தீப விளக்கு பண்டைய காலந்தொட்டே தமிழர்களிடையே இருந்து வருகிறது.அது நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும், விழாக்களிலும் பெரும் பங்கு பெற்று வருகிறது.
நம் பண்டைய தமிழர்கள் ஒளியின் உயர்வை அறிந்து அதனை நம் வாழ்வோடு இணைத்துள்ளார்கள்.
பண்டைய முறைப்படி விளக்கேற்றுவதே சிறப்புடையது. முற்காலத்தில் ஒரு நாளில் ''விளக்கிடு நாள்'' என்னும் பெயரால் எல்லாக் கோயில்களிலும் தீபம் ஏற்றும் திருநாள் கொண்டாடப்பட்டதாக தெரிகிறது. விளக்கு தமிழர்களுக்கு நிற்பச் செல்வங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
விளக்கு என்னும் சொல் தூய தனித் தமிழ்ச் சொல். விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக 'திரு' என்னும் சொல்லுடன் 'திருவிளக்கு' என்று சிறப்பாக கூறப்படுகிறது. விளக்கு,பதம், தண்டு, அகல் அல்லது தாழி, மொட்டு என்று பல அங்கங்களை கொண்டுள்ளது திருவிளக்கு. அகல், எண்ணெய், திரி, தீபம் முதலியன பல தத்துவ நுட்பங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக நமது பெரியோர்கள் கூறுகிறார்கள்.
விளங்கச் செய்வதே விளக்கு என்கிறார்கள் தமிழறிஞர்கள். இருப்பதைக் காட்டுவதே விளக்கு. மறைப்பதை நீக்கி மறைபட்டதை மக்களுக்கு காட்டுவதே விளக்கு. வீட்டில் எழில் குத்து விளக்கு ஏற்றி வழிபடுவது நமது தமிழர் மரபு. விளக்கே இறைவன். ஆகையால் கலை அம்சமும், எழிலும் நிறைந்த விளக்கை இறைவனைக் காட்டும் வழிகாட்டி என்கிறார்கள்.
மக்களிடத்திலுள்ள அறிவு ஒளியே விளக்கு. எனவே விளக்கு வழிபாடு அறிவை குறிக்கொண்டதாக ஆன்றோர்கள் கண்ட முடிபு. திருவிளக்கு கார் இருளை அகற்றி இன்பகரமான ஒளியைத் தருகிறது. இறைவனாகிய அருட்பெருஞ்சோதி, உலகில் நிறைந்துள்ள அஞ்ஞானமாகிய இருட்டை அகற்றி மெய்ஞானத்தை உணர்த்தும் ஒப்பற்ற உயரிய தத்துவ நுட்பத்தை புலப்படுத்தும் அருட்சோதி
கற்காலம் மாறி உலோகக் காலம் அரும்பியதும் செம்பு, பித்தளை உலோகங்களில் கைவிளக்குகள், தூக்கு விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், தீவர்த்திகள், நிலை விளக்குகள், குத்து விளக்குகள், சர்விளக்குகள், தீபலட்சுமி விளக்குகள், கிளை விளக்குகள், பூசை விளக்குகள் என்று தோன்றின.
பண்டையத் தமிழர் ஒளியை இறைவனாக கண்டனர். ''சோதியே'' சுடரே, சூழ் ஒளி விளக்கே' என்று புகழ்ந்து பாடியுள்ளனர். இறைவனை 'விறகில் தீயினன்' என்றும், 'மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்' என்றும் இறைஞ்சுகிறார்கள்.
''அருள் ஒளி விளங்கிட ஆணவ மெனுமோர்
ஆருளற என்னுளத் தோற்றிய விளக்கே
துன்புற த்ததுவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுள் தேற்றிய விளக்கே
மயலற வழியா வாழ்வு மேன்மேலும்
இயலுற வென்னுளத் தேற்றிய விளாக்கே
இடு வெளி யனைத்தும் மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கரு வெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிதரு விளக்கே''
என்று அருட்பாவில் வள்ளலார் பாடுகிறார்.
நமது இலக்கியங்களில் சான்றோர்கள், இறைவனின் ஒளியை, விளக்கினைப் பற்றி நிறைய கூறியுள்ளார்கள்.
''தூண்டாவிளக்கின் சுடரணையாய்''
-என்பது சுந்தரமூர்த்தியின் மொழி
''ஞானச் சுடர் விளக்காய் நின்றவன்''
'' விறகிற றீயினன் பாலிற் படு நெய்யோன்''
'' மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்"
- என்று சம்பந்தாரும்
ஒளி வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்குத் திரள் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே ''
- என்று திருமாளிகைத் தேவரும்
"அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்"
- என்று சேக்கிழாரும்
சிந்தாதேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே... பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
- மணிமேகலையும்
"சுடரிற் சுருட்டும் திருமூர்த்தி"
-என்று சிந்தாமணியும்
''திங்களைப் போற்றும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கலர் தார் சென்னி குளிர் வென்குடை போன்றின்
வங்க ணுல களித்தலான்;
ஞாயிறு போற்றும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன்றிகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந் திரிதலான்;
- என்று சிலப்பதிகாரமும்,
முந்நீர் மீமிசை பலர் தொழத் தோன்றி
யேமுற விளங்கிய சுடர்''
- என்று நற்றிணையும்
''விளக்கினை ஏற்றி
வெளினய அறிமின்
விளக்கின் முன்னே
வேதனை மாறும்
விளக்கை விளக்கும்
விளக்குடையார்கள்
விளக்கின் விளக்கும்
வுளக்கவர் தாமே ''
-என்றும் பாடியுள்ளார்கள். உலகமெங்கும் முச்சுடர் வழிபாடு பரவி இருந்தாலும் சிறப்பாக கொண்டாடியவர்கள் நம் தமிழர்கள்.
'' சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே
சுரி குழற் பணமுலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனும் மாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள்
நிறைமலர்க் குருந்த மேவிய சீர்
ஆதியே யடியேன் ஆதரித்தழைத்தால்
அதந்துவே என்றருளாயே '' (மணிவாசகர் திருவாசகம்)
'' உள்ளம் பெருங் கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரரனார்க்கு
வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலளைந்தும்
காளா மனிவிளக்கே'' (திருமூலர் திருமந்திரம்)
பண்டைத் தமிழகத்தில், இன்று கொண்டாடப்பட்டு வரும் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகளில் எதுவும் கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. தீபாவளி கூட கொண்டாடியதாகத் தெரியவில்லை.
பங்குனி மாதம் பாரதப்போர் நடைபெற்றதால் அம்மாதத்தில் நல்ல காரியங்கள் எதையும் செய்யார். ஆடி மாதத்தில் சிவபக்தனான ராவணன் இறந்து விட்டதால் அம்மாத்தில் திருமணம் போன்ற மங்களகரமான காரியம் செய்யப்படுவதில்லை.
தை மாதம் தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி வந்தார்கள்.பண்டைக் காலம் தொட்டே இது ஒரு பெரும் பண்டிகையாக மிளிர்கிறது. அடுத்து சிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகை தீபத்திருநாளாகும். இது கார்த்திகைத் தீப திருநாள் என்றும் கொண்டாடுகிறார்கள். கேரளத்திலும் ஆந்திராவிலும் இத்திருநாள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைத் தமிழர்கள் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு களி கொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு.
'அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போல் '
-என்று நற்றிணை கூறுகிறது.
கார்த்திகை நாள் பெயரலே பெற்ற அறஞ்செய்தற்குரிய திங்களில் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்கின்ற 'ஒளியையுடைய நீண்ட விளக்குகளின் வரிசை போல்' என்று உரை கூறப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.