தொடரியல் நோக்கில் கலித்தொகை
முனைவர் த. கண்ணன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்கு வளர்ச்சிபெறத் தொடங்கிய மொழியியல் ஆய்வில் தொடரியல் ஆய்வு குறிப்பிடத்தக்கதாகும். மொழியியல் எனும் இத்துறை மரபிலக்கணங்களைப் போன்றே அமைகின்றன.
இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கணங்களுக்கு இலக்கியங்கள் அடிப்படையாவதைப் போன்றே மொழிகள் எல்லாம் மொழியியல் துறைக்கு அடிப்படையாகின்றன. மொழியியல் துறையை நன்கு கவனித்துப் படிக்கும் போது, அவை மரபிலக்ணங்கள் செய்துள்ள பணிகளை விவரிப்பதாகவும் அவற்றை வேறு சொற்களில் விளக்கியுரைப்பதாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.
இலக்கியங்கள் இலக்கணங்களுக்கு அடிப்படையாவதைப் போன்று மொழியியல் துறைக்கும் அடிப்படையாக அமைகின்றன. மொழியியல் பெரும்பாலும் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்ட போதும் பல நிலைகளில் இலக்கியங்களையும் உட்படுத்திக் கொள்கின்றன. அவ்விலக்கியங்களை மொழியியல் ஆய்வுக்கு உட்படுத்துவது ஒருபுறம் இருக்க அவ்விலக்கியங்களின் வழி மொழியியல் ஆய்வை வரையறுக்கவும் முடியும் எனும் அடித்தளத்தில் இக்கட்டுரை அமைகிறது. அவ்வளவில் தொடரியல் எனும் மொழியியல் ஆய்வு முறைக்குக் கலித்தொகையின் வழி பெறப்படும் வரையறைகளையும் எடுத்துரைப்பதும் தொடரியல் கட்டமைப்புக்குக் கலித்தொகைப் பாடலை உட்படுத்துவதன் வழி அதன் மையப்பொருள் வெளிப்படுவதைக் குறிப்பிடுவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மொழியியலும் தொடரியலும்
மொழியை அறிவியல் முறையில் ஆராயும் துறை மொழியியல் எனப்படுகிறது. இம்மொழியியல் ஆராய்ச்சியில் ஐந்து நிலைகள் உள்ளன.
1. ஒலியியல் (Phonetics)
2. ஒலியனியல் (Phonemics)
3. உருபனியல் (Morphology)
4. தொடரனியல் (Syntax)
5. பொருளனியல் (Semantics)
ஒலிகள் பலவகையில் உருவாக்கப்படலாம். ஆனால் எல்லா ஒலிகளும் பேச்சாவதில்லை. பேச்சாகப் பயன்படும் ஒலிகளைப் பற்றி ஆராயும் துறை ஒலியியல் எனப்படுகிறது. இவ்வொலிகளில் பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமையும் ஒலிகளை ஒலியன்கள் என்பர். இவ்வொலியன்களை ஆராய்வது ஒலியனியல் எனப்படுகிறது.
பொதுவாகப் பேச்சுமொழியும் எழுத்து மொழியும் ஒன்றாக அமைவதில்லை. இலை என்று எழுதுகிறோம். எலெ என்று பேசுகிறோம். உலை என்று எழுதுகிறோம். ஒலெ என்று பேசுகிறோம். எலெ என்பதில் உள்ள எகரமும் எடு என்பதில் உள்ள எகரமும் ஒன்றாக ஒலிப்பது இல்லை. ஒலெ என்பதில் உள்ள ஒகரமும் ஒடு என்பதில் உள்ள ஒகரமும் ஒன்றாக ஒலிப்பது இல்லை. இந்நிலையில் எலெ என்பதில் உள்ள எகரத்தை எடு என்பதில் உள்ள எகரத்தைப் போல உச்சரித்தாலும் பொருள் மாறுவதில்லை. அவ்வாறே ஒலெ என்பதில் உள்ள ஒகரத்தை ஒடு என்பதில் உள்ள ஒகரம் போல உச்சரித்தாலும் பொருள் மாறுவதில்லை. இந்த ஒலிகளுக்கான வேறுபாடுகளை ஆராய்வது ஒலியியல் ஆகும்.
இலை என்பதில் உள்ள இகரத்திற்குப் பதில் அகரம் பயன்படுத்தினால் அலை என்று பொருள் மாறிவிடுகிறது. இவ்வாறு பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமையும் ஒலிகளை ஆராய்வதே ஒலியனியல் எனப்படுகிறது. ஒருசிலர் ஒலியியல் ஒலியனியல் என்ற இரண்டையும் ஒன்றிணைத்து ஒலியியல் (Phonology) என்று வழங்குவர். வேறு சிலரோ ஒலியியல் (Phonology) என்பதை ஒலியனியல் என்ற பொருளில் வழங்குகின்றனர்.
ஒலியன்கள் சிலவோ பலவோ சேர்ந்து உருபன் (Morpheme) ஆகின்றன. பொருள் தருகிற மிகச்சிறிய ஒலியக் கூறே உருபன் ஆகும். உருபன்களைப் பற்றி ஆராய்வது உருபனியல் (Morphology) ஆகும்.
ஆ எனும் ஒலியன் தனித்து வரும்போது அதற்குப் பொருள் இல்லை. அதுவே இலக்கியத் தமிழில் ஓரெழுத்து ஒரு மொழியாக வந்து பசு எனும் பொருளைத் தருகிறது. எனினும் ஆ என்பதற்கும் ண் என்பதற்கும் தனிப்பொருள் இல்லை. எனினும் இவைகள் சேர்ந்து வந்து ஆண் என்றாகும் போது இதற்குப் பொருள் உண்டாகிறது. இங்கு ஆண் என்பது பொருள் தருகிற ஒலியக் கூறாகிறது. பொதுவாகப் பொருள் தருகிற மிகச்சிறிய ஒலியக் கூறு உருபன் ஆகும். மாடுகள் என்பதில் மாடு என்பதும் கள் என்பதும். உருபன்களாகும்.
உருபன்கள் எவ்வாறு தொடர்ந்து வந்து தொடர்கள் ஆகின்றன என்பதை ஆராய்வது தொடரனியல் (Syntax) ஆகும்.
ஒலியனியலும் உருபனியலும் ஒரு மொழியின் அமைப்பை எதிர்பார்த்த அளவிற்கு விளக்குவதில்லை என்ற நிலையில் உருவானதே தொடரனியல் அகும். சொல்லை வைத்துக் கொண்டு வாக்கியத்தை விளக்குவதை விட வாக்கியத்தை வைத்துக் கொண்டு மொழியியல் அமைப்பை விளக்குவது சிறந்த பலனை அளிக்கும் என்ற நிலையில் தொடரனியல் ஆய்வுகள் தோன்றின. எனவே வாக்கிய அமைப்பை விளக்குவதே தொடரனியல் என்று வழங்கப்படுகிறது.
பொருள் (Meaning) பற்றிய ஆராய்ச்சி பொருளனியல் எனப்படுகிறது. பொருளைப் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை, ஒலிகளை ஆராய்வதற்கோ, ஒலியன்களை ஆராய்வதற்கோ, உருபன்களை ஆராய்வதற்கோ பொருளைப் பற்றிய ஆராய்ச்சி தேவை இல்லை என்று கூறுவாரும் உண்டு. ஆனால் பொருள் பற்றிய வகையிலே ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என இக்கால ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மொழியியல் ஆய்வில் தொடரனியல் என்பது ஒலியியல், ஒலியனியல், உருபனியல் எனும் கூறுகளை உள்ளடக்கியதாகவும் இக்கூறுகளைப் பொருளனியல் எனும் கூறுடன் இணைப்பதாகவும் அமைகிறது.
தொடரனியலும் கலித்தொகையும்
தொடரனியல் ஆராய்ச்சி இரண்டுநிலைகளில் அமைகிறது.
1. ஆக்கமுறைத் தொடரனியல் (Generative Syntax)
2. அமைப்புமுறைத் தொடரனியல் (Structural Syntax)
ஒரு மொழியில் பிழையில்லாத வாக்கியங்களைப் படைப்பதற்குத் தேவையான விதிகளை வகுத்துரைப்பது ஆக்கமுறைத் தொடரனியல் ஆகும். ஒரு மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்கியங்களின் அமைப்புமுறைகளை விளக்குவது அமைப்புமுறைத் தொடரனியல் ஆகும். (இங்கு அமைப்புமுறைத் தொடரனியல் ஆய்வு மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது)
அமைப்புமுறைத் தொடரனியலில் முக்கியக் கூறு அண்மையுறுப்பாகும். ஒருவாக்கியம் என்பது வெறும் சொற்றொடர் அன்று அது அடுக்கடுக்காய் அமைந்த உறுப்புக்களைக் கொண்டது என்பதை விளக்கிக் கூறுவது அண்மையுறுப்பாய்வாகும்.
ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களையும் அதற்கான பொருளையும் அறிந்து கொண்டால் மட்டும் அவ்வாக்கியத்தின் பொருளை அறிந்துவிட முடியாது. அவ்வாக்கியத்தில் வரும் சொற்கள் இணையும் முறையில் எதற்கு எது அண்மையுறுப்பாக அமைகிறது எனும் முறையில் தான் அவ்வாக்கியத்தின் பொருள் அடங்கியுள்ளது.
‘மோகன் ராஜா வேடம் போட்டு நடித்தான்’ எனும் வாக்கியத்தில் வரும் அனைத்துச் சொற்களின் பொருளையும் அறிந்து கொண்டு இவ்வாக்கியத்தின் பொருளைக் கண்டால் இதன் உண்மைப் பொருள் கிடைக்கும் என்று கூற முடியாது. இவ்வாக்கியத்தின் சொற்கள் அண்மையுறுப்புகளாகப் பிhpக்கப்பட்டு எவ்வுறுப்பு எவ்வுறுப்புடன் இணைகின்றன என்பதை வகுத்துக் காணும் போதே இதன் உண்மைப் பொருளை உணர முடியும். அண்மையுறுப்பாய்வில் இவ்வாக்கியம் இரண்டு அமைப்புகளில் வடிக்கப்பட்டுப் பொருள்கொள்ளத்தக்க வகையில் உள்ளது.
அமைப்பு 1:
ராஜாவேடம் என்பது போட்டு என்பதற்கு அண்மையுறுப்பாக அமைகிறது. ராஜாவேடம் போட்டு என்பது நடித்தான் என்பதற்கு அண்மையுறுப்பாக அமைகிறது. இறுதியில் மோகன் என்பது ராஜாவேடம் போட்டு நடித்தான் என்பதற்கு அண்மையுறுப்பாக அமைகிறது.
அமைப்பு 2:
வேடம் என்பது போட்டு என்பதுடன் அண்மையுறுப்பாக இணைகிறது. வேடம்போட்டு என்பது நடித்தான் என்பதுடன் அண்மையுறுப்பாக இணைகிறது. இறுதியில் வேடம்போட்டு நடித்தான் என்பதுடன் மோகன்ராஜா என்பது அண்மையுறுப்பாக இணைகிறது.
‘மோகன் ராஜாவேடம் போட்டு நடித்தான்’ (அமைப்பு 1) என்று அமைகின்ற போது மோகன் என்பவன் ராஜாவாக வேடம் போட்டு நடித்தான் என்று பொருள் தருகிறது. இதையே ‘மோகன்ராஜா வேடம் போட்டு நடித்தான்’ (அமைப்பு 2) என்றமைக்கின்ற போது மோகன்ராஜா என்பவன் ஏதோ ஒரு வேடம் போட்டு நடித்தான் என்று பொருள் தருகிறது.
இரண்டு உறுப்புகள் பொருள் தரும் முறையில் இணைந்து நிற்கும் போது, அவ்வுறுப்புகளை அண்மையுறுப்பு என்பார்கள். இந்த நிலையில் அண்மையுறுப்புகள் என்பது உருபனாகவோ அல்லது சொல்லாகவோ அல்லது தொடராகவோ அல்லது வாக்கியமாகவோ அமையலாம்.
பொதுவாக ஒரு பொருள் விளக்கப் பத்தியில் பல வாக்கியங்கள் அமைந்திருக்கும். இவ்வாறே ஒரு வாக்கியத்திற்குள் பல தொடர்கள் அண்மையுறுப்புகளாக அமைகின்றன. ஒரு தொடரை நோக்கும் போது அவற்றுள் பல சொற்கள் அண்மையுறுப்புகளாக அமைகின்றன. சொற்களை நோக்கும் போது, அவற்றுள் பல உருபன்கள் அண்மையுறுப்புகளாக அமைகின்றன. உருபன்களை நோக்கும் போது ஒலியன்கள் அண்மையுறுப்புகளாக அமைகின்றன.
இதன் அடிப்படையில் பத்திக்கு வாக்கியங்களும், வாக்கியங்களுக்குத் தொடர்களும், தொடர்களுக்கு சொற்களும், சொற்களுக்கு உருபன்களும், உருபன்களுக்கு ஒலியன்களும் அண்மையுறுப்புகளாக அமைகின்றன.
அண்மையுறுப்புகளைக் கண்டறிவதற்கான முறைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பொருள் தரக்கூடிய வகையில் இணையும் உறுப்புகள் அண்மையுறுப்புகள் என்று சொன்னாலும், ஒரு தொடரில் ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்திப் பார்க்கும் போது அவ்வாக்கியம் பிழையின்றி அமையின் அவ்வுறுப்பை அண்மையுறுப்பு எனக் கொள்வர்.
‘இராமன் வந்தான்’ எனும் வாக்கியத்தில் இராமன் என்பதை நீக்கிவிட்டு இராவணன் என்பதைக் கொடுத்தால் பிழையற்ற வாக்கியம் கிடைக்கிறது (இராவணன் வந்தான்). அவ்வாறே வந்தான் என்பதை நீக்கிவிட்டுச் சென்றான் என்று போட்டாலும், பிழையற்ற வாக்கியம் கிடைக்கிறது (இராமன் சென்றான்). எனவே இராமன் என்பதும் வந்தான் என்பதும் அண்மையுறுப்புகள் என்று குறிப்பிடுவர். இவ்வாறு மாற்றிப் பார்க்கும் முறையை மாற்றுச்சொல் பெய்முறை (Principle of Substitutability) என்பர் (கு. பரமசிவம் 2011).
இவ்வண்மையுறுப்புகளின் ஆராய்ச்சி அமொpக்காவில் தொடங்கியது என்றும் பிறகு பல கொள்கைகள் உருவாகக் காரணமாகியது என்றும் கூறுவர். இதனை, “அமெரிக்க விளக்கமுறை மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் லெனார்டு புளும்ஃபீல்டுதாம் (Leonard Bloomfield) முதன் முதலில் அண்மையுறுப்புக்கள் என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அவர் Poor john ran away என்னும் வாக்கியத்தை எடுத்துக்காட்டி, அது Poor john, ran away என்னும் இரண்டு அண்மையுறுப்புக்களை உடையதென்றும், அவ்விரண்டில் ஒவ்வொன்றும் இரண்டு அண்மையுறுப்புக்களை உடையதென்றும் விளக்கினார். வேறு வகையில் சொன்னால், ஒரு வாக்கியம் என்பது வெறும் சொற்றொடர் அன்று என்றும். அடுக்கடுக்காய் (Layers) அமைந்த உறுப்புக்களைக் (Constituents) கொண்டது என்றும் உணர்த்தினார். அவருடைய மாணாக்கர்களாகிய ஹாரிஸ் (Zelling Harris) போன்றவர்கள் அண்மையுறுப்புக்கள் என்னும் கொள்கையைத் திட்பநுட்பமுடைய ஆராய்ச்சி முறையாக ஆக்கினார்கள். இக்கொள்கையிலிருந்து கிளைத்தெழுந்ததே சாம்ஸ்கியின் தொடரனியல் கொள்கை”1 என்பர்.
அண்மையுறுப்புப் பகுப்பாய்வு முறையையும் அவ்வுறுப்புகளைக் கண்டறியும் முறையும், மாற்றுச்சொல் பெய்முறையும், மாற்றுச்சொல் பெய்முறையின் வகைப்பாடுகளையும் கலித்தொகையில் காணமுடிகிறது.
இத்தொடரை அடிப்படையாகக் கொண்டு, மாற்றுச்சொல் பெய்முறையில் தொடர்கள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இதனைக் கீழ்வரும் அட்டவணையில் காண்க.
இவ்வாறே,
எனும் தொடர் மாற்றுச்சொல் பெய்முறையில்,
என்று பல தொடர்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்றே,
எனும் தொடர்,
என்று பல தொடர்களாக படைக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்களின் வழி மாற்றுச்சொல் பெய்முறையும் அண்மையுறுப்புப் பகுப்பாய்வு முறையும் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் வழி அண்மையுறுப்புப் பகுப்பாய்வு முறையின வகைப்பாடுகளை வரையறுக்க முடிகிறது.
ஒரு தொடரில் உள்ள பல அண்மையுறுப்புகளில் ஒரு அண்மையுறுப்பை மட்டும் மாற்றியமைக்கலாம் (கலித். 2:12,16,20,14,18)
ஒரு தொடரில் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட அண்மையுறுப்புகளை மாற்றியமைக்கலாம் (கலித். 2:11,15,19)
ஒரு தொடரில் உள்ள ஓர் அண்மையுறுப்பைப் பல அண்மையுறுப்புகளால் மாற்றியமைக்கலாம் (கலித். 2:22)
தொடரியல் நோக்கில் கலிப்பா
தமிழ்மொழியின் இலக்கணங்களை ஆழ்ந்து கவனித்தால் அவைகள் தொடரியல் நோக்கில் அமைந்திருப்பதைக் காண முடியும். புணர்ச்சி நிலையில் எழுத்துக்கள் பெறும் மாற்றத்தை எழுத்திலக்கணம் குறிப்பிடுகிறது. இங்கு ஒரு சொல் மற்றொரு சொல்லுடன் தொடர்வதற்கான விதிமுறைகளே உள்ளன. இவ்வாறே சொல்லிணக்கத்தில் இடம்பெறும் திணை பால் இயைபு, வண்ணச் சினைச் சொல், வேற்றுமைத் தொடர், அல்வழித்தொடர் என்பனவும் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்பனவும் தொடரியல் சிந்தனையில் அமைந்தனவே. இவ்வாறே யாப்பிலக்கணக் கூறுகளும் தொடரியல் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன.
யாப்பிலக்கணத்துள் கலிப்பாவிற்குரிய பல்வேறு உறுப்புகளும் அவை தொடர்வதற்கான வரையறைகளும் சொல்லப்படுகின்றன. அவ்வுறுப்புகளுள் தரவு, தாழிசை என்பன முதல் உறுப்பாகவும் அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்பன துணை உறுப்பாகவும் அமைகின்றன. இவை ஒரு வாக்கியத்தின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமையும் தன்மையில் குறிக்கப்படுகின்றன. இவ்வுறுப்புகளுள் அடிவரையறைகள் சுட்டப்படுவதை நோக்கினாலும் இவைகள் தொடரியல் நோக்கில் அமைந்திருப்பது விளங்கும்.
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் தொடரியல் அமைப்பானது
தரவு - தாழிசை(3) - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.31.)
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவின் தொடரியல் அமைப்பானது
தரவு - தாழிசை(3) - அம்போதரங்கம் (பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண்) - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.31.)
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் அமைப்பானது தரவு - தாழிசை(3) - அராகம் - அம்போதரங்கம் (பேரெண், அளவெண்,
இடையெண், சிற்றெண்) - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.32.)
தரவு கொச்சகக் கலிப்பாவின் அமைப்பானது தரவு - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.33.)
தரவிணைக் கொச்சகக் கலிப்பாவின் அமைப்பு,
தரவு - தனிச்சொல் - தரவு - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.33.)
சிற்றாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குரிய அமைப்பு, தரவு - தனிச்சொல் - தரவு - தனிச்சொல் - தரவு - தனிச்சொல் - தாழிசை(3) - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.33.)
பல்தாழிசைக் கொச்சகக் கலிப்பாவின் அமைப்பென்பது
தரவு - தாழிசை(6) - தனிச்சொல் - சுரிதகம் என்பதாகும் (யா.கா.33.)
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவின் அமைப்பானது தரவு முதல் சுரிதகம் ஈறாக உள்ள கலிப்பாவின் உறுப்புகள் முறைமாறியும் அளவுகளில் குறைந்தும் மிகுந்தும் வருவது என்பர் (யா.கா.33.)
இவற்றை நோக்குமிடத்து கலிப்பாவின் அமைப்பு தொடரியல் நிலையில் அமைந்திருப்பது விளங்கும். கலிப்பா அதற்குரிய யாப்பில் அமைகின்ற போது அவற்றுள் பல தொடர்கள் அண்மையுறுப்புகளாக ஒன்றிணைந்து வாக்கியமாக தோற்றம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாக்கிய அமைப்பில் அவ்வாக்கியத்தின் விரிவுத் தன்மைகள் அப்பாடல் குறிக்கவந்த பொருளை நன்கு விளக்கி அமைவதைக் கலித்தொகைப் பாடல்களின் வழி அறியமுடிகிறது.
வாக்கியமும் வாக்கிய விரிவாக்கமும்
கலித்தொகையின் இரண்டாவது பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. இப்பாடல் சுட்டும் பொருளை உணர்ந்துகொள்ளத் தேவையான தொடர்களை மையமாகக்கொண்டு இப்பாடலை ஒரு வாக்கியமாகக் காணமுடிகிறது. இவ்வாக்கியத்துள் பல தொடர்கள் அண்மையுறுப்புகளாக இணைந்துள்ளன. இவ்வண்மையுறுப்புளின் பகுப்புகளை யாப்பிலக்கணங்கள் சுட்டும் கலிப்பாவின் உறுப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சில கருத்துகள் பெறப்படுகின்றன.
அண்மையுறுப்புகளின் அடிப்படையில் இப்பாடல் கீழ்வருமாறு வரையப்பட்டுள்ளது. இதனுள் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்துகளும் ஒரு அண்மையுறுப்பைக் குறித்து அமைகிறது. இதற்கு மேலே சுட்டப்பட்டிருக்கும் அமைப்பு கலிப்பா குறிப்பிட்டுள்ள கலிப்பாவின் உறுப்புகளைக் குறிக்கின்றது.
இவற்றுள் A முதல் G வரையுள்ள அண்மையுறுப்புகளின் அடிப்படையிலான தொடர்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் போது, இது ஒரு வாக்கியமாக இருப்பதைக் காணமுடியும். இத்தொடர்களை மரபிலக்கணத்துடன் ஒப்பிட்டுக் காணும் போது சிலவற்றைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
கலிப்பா இலக்கணம் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் சுட்டும் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் எனும் நான்கு உறுப்புகள் அண்மையுறுப்புகள் பகுப்பாய்வில் ஏழு உறுப்புகளாக அமைகின்றன.
கலிப்பா சுட்டும் உறுப்புகள் தனித்தனி அண்மையுறுப்புகளாக அமையவில்லை. அவற்றுள் சில மாற்றங்கள் பெற்றே அண்மையுறுப்புகளாக அமைகின்றன.
தரவுப்பகுதியில் இரண்டு அண்மையுறுப்புகள் இடம் பெறுகின்றன. தாழிசைப் பகுதியில் மூன்று தாழிசைகள் இடம் பெற்ற போதும் வாக்கிய நிலையில் முதன்மைப் பொருளை விளக்குவதற்கு ஒரு தாழிசை மட்டுமே போதுமானதாக அமைகிறது.
தனிச்சொல்லும் சுரிதகத்தின் ஒரு கூறும் இணைந்து ஓர் அண்மையுறுப்பாக அமைகிறது.
சுரிதகப் பகுதியில் ஒரு கூறு தனிச்சொல்லுடன் இணைந்து அண்மையுறுப்பாக அமைய, மற்ற பகுதிகள் மூன்று அண்மையுறுப்புகளாக அமைகின்றன.
வாக்கிய விரிவாக்கம்
தரவு எனும் பகுதி வாக்கியத்தின் அடிப்படைப்பொருளை விளக்குவதற்கு ஏற்ப இரண்டு அண்மையுறுப்புகளாகக் கொள்ளப்பட்டது. எனினும் அது பல அண்மையுறுப்புகளைக் கொண்டதாகும். அவ்வுறுப்புகளின் விரிவாக்கத்தைக் கீழ் வருமாறு வரைபடம் செய்யலாம்.
A எனக்கொள்ளப்பட்ட இவ்வண்மையுறுப்பில் வாக்கிய விரிவாக்க உறுப்புகளும் (A1, A2) வாக்கிய விரிவாக்கத் துணையுறுப்புகளும் (A2.1, A2.1.1, A2.1.2, A2.1.2.1) உள்ளன. இவ்வாக்கிய விரிவாக்கத்துள் பொருள் அழுத்தம் பெறுவதைக் காணமுடிகிறது.
பிரியத் துணிந்த தலைவனே (A)
மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+A1)
வழியேஇல்லாமல் கற்கள் எல்லாம் சிதறிக்கிடக்க கடந்து செல்வதற்கு அரிதான, வெம்மையை உடைய பாலைநிலத்து வழியே மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+ A1, A2)
ஞாயிறு சுடுதலால் வரைபிளந்து வழியே இல்லாமல் கற்கள் எல்லாம் சிதறிக்கிடக்கக் கடந்து செல்வதற்கு அரிதான, வெம்மையை உடைய பாலைநிலத்து வழியே மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+ A1, A2, A2.1)
ஞாயிறு சுடுதலால் சீறுதற்கரிய மழுப்படை உடையோன் சினத்தலின் மூஎயில் அழிதலைப்பெற்று உதிர்வன போல் வரைபிளந்து வழியே இல்லாமல் கற்கள் எல்லாம் சிதறிக்கிடக்கக் கடந்து செல்வதற்கு அரிதான, வெம்மையை உடைய பாலைநிலத்து வழியே மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+ A1, A2, A2.1, A2.1.1)
இறைவன் உலகைப் படைக்கக் கருதிய போது படைத்தல் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றி அயன் முதலான தேவர்கள் வந்து இரத்தலின் பகைவரின் வலிமையைக் கெடுப்பதற்காகச் சினந்து எழுந்து, மூன்று கண்களை உடைய இறைவன் மூன்று கோட்டைகளை அழிக்கச் சினந்து எழுந்த போது அவனின் முகச் சூடு போலச் சுடும் பாலை நிலத்து வழியே மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+ A1, A2, A2.1, A2.1.1, A2.1.2)
இறைவன் உலகைப் படைக்கக் கருதிய போது படைத்தல் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றி அயன் முதலான தேவர்கள் வந்து இரத்தலின் பகைவரின் வலிமையைக் கெடுப்பதற்காகச் சினந்து கூற்றுவனைப் போன்று எழுந்து,மூன்று கண்களை உடைய இறைவன் மூன்று கோட்டைகளை அழிக்கச் சினந்து எழுந்த போது அவனின் முகச் சூடு போலச் சுடும் பாலை நிலத்துவழியே மறப்பதற்கு அரிய காதலை உடைய தலைவி இங்கே இறந்துபடும்படியாகப் பிரியத் துணிந்த தலைவனே (A+ A1, A2, A2.1, A2.1.1, A2.1.2, A2.1.2.1)
இதனுள் ஒண்கதிர் தெறுதலின் என்பதும் வரைபிளந்து என்பதும் அண்மையுறுப்புகளாகும். ஆனால் இவைகள் தொடரா அண்மையுறுப்புகளாக வருகின்றன. இவற்றுக்கு இடையில் இதனை விளக்கியுரைக்கும் உவமைகள் இடம் பெறுகின்றன.
தொடங்கற்கண் முதலாக இரத்தலின் வரையிலான அண்மையுறுப்பு தொடரா அண்மையுறுப்பாக அமைகிறது. இதற்குரியஅண்மையுறுப்பு சினைஇய … ஏறுபெற்று உதிர்வனவாகும். இவ்வாறே தொடங்கற்கண்… உடன்றக்கால் முகம்போல் எனும் அண்மையுறுப்பு சீறு அருங் … உதிர்வனபோல் எனும் அண்மையுறுப்புடன் தொடரா அண்மையுறுப்பாக அமைகிறது.
இதனுள் தோழி தலைவனிடன் நிகழ்த்திய கூற்றின் பொருண்மை நன்கு விளக்கமடைந்திருப்பதையும் படிப்படியாகப் பொருள் விளக்கம் பெற்று அமைந்திருப்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
B எனக் குறிக்கப்பட்டுள்ள அண்மையுறுப்பு விரிவாக்கமின்றியே வருகிறது.
தாழிசைப்பகுதி (அண்மையுறுப்பு C) விhpவாக்கம் செய்யப்படும் போது மூன்று தொகுப்புகாளக உருவாக்கப்படுகின்றன. இத்தொகுப்பில் அண்மையுறுப்புகள் மாற்றிப் பெய் முறையும் ஆளப்பட்டுள்ளன (முன்னர் விளக்கப்பட்டுள்ளது). இவ்வுறுப்பின் விரிவாக்கத்தை இவ்வாறு வரைந்து காட்டலாம்.
இவற்றுள் நான்கு தொடர்கள் ஒரே நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுள் ஒவ்வொன்றும் ஒரு தொகுதியாக, மற்றவற்றிற்கு அண்மையுறுப்பாக அமைந்துள்ளது. இவற்றுள் ஒருதொடர் அதற்கான அண்மையுறுப்புத் தொடருடன் தொடரா அண்மையுறுப்பாக உள்ளது. மேலே காட்டிய அட்டவணையில் இடது பகுதியில் உள்ள கோடுகள் இவ்வுறுப்புகள் தொடரா அண்மையுறுப்புகளாய் அமைந்துள்ளதையும் அவை தொடரும் அண்மையுறுப்பு எது என்பதையும் சுட்டி நிற்கின்றன.
இவ்விரிவாக்கத்தின் மூலம் சமுகப் பண்பாட்டுக்கூறுகள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தம்மிடம் இருந்த பொருளை எல்லாம் கொடுத்துத் தொலைந்த பின்னர் இரந்தவர், எம்மிடத்துப் பொருள் இல்லை என இரந்தவர், தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் இல்லை என இரந்தவர் எனும் இவர்களுக்குப் பொருளை வழங்காமல் இருப்பது இழிவு எனக் கருதுகிறான் தலைவன்.
இப்படி இரந்தவர்களுக்கு வழங்குவதற்குத் தம்மிடம் பொருள் இல்லாவிட்டாலும் அப்பொருளை மலை, குன்று, காடு எனும் இவற்றைக் கடந்து சென்றாவது ஈட்டிக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என விரும்பிய பண்பாட்டைக் காணமுடிகிறது.
நிலைபெற்ற கற்பு, தலைவன் நீங்கிச் செல்லும் பிரிவில் உயிர்விடும் அளவிலான அன்பு, மரபுகளில் மாற்றமில்லாது தொடர்ந்து வரும் அன்பு, அருந்ததி போலும் கற்பு, யாவரும் தொழுது போற்றும் படியான பண்பு, மெல்லியல் இயல்பு, எனும் பண்புகள் தலைவிக்குரியதாகப் இப்பகுதி எடுத்துரைக்கிறது.
இப்பண்புகள் பெற்ற தலைவியைப் பிரிந்து சென்றாவது பொருளை ஈட்டிவந்து இரந்தவர்க்கு வழங்க வேண்டும் எனக் கருதும் ஆவர் பண்பு. எப்போதும் பிரியாது இல்லிருந்து அன்புடன் வாழவேண்டும் என நினைக்கும் மகளிர் பண்பு எனும் இவற்றறுக்கிடையிலான போராட்டங்களை எடுத்துக் காட்டுகிறது.
சுரிதகப் பகுதியில் மூன்று அண்மைவுறுப்புகளும் ஒரு வாக்கிய விரிவாக்கத் துணை உறுப்பும் உள்ளன. இதனை இவ்வாறு படம் வரையலாம்.
பொருள்வயின் அகறல் அன்பு அன்று என்று யான் கூற அன்புற்று தாழ்பு நின் தொல்கவின் தொலைதல் அஞ்சி என் சொல்வரைத் தங்கினர் காதலோரே என்றமையும் இப்பகுதியில் தாழ்பு எனும் சொல் மட்டும் வரிவாக்கத்துணை உறுப்பால் விரிவாக்கம் செய்யப்பட்டு, காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு தாழ்பு நின்... என்று தொடர்கிறது.
யானை பரிக்கோலிற்குத் தங்காமல் யாழிசைக்குத் தங்கியதைப் போன்று தங்கினர் என்ற விரிவாக்கம் முதலில் விரிவு செய்யப்பட்ட A1, A2 என்பதுடன் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளது.
பிரியத் துணிந்த தலைவனே கேள் எனும் அண்மையுறுப்பு முதல்நிலையில் மறப்பருங்காதலி ஈங்கு ஒழியப் பிரியத் துணிந்தனிர் என்றும் பிறகு ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர்இடை மறப்பருங் காதல் இவள் ஈண்டு ஒழிய இறப்பத் துணிந்தனிர் என்று விரிவடைந்திருப்பது முன்னர் விளக்கப்பட்டது.
இக்கூற்றில் சில வினாக்கள் எழுகின்றன அவையாவன, தலைவன் இயல்புகளைச் சுட்டும் தொல்காப்பியம் “பெருமையும் உரனும் ஆடுஉ மேன” என்று குறிக்கின்றது. இவ்வாறு வலிமையுள்ள தலைவன் அழல் அவிர் ஆர்இடை என்பதற்காகத் தான் மேற்கொண்ட செயலைக் கைவிட்டு செலவழுங்குவானா? அவ்வாறு செலவழுங்குதல் தலைவனின் பண்பிற்கு இழுக்கை ஏற்படுத்தாதா? இதனை அறியாதவளா தோழி? இதனை அறியாதவரா புலவர்? என்பனவாகும்.
இவ்வினாக்களுக்கெல்லாம் விடையாக அமைவதே “காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு” எனும் அடிகள். இதனுள் தலைவன் யானையுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு செய்யப்படுகிறான். யானை பரிக்கோலிற்கு அஞ்சுவது இல்லை. அதைப் போன்றே தலைவனும் பாலையின் வெம்மைநினைந்து தங்கினான் இல்லை. யானை பரிக்கோலிற்குப் பணியாத போதும் யாழிசைக்குப் பணிந்துவிடும். அதனைப் போன்றே இத்தலைவனும் பாலையின் கொடுமை எண்ணித் தங்காது தலைவின் நலனழிவு எண்ணித் தங்குகிறான். இவ்விடத்தில் இலக்கணங்கள் தலைவன் தலைவியை ஆற்றுவித்தற்காகச் செலவழுங்குவான் எனச் சுட்டுவதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இந்நிலையில் தலைவன் என்பவனுக்குச் சமுகத்தில் கொடுக்கப்பட்ட உயர்வு அத்தலைவனுக்கு இருந்த துணிவு அன்பு முதலியனவும் புலப்படுகின்றன.
முடிவுரை
கலித்தொகையின் பாடலை தொடரியல் ஆய்விற்கு உட்படுத்தும் போது அப்பாடல் ஒரு வாக்கியாமாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாக்கியத்துள் முதன்மைத் தொடர்களும் வாக்கிய வரிவாக்கத் துணை உறுப்புகளும் உள்ளன. இவ்விரிவாக்கங்களை உற்றுக் கவனிக்கும் போது, அவற்றுள் பாடல் எடுத்துரைக்க வந்த சமுகப் பண்பாட்டுப் பதிவுகள் வெளிப்படுகின்றன. அவ்வகையில் கலித்தொகை 2ஆவது பாடலை ஆய்வுக்கு உட்படுத்தியதன் வழி இப்பாடலுள் சமுகத்தில் தலைவனுக்கு இருந்த மதிப்பும் தலைவனிடன் இருந்த பண்பும் இல்லறப் பெண்களின் பண்பும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.