இப்பிறவியில் நாம் நமக்குத் தெரிந்தவரை வாழ்கிறோம். அனுபவிக்கிறோம். வாழ்வது தெரிகிறது. ஆனால் சாவு தெரிவதில்லை. செத்த பிறகு மறுபிறப்பு உண்டு என்று பல சமயங்கள் நம்புகின்றன. இப்பிறவியை இம்மை என்றும், மறுபிறவியை மறுமை என்றும் சமயங்கள் கூறுகின்றன. திருவள்ளுவர் ஏழு பிறப்புக்கள் உண்டு என்கின்றார்.
‘‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு ’’
என்பது குறள்.
இந்தப் பிறவியில் நல்ல காரியங்களைச் செய்து, தீய காரியங்களை விலக்கி, அறவழிநின்று, வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறையருளுக்குப் பாத்திரமாகி, இறந்தால் மறுபிறப்பைத் தவிர்க்கலாம் என்கின்றனர். ‘‘இனிப் பிறப்பு வேண்டாம்’’ என்பதுதான் மகான்களின் கொள்கையும் கோரிக்கையும் ஆகும். ‘‘மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’’ என்கிறார் மணிவாசகர். ‘‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்’’ என்று சிவபெருமானை மாணிக்கவாசகர் பாடுகிறார். இதிலிருந்து ஒன்று புரிகிறது. பிறப்பை அறுக்க முடியும் என்பது பல சமயச் சான்றோர்களின் நம்பிக்கை ஆகும்.
சாதாரணமாக ஓர் உயிர் ஓர் உடலை விட்டுச் செல்கிற பொழுது, இன்னொரு உடலில் சென்று சார்கிறது என்பதுதான் சமயவாதிகளின் கூற்றாகும். அதனைத்தான் மணிமேகலையின் பௌத்த சமயமும் சாற்றுகிறது. நல்வினைகள் ஆற்றி, தீய வினைகளை விலக்கிப் புத்த தேவனை வணங்கினால் வீடு பேறு அடையலாம் என்கிறது மணிமேகலைக் காப்பியம். அது முழுக்க முழுக்க பௌத்தக் காப்பியம்.
இந்து மதம் சொல்கிறது சாலோகம், சாரூபம், சாமீப்யம், சாயுஜ்யம் என்று மறுமையின் நான்கு நிலைகளை, அதில் சாலோகம் என்பது தேவலோகம், சாரூபம் என்பது தேவரூபம், சாமீப்யம் என்பது இறைவனுக்கு அருகில் இருப்பது. சாயுஜ்யம் என்பது இறைவனோடு ஐக்கியம். ஆத்மாவும் பரமாத்வாவும் இணைவது. அதற்குப் பிறகு பிறவி இல்லை. அதனைத்தான் வீடு பேறு’’ என்கின்றனர். சைவமதத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலிய அடியார்கள் எல்லாம் வீடுபேறு எய்தியுள்ளதை நாம் அவர்களது தேவாரத் திருவாசகங்கள் மூலம் அறிகிறோம். அதுபோல் வைணவ ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் எல்லாம் வீடுபேறு எய்தியமையை அவர்களது வாக்குகள் நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் மூலம் அறிகிறோம்.
நல்வினை ஆற்றுங்கள். தீவினை விலக்குங்கள். வினை உங்களைத் தேடிவந்து தன் பயனை ஊட்டும் என்று சமணசமயம் கூறுகிறது. கன்றுக்குட்டி தன் தாய்ப்பசுவை எப்படித் தேடிக் கண்டு பிடிக்குமோ அப்படி நாம் செய்த வினையும் நம்மைக் கண்டுபிடித்துப் பயனை ஊட்டும் என்று நாலடியார் வலியுறுத்திக் கூறுகிறது.
சமண சமயத்தை அடுத்து 2500 ஆண்டுகட்கு முன்பு தோன்றியது பௌத்தமதம். புத்தர் இதனைத் தோற்றுவித்தவர். சிலப்பதிகாரம் சமணக் காப்பியம். அதனைத் தொடர்ந்து எழுந்த மணிமேகலை பௌத்தக் காப்பியம் பௌத்தமதக் கொள்ளைகளை மிக வலியுறுத்திப் பாடுவதே அதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரின் நோக்கம்.
ஐம்பெரும் காப்பியங்களுள் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் கொள்கைகளை வலியுறுத்தும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும் குண்டலக்கேசியும் புத்தமதக் கொள்கைகளை வலியுறுத்தும் பௌத்தக் காப்பியங்கள்.
மணிமேகலை சாதிகளைப்பற்றிக் கூறிச் சாதிவேறுபாட்டைக் கண்டிக்கிறது. அக்காலத்தில் சாதிக்கேற்றபடி சமாதிகள் கட்டப்பட்டன என்று மணிமேகலை கூறுகிறது. ‘‘அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப்பால் வேறு காட்டி இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த குறுயவும், நெறுயவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக்கோட்டமும்’’ (காதை - சக்கரவானக்கோட்டம் உரைத்த காதை வரிகள் 56-59) இத்தகு சாதி வேறுபாட்டு உணர்வுகளை எல்லாம் தாண்டித்தானே வீடுபேறு பெறமுடியும்.
மணிமேகலையில் பதிகம் அல்லாது ஒரு காதைகள் பாடப்பெறுகின்றன . பதிகத்துடன் சேர்த்து 4856வரிகள், அடிகள் மணிமேகைலை மாபெரும் காப்பியம் முழுக்க முழுக்க பௌத்தக் கருத்துக்களே பாடப்பெறுகின்றன.
சிலப்பதிகாரம் போலவே மணிமேகலையும் புகார், மதுரை , வஞ்சி ஆகிய மூன்று நகர்களையும் பற்றிப் பேசுகிறது. மன்னர்களையும், மக்கள்களையும், மலர்வனங்களையும், பல்வேறு அமைப்புக்களையும் படம் பிடித்துக்காட்டுகிறது.
காப்பியத்தில் பதிகம் என்பது முன்னுரை. மணிமேகலை காப்பியப்பதிகம் 98 அடிகளைக் கொண்டது. அதில் மணிமேகலை காப்பியச் சுருக்கம் சொல்லப்படுகிறது.
மணிமேகலை காஞ்சியை அடைந்து, தன் பொய்வடிவம் நீங்கி, அறவண அடிகளை வழிபட்டு, தவநெறி பூண்டு, அறவுரை கேட்டு, வினைகளின் முறைப்படிவரும் பிறவித்துன்பம் ஒழிகெனத் தவம்புரிந்த செய்திகளை இளங்கோ கேட்க, சீத்தலைச்சாத்தனார் முப்பது காதைகளில் பாடினார் என்று பதிகம் கூறுகிறது.
‘‘புக்கவன் கொண்ட பெய்யுருக்களைந்து மற்றவரி பாதம் வணங்கிய வண்ணமும் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப்பாவைநோற்றதும் இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவணர் தமிழ்திறம் மணிமேகலை துறவு ஆனறம் பாட்டினுள் அறியவைத்தனன் என் என்கிறது பதிகம். மணிமேகலை துறவு, அதனால் அவளது வீடுபேறு பற்றியது தான் மணிமேகலைக் காப்பியம்.
வீடுபேறு அடைவதற்குச் சில குற்றங்களை விலக்க வேண்டும் என்று மணிமேகலை தொடர்ந்து வலியுறுத்துகிறார். முதலில் இரண்டாம் காதை ஆகிய ‘‘ஊரலர் உரைத்த காதையில்’’ மாதவி தன் மகள் மணிமேகலையின் துறவு பற்றியும், அவள் பரத்தை நெறிக்கு வரமாட்டாள் என்பதையும் தெளிவாக வயந்தமாலைக்குக் கூறுகிறாள். அறவண அடிகளிடம் தன் துயரத்தை மாதவி கூறிய பொழுது அவர் கூறிய அறவுரையை எடுத்துரைக்கிறாள். காதலன் உற்ற கடுந்துயர் கூறப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது அறிக என்றருளி ஐயவகைச் சீலத்து அமைதியும் காட்டி உய்வதை இவைகொள் என்று உரவோம் அருளினன்.’’
‘‘உலகில் பிறந்தவர் அடைவது துன்பம். பிறவாதவர் அடைவது பேரின்பம். முன்னது பற்றினால் வருவது. பின்னது பற்று நீங்கினால் வருவது ‘‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’’ ஐவகைச் சீலம் என்று சொல்லப்படுகிற காமம், கொலை, பொய் , களவுகள் ஆகிய ஐந்தும் பஞ்சசீலம் என்று வர்ணிக்கப்படும் இவற்றை முற்றும் துறந்தால் உய்யலாம் என்று அறவண அடிகள் கூறியதாக மாதவி கூறுகிறாள்.
கள் குடித்து அதனால் பெறும் இன்பத்தையே சொர்க்கலோக வீடுபேற்றுப் பேரின்பமாகக் கருதும் குடிகாரன் ஒருவன் சமணமுனிவர் ஒருவருடன் வாதம் செய்கிற காட்சி மலர் வனம் புக்க காதை என்ற மூன்றாவது காதையில் கூறப்பட்டுள்ளது. இது நகைச்சுவைப் பகுதியாக இருந்தாலும் சிந்தனைக்குரியது.
‘‘மண்ணா மேனியன் வருவோன் தன்னை வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன். எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ! அழுக்குடை யாக்கையில் புகுந்த நும்முயிர் புழுக்கறைப்பட்டோர் போன்றுனம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தன்வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது . கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந்தேறலின்? மெய்த்தவத் தீரே! உண்டு, தெளிந்திவ் யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிக்கொண்டு என சிற்றின்பத்தையே பேரின்பமாகவும், வீடு பேறாகவும் கருதிப் புன்னெறி வாழும் சிலரது வாழ்க்கைக் காட்சியை மணிமேகலை வர்ணிக்கும் நகைச்சுவைக்கட்டம் இது!
நான்காவதான பனிக்கறை புக்க காதையில் ஒரு காட்சி மணிமேகலை பனிங்கு மண்டபத்துள் இருக்கிறாள். அவளது உருவம் வெளியே தெரியும். ஆனால் பேச்சு கேட்காது. அத்தகு மண்டபத்தின் வெளியே தோழி சுதமதி காவலாக நிற்கிறாள் மணிமேகலையை அடைய வேண்டி வந்த சோழ இளவரசனான உதயகுமாரனுக்குச் சுதமதி புல்லிய உடல்பற்றிப் போதிக்கிறாள். ‘‘வினையின் வந்தது. வினைக்கு விளைவாயது. புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது மூப்பு விளிவுடையது, தீப்பிணி இருக்கை, பற்றின் பற்றிடம், குற்றக்கொள்கலம். புற்றடங்கு அவரின் செற்றச்சேக்கை. அவலக்கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய்! இதனைப்புறமறிப் பாராய்!’’ இதில் இருந்து பேரின்பத்துக்கு எதிரான சிற்றின்பத்துக்கு மூலகாரணமான உடல் நிலைச்சிறுமை பற்றி உணர்கிறோம்.
மணிமேகலையின் சிறப்புப் பற்றி ஐந்தாவது காதையாகிய ‘‘மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் சுதமதி உதயகுமாரனிடம் ‘‘ஊழ்தருதவத்தன், சாபசரத்தி காமற்கடந்த வாய்மையள்’’ என்கிறாள். உடனே உதயகுமாரன் கேட்கிறான்.
‘‘சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க் கொளின்’’
என்கிறான்.
மணிமேகலை தெய்வம் புகாரில் உள்ள புத்த பீடிகையை வலம் வந்து வணங்கிப் போற்றுகிறாள்.