காப்பியங்கள் செய்யப்படுவதற்கு முன்பு காப்பிய ஆசிரியர் ஒரு திட்டத்தைத் தனக்குள் வரைந்து கொள்கிறான். தமிழில் தோன்றிய இரட்டைக் காப்பியங்கள் என்று அறியப்படுகிற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திட்டமிட்டு வரையப்பெற்ற காப்பியங்கள் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உண்டு.
மணிமேகலைமேல் உரைபொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்
என்ற தொடருடன் சிலப்பதிகாரம் நிறைவு பெறுகின்றது.
இதன் காரணமாக சிலப்பதிகாரத்திற்குப் பின் மணிமேகலை என்ற ஒரு காப்பியம் எழஉள்ளது என்பதையும் அதற்கான திட்டமிடல் நடந்து கொண்டுள்ளது என்பதையும் உணரமுடிகின்றது.
சிலப்பதிகாரம் எழுவதற்கு முன்னாலும் அதற்கான திட்டமிடல் நடைபெற்றுள்ளது என்பதைப் பதிகம் பதிவுசெய்துள்ளது.
அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தன்
யானறிகுவது பட்டதென்றுரைப்போன்
என்று கண்ணகி, கோவலன் பற்றிய நிகழ்வுகள் நான் அறிந்துள்ளேன் என்று உரைக்கிறார். இவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றே இளங்கோவடிகள் காப்பியம் புனைகின்றார். இதன் காரணமாக, பழங்காலத்தில் போக்குவரவு வசதி இல்லாத காலத்தில் ஒரு நிலம் பற்றிய செய்திகளை அறிய புலவர்களே தூதுவர்களாக இருந்துள்ளனர். ஔவையார் தமிழகம் முழுவதும் சுற்றி வந்த படைப்பாளர். அதுபோல கபிலர் போன்ற பலரைக் குறிப்பிடலாம். இவ்வகையில் தமிழ்ப்புலவரான சாத்தனார் கண்ணகி, கோவலன் நிகழ்வைச் சொல்ல அதைக்கேட்ட இளங்கோ சிலப்பதிகாரம் படைக்கின்றார்.
மேலும் சாத்தானாரே மனமுவந்து
‘‘அடிகள் நீரே அருளக’’ என இளங்கோவடிகளிடம் கூற அருகிருந்து சாத்தனார் இக்காப்பியப் படைப்பினைக் கண்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக சாத்தானருக்குப் படைப்புக்களத்தைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் விட்டுச் செல்கிறார்.
சாத்தனாருக்கு அரச பரம்பரைக் கதையைக் கூற வேண்டிய அவசியம் இல்லாது, கடைக்கோடியில் உள்ள மணிமேகலையைக் கதையைப் படைக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் மணிமேகலையின் வாழ்க்கை சமயப் பின்புலம் சார்ந்தது என்பதால் சமயக் கருத்துகளை அறிந்து கொண்டிருந்த சாத்தனாருக்கு அது இன்னமும் வாய்ப்பாக அமைந்து விட்டது.
இதன் காரணமாக மெல்ல மணிமேகலையை வளர்த்து எடுத்து பெண் ஞானம் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தி அவர் காப்பியம் படைத்துள்ளார்.
மணிமேகலையின் பதிகத்தில்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம்கெழு கூலவணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறியவைத் தனன் - என
என்ற குறிப்பு இடம்பெறுகிறது.
இக்குறிப்பின்வழியாக இளங்கோவடிகள் அருகிருந்து கேட்ப சாத்தனார் மணிமேகலையைப் படைத்தார் என்பது தெரியவருகிறது. இவ்வகையில் ஒருவர் எழுது மற்றவர் அருகிருக்க மிகச் சிறப்பான செயல்திட்டம் இரட்டைக்காப்பிய படைப்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது.
இரண்டும் முப்பது காதைகள் உடையன. கதைத்தொடர்வு உடையன. அறம் நிறுத்துவன. பெண்மை போற்றுவன. அரசனாயினும் மக்கள் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கொள்கையின என்ற வழியில் இவ்விரு காப்பிய நடைமுறைகளுக்கும் காலத்தொடர்பும் பொருள் தொடர்பும், யாப்புத்தொடர்பும் பெருக்கமாய் அமைந்துள்ளன.
மணிமேகலையில் மணிமேகலையின் நிறைவுநிலை காட்டப்பெறவில்லை. அவள் நோன்பு நோற்ற திறத்துடன் முடிகிறது. இதன் காரணமாக சீத்தலைச் சாத்தனார் வரலாறு தழுவி இக்கதையை முடிக்காமல் விட்டுவிட்டார் எனக் கருதலாம். காஞ்சியில் தன் ஞானப்பயணத்தை முடிக்கும் மணிமேகலை அதற்குப் பிறகு என்ன ஆனாள் என்ற எல்லை சாத்தனாருக்கு அறியத்தக்கதாக இல்லை. அவளை வீடுபேறு அடைந்தவளாகக் காட்டுவதும், அல்லது அவள் வாழ்வு நிறைவு பெற்றது எனக்குறிப்பும் வரலாற்று மற்றும் காலப்பிழை எனக்கருதிய சாத்தனார் இக்காப்பியத்தை
ஞானதீபம் நன்கனம் காட்ட
தவத்திறம் பூண்டு, தருமம் கேட்டு
பவத்திறம் அறுக என பாவை நோற்றனள்
என்றே முடிக்கின்றார்.
இதன் காரணமாக ஞானத்தேடலுடன் இக்காப்பியம் முடிகிறது. இதன் காரணமாகவே மணிமேகலை துறவு என்ற பெயர் இக்காப்பியத்திற்குப் பொருந்துவதாக ஆயிற்று. வஞ்சிக்காண்டம் போல சாத்தனாருக்கு ஒரு காண்டம் அமைக்க வேண்டியத் தேவை இதனால் எழவில்லை.
குறிப்பாக, பெண் ஞானத்தை அடையலாம், சமுதாயத்தில் பின்தள்ளப் பெற்றவர்களை முன்னெடுத்து நிறுத்துவது பௌத்தம் போன்ற கருத்துகளை மையமாக வைத்து ஒரு காப்பியத்தைப் படைக்க நினைத்த சாத்தனார், அதற்கு உரிய ஆவணமாக மணிமேகலையை வரித்துக் கொண்டார். மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சமயக்கணக்கர் திறங்கள் அக்காலத்தில சமயக் கணக்கரின் நடைமுறைகளைக் காட்டுவதாக உள்ளது. இந்தியாவின் தத்துவ மரபு என்பது தமிழகத்தை விடுத்து அறிய இயலாததாக இருந்தது என்பதற்கு மணிமேகலைக் காப்பியம் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
சமயக்கணக்கர் திறம் கேட்ட காதையைப் பின்னால் அமைப்பதற்கான முன்னோட்டமே இந்திரவிழாவில் பட்டி மண்டபம் பற்றிய விவரணைகள்.
ஒட்டிய சமயத்து ஊறுபொருள்வாதிகள்
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
என்ற அடிகள் பின்னால் வரும் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதையின் முன்னோட்டம் ஆகும்.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க
என்ற வாழ்த்தே உலக அறவி புக்ககாதையாக உருவெடுத்துள்ளது.
சிறைக்கோட்டம், அறக்கோட்டமாக்கிய காதையே - இக்காப்பியத்தின் நடுப்பகுதியாகும். இதனுள் வருகிற மணிமேகலையின் வாசகமே இக்காப்பிய ஆசிரியன் இச்சமுதாயத்தை நோக்கும் நன்முறையாகும்,
வேந்தே நீநீடு வாழி
விஞ்சை மகள்யான் விழவுஅணி மூதூர
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக
தீதுஇன் றாக கோமகற்கு ஈங்குஈது
ஐயக் கடிஞை அம்பலம் மருங்குஓர்
தெய்வம் தந்தது திப்பிய மாயது
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது
ஊன்உடை மாக்கட்கு உயிர்மருந்து இதுஎன,
உரையான்செயற் பாலதுஎன் இளங்கொடிக்கு என்று
வேந்தன் கூற மெல்இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அதுவா ழியர்என, உரை
அருஞ்சிறை விட்டுஆங்கு ஆயிழை உரைத்த
பெருந்தவர; தம்மால் பெரும்பொருள் எய்தக்
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசுஆள் வேந்துஎன்.
என்ற அடிகள் இக்காப்பியத்தின் கொள்கையாகவும் சாத்தனார் காண விரும்பிய அமைதிஉலகமாகவும் விளங்குகின்றது. இக்கருத்தை வலியுறுத்தவே இக்காப்பியம் எழுந்துள்ளது என்பது இக்காப்பியத் திட்டத்தின் வலிமையாகின்றது.