தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
33.திலகவதி சிறுகதைகளில் பெண்கள்
முனைவர் அ. யசோதா
முன்னுரை
இன்றைய எழுத்துலகில் சமூக நோக்கோடும், தனிமனிதனின் நலன் கருதியும் எழுதிக் கொண்டிருக்கும் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்களுள் ஒருவர் திலகவதி. இவர் 1980களில் எழுத்துலகில் நுழைந்தவர். பெண்ணியச் சிந்தனையாளர். இவரது நாவல்கள், சிறுகதைகள் ஆழ்ந்த உண்மைகளையும், கருத்துக்களையும், மனிதகுலத்துக்கு எடுத்தியம்பும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இவர்தம் படைப்புகள் வாயிலாகப் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை நிகழ்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பெண்ணுரிமையில் ஆர்வமும், அழுத்தமும் உடைய திலகவதி தம் சிறுகதைகளில் பெண்களின் நிலையை எப்படிக் காட்டுகிறார் என்பதை இனிக் காண்போம்.
மணமகனைத் தேர்வு செய்யும் உரிமையின்மை
குடும்ப அமைப்பு தோன்றிய நாள் முதலாக பெண்களுக்கு இரண்டாந்தர குடிமகள் என்ற நிலையே இருந்து வருகிறது. திருமணம் என்ற சடங்கின் மூலம் நிறுவப்படும் குடும்ப அமைப்பில் ஆண்களின் எல்லாத் தேவைகளையும் ஊதியம் பெறாமல் செய்வதற்காகவே பெண்கள் ஆண்களுடன் இணைத்து வைக்கப்படுகிறார்கள்.
“மகளிரை மாண்புடையர்களாக மதிக்காத ஒரு நாட்டில் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களைப் போற்றாத நாட்டில் அவர்களுக்குரியதோர் இடத்தை அளிக்காத நாட்டில் பண்பாடும், நாகரிகமும் தனி சிறந்து விளங்கின என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது” (1) என்கிறார் சு. லலிதாம்பாள்.
குடும்பத்தில் பெண்ணுக்கு மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. சங்ககாலம் முதற்கொண்டு இக்காலம் வரை பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
“தாய் தந்தையர் பெண்ணுக்குரிய துணைவனைத் தேர்ந்தெடுப்பதில் துணைபுரியலாம். கவலை செலுத்தலாம். ஆனால் அந்தப் பொறுப்பு பெண்ணுடையதாக இருத்தல் வேண்டும்” (2) என்று திரு.வி.க. கூறுகிறார்.
“சட்டப்படி மட்டுமே குற்றம்” என்னும் சிறுகதையில் வரும் சரசு என்ற பெண்ணிற்குத் தந்தை வழிச் சமூகத்தால் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. அதனால் சரசு மனநலம் குன்றிய ஆடவனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்வில் பல்வேறு இன்னலுக்கு ஆட்படுகிறாள்.
திருமணம் பேசப்படும் பொழுது ஆணின் விருப்பம் கேட்கப்படுகின்றன. ஆனால், பெண்ணுடைய விருப்பம் கேட்கப்படுவதில்லை, என்பதை ‘பாராட்டுகள் பறக்கின்றன’ என்னும் சிறுகதை எடுத்துக் காட்டுகிறது.
ஆணாதிக்கப் போக்கு
பெண்கள் சுயமாகக் கல்வி கற்று ஊதியம் பெறும் ஒரு பணியில் இருந்தாலும் கூட ஆண்களுக்கு அடிபணிந்த நிலையில் தான் வாழ்கிறார்கள். குடும்பத்தில் ஆணின் ஆதிக்க உணர்வு மேலோங்குதல் பெண் துன்புறக் காரணமாக அமைகிறது.
சமூகத்தில் பெண் தனக்குச் சமமாக இருந்தால் தம்முடைய செயல்களுக்கு அடிப்பணிய மாட்டாள் என்று அவளைச் சமூகத்தின் முன்கேவலமான கடுஞ்சொற்களைக் கூறி மனதைப் புண்படுத்தும் நிலையை ‘அக்கரை’ என்னும் சிறுகதையில் வரும் ஆண்கதை மாந்தர் மூலம் காட்டுகிறார் திலகவதி.
“குடும்பம் என்ற அமைப்பு ஆணினத்தின் நலனுக்காக அல்ல-இவ்வமைப்பின் மூலமே பெண்ணினத்தை அடிமையாக, சிறை வைக்க முடிந்ததை இன்று பல கோணங்களில் காண்கிறோம்” (3) என்று செ. கணேசலிங்கன் குறிப்பிடுகிறார்.
‘கூடாகி வந்ததொரு’ என்ற சிறுகதையில் வரும் பெண் ஆணுக்கு சமமாக கல்விகற்று ஊதியம் பெற்றாலும் ஆணின் அடக்கு முறைக்கு ஆளாகிறாள். கணவன் மனைவியரிடையே ஒருவருக்கொருவர் ஐயக்கண் கொண்டு பார்ப்பது குடும்ப உறவின் அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் பெருந்தடையாக இருக்கும் என்பதை ‘உதைத்தாலும் ஆண்மக்கள்’ என்ற சிறுகதை எடுத்துக் காட்டுகிறது.
“நீ என்ன படிதாண்டா பத்தினியா வேல பார்க்கறேன்னு சொல்லிக்கிட்டு அன்னாடம் ஊர் மேய்ஞ்சிட்டுத்தானே வர்றே” (4) என்று கணவன் கூறுவதிலிருந்து மனைவி மீது சந்தேகம் கொண்டு வார்த்தைகளால் கொடுமைப்படுத்துவதை திலகவதி படம் பிடித்துக் காட்டுகிறார். ‘முதல் வெளிச்சம்’ சிறுகதையில் வரதனின் மனைவி காஞ்சனா குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட எண்ணுகிறாள். ஆனால் அவள் கணவனோ மனைவியின் நடத்தையைச் சந்தேகிக்கிறான். அவமானம் தாங்காமல் காஞ்சனா தற்கொலை செய்து கொள்கிறாள்.
‘மாலையில் ஓர் உதயம்’ ‘எடுக்கவோ கோக்கவோ’ என்ற சிறுகதைகளில் வரும் பெண்கள் கணவனின் சந்தேகத்தால் துன்பமுறும் நிலையை அடைகின்றனர். மனைவியின் நடத்தையை ஐயுறும் ஆணாதிக்க வர்க்கத்தைத் திலகவதி தம் சிறுகதைகளின் மூலம் காட்டுகிறார்.
உடல் மற்றும் உள வன்முறை
சிறுவயது முதற் கொண்டே ஆண்கள் பெண்கள் மீது வன்முறையைக் கையாளுகின்றனர். எதற்கெடுத்தாலும் பெண்களைக் கைநீட்டி அடிப்பது, காலால் உதைப்பது, வன்சொற்களைப் பேசுவது போன்ற செயல்களால் உடலாலும், உள்ளத்தாலும் பெண்ணைத் துன்புறுத்துகிற வழக்காறு ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் எனலாம். பெண் மீது வன்முறையைக் கையாளுகிற ஆடவர்களைப் பற்றித் திலகவதி தம் சிறுகதைகளில் எடுத்துக் காட்டுகின்றார்.
‘சிரித்தாலும் கண்ணீர் வரும்’ சிறுகதையில் வரும் கணவன் தன் சுயநலத்திற்காக மனைவி மீது போலியான அன்பைச் செலுத்தி அடிமைப் படுத்துகிறான். மனைவியின் மனம் புண்படும்படி பேசுகிறான்.
‘அம்மாவின் பிரிவு’ என்னும் சிறுகதையில் வரும் பெண் கணவன் கொடுமை தாங்காமல் மருந்தைக் குடித்து இறந்து விடுகிறாள்.
‘பாராசூட்டுக்கள் பறக்கின்றன’ என்ற சிறுகதையில் வரும் பூங்கோதையைக் கணவன் தினமும் அடித்துத் துன்புறுத்துகிறான். ‘உதைத்தாலும் ஆண்மக்கள்’ சிறுகதையில் வரும் சுகந்தி ஆணுக்கு ஆசைக்குச் சமமாக கல்வி கற்று மருத்துவ தொழிலில் இருந்தும் தன் கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.
“வேலை பார்க்கிறோம்கிற திமிர்தானே என்னா மாதிரி பெட்டிஷன் எழுதினா உன்மேல் விசாரனை வரும் - வேலை போகும்னு எனக்குத் தெரியும்டி. ஒன்ன நடுத்தெருவுல நிறுத்தி தலைகுனிய வக்காட்டி என்பேரு ஆதிமூலம் இல்ல” என்று கூறுவதிலிருந்து கணவனின் ஆதிக்க உச்சநிலையை அறியமுடிகிறது.
‘மாலையில் ஓர் உதயம்’, ‘மாதிரிக்கு ஒரு மாதவி’, ‘கூடாகி வந்ததொரு’ ஆகிய கதைகளில் இடம்பெறும் பெண்களும் ஆண்களால் உடலாலும், உள்ளத்தாலும் வதைக்கப்படுகின்றனர்.
கணவனின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுதல்
குடும்பத்திலும், சமூகத்திலும் ஆணாதிக்கத்தின் காரணமாகப் பெண் தன் சுதந்திரத்தன்மையை இழக்கிறாள். ஆணாதிக்க உணர்வினால் பெண் குடும்ப அமைப்பையும். சமூகக் கட்டமைப்பையும் மீறி வெளியேறும் நிலைக்கு ஆளாகிறாள்.
‘மாதிரிக்கு ஒரு மாதவி’ சிறுகதையில் கணவன் மனைவியைப் புரிந்து கொள்ளாமல் அவளை அடிமைப்படுத்திக் கொடுமை செய்ய ஒரு கட்டத்தில் மனைவி கணவனை விட்டு வெளியேறுவதை ஆசிரியர் காட்டுகிறார். ‘கவசம்’ என்ற சிறுகதையில் வரும் வந்தனாவின் கணவன் தன் முன்னேற்றத்திற்காக மனைவியின் கற்பையே விலைபேசுகிறான். வந்தனா அதிலிருந்து வெளியேறுகிறாள்.
‘அம்பிகா அப்பாவுமான போது’, ‘வெளிச்சம்’ என்ற சிறுகதைகளில் வரும் பெண்கள் தன்னையும், தன் குழந்தைகளையும் ஏமாற்றி விட்டு இன்னொருத்தியுடன் வாழ்ந்து வரும் தன் கணவனை நிராகரிக்கின்றனர்.
தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உடைய பெண்கள் அவசியம் நேருமானால் குடும்பச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுவதற்குத் தயங்க வேண்டாம் என்று திலகவதி அறிவுறுத்துகிறார்.
வரதட்சணை
தொன்றுதொட்டு வரும் பெண்ணியக் கொடுமைகளுள் முதன்மையானது வரதட்சணைக் கொடுமையாகும். வரனாகிய மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் தட்சணை என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பன மணமகனுக்கு மட்டுமே வரதட்சணை கொடுக்கப்பட்டது.
காலப்போக்கில் இந்தியாவில் சாதி சமய பேதமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் வரதட்சணை சிக்கல் நிலவுகிறது. ‘கைக்குள் வானம்’ என்னும் சிறுகதையில் வரும் அருண் தன் தங்கையின் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க முன்வர அவன் மனைவி வரதட்சணைக் கொடுமையை எதிர்க்கிறாள்.
‘மானுடன் வெல்லும்’ சிறுகதையில் கேசவனின் தங்கையை மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதிர்பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள முன்வருவதைக் காணமுடிகின்றது.
‘உதைத்தாலும் ஆண்மக்கள்’ என்னும் சிறுகதையில் வரும் பெண் வரதட்சணை கொடுமையால் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை கொன்றுவிடும்படி கூறுகிறாள். பெண் பிறக்கும் போதே வரவேற்கப்படாத விருந்தாளியாகி விடுகிறாள் என்பது புலனாகிறது.
பாலியல் சிக்கல்கள்
இந்தியாவில் ‘கற்பு’ பெண்களுக்கு மட்டும் உரிய ஒழுக்கமாக நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்திருக்கின்றது. அதன் காரணமாகவே பெண்களுக்குப் பாலியல் வன்முறைகள் நேரிடுகின்றன. பெண்கள் பொதுவாகக் கணவர்களாலும், சிலவேளைகளில் பிற ஆடவர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
‘அவசரம்’ என்னும் சிறுகதையில் பழனி தன்னுடைய அவசரப் புத்தியினால் தனம் என்கிற பெண்ணின் மேல் கொண்ட காதலினால் அவளின் சம்மதம் இல்லாமல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயற்சி செய்கிறான். ‘சட்டப்படி மட்டுமே குற்றம்’ கதையில் வரும் சரசுவை கணவனின் தந்தையே பெண்டாள முயல்கிறான்.
‘தேயுமோ சூரியன்’ சிறுகதையில் சரோஜினி பாலியல் பலாத்காரம் செய்தவனையேத் திருமணம் செய்து கொள்ளுகிறாள்.
‘பிரம்மாஸ்திரம்’ சிறுகதையில் வரும் ஆர்த்தி அலுவலகத்தில் உயர் பதவி பெறுகிறாள். அவளுடன் பணியாற்றுவோர் அவள் மீது பொறாமை கொண்டு அவளின் நடத்தையைக் குறைகூறி வீண்பழி சுமத்துகின்றனர்.
‘நத்தைக் கூடுகள்’ என்ற சிறுகதை பணிக்குச் செல்லும் பெண்களிடம் உயர்பதவியில் இருப்பவர்களும், சக ஊழியர்களும் கேவலமாக நடந்து கொள்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
முடிவுரை
ஆணின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுத் துன்பங்களை அனுபவித்து வரும் பெண்களையும், கணவன் கயவனாகும் போதும் குடும்பம் நரகமாகும் போதும் தனித்துச் செயல்படும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்னும் கருத்தையும் திலகவதி அழுத்தமாக உணர்த்துகிறார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மனதில் தன்னம்பிக்கையைப் பெற வேண்டும். பணிபுரியும் பெண் பணியிடங்களில் எப்பொழுதும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்க்கவேண்டும். தனித்தன்மைகளையும், உரிமைகளையும் இழக்காது சிக்கல்களை எதிர்த்துப் போராடி வெற்றி காணவும் தம் சிறுகதைகளின் வழி பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.
அடிக்குறிப்புகள்
1. சு. லலிதாம்பாள், மகளிர் மாண்பு ப-204
2. கலியாணசுந்தரனார். திரு. வி. பெண்ணின் பெருமை ப-58
3. கணேசலிங்கன் செ. பெண்ணடிமை தீர ப-12
4. திலகவதி கதைகள் 1 ப-41
5. திலகவதி கதைகள் 1 ப-186.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.