்பொருளால் படைத்துள்ளனர் என்பதும் அது அன்றைய ‘வேட்டைத் தொழில்’ என்னும் கருப்பொருளுக்காகப் பயன்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது.



1.1.2 வேளாண்பறை

நாளடைவில், வேட்டைச் சமூகம், இறைச்சித் தேடலிலும் பற்றாக்குறை நேரவே உணவுக்கான மாற்றுவழித் தேடலின் விளைவே இயற்கைத் தானிய விளைவு. செயலால் தானிய விளைச்சலாகி கண்டறியப்பட்டன உருவாக்கப்பட்டன என்பது வேளாண்மை உருவாக்கம் நிகழ்ந்தது. இவ்வாறு, மனித சமூகம் தனக்கான தேவைகளுக்காகக் கண்டறிந்த ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் உருவாக்கங்களும் கண்டறியப்பட்டது, உருவாக்கப்பட்டது என்பது தேவைக்கான தேடல்முயற்சி இல்லாமலேயே மனிதனின் இயல்புகளான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் இயல்புக்கத் திறன்களும் தேடல்முயற்சிகளோடு ஒருங்கியையத் தோன்றியவையே ஆகும். இந்த வகையில், இயற்கையை உற்றறிவதால் கற்றறிந்து கண்டுபிடித்த ஒவ்வொன்றும் வாழ்வியல் தேவைகளுக்கான புழங்கு பொருள்களாக மாறுகிறபோது புத்தம்புதிய பரிமாணங்களையும் பரிணாமங்களையும் பெற்று விடுவதென்பது சமூக இயங்கியல் நியதியாகும்.

வேட்டை நிகழ்த்த பறை பயன்படுத்தப்பட்டது போலவே வேளாண்மை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1.1.2.1 பறவை, விலங்குகளை விரட்ட ...

குறிஞ்சிநில மக்கள் தினைப்புனத்தைக் காவல் காக்கும் போது கிளி, குருவி, பன்றி உள்ளிட்ட பறவை விலங்குகளை விரட்டத் தொண்டகச் சிறுபறை, பன்றிப்பறை போன்றவற்றை அடித்து இசைத்துள்ளனர்:

"சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும் ... ... ... ... ... ”
(மலைபடு. 343 -344)

“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும்”
(நற். 4-6)

பன்றி விரட்ட இசைத்த பறை ‘பன்றிப்பறை’ என்பது பாடல் தரும் செய்தி. பன்றித் தோலால் செய்த பறை ஆகலாம். பன்றிபோல் கர்முர் என மெலிந்தும் வலிந்தும் ஓசை எழுப்பும் பறையாகலாம்.

தொண்டகச் சிறுபறை என்பது ‘தொண்டு + அகம் + சிறிய + பறை என விரியும். ‘தொண்டு’ என்பதற்குச் ‘சிறுவழி’ என மக்கள் வழக்கில் பொருள் உள்ளது. இதைப் பறைக்குரியதான பொருளாகக் கொள்ள வேண்டுமெனில் ‘சிறுகுழி’ எனலாம். அழுத்திக் குத்தி அடித்ததால் ஏற்பட்ட சிறுகுழியை உடைய சிறுபறையின் அதிர்வொலி கேட்போரின் / கேட்பவற்றின் மனதை நடுங்கச்செய்து அச்சம் கொள்ளச் செய்வதாகலாம். தொண்டகச் சிறுபறையின் இசையொலி பறை இசைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தற்செயலாக, இருந்த தினைப்புனத்தில் மேய்ந்துகொண்டிருந்த கிளிகளை விரட்டியது. ஒரு வினையின் துணைவினையாக இது நிகழ்ந்துள்ளது.

1.1.2.2 களையெடுக்க ...

முல்லை நிலத்தில் விளையும் வரகினிடை வளர்ந்த களைகளைப் பிடுங்கியெறியும் போது ‘குனிந்து களைப்பிடுங்கி எறியும் செயலின் கால அளவுக்கு ஏற்ப முடுகிமுடுகி ஒலிக்குமாறு பறை இசைக்கப்பட்ட பான்மையை,

"கறங்கபறைச் சீரின் இறங்க வாங்கிக்
களைகால் கழீஇய பெரும்புன வரகின்’
(அகநா. 194: 7-9)

என்ற பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன.



1.1.2.3 கதிர்அறுக்க ...

கதிர்; அறுவடையின் போதும் பறை இசைக்கப்பட்டுள்ளது. வயலில் இறங்கிப் பலர் கதிரறுக்க ஓரிருவர் வயல்வரப்பில் இருந்து ‘நெல்லரிப் பறை’ இசைத்திருப்பர் போலும். நெல் அறுக்கப் பயன்பட்ட பறை ‘நெல்லரிப் பறை’ எனப்பட்டது. குனிந்து நெற்கதிரின் தாளை அறுத்து எழுந்து அரிஅரியாகப் போடுவது வரையிலான செயலின் காலஅளவுக்கு ஏற்ப அறுத்தலின் ‘கறுக்முறுக்’ எனும் ஒசையுடன் பாம்பு விரல், பெருவிரல் தேய்ந்து முடுக்கி ஒலிப்பது ‘நெல்லரிப் பறை’ ஆகலாம்.

"ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிப்பறை”
(மது. 261-262)

"கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப் புந்து”
(புறநா. 396 : 3-4)

மருத நிலத்தில் விளையும் நெற்கதிர்களைத் தின்னவரும் பறவைகளை விரட்டவும், கதிர் அறுவடையின்போது உற்சாகம் குறையாமல் உழைக்கவும் பறை இசைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘அரிப்பறை’ என்று பெயர்.

அரிப்பறை என்னும் பெயர், இப் பறையினின்று எழும் ஒசையைக் கொண்டு உண்டான பெயராகலாம். கதிர் அறுக்கின்ற போது - கதிரின் அடித்தாளை அறுக்கின்றபோது எழுகின்ற ‘சரட்சரட்... ... கறுக்முறுக்’ என்ற ஓசையை போல் இசைக்கப்படும் பறை என்பதால் ‘அரிப்பறை’ எனப் பெயர் வந்திருக்கலாம். உரையாசிரியர்களும் ‘அரித்த ஓசையுடைய பறை’ என்று விளக்கம் எழுதியுள்ளமையும் ஈண்டு சுட்டத்தக்கது.

1.1.3 புறப்பறை

வேட்கை, வேளாண்மை ஆகியனவும் புறத்தினுள் அடங்கும். எனினும், சிறப்பான இன்றியமையாத் தொழில்கள் என்ற அடிப்படையில் அவை தனித்தனியே ஆராயப்பட்டுள்ளன. சமூகத்தில் நிகழும் அகம் அல்லாதன எல்லாம் புறம். சமூகச் செயற்பாடுகளில் பறையின் பங்களிப்பு நிகழ்த்தப்பட்டு வந்துள்ள பான்மையைக் காணும்வகையில் ‘புறம்’ என்பதில் பறை சேர்த்துப் ‘புறப்பறை’ எனக் கொள்ளப்பட்டது. இங்கு ‘புறம்’ என்பதில் அக் கால நிகழ்வுகளின் அடிப்படையில் போர் மிகுதியாக நிகழ்ந்ததால் ‘போர்ப்பறை’ எனவும் வழங்கப்படுகிறது.

போரின் தொடக்கத்துக்கான அறிவிப்பு, போருக்காகப் படை புறப்பாடு, போர்ப்பயணம், போர் நிகழ்வுகளின் பல்வேறு படிநிலைகள் என எல்லா நிலைகளிலும் ‘போர்ப்பறை’ இசைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய தொல்காப்பிய வரையறைகளின்படி ஏழு திணைகளிலும் ‘பறை’ இடம் பெற்றுள்ளது. ஆனால், எல்லாத் திணைப் பாடல்களிலும் ‘பறை’ என்பதன் வேறுபெயர் கொண்ட பறை வகைகள் நிறைய இடம்பெற்றுள்ளன.

இந்தக் கட்டுரைக்கான திரட்டலின்வழி, தும்பை, உழிஞை, வாகை, பாடாண் ஆகிய நான்கு திணைகளிலும் பறை முழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

தும்பை

“எடுத்தெறி அ(ய)னந்தற் பறைச்சீர் தூங்க
பருந்தருந் துற்ற தானையொடு... ...”
(புறநா. 62:5)

உழிஞை

“பொன்புனை உழிஞை வெல்வோர்க் குட்டுவ
போர்த்துஎறிந்த பறையால் புனல்செருக் குநரும்”
(பதிற். 22:27-28)

“வன்புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்இகல் படுத்து”
(பதிற். 25 : 9)

வாகை

“செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி”(புறநா. 279: 7)

பாடாண்

“நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொ டேர்வழி”
(புறநா. 68: 14)

“இன்னிசைப் பறையொடு வென்றி நுவல” (புறநா. 225: 10)

தும்பைத் திணை என்பது இருபெரும் வேந்தரும் பொருதுதலாகும்.

இந்தத் திணைப் பாடலில் ‘அனந்தற் பறைச்சீர்’ என்ற கவின்கலைச் சொல் இடம் பெற்றுள்ளது. ‘மந்தமான ஓசையையுடைய பறையினது தாளம்’ என்பது இதன் பொருள். தும்பைத் திணையில் ‘மந்தமான ஓசை’ ஏன் இடம்பெற வேண்டும் என்பது ஆராயத்தக்கது.

உழிஞைத் திணை என்பது எயில் அழித்தலாகும். இத் திணைப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘பறையால் புனல்செருக்குநர்’ என்பதற்கு ‘நீரின் எயிலை (அரணை) பறையொலியாலே மோதி அழிக்கும் இயல்புமிக்கோர்’ என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறாயின், பறையொலியின் வன்மை புலனாகிறது.

அரும்பறை வினைஞரின் இசை புல்இகல் படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பதிற்றுப்பத்து நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.

வாகைத் திணை என்பது வெற்றித் திணையாகும். வெற்றிபெற முதற்கண் தேவைப்படுவது வீரம். அத்தகைய வீரவுணர்ச்சியைத் தூண்டியெழுப்பும் பறையாகச் ‘செருப்பறை’ முழக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

பாடாண்திணை என்பது ஆண்மகனது சிறந்த ஒழுக்கங்களைப் பாடுவதாகும். இங்கு மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ள பாடல்களில் ஒன்றில் ‘தணிபறை’ என்ற கலைச்சொல்லும் மற்றொன்றில் ‘இன்னிசைப்பறை’ என்ற கலைச்சொல்லும் பயன் கொள்ளப்பட்டுள்ளது. ‘தணிப்பறை’ என்பது தோளை நிமிர்த்த இசைக்கப்படும் போர்ப்பறை போல் போர் முடித்துத் திரும்பும்போது இசைக்கப்படும் ‘தணிவான இசையுடையபறை’ யைக் குறிக்கிறது.

‘இன்னிசைப் பறை’ என்பது வெற்றியை அறிவிக்க ‘இனிய இசையுடன் இசைக்கப்பட்ட பறை’யைக் குறிக்கிறது. ஆக, ‘போருக்குப் புறப்பட வேண்டும் வீரர்கள்’ என அறிவிக்கும்போதும் போர்வழி நடையின்போதும் போருக்கு நெருக்கமான நேரத்தில் வீரஉணர்ச்சியை மிகுதிப்படுத்தும் போதும் திரும்பி உணர்ச்சியை மிகுதிப்படுத்தும் போதும் திரும்பி வரும்வழியும் போர் உணர்வின் உணர்ச்சியின் தணிவை ஏற்படுத்தும் போதும் பெற்ற வெற்றியை அறிவிக்கும் போதும் எனப் பல்வேறு நிலைகளில் புறவாழ்க்கையில் பறை இசைக்கப்பட்டுள்ளது.



1.1.4 அகப்பறை

புறப்பறை எனப் பார்ப்பறையாக எழுந்த பறை, புறவாழ்வியலின் இசைவுக்கு ஏற்ப மெல்லியதாகவும் வல்லியதாகவும் இசைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போருக்குச் செல்லும் வழியில் வீரன் ஒருவன் மறைந்தால் / இறந்தால் - வீரப்பறையைச் சார்ப்பறையாகக் கொட்டிப் புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருப்பர் சங்கத் தமிழர். இவ்வாறு, பிணப்பறையாக இசைக்கப்படும் பறை’ ‘மணப்பறை’ யாகவும் இசைக்கப்பட்டது. இதை,

‘பறைபடப் பணிலம் ஆர்ப்ப’ (குறுந். 15 : 1)

என்ற பாலைப் பாடலடி புலப்படுத்துகிறது.

போருக்கு யானைப் படை புறப்பட்டால் பறையறைந்து அறிவிப்பது தானே அரசன் கடமை. அதைப்போல், என் உள்ளத்தை அழிக்கும் பெண்ணே! நீ தெருவில் வரப்போகிறாய் என அறிவிக்காமல் விட்டது அரசனின் மடமை என்பதை,

“பறையறைந் தல்லது செல்லற்க! என்னா
இறையே தவறு உடையான்”
(கலித். 56 : 33-34)

என்ற குறிஞ்சிப் பாடலடிகள் தெரிவிக்கின்றன.

“கலைஞன் என்ன உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறானோ அந்த உணர்வை வெளியிடவல்லது பறை. அதுமட்டுமல்ல; பறை இசையைக் கேட்கிறபோது என்ன உணர்விலிருக்கிறோமோ அந்த உணர்வை மிகுவிக்க வல்லதாகவும் பறையிசை திகழ்கிறது. அதுபோல், நின் நெஞ்சம் விரும்பியதே கனவாகக் காண்கிறாய்” என்று தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதை,

“ஓர்த்தது இசைக்கும் பறைபோல் நின்நெஞ்சத்து
வேட்டதே கண்டாய், கனா”
(கலித். 92 : 21-22)

என்ற மருதக்கலிப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

“நம் தலைவன் எங்கோ வெளியோ சென்றுவிட்டான். அவன் சென்றதும் எனக்கு ஏற்பட்ட பசலையால் ஊருக்கெல்லாம் பறையறைந்து பரப்பப்பட்ட அலரைத்தானே நமக்கு விட்டுச் சென்றுள்ளார்” என்று தலைவி தோழியிடம் சொல்வதை,

“அறையிறந் தவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக் கொழித்தே”
(அகநா. 281: 12-13)

என்ற பாலைக்கலிப் பாடலடிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, மணநிகழ்வு, அழகின் நெகிழ்வு, உணர்வின் பிழிவு, அலரின் மிகுதி போன்ற அகப்பின்னணிகளைத் துல்லியமாக வடித்துத் தருவதாகப் பறை இசைக்கப்பட்டுள்ளமை தெளிவு.

1.1.5. கலைப்பறை

வேட்டை, வேளாண்மை, போர், வாழ்க்கை எனப் பல நிலைகளிலும் பயன்படு கருவியாகவும் பயன்படு கலையாகவும் பொதுத்தன்மையில் இடம் பெற்று வந்த பறை, கலைநிகழ்வுகளவில் மட்டுமே இடம்பெறும் கலைப்பறை என்னும் தனித்தன்மையுடனும் பயன்கொள்ளப்பட்டு வந்துள்ளது. சங்க காலத்தைப் பொருத்தஅளவில் தொழில்சார் பறை, கலைசார் பறை என இருவேறு நிலையைப் பறை எய்தியிருந்தது. தொழில்சார் உழைப்பாளிகளில் சிலர் ஓய்வுநேரங்களில் கலைசார் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். முழுக்க முழுக்கக் கலையை மட்டுமே தன் வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் கலைஞர்களும் இருந்தனர். ஆனால், இரு நிலைகளிலும் இசைக்கப்பட்ட பறைகளில் கலைத்தன்மையே மிக்கிருந்தது. எந்தச்சூழலில் பறை இசைக்கப்படுகிறதோ அந்தச் சூழல்உணர்வுக்கு ஏற்ற ஒலிப்பு அளவைக் கொண்டதாக இசைக்கப்படும்.

பெரும்பாலும் தொழில்சார் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பறை, காலப்போக்கில் பறை இசைப்பு நுட்பங்களில் கலைத்தன்மை மிகவே தனித்த கலைக்குடும்பங்ள் தோன்றி கலைச்சமூகமாகப் பறையாக - பறைக்கலைச் சமூகமாகப் பரிணமித்துள்ளது. இத்தகைய கலைஞர்களின் கைகளில் கலைநயம் மிளிரும் வண்ணம் இசைக்கப்படும் பறையையே ‘கலைப் பறை’ என்கிறோம்.

குறிஞ்சி, நெய்தல், பாலை ஆகிய மூன்று திணைகளில் ‘கலைப்பறை’ உருவாகி வந்த பாங்கைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.



1.1.5.1 ஆட்டக்கலை

குறிஞ்சி நில மக்கள் குரவைக்கூத்தின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள். இவர்கள் ஆடிய குரவை ‘குன்றக் குரவை’ எனப்பட்டது. இத்தகைய குரவையாட்டத்திற்குப் பறை இசைக்கப்பட்டதை,

“நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரவை”
(மலைபடு. 320 - 322)

என்ற பாடலடிகள் எடுத்துக் காட்டுகின்றன.

முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் நிகழ்ந்ததன் பின்னர் ஆயரும் ஆய்ச்சியரும் ஆடிய குரவை ஆட்டத்திற்குப் பறை இசைக்கப்பட்ட காட்சியைப் பின்வரும் பாடலடிகள் காட்சிப் படுத்துகின்றன:

“அவ்வழி, பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள்எதிர் எடுத்த
நுறைவலம் செயவிடா இறுத்தன, ஏறு”
(கலித். 104: 29-31)

இதேபோல், கொடுகொட்டி ஆடுவதற்கும் பறை இசைக்கப்பட்டது என்பதை,

“படுபறை பலஇயம்ப பல்உருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி ஆடுங்கால் ... ... ... ... ... ”
(கலித். 1 : 5-6)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

அகநானூற்றுக் குறிஞ்சிப் பாடலில் பறையிசைக்கப் பெண்டிராடிய நிகழ்வை,

“தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ”(அகநா.118 : 3)

என்பது தெரிவிக்கிறது. அகநானூறுப் பாலைப்பாடல் ஒன்று அறுவடை நேரத்தில் குவிக்கப்பட்ட நெற்களத்தில் ஆடுமகள் ஆடிய செய்தியையும் ஆடிக் கொண்டே அரிக்கோற் பறை அடித்த செய்தியையும் பதிவு செய்துள்ளது:

“தாறுசினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக்கோற் பறையின் ஐயென ஒலிக்கும்”
(அகநா. 151 : 9-10)



1.1.5.2 கலைஞர்கள்

பறையுடன் இணைந்த, இசைந்த, இசைத்த கலைஞர்கள் பலர் சங்ககாலத்தில் இருந்துள்ளனர். பாணர், ஆடுமகள், கலப்பையர், கிணைமகன் எனப் பலர் அவ்வாறு குறிக்கப் பெறுகின்றனர்:

நற்றிணைப் பாலைத்திணைப் பாடலில் பறையொடு பாணர் இடம் பெற்றுள்ளனர் :

“ ... ... ... ... ... பாணர்
அயிர்ப்பு கொண்டன்ன கொன்றைஅம் தீங்கனி
பறைஅறை கடிப்பின் ... ... ... ... ... ”
(நற். 46 : 5-7)

கலைஞர்கள் தங்கள் தோளில் செவ்வரிப் பறையைக் கோத்தபடி நெய்தில் திணையில் இசைத்துள்ளனர்.

“சிறுதோள் கோத்த செவ்வரிப் பறை” (நற். 58 : 2)

புறநானூற்று வாகைத் திணைப்பாடல் ஒன்றில் கலைக்கருவிகளை ஒருசேர வைத்துக் கலப்பையர் எனப்படும் கலைஞர்கள் தூக்கிவரப் பயன்படுத்தும் ‘கலப்பை’ என்னும் பையில் பறையும் இடம் பெற்றிருந்தது என்பதைத் தெரிவித்துள்ளது.

“பறையொடு தகைத்த கலப்பை” (புறநா. 371 : 5)

கலைஞர்களான இரவலர்கள் பாடி, இசைத்து, ஆடிவந்ததைக் கரந்தைப் பாடல்,

“... ... ... ... ... ஒருகண்
இரும்பறை இரவல ... ... ... ... ... ”
(புறநா. 263 : 1-2)

என்று சுட்டுகிறது. இதைப் போலவே, கிணை எனும் கிணைப்பறையை இசைக்கும் கலைஞன் பாடாண்திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளான்.

“இரும்பறைக் கிணைமகன்” (புறநா. 388 : 3)

1.1.5.3 ஓவியக்கலை சார்ந்து...

மயிற்பீலியைக் கண்ட ஒரு புலவர் அது பறையின் கண்போல் அமைந்துள்ளது என்னும் கற்பனை ஒவியக் காட்சியைப் பாலைப்பாடலில் பதிவுசெய்துள்ளார்: “பறைக்கண் பீலி” (அகநா. 15 : 4) சுனைநீர் தேங்கிக் கிடக்கும் அழகைக் கண்ட ஒருபுலவர் சுனைநீர் வட்டவடிவில் கிடப்பதையும் அத் தண்ணீர் தெண்ணீராயினும் தூரத்துக் காட்சிக்குக் குழிபட்ட வட்டத் தண்ணீரின் காட்சி பறையின் கண்போல் தேனாறுவதாகக் காட்சிப்படுத்தியுள்ளார் குறிஞ்சிப் பாடல் ஒன்றில் :

“பறைக்கண் அன்ன நிறைச் சுனை” (அகநா. 178 : 3)



1.1.6 ஒலிகளின் பொதுப்பெயர் - ‘பறை’

மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியினூடாகக் கடந்து வந்த ஒவ்வொரு சமூகப் படிநிலைகளிலும், அதாவது, வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம் தொடங்கி எல்லா நிலைகளிலும் ‘பறை’ எனும் இசைக்கருவி பல்வேறு வடிவங்களில், பல்வேறு தொழில்களில் இசைக்கப்பட்டு வந்துள்ளது. சுருங்கச் சொன்னால் ‘பறை’ இன்றேல் பரிணாம வளர்ச்சியே இல்லை எனலாம். அந்த அளவுக்கு மனித சமூகத்தின் ஒவ்வொரு செயல்களிலும் பறை நீக்கமற நிறைந்திருந்திருக்கிறது.

1. வேட்டையாட

2. செய்தியறிவிக்க

3. பெருகிவரும் வெள்ளத்தை அடைக்க

4. உழவரை அழைக்க

5. வீரர்களைத் திரட்ட

6. வெற்றியைக் கொண்டாட

7. வேலைச் சோர்வு குறைத்து உற்சாகமூட்ட

8. விதைக்க

9. அறுவடை செய்ய

10. விலங்கு, பறவைகளை விரட்ட

11. வழிபட

12. கூத்துக்கட்ட

13. பாட்டுக்கட்ட

14. விழாக்கள் களைகட்ட

15. மணவிழா கொண்டாட

16. இறப்பைச் சொல்லவும் கொண்டு சேர்க்கவும்

எனப் பல்வேறு சூழல்களில் பறை இசைக்கப்பட்டுள்ளது; அடிக்கப்பட்டுள்ளது; முழங்கப்பட்டுள்ளது; வாசிக்கப்பட்டுள்ளது; தட்டப்பட்டுள்ளது; அதிர்ந்துள்ளது; முழங்கியுள்ளது.

இதுபோல், வாழ்வின் பல்வேறு சூழல்களில் நாள்தோறும் காலை, மாலை என நேரந்தோறும் ஒவ்வொரு பொழுதிலும், ஒவ்வொரு பணியிலும் பறையொலி கேட்டுக் கொண்டே இருந்ததால் எங்கு, எந்த, எத்தகைய ஒலியைக் கேட்டாலும் பறையொலியோடு ஒப்புநோக்கியல்ல, பறையொலியெனவே குறிப்பிடும் பாங்கைச் சங்க இலக்கியம் எங்கணும் கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு மனிதனின் செவிப்புலனுணர்வின் பதிவுப் பகுதிகளிலெல்லாம் பறையொலியே மிகுதியாகப் பதிவாகியிருந்திருக்கிறது என எண்ண வேண்டியுள்ளது.

இதுவரை கண்ட ஒவ்வொரு வகைப் பறைகளில் கண்டுள்ளதைவிட, எவ்வகை, எத்தன்மை ஒலியாயினும் ‘ஒலி’ என்பதன் பொதுப்பெயரே ‘பறை’ என்றே சங்க இலக்கியம் முழுவதும் மிகுதியாகப் பதிவாகியுள்ளது என்பது வியத்தகு செய்தியாகும். அந்த அளவிற்கு பறையொலியை விடுத்துத் தமிழர் வாழ்வைப் பிரித்துப் பார்க்கவியலாத அளவுக்கு பறையொலி நீக்கமற நிறைந்திருந்திருக்கிறது.



பறவைகளின் சிறகொலி பறையொலியாய்...

“பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி” (நெடுநல் : 15)

“துனைபறை நிவக்கும் புள்ளினம் மான” (மலைபடு : 55)

நெய்தல்

“நிறைபறைக் குருகினம் விசும்புஉகந்து ஒழுக” (நற். 369 : 2)

“குணகடற் திரையது பறைதபு நாரை” (குறுந். 128: 1)

“... ... ... ... ... வெண்பறை
நாரை நிரைபெயர்த்து அயிரை ஆரும்”
(குறுந். 166 : 1-2)

“தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல்”(குறுந். 172 : 1)

“விசும்புஆடு அன்னம் பறைநிவந் தாங்கு” (குறுந். 205 : 2)

“பறைதபு முதுகுருகு” (தொல். 180 : 3)

“... ... ... ... ... திரையொலி பறையாக” (கலித். 149 : 1)

“பறைஅறைந் தாங்கு” (கலித். 143 : 13)

“மீனார் குருகின் மென்பறைத் தொழுதி” (அகநா. 40 : 3)

“பைங்காற் கொக்கின் நிறைபறை” (அகநா. 120 : 3)

“தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை” (அகநா. 240 : 2)

“கடும்பறைத் தும்பி” (பதிற். 67 : 20)

“வான்பறைக் குருகின்” (பதிற். 83 : 2)

முல்லை - தேரை ஒலி பறையொலியாய்...

“... ... ... ... ... பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கும் நாடன்”
(குறுந். 193 : 2-3)

வண்டின் சிறகொலி பறையொலியாய் ...

“அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி” (அகநா. 234 : 12)

சேவலின் சிறகொலி பறையொலியாய்...

“மனையுறை புறவின் செங்கால் சேவல்
துணையொடு குறும்பறை பயிற்றி”
(அகநா. 254 : 5-6)

குறிஞ்சி - கிளியின் சிறகொலி

“வண்பறை மடக்கிளி” (அகநா.38 : 12-13)

அருவியின் வீழுரசொலி

“பறைபண் அழியும் பாடுசால் நெடுவரை” (பதிற். 67 : 21)

மருதம் - உள்ளீடற்ற ஆமை ஒட்டின் ஒலி

“குருகு உடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்”
(ஐங். 81 : 1-2)

குருகின் சிறகொலி

“வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்” (ஐங். 76 : 1)

“பறைதடி முதுசிரல்” (அகநா. 106 : 4)

“மென்பறையாற் புள்ளிரியுந்து” (புறநா. 396 : 6)

மக்களின் பேச்சொலி

“வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை”
... ... ... ... ... அறைக எனும்
உரைச்சிறைப் பறைஎழ ஊர்ஒலித் தன்று”
(பரிபா.6 : 23-24)



வையைப் புனலொலி

“ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ
... ... ... ... ... பறைஅறையப்
போந்தது, வையைப் புனல்”
(பரிபா.10 : 7-8)

“ஊர்ஊர் பறையொலி கொண்டன்று” (பரிபா. 20 : 14)

“நிறைபுனல் நீங்கவந்து அத்தும்பி அம்மலர்ப்
புறைதவிர்பு அசைவிடூஉம் பாய்புனல் நல்ஊர!”
(கலித். 78 : 9-10)

பாலை - வெண்நெற்று ஒலி

“... ... ... ... ... ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்”
(குறுந். 7 : 3-5)

மேகத்தின் இடியொலி

“பறைக்குரல் எழிலி” (அகநா. 23 : 2)

பருந்தின் சிறகொலி

“... ... ... ... ... வன்பறை
வளைப்பருந்தின்”
(அகநா. 33 : 4)

பறவையின் சிறகொலி

“சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
நெடுநீர் வானத்து வானத்து வாவுப் பறை”
(அகநா. 57 : 2)

“வெண்குருகு வாப்பறை வளைஇ” (அகநா. 272 : 2)

(பறை அடுத்து ஒலிக்கும்...)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p134.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License