சங்க இலக்கியச் சொற்பொருள் மாற்றங்கள்
முனைவர் த. கண்ணன்
எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன என்பதையும் சொற்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அக்கவிதையின் மையக்கருத்தை விளக்கும் தன்னையில் அமையும் நோக்குடையன என்பதையும் தமிழ்க் கவிதை மரபு உணர்த்தும். கவிதையாக்கத்திற்குச் சொற்கள் இன்றியமையாததாகும். கவிதைகளில் சொற்களைப் பயன்படுத்தும் புலவர்கள் கவிதையில் கூறுதற்கு எடுத்துக்கொண்டு பாடற்பொருளுக்கேற்ப அப்பொருளைச் சிறப்புடன் எடுத்துரைக்கும் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இதனையே தொல்காப்பியர் செய்யுண்மொழி, இழுமென்மொழி, தெரிந்த மொழி, பரந்த மொழி, சின்மொழி, மென்மொழி, சேரிமொழி என்று குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் சொற்சுவை இன்பங்கள் அளவிடற்கரியனவாக உள்ளன. தமிழ்ச் சொற்களின் விரிவையும் நுண்பொருட்க் கூறுகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இந்நிலையில் இக்கட்டுரை சங்க இலக்கியத்துள் இடம்பெறும் சொற்பொருள் மாற்றங்களையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் ஆராயும் தன்மையில் ஒரு சான்றை எடுத்துரைத்து விளக்கும் தன்மையில் அமைகிறது.
கண்டது மொழிதல்
“கண்டது மொழிமோ” சொற்சேர்க்கையைக் குறுந்தொகை இரண்டாவது பாடலில் காணமுடிகிறது. அப்பாடல் தலைவன் கூற்றாகும். “இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது” என்னும் துறையில் அமைந்துள்ளது. கண்டது மொழியுமோ என்பதற்கான சொற்பொருள் மாற்றக் காரணிகளை அறியமுடிகிறது.
பாடலும் பொருளும்
இறையனார் பாடிய இப்பாடல்,
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே” (குறுந்.02)
என்பதாகும்.
இப்பாடலை விளக்கிக் கூறும் உரையாசிரியர், “பூந்தாதை ஆராய்ந்த உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பிதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக் நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும் மயில் போன்ற மென்மையையும் நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறுமணமுடைய பூக்களும் உள்ளனவோ” என்பர் உ.வே.சாமிநாதய்யர்.
நலம்பாராட்டும் தலைவன் தலைவியின் கூந்தல் நறுமணத்தைப் போல நறுமணம் உடைய வேறு பூக்கள் உள்ளனவா? அப்படி இருப்பின் அவற்றை எனக்குக் கூறுக என்று வண்டை நோக்கிக் கூறுகிறான்.
மணத்தை மூக்கால் மட்டுமே அறிந்து கூறமுடியுமே அன்றிக் கண்களால் அறிந்து கூறமுடியாது. ஆனால் இப்பாடலில் நறுமணத்தைக் கூறுக என்பதை “கண்டது மொழிமோ…. நறியவு முளவோநீ யறியும் பூவே” என்று குறிப்பிடுகிறது. நறுமணத்தைக் கண்களால் கண்டு கூறமுடியாநிலையில் இப்பாடல் கண்டது மொழிமோ என்று கூறியிருக்கிறது என்றால் இவ்வடிக்குள் ஏதோ நேரிய பொருள் மறைந்திருப்பதை உணரமுடிகிறது.
கண்டது - பார்த்தது
கண்டது எனும் சொல்லைக் குறுந்தொகைப் பாடல்களில் பல இடங்களில் காணமுடிகிறது.
கண்டது(குறுந்.02,26,273),
கண்ட (குறுந்.60,224,241,265,306,328),
கண்டனையோ (குறுந்.75),
கண்டிசின் (குறுந்.112,220,240,249,359),
கண்டே (குறுந்.165,258),
கண்டனர் (குறுந்.255),
கண்டனம் (குறுந்.275,299),
கண்டன்ன (குறுந்.278),
கண்டும் (குறுந்.287),
கண்டனனே (குறுந்.311),
கண்டாங்கு (குறுந்.315)
இவ்விடங்களில் எல்லாம் கண்டது எனும் சொல் பார்த்தது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் இடம்பெறும் கண்டது எனும் சொல்லிற்கு பார்த்தது எனும் பொருளில் அமையவில்லை.
வண்டே நீ பார்த்தவற்றுள் நறுமணம் உடைய வேறு பூக்கள் உண்டா? கூறுக. எனக் கூறியிருக்க முடியாது. நறுமணத்தைப் பார்க்க முடியாது. கண்டது என்பது அறிந்தது என்ற பொருளில் அமைந்திருக்க வாய்ப்பாகிறது. அதாவது வண்டே நீ அறிந்தவற்றுள் நறுமணம் உடைய வேறு பூக்கள் உண்டா? கூறுக. என்று அமைந்திருக்க வாய்ப்பாகிறது. இதனால் கண்டது என்பது இங்கு கண்களால் கண்டது என்ற பொருளை விடுத்து நீ அறிந்தவற்றுள் என்று பொருள் மாற்றம் பெறுகிறது. இந்நிலையில் கண் என்பதன் பயனாகவும் கண் எனும் உறுப்பின் செயலாகவும் அமையும் கண்டது எனும் சொல் பார்த்தது எனும் பொருளை விடுத்து அறிந்தது எனும் பொருளைச் சென்றடைந்துள்ளதை அறியமுடிகிறது. இச் சொல் பொருள் மாற்றம் பெறுவதற்குரிய காரணிகள் யாவை? எதனால் கண்டது எனும் சொல் பார்த்தது எனும் பொருளைத் தாண்டி அறிந்தது எனும் பொருளைச் சென்றடைந்துள்ளது. இப்பொருள் மாற்றத்திற்;கான காரணங்களைக் கண்டறிவதற்குரிய பாடல்களைக் குறுந்தொகையில் காணமுடிகிறது.
தன்கண் கண்டது பொய்க்குவதன்றே
தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் என்ன? என்பதைத் தாயர் கட்டுவிச்சியிடம் வினவ, அக்கட்டுவிச்சி, “தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம”; எனக் கூறுகிறாள். உண்மையில் தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் தலைவனே அன்றித் தெய்வம் அல்ல. எனவே கட்டுவிச்சியின் வார்த்தை பொய்யாகும். .இந்தப் பொய்யை பொய் என்று எடுத்துரைத்து தலைவனே தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் என்ற உண்மையைக் கூறி அறத்தொடுநிற்கிறாள் தோழி. இவ்வாறு தோழி அறத்தொடுநிற்கும் பாடலில் தோழி, “தலைவியின் வேறுபாட்டிற்குத் தலைவன் காரணம் அல்லாதது போல் தெய்வமே காரணம் எனக் கட்டுவிச்சி பொய் கூறினாலும் தலைவனே காரணம் என்பதைத் தன்கண்களால் கண்ட கடுவனும் உண்டு.
அக்கடுவன் தன்கண்களால் கண்டிருப்பதால் அது பொய் சொல்லாது. என்றுரைக்கிறாள் (குறுந்.26). இதனை,
“........நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே” (குறுந்.26: 3-5)
எனும் இப்பாடலடிகள் உணர்த்தும். இங்கு கண்களால் கண்டவை பொய்யாவதில்லை எனும் கருத்து பெறப்படுகிறது.
கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
தலைவன் வரவைப் பாணன் தலைவிக்கு உணர்த்துகிறான். பாணன் கூறிய செய்தி உண்மையா? என்பதைத் தெளிவாய் அறிந்துகொள்ள தலைவி விரும்புகிறாள். எனவே பாணனிடம்;, “பாணனே தலைவன் வந்துவிட்டான் என்பதை நீ உன் கண்களால் கண்டாயா? இல்லை கண்டவர்கள் கூறியதைக் கேட்டாயா” என்று வினவுகிறாள். இதனை,
“நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே” (குறுந்.75)
எனும் பாடல் உணர்த்தும்.
இங்கு ஒரு செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்குரிய சான்றுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒருவர் தானே ஒன்றைக் கண்டது என்பது முதலாவதாகிறது. பிறர் கண்டதைக் கேட்டுத் தான் கூறுதல் என்பது இரண்டாவதாகிறது. இவ்விரண்டிலும் கண்டலுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பது பெறப்படுகிறது. பிறர் கண்டதைப் பிறர் வாய்க்கேட்டறிந்து கூறுவதில் கேட்டுக் கூறும் தன்மை இருப்பதால் இது தானே கண்டதையடுத்து இரண்டாவது இடத்திற்குச் செல்கிறது. எவ்வாறெனினும் இப்பாடலின் வழி ஒன்றை உறுதிபடுத்திக்கொள்வதில் கண்ணால் காண்பது முதன்மை பெறுவதை அறியமுடிகிறது.
கண்டது மொழிவல்
தலைவன் பிரிவான் எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்திக் கூறும் கூற்றாக உள்ள பாடலில் தோழி “கண்டது மொழிவல்” என்னும் அடியைப் பயன்படுத்துகிறாள். இதனை,
"அல்குறு பொழுதிற் றாதுமுகை தயங்கப்
பெருங்காட் டுளரு மசைவளி போலத்
தண்ணிய கமழு மொண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
ஏமாந் தன்றிவ் வுலகம்
நாமுளே மாகப் பிரியலன் றெளிமே”
(குறுந்.273)
என்னும் பாடல் வழி அறியலாம்.
இப்பாடலின் துறைவிளக்கம், “தலைவன் பிரிவான் என எண்ணிக் கவன்ற தலைவியை நோக்கி, தலைவன் பிரிய எண்ணினும் நம் நிலை நோக்கிச் செலவு தவிர்வான் என்று தோழி கூறித் துணிவை உண்டாக்கியது” என்று கூறுகின்றது. இங்கு தோழி துணிவைத் தலைவிக்கு உணர்த்தினாள் என்பது கவனிக்கத்தக்கதாக அமைகிறது. தலைவிக்குத் துணிவை உணர்த்தும் தோழி அவளை “தெளிமே” (தெளிவடைவாய்)என்று கூறுகின்றாள். இப்பாடலை விளக்கும் உரையாசிரியர், “இரவில் தாதை உடைய அரும்பு விளங்க பெரிய காட்டில் தடவி வருகின்ற அசைகின்ற காற்றைப் போல குளிர்ந்தனவாகிய நறுமணம் வீசுகின்ற ஒன்றிய நெற்றியை உடையோய், நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின் யான் அறிந்ததைச் சொல்லுவேன் கேட்பாயாக பெரிய தேனிறால் தங்கி இருக்கும் மலைப்பக்கத்தில் அத்தேனிறாலைப் பெறும் பொருட்டு, பழைய கண்ணேணியின் மேல் அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல இந்த உலகமானது ஏமாந்தது. நாம் உயிரோடு இருப்ப அது காறும் தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான் இதனைத் தெளிவாயாக” என்றுரைக்கிறார் உ.வே.சா.
தலைவன் பிரிந்து செல்லான் என்பதை நான் அறிவேன் என்று கூறவந்த தோழி “கண்டது மொழிவல்” என்று கூறுகின்றாள். இங்கு தோழியால் காணப்பட்டது எதுவும் இல்லை. அவ்வாறிருந்த போதும் தோழி கண்டது மொழிவல் என்று கூறுகின்றாள் என்றால் கண்டது மொழிவல் என்பதற்குத் தான் நன்கு தெளிவாய் அறிந்ததைக் கூறுகிறேன் என்பதே பொருளாகிறது. இதனால் நன்கு அறிந்தது எனும் பொருளுக்கு ‘கண்டது’ எனும் சொல் ஆளப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. எதன் அடிப்படையில் இச்சொல் இப்பொருளிலில் ஆளப்பட்டுள்ளது என்றால்? கண்ணால் காணப்பட்டது பொய்யாவதில்லை. எனவே ஒரு தகவலை உறுதிப்படுத்தவும் கண்ணால் கண்டதையே முதன்மையாகக் கொண்டனர். இதன் அடிப்படையில் கண்டது எனும் சொல் காணப்பட்டது எனும் பொருளையும் தாண்டி, நன்கறிந்தது எனும் பொருளைச் சென்றடைந்துள்ளதை அறியமுடிகிறது.
‘கண்டது’ சொற்பொருள் வளர்ச்சி
கண் என்பது உடல் உறுப்புகளுள் ஒன்று. இவ்வுறுப்பால் நடைபெறும் செயல் பார்ப்பது. இப்பார்வையில் கிடைக்கும் பயன் உண்மை, பொய்யல்லாதது. உண்மை பார்ப்பதில் இருப்பதால் உண்மையறிய முற்படுவோர் கண்ணால் கண்டதையே கொண்டனர். இதன் அடிப்படையில் பார்ப்பது என்பது உறுதிப்படுத்தலுக்கான கூறாக வளர்கிறது. இவ்வாறு இச்சொல்லானது பொருள்மாற்றம் பெற்று வந்திருப்பதை,
என்று விளக்கலாம்.
இதன் அடிப்படையில் குறுந்தொகையின் இரண்டாவது பாடலை நோக்கினோம் என்றால். “வண்டே நீ என்நிலத்து வண்டாதலின் எனக்கு விருப்பமானதைக் கூறாது (எனக்காகப் பொய் கூறாது) உண்மை என்னவோ அதனைக் கூறுக” என்று பொருள் பெறப்படுவதை உணரலாம்.
முடிவுரை
இறையனார் இயற்றிய பாடல் குறுந்தொகையில் இரண்டாவது பாடலாக உள்ளது. இப்பாடலில் தலைவன் வண்டை நோக்கிக் கூறுவதாய் தலைவியை நலம் பாராட்டுகிறான். அக்கூற்றில் காமஞ் செப்பாது கண்டது மொழிமோ என்றுரைக்கிறான். இவ்விடத்தில் இடம்பெறும் கண்டது மொழிமோ என்பதற்கு கண்ணால் கண்டு அறிந்ததைக் கூறுக என்றளவில் பொருள் அமையாதிருப்பதைக் காணமுடிகிறது. இவ்விடத்தில் இடம்பெறும் கண்டது என்பதற்குப் பொய் கூறாது உண்மையானதை உறுதிபடக் கூறு என்பது பொருளாக அமைகிறது. இதனால் கண்டது எனும் சொல் நான்கு படிநிலைகளில் வளர்ச்சி பெற்று பொருள் மாற்றம் பெற்று வந்துள்ளதையும் அறியமுடிகிறது.
துணைநூல் பட்டியல்
1. உ.வே. சாமிநாதய்யர், ‘குறுந்தொகை மூலமும் உரையும்’, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 2. அருண்டேல் கடற்கரைச்சாலை, பெசன்ட் நகர், சென்னை -90. (ஆண்டு:2000)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.